வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, August 18, 2010

பதிவுலகம் - நான் யார்?வலைப்பதிவுலகில் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு தொடர் பதிவு வலம் வந்து கொண்டிருக்கும். ஒரு சில தொடர்கள் மிகவும் அருமையானவை... குறிப்பாக பிடித்த புத்தகங்கள் தொடர். ஆனால் “பதிவுலகில் நான்என்ற இந்த மொக்கைத் தொடரை ஆரம்பித்து வைத்த பதிவர் யார் என்று தெரியவில்லை. பாசமிகு அண்ணன் பா.ராஜாராம் அவர்கள் அழைப்பு விடுத்ததால் எழுத வேண்டிய கட்டாயம். அண்ணன் என்னையும் என் வீட்டு Boss-யையும் கூப்பிட்டு பல நாட்கள் ஆகிவிட்டது. ஆனால்...ஆஸ்திரேலியா பயணம் மற்றும் வேலைப்பளு காரணமாக இப்பொழுதுதான் எழுத முடிந்தது.

1. வலைப் பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?

ரவிச்சந்திரன்

2. அந்தப் பெயர்தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை என்றால் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

ரவிச்சந்திரன்  என்னுடைய உண்மையான பெயர்

2003-2004 காலகட்டத்தில் முதன் முதலில் திண்ணை மற்றும் மரத்தடி, உயிரெழுத்து யாஹூ மடலாடற் குழுக்களில் “பொன்னி வளவன்என்ற பெயரில் எழுதினேன். காரணம்... “பொன்னியின் செல்வன்நாவல் ஏற்படுத்திய தாக்கத்தில் பொன்னி நதி ஓடி விளையாடும் தஞ்சைத்தரணி மைந்தன் என்பதால். பொன்னி வளவன்என்ற பெயர் பெரிய இலக்கியவாதி பெயர் போல் இருப்பதால்.. இலக்கியத்திற்கும் எனக்கும் ரொம்ப தூரம் என்பதால்... வலைப்பதிவில் என் சொந்தப்பெயரிலேயே எழுதி வருகிறேன்.

3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்து வைத்தது பற்றி?

கெரகம்தான்:)

நான் வலைப்பதிவாளரான கதை பிறகு மீண்டும நான்கு வருடங்கள் கழித்து திரும்பி எழுத வந்த கதை இங்கே

4. உங்கள் வலைப் பதிவை பிரபலமடையச் செய்ய என்னவெல்லாம் செய்தீர்கள்?

பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நான்கு வருடங்கள் கழித்து எழுத ஆரம்பித்தவுடன் நண்பர்களுக்கு மெயில் அனுப்பி தெரிவித்தேன். தமிழ்மணம் வழியாக பதிவுகளை படிக்கும்போது, பின்னூட்டம் போட நேரம் இருந்தால் ஒரு சிறிய பின்னூட்டம் போடுவேன்.

5. வலைப் பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு என்ன? இல்லை என்றால் ஏன்?

என் அனுபவங்கள் மற்றும் என்னை பாதித்த விடயங்களைத்தான் நான் பெரும்பாலும் எழுதுகிறேன்.

6. நீங்கள் பொழுது போக்கிற்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகள் மூலம் சம்பாதிப்பதற்காகவா?

மனதில் புதைந்து கிடக்கும் எண்ணங்கள் திரி வைக்கப்படாத வெடிகுண்டுகள்என்று அறிஞர் ஒருவர் கூறியிருக்கிறார். என் மனதில் புதையுண்டு கிடக்கும் எண்ணங்களை பகிர்ந்து கொள்ளத்தான் வலைப்பதிவில் எழுதுகிறேன். வேலை... வேலை என்று பொருள் தேடி அலையும் இந்த பொருளற்ற வாழ்க்கையில் சற்று இளைப்பாற இந்த எழுத்து பயணம். மேலும்.. வலைப்பதிவில் எழுதுவதன் மூலம் பல நல்ல நண்பர்களை பெற்றிருக்கிறேன்.

