திரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணி” திரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள் தஞ்சைத்தரணி. படம் எடுத்தது....நான் ஓடி விளையாடிய என் சொந்தங்கள் வாழும் பக்கத்து கிராமங்களான எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் மற்றும் நான் படித்த மன்னார்குடி நகரம். மலரும் நினைவுகளுடன் “களவாணி” படம் பற்றிய எனது பார்வை.
சிங்கப்பூருக்கு திரும்பி வந்ததிலிருந்து நல்ல படங்கள் என்றால் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனால்... ராவணன், மதராஸப்பட்டினம், தில்லாலங்கடி போன்ற படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க களவாணி படம் சிங்கப்பூருக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எனவே வீட்டில் Home Theartre-ல் பார்கக வேண்டிய கட்டாயம்.
படம் ஆரம்பித்தவுடன் நன்றி கார்டில் “எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் கிராம மக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு அவர்கள்” என்ற பெயர்களை பார்த்தவுடன் ஆச்சரியம்.... அட நம்ம ஊர்களில் எடுத்திருக்கிறார்கள்! முதன்முதலில் நம் ஊர்களை வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலுடன் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.
படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை எந்த்வித தொய்வும் இல்லாமல் பர... பரவென சென்றது. விரு..விருப்பான திரைக்கதை. அட்டகாசமான காமெடி. நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தேன். பரந்து விரிந்து கிடக்கும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள் உள்ள எங்கள் ஊர்களின் அழகை மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மைனர்த்தனம் செய்துகொண்டு தருதலையாக திரியும் இளைஞன் பாத்திரத்தை மிக நேர்த்தியாக பாடி லாங்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அட்டகாசமாக செய்துள்ளார் விமல். +1 படிக்கும் ஒரு கிராமத்து பெண்ணிற்கேற்ற பொருத்தமான ஓவியா. கிராமத்தில் நாம் பார்க்கும் ஒரு யதார்த்தமான கோபக்கார அண்ணன் வில்லனாக ஒரு புது முக நடிகர் (பெயர் தெரியவில்லை). ஒரு டிபிகல் கிராமத்து தந்தையாக இளவரசு. இந்த படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த நடிப்பு சரண்யாவுடையதுதான். ஒரு தஞ்சாவூர் கிராமத்து பெண்மனியாகவே வாழ்ந்துள்ளார். தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் போன்ற படங்களை பார்த்த பிறகு நான் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் சரண்யாவின் தீவிர ரசிகன். இந்த படத்தில் மேலும் உயரத்தை தொட்டுள்ளார். அதற்கு காராணம் சரண்யாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு அப்படியே என் அம்மாவையும் எஙகள் கிராமத்து பெண்மணிகளையும் என் முன் நிருத்தியதால்!.
படத்தில் விமல் மரத்தின் மீது ஏறி லாரியிலிருந்து உர மூட்டையை திருடுவார். இதுபோல் எங்கள் ஊரில் திருடியவர்களை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான் படிப்பில் முதல் மாணவன் என்பதால் நல்ல பையன் என்று ஊரில் பெயரெடுத்தவன். ஆனால்... என்னிடம் இருந்த ஒரே களவாணித்தனம் தேங்காய் திருடுவது! தேங்காய் சாப்பிடுவதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீடு மற்றும் பெரியப்பா, சித்தப்பா வீட்டின் பின்புறத்தில்தான் தேங்காய் மரங்கள் இருந்தன. எனவே திருடுவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. தேங்காய் திருடுவதற்கு எனக்கு உதவியாக இருந்தவன் என் உயிர்த்தோழன் உப்பிலி. தென்னை மரம் ஏறுவதில் நான் கில்லாடி... மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மக்கள் கண் அயரும் மதிய நேரம் அல்லது இரவு நேரம் தான் நானும் என் நண்பனும் தேங்காய் திருட தேர்வு செய்யும் நேரம். நான் மரத்தில் சர... சரவென ஏறி தேங்காயை பறித்து கீழே போட மாட்டேன். தேங்காய் கிழே விழும் சத்தம் கேட்டால் மக்களுக்கு தெரிந்து விடும். என்வே தேங்காயை பறித்து வாயில் வைத்து கவ்விக்கொண்டு கீழே இறங்கி வந்து உப்பிலியிடம் கொடுத்து விட்டு மீண்டும் மரத்தில் ஏறி அடுத்த தேங்காய்.... நான் பறித்து கொடுக்க உப்பிலி மறைத்து வைத்து விடுவான். எதிர்பாராமல் யாராவது வந்தால் ஒரு சில தேங்காயாவது கிடைக்குமே:) பிறகு தேங்காய்களை எடுத்து சென்று மரவள்ளி கிழங்கு செடி கொல்லையிலோ, கரும்பு கொல்லையிலோ அல்லது சோள கொல்லையிலோ நடுவில் உட்கார்ந்து வெட்டி தின்பது அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து சுட்டு தின்பது எங்கள் வாடிக்கை.
