வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, March 19, 2013

பொன்னியின் செல்வன் - 4

சோழ மன்னர்கள் பெரும்பாலும் சைவ வழியில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் சோழ நாட்டிலுள்ள எண்ணிலடங்கா சிவாலயங்கள் இதை பறைசாற்றுகின்றன. அதே சமயம் சோழ மன்னர்கள் வைணைவத்தையும் ஆதரித்தார்கள்.  சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி போன்ற பிரமாண்டமான விஷ்ணு தலங்கள் இதற்கு சாட்சியாக விளங்குகின்றன. 

சுந்தர சோழர் சைவம், வைணைவம் இரண்டையும் ஆதரித்தார் என்பதை கல்கி அவர்கள் இந்த கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். சேந்தன் அமுதன் என்றழைக்கப்பட்ட சுந்தர சோழருக்கு பிறகு அரியணை ஏறிய மதுராந்தக தேவர் ஒரு பழுத்த சிவ பக்தர். அதே போல் இந்த கதையின் முக்கிய பாத்திரமான ஆழ்வார்க்கடியான் என்கிற முதல் மந்திரி அநிருத்த பிரம்மரின் ஒற்றன் எப்போதும் பெருமாளின் புகழ் பாடும் பாசுரங்களை பாடித்திரியும் ஒரு முரட்டு வைஷ்ணவன்.

சேந்தன் அமுதன் ”பொன்னார் மேனியனே” என்ற தேவரா பாடலைக் அடிக்கடி பாடிக்கொண்டு சிவபெருமானை நித்தம் வணங்கும் சிவ பக்தன். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் இந்த பாடல் பாடப்பெற்ற கதையை கல்கி இப்படி கூறுகிறார்.


***
செம்பியன் மாதேவியின் அரண்மனை முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின் கோஷ்டியும் ஜேஜே என்று எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூர தூர தேசங்களிலிருந்து சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவது வழக்கம். சிவ பூஜைப் பிரசாதம் கொண்டு வரும் அர்ச்சகர்களின் கூட்டமும் அதிகமாகவே இருக்கும்.
அன்றைக்குத் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), தென்குரங்காடுதுறை, திருமழபாடி முதலிய ஊர்களிலிருந்து சிற்பிகளும் சிவபக்தர்களும் வந்து தத்தம் ஊர்களில் கோயில்களில் கருங்கல் திருப்பணி செய்வதற்கு மகாராணியின் உதவியைக் கோரினார்கள். கோயில்களை எந்தெந்த ஊர்களில் என்ன முறையில் கட்ட உத்தேசம் என்பதற்குச் சித்திரங்களும் பொம்மைக் கோயில்களும் கொண்டு வந்திருந்தார்கள்.
முதலாவது இரண்டு கோயில்களின் திருப்பணியைச் செய்ய உதவி அளிப்பதாகச் சொல்லிவிட்டு, "மழபாடியா? எந்த மழபாடி?" என்று பெரிய பிராட்டி கேட்டார்.
"சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குரல் கொடுத்து அழைத்துப் பாடல் பெற்றாரே, அந்தப் பெருமான் வீற்றிருக்கும் மழபாடிதான்!" என்று அந்த ஊர்க்காரர் சொன்னார்.
"அது என்ன சம்பவம்?" என்று மழவரையரின் செல்வி கேட்க, மழபாடிக்காரர் கூறினார்:
"சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது.
நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!' என்று ஒரு குரல் கேட்டது.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார்.
பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து 'இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!' என்று சீடர்கள் சொன்னார்கள்.
உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார். பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார். 'சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்னும் கருத்து அமைத்து,
பொன்னார் மேனியனே!
புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே உன்னையல்லால்
இனி யாரை நினைக்கேனே?
என்று பாடினார். தாயே! இன்னும் அந்தக் கோயில் சிறிய கோயிலாகக் கொன்னை மரங்களின் மறைவிலேயே இருக்கின்றது. அதற்குத்தான் உடனே திருப்பணி ஆரம்பிக்க வேண்டும் என்று கோருகிறோம்."
"அப்படியேயாகட்டும்!" என்றார் செம்பியன் மாதேவி.
***
திருமழபாடி கோவில்
பொன்னார் மேனியனே....