என்னது... வலைப்பதிவில் எழுதி சம்பாதிப்பது எல்லாம் ரொம்ப ஓவரா தெரியல... நல்லா கேட்கிறாங்கப்பா கேள்வி:)

7. நீங்கள் எத்தனை வலைப் பதிவிற்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப் பதிவு?

வெட்டிக்காடு என்னுடைய சொந்த கிராமத்தின் பெயரில் எழுதும் இந்த ஒரு வலைப்பதிவுதான்.

8. மற்ற பதிவர்கள் மேல் கோபம், அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆமாம் என்றால் யார் அந்த பதிவர்? ஏன்?

பொறாமை:
இல்லை...ஒவ்வொருத்தரிடமும் ஒரு தனிப்பட்ட திறமை இருக்கிறது. அவரவர் பாதையில் அவருடைய திறமையை வெளிப்படுத்தி எழுதுகிறார்கள். அதனால் யாரையும் பார்த்து பொறாமைப் பட தேவையில்லை. பொறாமை மனிதனிடம் உள்ள கெட்ட குணம். நாம் ஒருவரைப் பார்த்து அவரிடம் உள்ளது நம்மிடம் இல்லையே என்று பொறாமைப்பட்டால் அவர் நம்மைப் பார்த்து நம்மிடம் உள்ளது அவரிடம் இல்லையே என்று பொறாமைப்படுவார். இதுதான் மனித இயல்பு. அக்கரைக்கு இக்கரை பச்சை! எனவே.. Be Happy with what you are – This is my motto!

கோபம்:
தங்களை நாட்டாமையாக நினைத்துக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யும் ஒரு சில இணைய ரவுடிகளை பார்த்து கோபம் ஏற்படுவது உண்டு. 


9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டை பற்றி?

நான் மரத்தடியில் 2003 ஆம் ஆண்டு எழுத ஆரம்பித்த போதும் பிறகு வலைப்பதிவு ஆரம்பித்து 2006-ல் முதல் பதிவு எழுதிய போதும் என்னை பாரட்டி உற்சாகப்படுத்தியவர் சகோதரி மதி கந்தசாமி

நான்கு வருடங்கள் கழித்து கடந்த இரண்டு மாதங்களாக நான் எழுதும் பதிவுகளை தொடர்ச்சியாக படித்து பின்னூட்டங்கள் மற்றும் தனி மடல்கள் மூலம் உற்சாகப்படுத்தும் நண்பர்கள்:
அண்ணன் பா.ராஜாராம்
அண்ணன் கோவி.கண்ணன்
ஜோ
ஜோதிஜி
கே.ஆர்.பி.செந்தில்

10. கடைசியாக- விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டியது அனைத்தையும் பற்றி கூறுங்கள்

கற்றது கை மண்ணளவு, கல்லாதது உலகளவு எனவே நிறைய படிக்க வேண்டும்.

என்னால் முடிந்த உதவி/சேவைகளை கிராம மாணவர்கள்களின் கல்வி மற்றும் கிராமங்களின் வளர்ச்சிக்கு செய்ய வேண்டும். AIMS India  (www.aimsindia.net) என்ற தொண்டு நிறுவணம் 2001-ல் Washington DC-யில் இருக்கும் நண்பர்களால் தொடங்கப்பட்டது. 2003-ல் Boston-ல் இருக்கும் என் நண்பர்களுடன் சேர்ந்து AIMS India – Boston Chapter-ஐ தொடங்கினேன். கடந்த ஏழு ஆண்டுகளாக பாஸ்டன் நண்பர்கள் தமிழகத்தில் பல கிராம கல்வி வளர்ச்சி திட்டங்களை நிறைவேற்றியுள்ளோம்.
சமீபத்திய Dharmapuri Dist - Govt Schools LIBRARY Project:

அழைக்க விரும்புவர்கள்:

இந்த மொக்கைத்தொடர் என்னுடன் முடியட்டும்:)

உமாசங்கர் I.A.S - கண்டனம்

திரு.தருமி சார் அவர்கள்  உமாசங்கர் I.A.S அவர்களுக்கு தமிழக அரசு அளித்திருக்கும் தண்டனைக்கு பதிவர்கள் கண்டனம் தெரிவிக்கும் யோசனை ஒன்றை தெரிவித்திருந்தார்.