இன்னொரு காட்சியில் விமல் குயில் தட்டியில் மாட்டிய குயிலை பிடித்து பறக்க விடுவார். சிறுவனாக இருந்தபோது இதுபோல் நானும் நண்பர்களும் குயில்தட்டிகள் வைத்து நிறைய குயில்களை பிடித்துள்ளோம். கோவைப் பழத்தை குயில் தட்டியில் கட்டி வைத்து நரம்பினால குயில் தட்டியின் பல இடங்களில் பொறி (Trap) வைத்து சாயங்காலத்தில் மரங்கள், செடிகளில் குயில் தட்டிகளை வைத்து விட்டு வந்து விடுவோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக செய்வது குயில் தட்டி வைத்திருந்த இடங்களை நோக்கி ஓடுவதுதான்.
படத்தில் வருவது போல் எங்கள் ஊர் வெட்டிக்காட்டிற்கும் பக்கத்து ஊர் பருத்திக்கோட்டைக்கும் நான் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி சண்டைகள் வரும். சண்டையில் அரிவாள் வெட்டு, வேல் கம்பு வீச்செல்லாம் உண்டு! வீடு புகுந்து பெண் தூக்கும் சம்பங்கள் பல நடந்திருக்கின்றன
இந்த படத்தில் நாயகியின் தந்தை நெல் வியாபாரம் செய்பவர். எனது தந்தையாரும் எங்கள் ஊரில் விவசாயத்தோடு சேர்ந்து நெல் வியாபாரம் செய்தார். அதனால் எங்கள் கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எல்லோரும் அப்பாவை “யாவாரி” என்றே அழைப்பார்கள். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததனால் எப்போதும் எஙகள் வீடு நிறைய ஆட்களுடன் கலகலப்பாக இருக்கும்.
சரண்யா இந்த படத்தில் அடிக்கடி சொல்லும் வசனம் “அவனுக்கு கெரகம் புடிச்சிருக்கு” மற்றும் “ஆனி போய்... ஆவணி வந்தால்... அவன் டாப்ல போயிடுவான்னு ஜோசியர் சொல்லியிருக்காரு” அப்படியே என் அம்மா பேசுவது போல் இருந்தது படம் பார்க்கும்போது. எங்கள் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை அல்லது ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அம்மா போய் நிற்பது வடுவூரில் உள்ள பச்சக்கல் ஐயர் வீடு.... சோதிடம் பார்க்க! பச்சக்கல் ஐயருக்கு எங்கள் வீட்டு ஜாதகம் மற்றும் என் முன்னோர்கள் ஜாதகம் முதற்கொண்டு அத்தனையும் அத்துப்படி:)) அவரும் ஒவ்வோரு முறையும் பிரச்சனைக்கு தகுந்த மாதிரி சுழற்சி அடிப்படையில் மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து ”விளக்கு போடு” என்று அம்மாவிடம் பரிகாராம் சொல்வார். விளக்கு போட்டு வந்துவிட்டு “பச்சக்கல் ஐயர் சொன்னமாதிரி விளக்கு போட்டுட்டேன்... கெரகம் வெளகி போயிடும்... எல்லாம் சரியா போயிடும்” என்பார். அம்மாவின் விளக்கு போடும் படலம் இன்றும் தொடர்கிறது! அது மட்டுமல்ல இப்போது ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும்போது ஒரு பை நிறைய பல கோவில்களின் திருநீர் பொட்டலங்கள் கிடைக்கும்!