                                                                                                                                               - தொடரும்
*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

Thursday, March 14, 2013

பொன்னியின் செல்வன் - 3

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டி வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்த ராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட மாவீரன் அருள்மொழி வர்மனின் பெயர்தான் பொன்னியின் செல்வன். நாவலின் தலைப்பு பொன்னியின் செல்வன் என்றாலும் கதையின் ஐந்து பாகங்களிலும் பயணித்து வரும் வந்தியத் தேவன்தான் கதையின் நாயகன். பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வந்தியத்தேவன்  நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் சுந்தர சோழரை சந்தித்து கொடுக்கிறான். அச்சமயம் புலவர்கள் பலர் வந்து சுந்தர சோழர் மற்றும் சோழ மன்னர்களின் பெருமையை பாடல்களாக பாடுகின்றனர். அத்தகைய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடல். சுந்தரசோழ சக்ரவர்த்தியின் பெருமையை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமோ?

****
புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்;

     "இந்திரன் ஏறக் கரி அளித்தார்
          பரிஏ ழளித்தார்
     செந்திரு மேனித் தினகரற்கு
          சிவனார் மணத்துப்
     பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
          பழையாறை நகர்ச்
     சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
          தொன்னிலத்தே!"
பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், "நன்று! நன்று!" என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.
சுந்தரசோழர் முக மலர்ச்சியுடன், "இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா?" என்றார்.
ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள். பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள். நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்.
"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான். 'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள் தான் இருக்கின்றன!" என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்..."
"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்."
"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, உடனே, பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?..."
***
                                                                                                                                                                                                 - தொடரும்


*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

Monday, March 11, 2013

பொன்னியின் செல்வன் - 2

பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். கல்கியின் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்களை தன்னுடைய அபார ஓவியத் திறமை மூலம் நம் கண் முன்பே உலவ விட்டிருப்பார் ஒவியர் மணியன். மணியனின் ஓவியங்கள் இல்லாத பொன்னியின் செல்வன் புத்தங்களை படிப்பதற்கு நான் நிச்சயமாக பரிந்துரை செய்ய மாட்டேன். கல்கியில் மணியன் ஓவியங்களுடன் தொடராக வந்தபோது அதன் பக்கங்களை கிழித்து பைண்ட் செய்த புத்தகங்களை படிப்பது சிறந்தது.


வானர் குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத் தேவன் காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி தற்போது வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரிக்கரையில் பயணிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது கதை. முதல் அத்தியாத்திலேயே சோழ மன்னர்களின் பெருமையை பறைசாற்றும் வீர நாரயண ஏரியுடன் கதையை தொடக்குகிறார் கல்கி அவர்கள். கரிகாலன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் குறுக்கே கல்லணையை கட்டி சாதனை செய்தான். கரிகாலச் சோழனின் பரம்பரையில் வந்த இராஜாதித்த சோழன் தன் படை வீரர்களைக் கொண்டு கடலில் வீணாக கலக்கும் வட காவேரி என்றழைக்கப்படும் கொள்ளிடத்தின் தண்ணீரை விவசாயத்திற்கு பயண்படுத்துவதற்காக கடல் போன்ற ஏரியை வெட்டி அதற்கு தன் தந்தையின் பெயரால் வீர நாரயண ஏரி என்றழைத்தான்.

***
விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.
பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
***
கல்கி அவர்கள் இந்த நாவலில் சங்க இலக்கிய பாடல்களை கதையின் போக்கோடு பொறுத்தி வெவ்வேறு கதாபாத்திரங்கள் பாடுவது போன்று கதையோடு சேர்ந்து இலக்கிய விருந்தும் படைக்கிறார்.


சோழ நாட்டிற்கு முதன் முதலாக வரும் வந்தியத் தேவன் சோழ நாட்டின் இயற்கை காட்சிகளையும், பொன்னி நதியின் செழிப்பையும் பார்த்து பரசவமடைகிறான். 
***
குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.
குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன.
தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, "கொக்கரக்கோ!" என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. "கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.
ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் 'டணார், டணார்' என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன கும்பல் கும்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.
சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!
குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்கு பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.
அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது.
***
அப்போது காவிரியின் சிறப்பை கூறும் இந்த சிலப்பதிகார பாடலை இளைய பிராட்டி குந்தவை தேவியும் வானதியும் பாடிக் கொண்டு பொன்னி நதியில் படகில் வருகிறார்கள் என்று காட்சியமைக்கிறார்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய 
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய 
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த காவிரி பெண் கன்னிப் பருவம் வந்ததும் தன் காதலலான கடல் அரசனிடம் சேர குதுகாலத்துடனும், பூரிப்புடனும் வருகிறாள். சோழ நாட்டில் பொன்னி நதியின் இரு கரைகளிலுமுள்ள வண்டுகள் ஆர்ப்பரித்தும், குயில்கள் பாட்டிசைத்தும், மயில்கள் நடனமாடியும், புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் மஞ்சள், சிவப்பு வண்ண மலர்களை சூடியும், பச்சை வயல்வெளிகள் பச்சை பட்டுடித்தியும் காவிரி பெண்ணை அலங்கரித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