என்னுடைய கண்டனம்:
உமாசங்கர் I.A.S. அவர்கள் ஒரு நேர்மையான அரசு அதிகாரி.  இதுவரை அதிகாரியாக சென்றவிடமெல்லாம் நல்ல பல சேவைகளை மக்களுக்கு அளித்தவர். புதிய திட்டங்கள், செயல் முறைகள் என்று தனக்கென ஒரு பாணியில் நற்பணி செய்து வந்த அவருக்கு இன்றைய தமிழக அரசு அளித்துவரும் "தண்டனை", அதற்குரிய காரணம் எல்லாம் எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்துள்ளது.

தமிழக அரசு இது போன்ற நல்ல, நேர்மையான அதிகாரிகளுக்கு தண்டனைகளைத் தருவதற்கு என் ஆழ்ந்த வருத்தத்தையும், கண்டனத்தையும் இப்பதிவு மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.


சில சுட்டிகள்:


1.  Complaint filed by C.Umashankar IAS., against the State of Tamil Nadu
Thursday, August 12, 2010

Adelaide, Australia - படங்கள்

ஐந்து நாட்கள் Adelaide, Australia பயணம்...பதிவு எதுவும் எழுதவில்லை... எனவே Adelaide படங்கள்!


Cleland Wildlife Park
Kangaroos - Cleland Wildlife Park
Emus - Cleland Wildlife Park
Cleland Wildlife Park
Adelaide Festival Theatre
Adelaide Festival Theatre
Torrens River
Adelaide Oval Cricket Ground
View from Adelaide Festival Theatre
Night view of Torrens River
Adelaide Airport
Perth Skyline

Friday, August 06, 2010

வெட்டிக்காடு கதைகள்-1: அய்யனார் சாமி

சில வருடங்களுக்கு முன்பு வெட்டிக்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் நான் பார்த்த, கேட்ட உண்மைச் சம்பவங்களைக் கொண்டு “வெட்டிக்காடு கதைகள்” என்று ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணி “அய்யனார் சாமி” என்ற கதையை எழுதினேன். ஆனால்... அதற்க்குப் பிறகு என் வலைப்பதிவிற்கு ஒரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு போய் விட்டேன். கடந்த சில நாட்களாக “களவாணி” படம் ஏற்படுத்திய பாதிப்பில் ஊர் கதைகள் ஞாபகம் வர மீண்டும் “வெட்டிக்காடு கதைகள்” தொடருக்கு உயிர் கொடுத்து எழுதலாம் என்ற எண்ணம். முதல் கதையான “அய்யனார் சாமி”-யை இப்போது மீள் பதிவு செய்கிறேன். இந்த உண்மைச் சம்பவம் நான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.
                                                             அய்யனார் சாமி
                                                                     


மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் எமன்சவுந்தர்ராஜன் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்ம்பித்து விடும்.


வெள்ளை வேட்டி, சட்டை, முருக்கிய பெரிய மீசை, இடுப்பில் சொருகியிருக்கும் கத்தி, கையில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு சகிதமாக தமிழ் ஐயா நடந்து வருவதைப் பார்த்தால் பரவை முனியம்மா பாடும் மதுரை வீரன் தானே.... என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.


கயவாலிப் பயலுகளா... என்னாடா அங்க சத்தம்...? வந்தேன்னா... குன்டிய ராவிபுடுவேன்என்று எமன் ஒரு குரல் கொடுத்தாரென்றால் பசங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் மரம், செடி கொடிகள் கூட ஆடாமல், அசையாமல் அமைதி காக்கும்.

நாயகன் வேலு நாயக்கரப்போல தமிழ் ஐயா நல்லவரா ? கெட்டவரா ? என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர்.

