வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, January 11, 2013

பொங்கல் - 2004


நண்பர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள் !!!இந்த வருடம் பொங்கல் பண்டிகையை கிராமத்தில் (வெட்டிக்காடு) கொண்டாட வாய்ப்பு அமையவில்லை. கடைசியாக வெட்டிக்காட்டில் பொங்கல் கொண்டாடியது 2004 ஆம் ஆண்டு. அந்த பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் பற்றி மரத்தடியில் எழுதிய கட்டுரை இது.

பொங்கல் - 2004


பொங்கல் பண்டிகையை கிராமத்தில் கொண்டாடி பல வருடங்கள் ஆகிவிட்டபடியால் இந்த முறை விடுமுறையில் இந்தியாவிற்கு பொங்கல் சமயத்தில் செல்ல வேண்டும் என்று திட்டம் வகுத்து இந்தியாவிற்கு சென்றோம். பொங்கல் பண்டிகையின்போது வெளியூரில் வேலையில் இருப்பவர்கள் எல்லாம் பொங்கல் கொண்டாடடுவதற்காக தவறாமல் கிராமத்திற்கு வந்துவிடுவார்கள். பொங்கலுக்கு ஊருக்குச் சென்றால் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் ஒன்றாக பார்த்து மகிழலாம்.

தஞ்சாவூரிலிருந்து போகிப்பண்டிகை காலையில் மனைவி, குழந்தைகளுடன் காரில் எங்கள் வெட்டிக்காடு கிராமத்தைச் சென்றடைந்தேன். எங்கள் ஊர் என்ற கவிதையில் இந்த வரிகளை எழுதியிருந்தேன்.

" நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ? "

இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஊரில் அன்று காலடி எடுத்து வைத்தபோது இந்த மகிழ்ச்சியை என்னால் உணர முடிந்தததுஅம்மா, சித்தப்பா, பெரியம்மா, சின்னம்மாக்கள், அண்ணன்கள்குழந்தைகள் மற்றும் உறவினர்களிடம் நலம் விசாரித்துவிட்டு வீட்டின் முன்புறள்ள வேப்ப, பூவரசு மரங்களின் கீழ் நாற்கலிகள் போட்டு கதைகள் பேச ஆரம்பித்தோம். கிராமத்தில் எங்கள் குடும்பம் ஒரு பெரிய கூட்டுக்குடும்பம் போன்றது. எங்களது கிராமத்து நாட்டமையாக இருந்த எங்கள் பெரியப்பாவும், அவருடைய மூன்று தம்பிகளும் வரிசையாக வீடுகள் கட்டிக்கொண்டு ஒற்றுமையாக வாழ்ந்து வந்தார்கள். அந்த ஒற்றுமை இரண்டாவது தலைமுறையில் இன்றும் தொடர்கிறது. தற்போது 80 வயதான எங்கள் கடைசி சித்தப்பா மட்டும் உயிரோடு உள்ளார். உளுந்தூர்பேட்டையிலிருந்தது எனது அண்ணன் குடும்பத்துடன் மாலையில் வந்து சேர்ந்தார். வேலை காரணமாக தம்பி பெங்களூரிலிருந்து பொங்கலன்று அதிகாலையில்தான் வந்து சேர்ந்தான்.

கிராமம், பத்துக்கும் மேற்ப்பட்ட சகோதர, சகோதரர்களை ஒன்றாக பார்த்த மகிழ்சியில் எனது 6 வயது மகளும், 2 வயது மகனும் அவர்களுடன் சேர்ந்து கொட்டம் அடிக்க ஆரம்பித்து விட்டார்கள். சுத்தம், அது இது என்று தடுக்காமல் கிராமத்தில் இருக்கும் நான்கு நாட்களுக்கும் அவர்கள் விருப்பப்படி விளையாட விட்டுவிடு என்று மனைவியிடம் முன்பே கூறிவிட்டேன். எப்போதோ ஒரு முறைதான் கிராமத்தில் மகிழ்சியாக விளையாடும் இதுபோன்ற அனுபவங்கள் அவர்களுக்கு... அதை முழுமைமயாக அவர்கள் அனுபவிக்கட்டும்!போகிப்பண்டிகை மாலையில் மன்னார்குடி நகரத்திற்கு சென்று கரும்பு, வாழைத்தார்கள் மற்றும் பொங்கல் பொருட்கள் எல்லாம் வாங்கி வந்தோம். பொங்கல் பண்டிகையன்று காலையில் எழுந்து பார்த்தால் அண்ணிகள் எல்லாம் அதிகாலையிலேயே எழுந்து மொளுகி கோலம் போட்டு கலக்கி இருந்தார்கள். குளித்துவிட்டு எல்லோரும் எங்களுடைய குலதெய்வமான மதுரை வீரன் கோவிலுக்கு சென்று வழிபட்டு வந்தோம்.