நடந்தாய் வாழி!! காவேரி !!!



                                                                                                                                                                                                 - தொடரும்


*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

Tuesday, March 05, 2013

பொன்னியின் செல்வன் - 1


கடந்த டிசம்பர் மாதம் சிதம்பரம் நடராஜரைத் தரிசித்து வர தஞ்சாவூரிலிருந்து அதிகாலை வேளையில் கிளம்பி சிதம்பரம் நோக்கி காரில் பயணமானேன். மார்கழி மாத அதிகாலைப் பயணத்தில் பரந்து விரிந்து செல்லும் பச்சை கம்பளம் போல் காணப்படும் நெல் வயல்களின் வழியாக சோழ வள நாட்டின் அழகை ரசித்துக் கொண்டே கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் கடந்து சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்து விட்டு உடனே தஞ்சாவூர் நோக்கி திரும்பி பயணம். கொள்ளிடத்தைக் கடக்கும் போது வீராணம் ஏரி ஞாபகத்தில் வந்தது. தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியை நான் இதுவரையில் பார்த்தது கிடையாது. வீராணம் ஏரியைப் பற்றி நினைத்தவுடன் உடனே மனக்கண்ணில் தோன்றியது பொன்னியின் செல்வன் கதையின் முதல் அத்தியாத்தில் வல்லவரையன் வந்த்தியத் தேவன் வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரி வழியாக குதிரையில் பயணத்து வரும் அந்த காட்சிதான்.




சிறுவயதிலிருந்து வரலாறு எனக்கு மிகவும் பிடித்த பாடம். வரலாறு பாடம் படிக்கும் போது அதில் வரும் வரலாற்று நாயகர்களை கற்பனை செய்து கொண்டு படிப்பேன். எத்தனையோ முறை வீரபாண்டிய கட்டபொம்மன், சிவாஜி, கப்பலோட்டிய தமிழன், பாரதியார் என்று என்னை நான் கற்பனை செய்து கொண்டு வீட்டின் பின்புறமுள்ள மாமரத்தடியில், கடலை கொல்லையில் யாரும் பார்க்கா வண்ணம் நடித்திருக்கிறேன். வரலாறு பாடத்தில் படித்ததை அப்படியே என் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடிந்த்து. இதனால்தான் வரலாறு+புவியியல் பாடத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 மதிப்பெண்க்ள் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தேன் என்றால் மிகையாகாது.

இப்படி வராலாறு படிப்பதில் ஆர்வமுடைய எனக்கு பொன்னியின் செல்வன் கதையை முதன் முதலில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1987) படித்தேன். அப்போது ஏற்பட்ட பரவச அனுபவத்தை வார்ததைகளில் விவரிக்க் முடியாது என்பதுதான் உண்மை. கதையை படித்த ஒரு மாத கால கட்டத்தில் அப்படியே ஆயிரம் வருடங்களுக்கு பின் சென்று சோழ சாம்ராஜ்த்தில் வாழ்ந்தது போன்ற பேரானந்த அனுபவம் அது. பொன்னியின் செல்வன் பாதிப்பிலிருந்து வெளியே வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆயிற்று.

1996 ஆம் ஆண்டு திருமண ஆன போது என் மாமியார் கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் கதையை கிழித்து பைண்ட் செய்து வைத்திருந்த ஐந்து பாகங்களையும் என் மனைவியுடன் சேர்த்து அபகரித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்து விட்டேன். இரண்டாவது முறையாக அலுவலகத்திற்கு செல்லும் ஒரு மணி நேர மெட்ரோ ரயில் பயணத்தில் தொடர்ச்சியாக படித்து முடித்தேன்.  கடைசியாக படித்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்ட படியால் கதையில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. எனவே மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்து அட்டைப் பெட்டியில் பதுங்கி கிடந்த பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் எடுத்து கடந்த 1.5 மாதங்களாக தொடர்ந்து நிதானாமாக படித்து முடித்தேன். ”பொன்னியின் செல்வன்” அமரர் கல்கி அவர்களால கல்கி பத்திரிக்கையில் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 வரை கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஐந்து பாகங்களாக வந்த வரலாற்று நாவல்.