படத்தின் மிகப்பெரிய பலம். கஞ்சா கருப்பின் காமெடி. கஞ்சா கருப்பு போல இளைஞர்கள் கலாய்க்க ஒரு இளிச்சவாயன் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பார். கஞ்சா கருப்பை விமலின் நண்பர்கள் ரீட்டா டாண்ஸ்லில் மாட்டி விடுவது போல என் நண்பர்கள் சிலர் ஒரு அப்பிராணியை அவர் கொடுத்த்தாக சொல்லி “ஐந்து ரூபாய்” அன்பளிப்பை நாடக நடணக்காரி(டாண்ஸ்)யிடம் கொடுத்து மாட்டி விட்ட கதை ஞாபகம் வந்து விழுந்து விழுந்து சிரித்தேன். கஞ்சா கருப்பு பால்டாயில் குடிக்க வைக்கப்பட்டது, அவர் இறந்து விட்டதாக அறிவிப்பு செய்வது மற்றும் கிளைமாக்ஸ் காமெடி அதகளம்.
படத்தில் முக்கிய காதாபாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையான கிராமத்த்து மனிதர்கள்... குறிப்பாக நாயகியின் தந்தை, நாயகனின் தங்கை, பாரின் பாட்டில் கேட்கும் பிரசிடெண்ட், பொரணி பேசும் பெண்கள் (குறிப்பாக மாட்டு வண்டியில் வரும் இரண்டு பெண்கள் பேசுவது அட்டகாசம்). தஞ்சாவூர் கிராமத்து மக்களின் யதார்த்தமான வசனங்கள். ஒரு சில உதாரணங்கள்.. “கெரகம் புடிச்சிருக்கு” , “ஒப்ரான... ஒப்பந்தன்னான”, ”ஏட்டி நான்... என்னடி சொன்னேன்... நீ என்னடி செய்யிறே”, “ ஏ... ஆயீ...” போன்றவைகள். தஞ்சை பகுதி கிராமங்களின் மாற்றங்களுடன் தற்போதுள்ள உன்மையான கிராமத்தை காட்டியுள்ளார்கள். குறிப்பாக மோட்டர் பைக்கில் வலம் வரும் இளைஞர்கள், டிராக்டர்கள், கதிர் அறுவடை செய்யும் எந்திரங்கள், மினி பஸ், கலை இரவு டான்ஸ் (குத்தாட்டம்!), கிரிக்கெட் டோர்னமெண்ட்.....
பக்கத்து கிராமங்கள், நான் படித்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, நடந்து திரிந்த மன்னார்குடி நகர வீதிகள் என்று படத்தில் பார்த்தவுடன் எங்கள் ஊருக்கு சென்று ஒரு சில நாட்கள் தங்கி, எம் மக்களோடு பழகி, பேசி, சிரித்து வந்ததுபோன்ற ஒரு உணர்வு!
களவாணி- குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ வேண்டிய படம்!
களவாணி- குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ வேண்டிய படம்!
பி.கு-1:
கடந்த 21 ஆண்டுகளில் நான் அதிகபட்சமாக எங்கள் ஊர் வெட்டிக்காட்டில் தங்கியிருந்த நாட்கள் ஒரு வாரம்...என் தம்பியின் திருமணத்தின்போது 2007 ஆம் ஆண்டு. மற்றபடி இந்தியா செல்லும்போது ஊரில் செலவிடும் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள். இந்த படம் பார்த்த பிறகு, கடந்த 10 நாட்களாக Laptop, Blackberry,Conference calls, Business meetings போன்ற இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு மாத காலம் ஊரில் சென்று தங்கி வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது...... பார்க்கலாம் நடக்குமா என்று!