பாடம் படித்து வராத, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை மூங்கில் கம்பாலும், கிளோரியா கம்பாலும் வகுப்பின் மூலை முடுக்கெல்லாம் விரட்டி, விரட்டிச் சென்று அடி பிண்ணி எடுப்பார். பெண்களை கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்காது. பெண்களின் கட்டுரை நோட்டுப்புத்தகத்தை வாங்கி பேருக்கு ஏனோதானோவென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு இது என்ன கையெழுத்து ? “ என்று கூறி எழுதிய பக்கங்களை கிழித்து எறிவார். ஆனால்.. சில பசங்களின் கோழி கிறுக்கல் கையெழுத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.

ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். பத்தாம் வகுப்பு மாணவர்களையெல்லாம் பொதுத்தேர்வு படிப்பு விடுமுறை மற்றும் பரீட்சை நாட்களில் மன்னார்குடி டவுனில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு, பாடங்கள் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பார்.

ஐயாவைப் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல... தலைமையாசிரியர் அப்பிரானி நாரயணன் மற்றும் சக ஆசிரியர்கள் கூடப் பயந்து ஐயா முன்பு அடகக ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள்.

ஐயாவுக்கு தலைமையாசிரியார் நாரயணனை கொஞ்சம்கூட பிடிக்காது. எப்படி பிடிக்கும்...? ஐயா பழுத்த நாத்திகவாதி. பெரியாரின் சீடர். பசங்க தப்பித்தவறிக்கூட சாமி, பேய், பூதம் என்று சொன்னால் தொலைத்து விடுவார். ஆனால் தலைமையாசிரியர் நாரயணனோ பழுத்த ஆத்திகவாதி. நெற்றி நிறைய நாமத்துடன் வலம்வரும் ஓர் அப்பிரானி.

கல்வி அதிகாரி (D.E.O) எந்த நேரத்திலும் பள்ளியை ஆய்வு செய்ய வருவார் என்ற பயத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொன்டிருந்த காலக்கட்டத்தில் ஓர் நாள் தமிழ் ஐயா தலைமயாசிரியர் நாரயணன் அறைக்குச்சென்று கிராமத்திலுள்ள அவருடைய வயலில் அறுவடை நடைபெறுவதால் ரெண்டு நாட்கள் லீவு வேண்டும் என்று தலைமையாசிரியரைப் பார்த்து கேட்டார்.

என்ன சார்... D.E.O எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வருவார். இப்ப போய் லீவு கேட்கிறீங்களே.. ? “ என்று இழுத்தார் நாரயணன்.

சரேலென்று இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மேசை மீது ஓங்கி குத்திவிட்டு பாப்பாரப் பயலே...இப்ப லீவு தர முடியுமா ? முடியாதா ? “ என்றார் எமன்.

நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானானும் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் சார்.. D.E.O கேட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறேன் என்று நடுங்கிக்கொண்டே சொல்லி அன்று எமனோட கத்திகிட்டேயிருந்து தப்பித்தார் நாரயணன்.

மூவாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்ற கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலி கொடுத்து... கரகாட்டம், வள்ளித் திருமணம், பவளக்கொடி நாடகங்களுடன் திருவிழாக்கள் களை கட்டும் ஆடி மாதத்தில் ஓர் நாள்...

ஏழாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் ரெண்டாவது பீரியட் தமிழ் பாடத்தை நினைத்துக்கொண்டு மனதில் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். காரணம்... தமிழ் ஐயா திடீரென்று நேற்று இன்று எல்லோரும் மூன்று செய்யுள்கள் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். பள்ளி விட்டவுடன் வீட்டிற்குச் சென்று புத்தகப்பையை ஒரு மூலையில் கடாசிவிட்டு வயல்வெளிகளிலும், குளத்திலும் ஆட்டம் போடும் பசங்க... அடுத்த நாள் காலையில பள்ளிக்கூடத்திற்கு போகும்போதுதான் புத்தகப்பையைத் தேடுவார்கள். இப்படிப்பட்ட படிப்பாளிகளிடம் திடீரென்று மூன்று செய்யுள்களை ஒரே நாளில் படித்து ஒப்புவிக்க வேண்டும் என்று எமன் கூறினால் பாவம்... அவர்கள் என்ன பண்ணுவார்கள் ? குறைந்தபட்சம் ஒரு மூன்று, நான்கு நாட்கள் கொடுத்தாலாவது கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பார்கள்.