கிராமத்தில் அவரவர்களும் அவர்களுடைய குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வழிபட்டு வந்துவிட்டுதான் வீட்டின் முன்பாக கோடு (அடுப்பு ) வெட்டி பொங்கல் வைக்க வேண்டும் என்பது எங்கள் கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களின் பழக்கம். பத்து மணியளவில் எங்கள் குடும்பத்தின் தலைவரான எங்கள் அண்ணன் பூஜை செய்து வணங்கி கோடு வெட்டினார். பிறகு அம்மா, அண்ணி, என் மனைவி பொங்கல் வைக்க ஆரம்பித்தார்கள்.

என் மகள் சுருதி பெரியப்பா வீட்டிலுள்ள ஆடுகளை ஓடி பிடித்தும், அதற்கு தழைகள், புல் கொண்டு வந்து கொடுத்தும் விளையாடிக் கொண்டிருந்தாள். நான் சிறுவனாக இருந்தபோது எனது பெற்றோர்கள் எனக்கு கொடுக்கும் முக்கியமான வேலை...மாலையில் பள்ளி விட்ட பிறகும், விடுமுறை நாட்களிலும் எங்கள் வீட்டு ஆடுகளையும், மாடுளையும் மேய்த்து பராமரிப்பதுதான். அப்போது எல்லாம் படிக்க, வீட்டுப்பாடங்கள் எழுத, நண்பர்களுடன் விளையாட இடைஞ்சல்களாக இருக்கும் எங்கள் வீட்டு
ஆடுகள், மாடுகள்தான் என்னுடைய முதல் எதிரிகள். எத்தனையோ முறை மதுரை வீரன் கோவிலுக்குச் சென்று "எங்கள் வீட்டு மாடுகள், ஆடுகள் எல்லாம் காணமல் போய்விட வேண்டும் என்றும் எங்கள் வீட்டில் இனிமேல் மாடுகள், ஆடுகள் வளர்க்கக்கூடாது" என்று கண்ணீர் விட்டு அழுது வேண்டியிருக்கிறேன். பலமுறை வேண்டியும் பலன் கிட்டவில்லை... மாறாக எண்ணிக்கைதான் அதிகமானது!! ஆனால் என் மகள் இன்று ஆடுகளுடன் விளையாடிக்கொண்டு "Dad.. you know what.. I love these small goats. Can we buy some goats and bring them up in our place?" என்று என்னிடம் கேட்கிறாள்.ஒவ்வொரு வீட்டிலும் பால் பொங்க "பொங்கலோ... பொங்கல்..." என்ற சத்தம் வெட்டிக்காடு எங்கும் எதிரொலித்ததது. ஒரு மணியளவில் படையலிட்டு சூரிய பகவானை வணங்கி பொங்கல் சாப்பிட்டுவிட்டு எல்லோரும் மறுபடியும் மரத்தடியில் அமர்ந்து கதை பேச ஆரம்பித்தோம். பொங்கல் சாப்பிட்டு விட்டு சென்ற என் மகளையும் மற்ற குழந்தைகளையும் காணவில்லை என்று என் மனைவி புலம்பிக்கொண்டிருந்தாள். எங்கோ தூரத்தில் ஓடி பிடித்து விளையாடும் என் மகள் மற்றும் குழந்தைகளின் கூச்சல்கள் சன்னமாக என் காதில் கேட்டது.

மாலையில் எனது சித்தப்பா வீட்டின் முன்புறமுள்ள வேப்ப மரத்தில் சாக்பீசால் கோடுபொட்டு Stumps mark பண்ணி சிறுவர்களூடன் சேர்ந்து கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். 2 மணி நேரம் ஓரு limited-overs cricket match. அண்ணன் காவல்துறை ஆய்வாளர் என்பதால் கிராமங்களில் மாட்டுப்பொங்கலன்று சண்டைகள்  நடைபெறும்.. தான் காவல் நிலையத்தில் இருக்க வேண்டும் என்று கூறிவிட்டு கிராமத்த்தில் ஒன்றாக மாட்டுப்பொங்கல் கொண்டாட முடியவில்லையே என்ற ஏக்கத்துடன் இரவு பதினோரு மணியளவில் அண்ணன் மட்டும் உளுந்தூர்ப்பேட்டைக்குப் புறப்பட்டுச் சென்று விட்டார்.