பி.கு-2:
களவானி படம் என் மனைவியின் பார்வையில்:
http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html
பி.கு-2:
களவானி படம் என் மனைவியின் பார்வையில்:
http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html
41 comments:
கலக்கல் விமரிசனம் ..நாங்களும் இது போல ஹோம் தியேட்டரில் தான் பார்த்தோம் ..ஹி ஹி. கஞ்சா கருப்பு காமெடிக்கு நானும் விழுந்து விழுந்து சிரித்தேன் .நல்ல படமொன்று அதுவும் சொந்த ஊரில் படமாக்கப்பட்டது எனும் போது உங்கள் உற்சாகம் எழுத்தில் தெரிகிறது.
நம்ம ஊர கதைக்களமா கொண்டு இப்போ படங்கள் அமையறது ரொம்ப அரிதா இருக்கு. அப்படி ஒரு படம் அமைந்து அந்த படம் அழகாவும் எதார்த்தமாவும் அமைந்தது ரொம்ப சந்தோஷத்துக்குரிய விஷயம். நல்லா ரசிச்சு எழுதியிருக்கீங்க. வாழ்த்துக்கள்.
இது போன்ற கிராமத்து படங்களைப் பார்க்கும் போது எங்களுக்கே ஏக்கமா இருக்கும் போது உங்களுக்கு இருக்காதா என்ன?
நான் இன்னும் பார்க்கலை.
பசங்க பார்த்தீங்களா?
ரொம்பவே இருவரின் பதிவையும் வரிக்கு வரி ரசித்தேன். நல்ல புரிந்துணர்வு.
நீங்கள் கற்ற முதல் தர மாணவன் போல் வாழ்க்கையிலும் வாழ்ந்து கொண்டுருப்பதற்கு என்னுடைய தனிப்பட்ட வாழ்த்துகள் ரவி.
google buzz உங்கள் புகழ் பார்த்தீர்களா?
பிறகு தேங்காய்களை எடுத்து சென்று மரவள்ளி கிழங்கு செடி கொல்லையிலோ, கரும்பு கொல்லையிலோ அல்லது சோள கொல்லையிலோ நடுவில் உட்கார்ந்து வெட்டி தின்பது அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து சுட்டு தின்பது எங்கள் வாடிக்கை.
பால்ய காலங்களில் எனக்கும் தேங்காய் மிக பிடித்தது...!
களவாணி பார்ப்பவர் மனதை எல்லாம் கவர்கின்றான்...
கட்டாயம் மதராசபட்டிணம் பாருங்கள்..
//“ஒப்ரான... ஒப்பந்தன்னான//
ஹி ஹி ஹி.... அது இன்னமும் சொல்லிக்கிட்டுதாவே இருக்கோம் ;)
ஊருக்கு போறதை தங்குறதை எல்லாம் நினைச்சிக்கிட்டே இருக்கப்புடாது டக்கின்னு போயி தங்கிட்டு வந்துரணும்... சீக்கிரமா பொயிட்டு வாங்க.
"ரெண்டு பேரும்" combined study போட்டு விமர்சனம் எழுதினது மாதிரியிருக்கு.
"மண்வாசனை" ரொம்ப நல்லா இருக்கு.
பாருங்கள் இதையும் ...
நம் இளவயது நினைவுகளை அசைபோட வைக்கும் படம்!!
But இந்த படத்திற்கு சரியானா விளம்பரம் இல்லை.
பருத்தியப்பர் கோவில், பொன்னாப்பூரிலெல்லாம் கபடி விளையாட வந்தது ஞாபகம் வருது.
படத்தோடு ஒன்றி இருக்கிறீர்கள். பார்க்கனும், நேரம் வாய்க்கலை.
ரவி, அனுபவிச்சு எழுதி இருக்கீங்க!
கண்டிப்பா பாக்கவேண்டிய லிஸ்டுல இந்தப் படம் இருக்கு. பாத்துருவோம்.
//பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து சுட்டு தின்பது//
இதுக்கு ஈடு இணை ஏது?
அடுத்தமுறை ஊர் வரும்போது கால் பண்ணுங்க.