பொன்னியின் செல்வன் பற்றிய என் எண்ணங்களை பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்.

                                                                                 --- தொடரும்

Friday, February 22, 2013

டாலர் நகரம்




நண்பர் ஜோதிஜியின் “டாலர் நகரம்” புத்தகத்தை 27-1-2013 அன்று புத்தக வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது கிடைக்கப் பெற்றாலும் தொடர்ந்து வார இறுதிப் பயணங்கள் மற்றும் வேலை காரணமாக புத்தகத்தை உடனே படிக்க இயலவில்லை. இந்த வாரத்தில்தான் படித்து முடித்தேன். இந்த புத்தகத்திலுள்ள ஒரு சில பகுதிகளை ஜோதிஜியின் வலைத்தளத்தில் ஏற்கனவே படித்திருக்கிறேன். புத்தகமாக கையில் வைத்துக்கொண்டு படித்தபோது ஒரு நாவலைப் படிக்கும் ஆர்வத்துடன் ஒரே மூச்சில் படித்து விட்டேன். காரணம்... அவ்வளவு அனுபவங்கள், தகவல்கள் அடங்கிய புத்தகம்.

உலகம் தெரியாத அப்பாவி கிராமத்து இளைஞனாக ஒரு மஞ்சள் பையுடன் 1992 ஆம் ஆண்டில் திருப்பூருக்கு வரும் ஜோதிஜியின் ஆரம்ப கால அனுபவங்களுடன் நம்மை திருப்பூர் நகரத்தின் பின்னலாடை நிறுவனங்களின் உள்ளே அழைத்து செல்கிறார். ஒரு சாதரன தொழிலாளியாக வாழ்க்கையைத் தொடங்கி, சூபர்வைசர், மேலாளர், சொந்த தொழில், தற்போது ஒரு ஏற்றுமதி நிறுவனத்தின் பொது மேலாளர் (General Manager) என்று உயர்ந்திருக்கும் ஜோதிஜி தனது கடந்த இருபது ஆண்டு கால வாழ்க்கைப் பயணத்தில் திருப்பூரின் வளர்ச்சி,வீக்கம், பிரச்சனைகள், பின்னடைவு ஆகியவற்றை பற்றி ஆழமாக, துல்லியமான தகவல்கள், புகைப்டங்கள் வாயிலாக தெரிவிக்கிறார். திருப்பூர் நகரத்தின் பல முகங்களை பிரதிபலிக்கும் ஒரு கண்ணாடியாக விளங்குகிறது டாலர் நகரம்.  

அப்பாவி இளைஞனாக இருந்ததால் ஆரம்ப காலத்தில் அவர் சந்தித்த பிரச்சனைகள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள் ஆகியவற்றின் மூலம் அவர் கற்றுக்கொண்ட பாடங்கள் திருப்பூரை நோக்கி படையெடுக்கும் தற்கால இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டியாக அமையும். தன் அனுபங்கள மட்டும் அல்லாமல் தான் சந்தித்த மனிதர்களைப் பற்றியும் பதிவு செய்திருக்கிறார். குறிப்பாக கருணாகரன் என்ற கிராமத்து சிறுவன் காஜாபட்டன் அடிக்கும் குழந்தை தொழிலாளியாக திருப்பூருக்கு வந்து இன்று பல கோடி நிறுவனத்தின் அதிபராக வளர்ந்திருப்பது. கிராமத்திலிருந்து திருப்பூருக்கு தொழிலாளியாக வந்து 100 கோடி நிறுவனத்திற்கு முதலாளியாக உயர்ந்து கெட்ட பழக்க வழக்கங்களால் இன்று தெருவில் நிற்கும் வாழ்ந்து கெட்ட ஆறுமுகம் ஆகிய இருவர்களைப் பற்றிய பதிவுகள் ஒவ்வொருவரும் மனதில் வைத்துக்கொள்ளக்கூடிய பாடங்கள்.