மறுநாள் மாட்டுப்பொங்கல் காலையில் எங்களின் வயல்களை பார்த்துவிட்டு, வயலிலுள்ளபம்ப் செட்டில் குளித்துவிட்டு வரலாம் என்று எண்ணி சிறுவர்களையெல்லாம் Tata Sumo-ல் தூக்கிப்போட்டுக்கொண்டு ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள வயலுக்குசென்றோம்.  நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் ஊரில் மின்சார பம்ப்செட்டுகளே கிடையாது. ஆறுகளில் காவிரித் தண்ணீர் கரை புரண்டோடும். இரண்டு போக நெல், கோடையில் கடலை, உளுந்து, எள் என்று விவசாயம் சிறப்பாக நடைபெறும். இன்றோ ஆறுகள் வறண்டு கிடக்கின்றன. எங்கு பார்த்தாலும் மோட்டார் பம்ப் செட்டுகள்... இவற்றின் உதவியால்தான் விவசாயம். பம்ப் செட் வைக்க வசதிஇல்லாத ஏழை விவசாயிகள் சிலர் தங்களின் நிலத்தை தரிசாக போட்டுள்ளார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு 100 அடியாக இருந்த நிலத்தடி நீர் இன்று 200, 300 அடியாக போய்விட்டது. சரியான மழை கிடையாது. இந்த நிலை நீடித்தால் நிலத்தடி நீரும் வற்றி தஞ்சைத்தரணியில் இன்னும் பத்து வருடங்களில் விவசாயமே செய்ய இயலாத நிலை வந்துவிடும் போலுள்ளது... நினைக்கவே பயமாக உள்ளது.சம்பா போக நெல் வயல்களில் இன்னும் இரண்டு வாரத்தில் அறுவடைக்கு தயாராக இருந்தது. கிராமத்தில் அம்மா மட்டும் இருப்பதால் எங்களூடைய வயல்களை எல்லாம் பெரியப்பா, சித்தப்பா மகன்களிடம் குத்தகைக்கு கொடுத்து விட்டோம். பம்ப் செட் தண்ணீரில் ஆட்டம் போட்டுக்கொண்டு வரமாட்டோம் என்று அடம்பிடித்த சிறுவர்களை மிரட்டி குளிக்க வைத்து, குளித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.

ஐந்து வருடங்களுக்கு முன்பு வரை சிறப்பாக கொண்டாடி வந்த மாட்டுப்பொங்கல் பண்டிகை இப்போது எங்கள் கிராமத்தில் சிறப்பாக நடைபெறுவது இல்லையாம்காரணம்.. கிராமத்து மக்களிடையே ஒற்றுமை குலைந்து தேவையில்லாத சண்டைகள்பெரியப்பா நாட்டாமையாக இருந்தவரை எந்த ஒரு தகராருக்கும் போலிஸ் எங்கள் கிராமத்திற்கு வந்ததே கிடையாது. இன்று பஞ்சாயத்தார்கள் தீர்ப்புக்கு கட்டுப்படாமல் எல்லோரும் போலிஸ், கோர்ட் என்று போகிறார்களாம். கிராமங்கள் எல்லாம் கொஞ்சம் கொஞ்சமாக தங்களுடைய தனித்தன்மைகளை இழந்து மாறிக்கொண்டு வருகின்றன.