@தெகா,
//ஹி ஹி ஹி.... அது இன்னமும் சொல்லிக்கிட்டுதாவே இருக்கோம் ;)//
ஒங்கூரு கருப்புகளுக்கு (நம்ம பங்காளிகளுக்கு) புரியுதாக்கும்? :)
//ஊருக்கு போறதை தங்குறதை எல்லாம் நினைச்சிக்கிட்டே இருக்கப்புடாது டக்கின்னு போயி தங்கிட்டு வந்துரணும்//
ஹுக்கும்ம்ம்... வாங்க. வந்த சுவடு இல்லாம ஓடிப் போங்க. வரும்போது ஒரு போன் பண்ணுமய்யா.
நல்ல பதிவு
நானும் படம் பார்த்தேன்
நல்ல இருக்கு
குறிப்பா அந்த கிராம சுழல்
ஆனாலும் களவாணி பசங்களை நாயகனாய் தொடர்ந்து காட்டி வருவது நல்லதல்ல
From: mari muthu
Date: 2010/8/5
Subject: just
To: mr ravi
சித்தப்புக்கு
உங்கள்ளுடாய எழுத்துகள் அனைத்தும் விவரிக்கமுடியாத வண்ணம் அருமையாக
வரைந்துள்ளீர்கள் அதை படிக்கும் போது எழும் எண்ணங்களை விவரிக்க வார்த்தைகள்
இல்லை. குறிப்பாக நீங்கள் எல்லுதிய நம்ப உர் பற்றிய கட்டுரைகள் அனைத்தும் குறைவாக
பத்து முறையாவது படித்து விட்டேன் ஆனாலும் அதன் விருப்பம் குறையவில்லை மாறாக
கூடுகிறது. என்னுடன் பணிபுரியும் வேற்று மாநிலதை சேந்தவரகளுக்கும் மொழி மாற்றி கூறியுள்ளேன்
நீங்கள் எல்லுதிய கட்டுரைகள் அனைத்தும் எனது கணிபொரியல் பதிவு செய்துஉள்ளேன் மிக்க மகிழ்ச்சி
தொடருன்கள்
அன்புடன்
மாரிமுத்து வேணுகோபால்
வெட்டிக்காடு
ரவி.. ரொம்ப எஞ்சாய் செய்திருக்கிறீர்கள் போலருக்கே.. எழுதிய விதம் அருமை.. ஊர் ஏக்கம் பக்கம் முழுக்க தெரிகிறது. சீக்கிரம் ஒரு ரெண்டு மாசம் எல்லாத்தையும் உட்டுபுட்டு ஊருக்கு போயிட்டு வாங்க..
ஆகா... படமும் நீங்களும் ஒன்றியுள்ளீர்கள்... முடிந்தால் படம் பார்க்கின்றேன்...
ஜோ-- நன்றி!
புவனேஸ்வரி ராமநாதன்-- நன்றி
ஜோதிஜி--
//பசங்க பார்த்தீங்களா?//
இன்னும் பார்க்கவில்லை.. பார்க்க வேண்டும்!
//google buzz உங்கள் புகழ் பார்த்தீர்களா?//
பார்த்தேன். மிக்க நன்றி!
பேரரசன்-- நன்றி
Thekkikattan|தெகா -- நன்றி தெக்கிகாட்டாரே.
//ஹி ஹி ஹி.... அது இன்னமும் சொல்லிக்கிட்டுதாவே இருக்கோம் ;)//
தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைன்னு சும்மாவா சொன்னாங்க:)
தருமி-- நன்றி சார்
தங்களின் பார்வை நல்ல பகிர்வு.
//ஒரே ஒரு நடிகர் மட்டும் கொஞ்சம் விலகித் தெரிந்தார்//
யாரை சொல்லீற்ங்கன்னு தெரியுது:)
kara-- நன்றி
குடுகுடுப்பை-- வாங்க குடுகுடுப்பையாரே.. படம் பாத்திட்டீங்களா.. உங்க ஊர் ஒரத்தநாடு பக்கம்தான் அதிகம் எடுத்திருக்கிறார்கள். நம்ம காலத்தில் கபடி. இப்ப கிரிக்கெட்.
கோவி.கண்ணன்-- நம்ம ஊரு படம்...சீக்கிரம் பாருங்க.