முதல் மார்க் வாங்கும் ரவிச்சந்திரனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இன்று சரியான மண்டகப்படி உண்டு என்ற பயத்தில் மாணவர்களிருக்க இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கான மணியும் அடித்தது. ஐந்து நிமிடங்களாயிற்று... பத்து நிமிடங்களாயிற்று.. ஐயா இன்னும் வரவில்லை. வகுப்புத் தலைவன் ரவி ஆசிரியர்கள் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து சார்.. இன்னிக்கு வரலைடாஎன்றான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்தார்கள்.

டேய்... சத்தம் போடாதிங்கடா... புகழேந்தி சாருக்கு டீ வாங்க நான் காடுவெட்டியார் கடைக்குப் போறேன்... சத்தம் போடாம இருங்கடா என்று கூறிவிட்டு ரவி சென்றுவிட்டான். கணக்கு வாத்தியார் புகழேந்திக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் காடுவெட்டியார் கடை டீதான் பிடிக்கும். பக்கதிலுள்ள கோவிந்தராசு டீக்கடை டீ அவருக்கு பிடிக்காது.

செய்யுள் படித்து வரச்சொன்ன எமன் வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கொஞ்சநேரம் கூட சுதந்திரமாக பேசவிடாமல் பேசியவர்கள் பெயர் என்ற லிஸ்ட் ஒன்றைக் கொடுத்து வாத்தியார்களிடம் மாட்டிவிடும் சகுனி ரவியும் வகுப்பில் இல்லை. மாணவர்களின் மகிழ்ச்சியைக் கேட்கவும் வேண்டுமா ? அடி தூள் பறக்குது.....

ரவி போன ஐந்து நிமிடங்கள் கழித்து வயலுக்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வந்த தமிழ் ஐயா பள்ளியை சைக்கிளில் நெருங்கும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவருடைய ஏழாம் வகுப்பு சென்னை கார்ப்பரேசன் கவுன்சில் மீட்டீங் போல சத்தமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். பள்ளியின் முன்வாசல் வழியாக பள்ளிக்குள் வராமல் அப்படியே பள்ளியின் பின்பக்கம் சென்று அங்கிருக்கும் ஒத்தையடிப்பாதை வழியாக உள்ளே நுழைந்து பள்ளிக்குள் வந்தார்.

வேட்டைக்குச் செல்லும் புலி போல மெல்ல பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக ஏழாம் வகுபின் பின்பகுதிக்குச் சென்று பாதி சுவருக்கு மேலேயிருக்கும் மூங்கில் தட்டியின் ஒட்டை வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ரவியை காணவில்லை. மாணவர்கள் சத்தம் போட்டு ஓடி பிடித்து விளையாடுகிறார்கள். மாணவிகள் பெஞ்சு மேல் சாக்பீசால் கட்டம் போட்டு தாயம் விளையாடுகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்தார் எமன்.

அந்த நேரம் பார்த்தா... கடைசி பெஞ்ச் ராமமூர்த்திக்கு சாமி ஆட வேண்டும் என்ற ஆசை வரவேண்டும் ? திடீரென்று பெஞ்ச் மேல ஏறி டேய்... நான்தான்டா அய்யானார் சாமி என்று கூறிக்கொண்டு டேய்..டேய்.. என்று சத்தம் போட்டு சாமி ஆட ஆரம்பித்தான். மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சத்தத்தை நிறுத்திவிட்டு ராமமூர்த்தியின் சாமியாட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உடனே பக்கத்திலிருந்த அவன் நண்பன் வேல்மணி பூசாரியாக மாறி அய்யனார் சாமீ... நீதான் எங்களை காப்பத்தனும்... உனக்கு என்ன குறையிருந்தாலும் எங்ககிட்ட சொல்லு... நாங்க தீர்த்து வைக்கிறோம் சாமீ என்றான்.