நான் சிறுவனாக இருந்த காலத்தில் பெரும் பொங்கலைவிட மாட்டுப்பொங்கலைத்தான் நாங்கள் ஆர்வத்துடன் எதிர்பார்போம். மாட்டுப்பொங்கல்தான் சிறுவர்களாகிய எங்களுக்கு மகிழ்சியான நாள். மாட்டுப்பொங்கலன்று எல்லோருடைய வீடுகளிலும் ஆட்டுக் கறி,
கோழி, மீன் என்று தடபுடலான மதிய விருந்து கட்டாயம் உண்டுஎனது தந்தை, என் அம்மா, எங்கள் வீட்டு வேலையாள் நாகநாதன் ஆகிய மூவரைத்தவி யாராலும் கிட்டே நெருங்க முடியாத எங்களுடைய கொட்டாப்புலி காளைகள் இரண்டுக்கும் கூறிய கொம்புகளில் அழகிய வர்ணம் தீட்டி, கழுத்தில் சலங்கைகள் கட்டிமாலைகள் போட்டு, கம்பீரமாக மாடுகளை தண்ணீரில் அடிப்பதற்கு பிடித்துச் செல்வார் என் தந்தையார். சில சமயம் மாடுகளின் கொம்பில் பணத்தை ஒரு சிறு பையில் வைத்து நன்றாக கட்டிவிட்டு "தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சவால் விடுவார். கொட்டாப்புலி காளைகளின் பெருமைகளை கூறி என் நண்பர்களிடம் தம்பட்டம் அடித்துக்கொள்வேன்.மதிய உணவு சாப்பிட்டுவிட்டு கிராமத்து மக்கள் எல்லோரும் ஊருக்கு தெற்கே உள்ள குளத்திற்கு பக்கத்திலுள்ள திடலில் மாடுகளுடன் கூடுவார்கள். தப்பு கொட்டு, குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பு விளையாட்டுகள், போதையில் மிதக்கும் ஆண்களிடையே
சண்டைகள் என்று திடல் களை கட்டும். அன்று எங்கள் பெரியப்பா மிக அற்புதமாக சிலம்பம் விளையாடுவார். அவருடைய இளமைக்காலத்தில் அவர்தான் எங்கள் சுற்று வட்டார கிராமங்களின் ஹீரோ. அதனால்தான் அவருடைய 31 வயதில் கிராம மக்கள் அவருக்கு கிராமத்தின் நாட்டாமை பதவியை கொடுத்து சிறப்பித்தார்கள். அவருடைய எழுபதாவது வயதிலும் அவர் வீசும் கம்பை இளைஞர்களால் தடுத்து விளையாட முடியாது. எங்கள் பெரியப்பாவின் சிலம்ப விளையாட்டிலிலும், வள்ளித் திருமணம் நாடகத்தில் அவர் வேடன் வேஷம் கட்டி ஆடும் அழகிலும் மயங்கித்தான் பெரியப்பாவின் முதல் மனைவி இறந்தவுடன் இரண்டாம் தாரமாக விரும்பி பெரியப்பாவுக்கு வாக்கப்பட்டேன் என்று இன்றும் பெரியம்மா கூறிக்கொண்டு இருக்கிறது.

பூஜை செய்து, சாமி கும்பிட்ட்விட்டு "மாடுகளை தண்ணீரில் அடிங்கடா" என்று பெரியப்பா குரல் கொடுத்ததும் சிறுவர்களாகிய நாங்கள் எல்லாம் சத்தம் போட்டுக்கொண்டு மாடுகளை எல்லாம் ஒன்றாக மடக்கி தண்ணீரில் அடித்து மகிழ்வோம். பிறகு தப்பு கொட்டு, குறவன் குறத்தி ஆட்டம், சிலம்பாட்டம் சகிதமாக மாடுகளை ஊர்வலமாக கொண்டு செல்வார்கள்.

ஆனால்.. இன்று அவரவர்கள் தனித்தனியே மாடுகளை ஓட்டிச்சென்று தண்ணீரில் அடித்து வந்து இரவில் பொங்கல் வைத்து மாட்டுப்பொங்கல் கொண்டாடுகிறார்கள்முன்புபோல் ஒன்றாகக் கூடி மாட்டுப்பொங்கல் கொண்டாடாமல் இப்படி கிராமம் பிளவுபட்டு கிடப்பதை பார்த்து மனம் வருந்தியது.

விவசாயி வீட்டில் மாடுகள் இல்லாமல் இருக்கக்கூடாது என்பதற்காக எங்கள் அம்மா ஒருபசு மாட்டை வீட்டில் வளர்த்து வருகின்றார். அன்று அந்த பசுமாட்டிற்கு அலங்காரம் செய்து, பொங்கல் வைத்து பசுவை வணங்கி மாட்டுப் பொங்கல் கொண்டாடினோம்.

இரவு மாட்டுப் பொங்கல் கொண்டாடும்போது தப்பு அடிக்கும் தோழர்கள் தப்பு, கிளாரினெட், மேளத்துடன் நல்ல போதையில் எங்கள் வீட்டிற்கு வந்து மிக அற்புதமாக பாடி, வாசித்து மகிழ்வித்தார்கள்.

                                                          *                 *              *          

1 comment:

மாற்றுப்பார்வை said...

நல்லா வந்துஇருக்கு வாழ்த்துக்கள்