தஞ்சாவூரான்-- வாங்க தலைவரே.. நம்ம ஊரு படம். சீக்கிரம் பாருங்க. காமாண்டி திருவிழா எல்லாம் படத்தில் இருக்கு:)
பிரியமுடன் பிரபு-- நன்றி!
மாரிமுத்து-- நன்றி.
Cable Sankar-- வாங்க.. வாங்க தலைவரே. கருத்துக்கு நன்றி!
ஆ.ஞானசேகரன்-- நன்றி
நண்பரே உங்க இடுகைய இப்பத்தான் பார்த்தேன். நானும் என் இளமையில் ஈச்சங்கோட்டை அருகில் தெற்கு நத்தம் என்ற ஊரில் வசித்திருக்கிறேன். ஈச்சங்கோட்டையில் இருந்து ஆத்தங்கரையிலே டிராக்டரை ஓட்டிக் கொண்டு உங்கள் ஊர் வெட்டிக்காட்டுக்கு பலமுறை பயணம் செய்திருக்கிறேன். ஒரத்தனாடு நாடு ரத்னா தியேட்டர் தான் எங்களுடைய ஒரே பொழுது போக்கு. களவாணியை
நானும் மிகவும் ரசித்தேன்.
கலக்கல் தலைவா. மனதில் இருந்து எழுதி இருக்கிறீர்கள். அற்புதம்.
//ஜோ/Joe said...
கலக்கல் விமரிசனம் ..நாங்களும் இது போல ஹோம் தியேட்டரில் தான் பார்த்தோம் ..ஹி ஹி. கஞ்சா கருப்பு காமெடிக்கு நானும் விழுந்து விழுந்து சிரித்தேன் .நல்ல படமொன்று அதுவும் சொந்த ஊரில் படமாக்கப்பட்டது எனும் போது உங்கள் உற்சாகம் எழுத்தில் தெரிகிறது.//
அதே தான்...ஜோ நலமா?
தாமோதர் சந்துரு-- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி. தாங்கள் கூறுவது வேற வெட்டிக்காடு. எங்கள் ஊர் வெட்டிக்காடு மன்னார்குடிக்கு அருகில் உள்ளது. குடுகுடுப்பையாருக்கும் இதே குழப்பம் ஏற்பட்டது:)
நர்சிம்-- முதல் வருகைக்கு நன்றி தலைவேரே!
>| எம்டன் மகன் போன்ற படங்களை
>| பார்த்த பிறகு நான் அம்மா
>| பாத்திரத்தில் நடிக்கும்
>| சரண்யாவின் தீவிர ரசிகன்
Ditto !!
Me and Leela too!
We particularly liked the climax and climax dialogues.
"எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கிட்டே நிற்குறாளுக எவளாவது போயி ஆரத்தி எடுக்க வேண்டியது தானே"
"ஏங்கிட்ட ஒத்தைக்கு ஒத்தை வாங்கடா. ஏன் வீட்டு வாசல்ல வந்து என் மச்சான் மேலே கை வைச்சுட்டீங்க"
சரண்யா, பசுபதி, அப்புறம் முதல்வன் படத்தில்அர்ஜுன் அம்மா (நாடக நடிகை)பொண்வண்ணன் இதுபோன்ற பல நடிக நடிகைகள் உருவாக்கியதாக்கம் அதிகம்.
இதெற்கெல்லாம் தலைவி காந்திமதியும் வடிவுக்கரசியும்.
இவர்கள் இருவரின் நடிப்பைப் பார்க்கும் சிறுவயதில் பார்த்த தெருச்சண்டைகள் தான் ஞாபகத்திற்கு வரும்.
அருமையான விமரிசனம்! படத்தின் நாயகன் மட்டும் கோயம்புத்தூர் தமிழ் "லே" போட்டு பேசினார். குறை கண்டுபிடிக்காமல் தமிழன் விமரிசனம் பண்ணலாமா! சரண்யா அருமையோ அறயுமை! கஞ்ச கருப்பு டபுள் பலே!!! மொத்தம் அட்டகாசம்! (எம் தமிழில் பிழை இருக்கும்.. தப்பு கூகிள் திருன்ச்ளிடேரடோர் தானே!)