திருப்பூர் பின்னலாடை தொழிற்சாலைகள் என்பது பெரும்பாலும் முதலாளிகளின் மேற்பார்வையில் தொழிலாளார்களை ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 14 மணி நேரம் கசக்கிப் பிழிந்து வரைமுறை இல்லா வேலை வாங்குதல் என்ற அடிப்படையில்தான் இயங்குகின்றன. மனித வளத்துறை (Human Resources) என்பது பெரும்பாலன நிறுவனங்களில் பெயரளவுக்குத்தான் இருக்கின்றன, சூபர்வைசர்கள், மேலாளர்கள் தொழிலாளர்களை நடத்தும் முறைகள், பெண்களுக்கு கொடுக்கும் பாலியியல் தொந்தரவுகள், அதை குடுபத்திற்காக ஏற்றுக்கொள்ள பழகிக் கொண்ட பெண்கள், “பணம் துரத்திப் பறவைகள்” என்ற அத்தியாத்தில் கடைநிலை ஊழியர்களின் வாழ்க்கை முறை ஆகியவற்றை படித்த போது மனம் மிகவும் கனத்து விட்டது.

நாம் தினசரி செய்திகளில் பார்த்து, படித்து கடந்து செல்லும் திருப்பூர் சாயப் பட்டறைகள் பற்றிய பிரச்சினைகள், அரசாங்க பஞ்சு வணிக ஏற்றுமதி இறக்குமதி கொள்கை மாற்றங்கள், அன்னிய செலவாணி ஏற்ற இறக்கங்கள், அன்னிய முதலீடு ஆகியவகளைப் பற்றி மிக தெளிவாக பல பாகங்களில் விளக்கி சொல்லியிருப்பது மிகவும் பாரட்டக் தக்கது. ”டாலர் நகரம்” புத்தகத்தை படித்த பிறகு  திருப்பூர் பின்னலாடை தொழில் இயங்கும் முறை பற்றி முழுமையாக நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது.




ஜோதிஜி தன் சுயசரிதை கலந்த திருப்பூரின் ஆவணமாக இந்த புத்தகத்தை ஒரு கலவையாக எழுதிருக்கிறார். இதனால் படிக்கும்போது சில இடங்களில் ஒரு தொடர்பில்லாமல் இருக்கின்றது. இந்த சிறு குறையைத் தவிர்த்து பார்த்தால் “டாலர் நகரம்” திருப்பூர் மற்றும் பின்னலாடை தொழில் பற்றிய மிகச் சிறந்த ஆவண புத்தகம் !!!



Friday, January 11, 2013

பொங்கல் - 2004


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !!!



இந்த வருடம் பொங்கல் பண்டிகையை கிராமத்தில் (வெட்டிக்காடு) கொண்டாட வாய்ப்பு அமையவில்லை. கடைசியாக வெட்டிக்காட்டில் பொங்கல் கொண்டாடியது 2004 ஆம் ஆண்டு. அந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி மரத்தடியில் எழுதிய கட்டுரை இது.

பொங்கல் - 2004


பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் இந்த முறை விடுமுறையில் இந்தியாவிற்கு பொங்கல் சமயத்தில் செல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்து இந்தியாவிற்கு சென்றோம். பொங்கல் பண்டிகையின்போது வெளியூரில் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் பொங்கல் கொண்டாடடுவதற்காக தவறாமல் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள். பொங்கலுக்கு ஊருக்குச் சென்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்து மகிழலாம்.

தஞ்சாவூரிலிருந்து போகிப்பண்டிகை காலையில் மனைவி, குழந்தைகளுடன் காரில் எங்கள் வெட்டிக்காடு கிராமத்தைச் சென்றடைந்தேன். எங்கள் ஊர் என்ற கவிதையில் இந்த வரிகளை எழுதியிருந்தேன்.

" நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ? "

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஊரில் அன்று காலடி எடுத்து வைத்தபோது இந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தததுஅம்மா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மாக்கள், அண்ணன்கள்குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் நலம் விசாரித்துவிட்டு வீட்டின் முன்புறள்ள வேப்ப, பூவரசு மரங்களின் கீழ் நாற்கலிகள் போட்டு கதைகள் பேச ஆரம்பித்தோம். கிராமத்தில் எங்கள் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் போன்றது. எங்களது கிராமத்து நாட்டமையாக இருந்த எங்கள் பெரியப்பாவும், அவருடைய மூன்று தம்பிகளும் வரிசையாக வீடுகள் கட்டிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஒற்றுமை இரண்டாவது தலைமுறையில் இன்றும் தொடர்கிறது. தற்போது 80 வயதான எங்கள் கடைசி சித்தப்பா மட்டும் உயிரோடு உள்ளார். உளுந்தூர்பேட்டையிலிருந்தது எனது அண்ணன் குடும்பத்துடன் மாலையில் வந்து சேர்ந்தார். வேலை காரணமாக தம்பி பெங்களூரிலிருந்து பொங்கலன்று அதிகாலையில்தான் வந்து சேர்ந்தான்.

கிராமம், பத்துக்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரர்களை ஒன்றாக பார்த்த மகிழ்சியில் எனது 6 வயது மகளும், 2 வயது மகனும் அவர்களுடன் சேர்ந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சுத்தம், அது இது என்று தடுக்காமல் கிராமத்தில் இருக்கும் நான்கு நாட்களுக்கும் அவர்கள் விருப்பப்படி விளையாட விட்டுவிடு என்று மனைவியிடம் முன்பே கூறிவிட்டேன். எப்போதோ ஒரு முறைதான் கிராமத்தில் மகிழ்சியாக விளையாடும் இதுபோன்ற அனுபவங்கள் அவர்களுக்கு... அதை முழுமைமயாக அவர்கள் அனுபவிக்கட்டும்!



போகிப்பண்டிகை மாலையில் மன்னார்குடி நகரத்திற்கு சென்று கரும்பு, வாழைத்தார்கள் மற்றும் பொங்கல் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தோம். பொங்கல் பண்டிகையன்று காலையில் எழுந்து பார்த்தால் அண்ணிகள் எல்லாம் அதிகாலையிலேயே எழுந்து மொளுகி கோலம் போட்டு கலக்கி இருந்தார்கள். குளித்துவிட்டு எல்லோரும் எங்களுடைய குலதெய்வமான மதுரை வீரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தோம்.

கிராமத்தில் அவரவர்களும் அவர்களுடைய குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்துவிட்டுதான் வீட்டின் முன்பாக கோடு (அடுப்பு ) வெட்டி பொங்கல் வைக்க வேண்டும் என்பது எங்கள் கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் பழக்கம். பத்து மணியளவில் எங்கள் குடும்பத்தின் தலைவரான எங்கள் அண்ணன் பூஜை செய்து வணங்கி கோடு வெட்டினார். பிறகு அம்மா, அண்ணி, என் மனைவி பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள்.

என் மகள் சுருதி பெரியப்பா வீட்டிலுள்ள ஆடுகளை ஓடி பிடித்தும், அதற்கு தழைகள், புல் கொண்டு வந்து கொடுத்தும் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் சிறுவனாக இருந்தபோது எனது பெற்றோர்கள் எனக்கு கொடுக்கும் முக்கியமான வேலை...மாலையில் பள்ளி விட்ட பிறகும், விடுமுறை நாட்களிலும் எங்கள் வீட்டு ஆடுகளையும், மாடுளையும் மேய்த்து பராமரிப்பதுதான். அப்போது எல்லாம் படிக்க, வீட்டுப்பாடங்கள் எழுத, நண்பர்களுடன் விளையாட இடைஞ்சல்களாக இருக்கும் எங்கள் வீட்டு
ஆடுகள், மாடுகள்தான் என்னுடைய முதல் எதிரிகள். எத்தனையோ முறை மதுரை வீரன் கோவிலுக்குச் சென்று "எங்கள் வீட்டு மாடுகள், ஆடுகள் எல்லாம் காணமல் போய்விட வேண்டும் என்றும் எங்கள் வீட்டில் இனிமேல் மாடுகள், ஆடுகள் வளர்க்கக்கூடாது" என்று கண்ணீர் விட்டு அழுது வேண்டியிருக்கிறேன். பலமுறை வேண்டியும் பலன் கிட்டவில்லை... மாறாக எண்ணிக்கைதான் அதிகமானது!! ஆனால் என் மகள் இன்று ஆடுகளுடன் விளையாடிக்கொண்டு "Dad.. you know what.. I love these small goats. Can we buy some goats and bring them up in our place?" என்று என்னிடம் கேட்கிறாள்.