எனக்கு ஏன்டா... இந்த வருஷம் ரெண்டு கரும்புதான் (ஆடு) வெட்டியிருக்கீங்க

அடுத்த வருஷம் நெறைய வெட்றோம் சாமி

பக்தன் செல்வராசு அய்யனார் சாமியிடம் சென்று சாமீ...நான் படிக்காமலேயே பாசாகனும் சாமீ.. அதுக்கு நீதான் ஒரு வழியச் சொல்லனும் சாமீ என்றான்.

டேய்.. எனக்கு ஒரு குஞ்சு (கோழி) காவு குடுடா...நீ படிக்காம பாசாக நான் ஏற்பாடு பன்றேன்

பிறகு மேலும் ஒரு சில பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு மலையேறி விட்டது அய்யனார் சாமி. அய்யனார் சாமி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எமன் ஒன்றும் செய்யாமல் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.

அன்று மதியம் ஏழாம் வகுப்பிற்கு மூன்றாவது பீரியட் ஓவிய வகுப்பு. ஓவிய வகுப்பென்றால் மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான். ஏனென்றால் ஓவிய ஆசிரியர் முருகன் அம்புலிமாமா, ரத்னபால சிறுவர் கதை புத்தகங்களை படித்து அந்த கதைகளை ”அழகி” பட பிச்சாண்டி வாத்தியார் போல ஆக்சன் போட்டு ரசித்து சொல்லுவார். இதனால் பசங்களுக்கு முருகன் வாத்தியாரை ரொம்பப் பிடிக்கும். மகேந்திரபுரி இளவரசி  கதையின் நான்காம் பாகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

மூன்றாவது பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தவுடன் ஒவிய ஆசிரியர் முருகனுக்குப் பதிலாக தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார். ஓவிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதில் எமன் வந்துவிட்டார். பசங்களுக்கு செய்யுள் சொல்லவேண்டுமே என்ற பயத்தில் குப்புனு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் வந்து அமர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் பசங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். புயல் அடிப்பதற்கு முன்பு நிலவும் மயான அமைதி.

டேய்.. ரவி காலையில வகுப்ப பார்த்துக்காம எங்கடா போயிருந்தே? “

புகழேந்தி சாருக்கு டீ வாங்கிவர காடுவெட்டியார் கடைக்கு போயிருந்தேன் சார்

சரி..சரி... போயி வேப்ப இலை நிறைய ஒடிச்சுக்கிட்டு வாடா

டேய்.. செல்வம் நீ போயி ஒரு டப்பாவுல எதிர்த்த வீட்டு குப்பையில சாம்பல் அள்ளிகிட்டு வாடா

டேய்.. மதி நீ போயி பெரிசா ஒரு ஏழெட்டு கிளோரியா கம்பு ஒடிச்சிகிட்டு வாடா

ஐயா சாலமன் பாப்பையா சொல்வது போல பசங்களுக்கு ஒன்னும் புரியல.. வெளங்கல....

வேப்ப இலை, சாம்பல், கிளோரியா கம்புகள் எல்லாம் எமன் முன்னாடி உள்ள மேசையில்.

யாருடா.. அந்த அய்யனார் சாமி? “

பசங்களுக்கு இப்ப வெளங்கிடுச்சி. அந்த அய்யனார் சாமியே வந்தாக்கூட நம்மல இன்னிக்கு எமன்கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது என்று நினைத்துக்கொண்டே மரண பயத்துடன் மெதுவாக எழுந்தான் ராமமூர்த்தி.