:-)
நான் தஞ்சாவூர் ஓரத்தநாட்டுப் பக்கம் ஒரு முறை வந்திருக்கிறேன். நான் அங்கு கண்ட ஒரு விஷயம் இன்னும் இன்றைய இளைஞர்கள் அதிகமாக வேட்டி கட்டுவதுதான்.
இப்படத்தின் நாயகனானா இளைஞன் வெட்டி கட்டி வருவது இந்த படத்தில் நான் மிகவும் ரசித்ததில் ஒன்று. இன்றைய இளம் நடிகர்களில் வேட்டி கட்டி நடிப்பவர்கள் யாரையும் பார்க்க முடிவதில்லை என்ற குறையை இது நிவர்த்தி செய்தது. (இது நீங்கள் எழுதாமல் விட்டது.)
VSS - Glad to know that you and Leela also like Saranya's acting.
உண்மைதான்... கிளைமாக்ஸில் “இந்த ஆள் ஏன் இப்படி குதிக்கிறான்...”
"எல்லோரும் வேடிக்கை பார்த்துக்கிட்டே நிற்குறாளுக எவளாவது போயி ஆரத்தி எடுக்க வேண்டியது தானே"
என்று சரண்யா சொல்வது Super...
Ashok Raj -- நன்றி அசோக்!
பா.ராஜாராம் -- நன்றி பா.ரா அண்ணே. படம் பார்த்தீட்டிங்களா? இல்லேன்னா சீக்கிரம் பாருங்க...
அரைகிறுக்கன்-- வருகைக்கும் கருத்துக்கும் நன்றி!
உங்ககிட்ட படத்த பத்தி பேசிக்கிட்டிருந்ததுபோன்ற ஒரு உணர்வு இந்த விமர்சனம் படித்ததும்.பை தி பை நானும் தஞ்சாவூர்காரந்தேன். பேராவூரணி.ஆனா படிச்சது உங்க ஊர் பக்கத்துல இருக்கிற ‘PRC Arts % Science"-5 வருஷம்.அதனால் மன்னார்குடி,தஞ்சாவூர் கிராமங்கள் எனக்கும் நல்ல அறிமுகம். பழசயெல்லாம் கெளறிவிட்டுடீங்கெ. நன்றி.
அற்புதமான நினைவுகளை பகிர்ந்து இருக்கின்றீர்கள்...இவ்வளவு பெரிய பதிவுக்கு காரணம் கடல் கடந்து இருக்கும் போது உங்கள் கிராமத்தை கண்ணில் அதாவது திரையில் பார்க்கும் போது பழைய நினைவுகள் கிளறிவிட்டன... ஒரு தேங்காய் வாயில் கவ்வி இறங்கி பிறகு ஏறி இறங்கினால் மார்பு பகுதியில் மேல் தோல் வைட்டி விடும அல்லவா...ருசி காயம் அறியாது அல்லவா?
நான் கேள்விப்பட்டவரையில் omnipotent மாறன் brothers இந்தப்படத்தை திரையிட உரிமைகளை கேட்டதாகவும் அதற்க்கு உரிமையளர் மருத்ததால் இந்தப்படத்த்தை எந்த ஒரு பெரிய திரை அரங்கிலும் வெளியிட விடவில்லை என்பதே. உண்மையா தெரியாது.
சென்னையில் கூட கிக சிறிய திஅரை அரங்குகளே தெரியிட்டுள்ளன.
பச்சக்கல் ஐயரு
இப்படி ஒருவரா? நான் கேள்விப்பட்டதே இல்லை.
அம்மாவிடம் கேட்டுப்பார்க்கனும்.
Hi Ravi,
When we(the whole family) watched this movie I was telling my wife that you'll be the person who'll enjoy the most. The feeling I can't explain much but I had similar when I saw Kizhakku Cheemaiyilae abt 10 yrs back in Singapore.....
Great writing continue your task....