ஒவ்வொரு வீட்டிலும் பால் பொங்க "பொங்கலோ... பொங்கல்..." என்ற சத்தம் வெட்டிக்காடு எங்கும் எதிரொலித்ததது. ஒரு மணியளவில் படையலிட்டு சூரிய பகவானை வணங்கி பொங்கல் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் மறுபடியும் மரத்தடியில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தோம். பொங்கல் சாப்பிட்டு விட்டு சென்ற என் மகளையும் மற்ற குழந்தைகளையும் காணவில்லை என்று என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். எங்கோ தூரத்தில் ஓடி பிடித்து விளையாடும் என் மகள் மற்றும் குழந்தைகளின் கூச்சல்கள் சன்னமாக என் காதில் கேட்டது.

மாலையில் எனது சித்தப்பா வீட்டின் முன்புறமுள்ள வேப்ப மரத்தில் சாக்பீசால் கோடுபொட்டு Stumps mark பண்ணி சிறுவர்களூடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். 2 மணி நேரம் ஓரு limited-overs cricket match. அண்ணன் காவல்துறை ஆய்வாளர் என்பதால் கிராமங்களில் மாட்டுப்பொங்கலன்று சண்டைகள்  நடைபெறும்.. தான் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிராமத்த்தில் ஒன்றாக மாட்டுப்பொங்கல் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இரவு பதினோரு மணியளவில் அண்ணன் மட்டும் உளுந்தூர்ப்பேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

மறுநாள் மாட்டுப்பொங்கல் காலையில் எங்களின் வயல்களை பார்த்துவிட்டு, வயலிலுள்ளபம்ப் செட்டில் குளித்துவிட்டு வரலாம் என்று எண்ணி சிறுவர்களையெல்லாம் Tata Sumo-ல் தூக்கிப்போட்டுக்கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வயலுக்குசென்றோம்.  நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் மின்சார பம்ப்செட்டுகளே கிடையாது. ஆறுகளில் காவிரித் தண்ணீர் கரை புரண்டோடும். இரண்டு போக நெல், கோடையில் கடலை, உளுந்து, எள் என்று விவசாயம் சிறப்பாக நடைபெறும். இன்றோ ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் மோட்டார் பம்ப் செட்டுகள்... இவற்றின் உதவியால்தான் விவசாயம். பம்ப் செட் வைக்க வசதிஇல்லாத ஏழை விவசாயிகள் சிலர் தங்களின் நிலத்தை தரிசாக போட்டுள்ளார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு 100 அடியாக இருந்த நிலத்தடி நீர் இன்று 200, 300 அடியாக போய்விட்டது. சரியான மழை கிடையாது. இந்த நிலை நீடித்தால் நிலத்தடி நீரும் வற்றி தஞ்சைத்தரணியில் இன்னும் பத்து வருடங்களில் விவசாயமே செய்ய இயலாத நிலை வந்துவிடும் போலுள்ளது... நினைக்கவே பயமாக உள்ளது.



சம்பா போக நெல் வயல்களில் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கிராமத்தில் அம்மா மட்டும் இருப்பதால் எங்களூடைய வயல்களை எல்லாம் பெரியப்பா, சித்தப்பா மகன்களிடம் குத்தகைக்கு கொடுத்து விட்டோம். பம்ப் செட் தண்ணீரில் ஆட்டம் போட்டுக்கொண்டு வரமாட்டோம் என்று அடம்பிடித்த சிறுவர்களை மிரட்டி குளிக்க வைத்து, குளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சிறப்பாக கொண்டாடி வந்த மாட்டுப்பொங்கல் பண்டிகை இப்போது எங்கள் கிராமத்தில் சிறப்பாக நடைபெறுவது இல்லையாம்காரணம்.. கிராமத்து மக்களிடையே ஒற்றுமை குலைந்து தேவையில்லாத சண்டைகள்பெரியப்பா நாட்டாமையாக இருந்தவரை எந்த ஒரு தகராருக்கும் போலிஸ் எங்கள் கிராமத்திற்கு வந்ததே கிடையாது. இன்று பஞ்சாயத்தார்கள் தீர்ப்புக்கு கட்டுப்படாமல் எல்லோரும் போலிஸ், கோர்ட் என்று போகிறார்களாம். கிராமங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து மாறிக்கொண்டு வருகின்றன.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெரும் பொங்கலைவிட மாட்டுப்பொங்கலைத்தான் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்போம். மாட்டுப்பொங்கல்தான் சிறுவர்களாகிய எங்களுக்கு மகிழ்சியான நாள். மாட்டுப்பொங்கலன்று எல்லோருடைய வீடுகளிலும் ஆட்டுக் கறி,
கோழி, மீன் என்று தடபுடலான மதிய விருந்து கட்டாயம் உண்டுஎனது தந்தை, என் அம்மா, எங்கள் வீட்டு வேலையாள் நாகநாதன் ஆகிய மூவரைத்தவி யாராலும் கிட்டே நெருங்க முடியாத எங்களுடைய கொட்டாப்புலி காளைகள் இரண்டுக்கும் கூறிய கொம்புகளில் அழகிய வர்ணம் தீட்டி, கழுத்தில் சலங்கைகள் கட்டிமாலைகள் போட்டு, கம்பீரமாக மாடுகளை தண்ணீரில் அடிப்பதற்கு பிடித்துச் செல்வார் என் தந்தையார். சில சமயம் மாடுகளின் கொம்பில் பணத்தை ஒரு சிறு பையில் வைத்து நன்றாக கட்டிவிட்டு "தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சவால் விடுவார். கொட்டாப்புலி காளைகளின் பெருமைகளை கூறி என் நண்பர்களிடம் தம்பட்டம் அடித்துக்கொள்வேன்.



மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிராமத்து மக்கள் எல்லோரும் ஊருக்கு தெற்கே உள்ள குளத்திற்கு பக்கத்திலுள்ள திடலில் மாடுகளுடன் கூடுவார்கள். தப்பு கொட்டு, குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பு விளையாட்டுகள், போதையில் மிதக்கும் ஆண்களிடையே
சண்டைகள் என்று திடல் களை கட்டும். அன்று எங்கள் பெரியப்பா மிக அற்புதமாக சிலம்பம் விளையாடுவார். அவருடைய இளமைக்காலத்தில் அவர்தான் எங்கள் சுற்று வட்டார கிராமங்களின் ஹீரோ. அதனால்தான் அவருடைய 31 வயதில் கிராம மக்கள் அவருக்கு கிராமத்தின் நாட்டாமை பதவியை கொடுத்து சிறப்பித்தார்கள். அவருடைய எழுபதாவது வயதிலும் அவர் வீசும் கம்பை இளைஞர்களால் தடுத்து விளையாட முடியாது. எங்கள் பெரியப்பாவின் சிலம்ப விளையாட்டிலிலும், வள்ளித் திருமணம் நாடகத்தில் அவர் வேடன் வேஷம் கட்டி ஆடும் அழகிலும் மயங்கித்தான் பெரியப்பாவின் முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் தாரமாக விரும்பி பெரியப்பாவுக்கு வாக்கப்பட்டேன் என்று இன்றும் பெரியம்மா கூறிக்கொண்டு இருக்கிறது.

பூஜை செய்து, சாமி கும்பிட்ட்விட்டு "மாடுகளை தண்ணீரில் அடிங்கடா" என்று பெரியப்பா குரல் கொடுத்ததும் சிறுவர்களாகிய நாங்கள் எல்லாம் சத்தம் போட்டுக்கொண்டு மாடுகளை எல்லாம் ஒன்றாக மடக்கி தண்ணீரில் அடித்து மகிழ்வோம். பிறகு தப்பு கொட்டு, குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம் சகிதமாக மாடுகளை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

ஆனால்.. இன்று அவரவர்கள் தனித்தனியே மாடுகளை ஓட்டிச்சென்று தண்ணீரில் அடித்து வந்து இரவில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள்முன்புபோல் ஒன்றாகக் கூடி மாட்டுப்பொங்கல் கொண்டாடாமல் இப்படி கிராமம் பிளவுபட்டு கிடப்பதை பார்த்து மனம் வருந்தியது.

விவசாயி வீட்டில் மாடுகள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக எங்கள் அம்மா ஒருபசு மாட்டை வீட்டில் வளர்த்து வருகின்றார். அன்று அந்த பசுமாட்டிற்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து பசுவை வணங்கி மாட்டுப் பொங்கல் கொண்டாடினோம்.

இரவு மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது தப்பு அடிக்கும் தோழர்கள் தப்பு, கிளாரினெட், மேளத்துடன் நல்ல போதையில் எங்கள் வீட்டிற்கு வந்து மிக அற்புதமாக பாடி, வாசித்து மகிழ்வித்தார்கள்.

                                                          *                 *              *