காதல் முகிழ்ப்பதை களவாணி திரைப்படம் அழகாய் சொல்லியிருக்கிறதே அதைச் சொல்ல மறந்து விட்டீர்களே ரவி. வீட்டு வாசலின் முன்பு விளைந்த கதிர்களை தொங்க விடுவது பற்றியும், காதல் குறுக்கெழுத்து பற்றியும் எழுதவில்லையே. நம்ம ஊர் வாழ்க்கையை கொண்டாட்டமாய் வாழும் ஊர் அல்லவா? உழைப்பும், கொண்டாட்டமும், உறவுகளும், சிக்கல்களும் நிறைந்த சமூக வாழ்வை உடையது அல்லவா நம்ம தஞ்சைத் தரணி.
அவ்வாழ்க்கையை எண்ணி கிடந்து தவிக்கிறது மனது.
மழைக்காலங்களில் குளத்தில் குளிக்கச் செல்ல நடந்து செல்லும் போது இருக்கும் மகிழ்ச்சியும், திருவிழாக்களில் உறவுகளை வரவேற்று உபசரித்து அனுப்பும் சம்பவமும் தரும் இன்பத்தை விடவா, நகர வாழ்வு தரப்போகிறது?
நாம் பெற்றதை விட இழந்தது எவ்வளவோ. பணம் நமக்கு எதுவும் தருவதில்லை. இழப்பைத்தான் தருகிறது.
என் நான்கு வயது மகன் இந்த படத்தை குறைந்தது பதினைந்து முறையாவது பார்த்திருப்பான்.வெளிநாட்டிலேயே பிறந்து வளர்ந்த அவன் யாரேனும் தமிழ் பேசுவதை பார்த்தாலே பரவசம் அடைந்துவிடுவான்.தமிழ் தளிவாக பேச வராது என்றாலும் ஆத்திச்சுடியும் ,பாரதியார் பாடல்களும் மட்டும் பாட வரும் அவனுக்கு.படம் என்னதான் புரிந்ததோ , கண்களில் நீர் முட்டும் அளவிற்கு சிரிப்பான்.அருமையான படம்.அரிவாளும் கையுமாக அலையும் மதுரை படங்கள்,தாதா படங்கள் மத்தியில், சிறிதும் விரசம் அற்ற , வெட்டு குத்து காட்சிகளைக் கூட இரத்தக்களறியாக காட்டாமல் பட்டும் படாமல் காட்டிய விதம் ,நொடிக்கு நொடி வெடிச் சிரிப்பு, நம் தினப்படி வாழ்வில் நடக்கும் காட்சிகளையே மையப்படுத்தி இயல்பாக, அலட்டிகொள்ளாமல், காட்சிகளை நகர்த்திய விதம் ,அருமையான பாத்திரத் தேர்வு ,கிராம மொழி என எல்லா விதத்திலும் அருமையான படம்.நேரம் போனதே தெரியவில்லை.படம் பார்த்து முடிந்ததும் மனம் உற்சாகமாகவும் இலேசாகவும் இருந்தது .படங்களே பார்க்காத நானும் என் மகனுடன் அமர்ந்து பதினைந்து முறை பார்த்தேன்.ஒவ்வொரு முறையும் மகிழ்ச்சியாகவே உணர்ந்தேன்.
Mr Ravi,
நானும் மன்னார்குடியை அடுத்த திருப்பாலகுடியை சேர்ந்தவன் உங்களின்
எல்லா கருத்துக்களும் என்னகு உடன்பாடு உண்டு..
நன்றி
Mr Ravi,
நானும் மன்னார்குடியை அடுத்த திருப்பாலகுடியை சேர்ந்தவன் உங்களின்
எல்லா கருத்துக்களும் என்னகு உடன்பாடு உண்டு..
நன்றி
வடுவூர் குமார் பச்சக்கல் ஐயரு
மன்னார்குடி தெப்பகுள வட கரையில் இருப்பதாக நினைக்கிறேன்
ellorum oru kalathla kalavani payaluga thaane .
ரவி,
கண்டிப்பாக இந்த படத்தை பார்க்க முயற்சிக்கிறேன். உன் எழுத்து அருவி போல் விழுந்து தவழ்ந்து செல்கிற்து. இந்த கதைகளை கல்லூரியில் நீ சொல்லியிருந்தால் நான் கதை சொல்வதை நிருத்தியிருப்பேன் :-)
அன்புடன்,
கிருபா
Post a Comment