பூசாரியும், படிக்காமலேயே பாசக வேணும்னு வரம் கேட்ட பக்தனும் எழுந்திருங்க

வேல்மணியும், செல்வராசுவும் மெதுவாக எழுந்தார்கள்.

எமன் திடீரென்று ஒரு கையில் சாம்பலையும் மறுகையில் வேப்பிலையும் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி தலையில் சாம்பலைக் வீசிக்கொண்டே அய்யனாரே... என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு என்று கூறிக்கொண்டே வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்தார்.

பிறகு ராமமூர்த்தி, வேல்மணி, செல்வராசு மூன்று பேரையும் கிளோரியா கம்பால் தாக்க ஆரம்பித்தார். பசங்க மூனு பேரும் அடி தாங்கமுடியாம வகுப்போட ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறி மாறி ஓடறாங்க. எமன் விடாமல் துரத்தித் துரத்தி அடிக்கிறார். பசங்க மூனு பேரும் போட்ட அலறல் சத்தத்தைக்கேட்டு மத்த வகுப்பு ஆசிரியர்களெல்லாம் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஏழாம் வகுப்பை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் ராமமூர்த்தியை மட்டும் கட்டம் கட்டி அய்யனார் சாமீ.. என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு என்று சொல்லிக்கொண்டே வேப்பிலையாலும், கிளோரியா கம்பாலும் அடி பிண்ணி எடுக்கிறார். அடி தாங்கமுடியாமல் நான் ஓடிப்போயிடுறேன்.. நான் ஓடிப்போயிடுறேன் என்று ராமமூர்த்தி அலறுகிறான்.

அவிழ்ந்த கோவணத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டே மறு கையிலுள்ள கிளோரியா கம்பால் ராமமூர்த்தியை தாக்கிக்கொண்டே இருக்கிறார் எமன். இதற்கு மேல் இங்கேயிருந்தால் மனுசன் இன்னிக்கு அடிச்சே கொன்னுடுவார் என்ற பயத்தில் ராமமூர்த்தி வகுப்பை விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அன்று பள்ளியைவிட்டு ஓடியவன்தான் அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி திரும்பி வரவேயில்லை......!
                                                       *        *       *

பி.கு:
தமிழ் ஐயாவிடமிருந்து எங்கள் வகுப்பில் ஒரு முறை கூட அடி வாஙகமல் தப்பித்தவன் நான் ஒருவன் மட்டும்தான்! “குன்டமுட்டு பயலே எங்கிட்டேயிருந்து அடி வாங்காம தப்பிகிறவன் நீதான்டா” என்று அடிக்கடி சொல்லி காட்டுவார். தமிழ் ஐயாவின் அடியிலிருந்து தப்பிப்பதற்காக மற்ற பாடங்களை விட தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் படித்து விடுவேன். தமிழ் ஐயாவிடம் பயம் இல்லாமல் இருந்திருந்தால் இப்ப்டி வலைப்பதிவில் தமிழில் என்னால் எழுதிக்கொண்டிருக்க முடியாது. தமிழ் ஐயாவிற்கு என் நன்றிகள்!


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது தமிழ் ஐயாவை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். “தம்பீ.. எப்படிடா இருக்கே என்று வாஞ்சையுடன் கையைப் பிடித்து கேட்டபோது” உடம்பில் ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க முடியாது!! நீரிழிவு நோயினால் ஐயாவின் உடல் தளர்ந்து விட்டது. ஆனால் முறுக்கிய நரை மீசையுடன் அதே “அய்யனார் சாமி” கம்பீரம் முகத்தில்! சிங்கம் எப்போதும் சிங்கம்தான்....

Wednesday, August 04, 2010

களவாணி - எங்க ஊர் படம்


திரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணிதிரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள் தஞ்சைத்தரணி. படம் எடுத்தது....நான் ஓடி விளையாடிய என் சொந்தங்கள் வாழும் பக்கத்து கிராமங்களான எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் மற்றும் நான் படித்த மன்னார்குடி நகரம். மலரும் நினைவுகளுடன் “களவாணிபடம் பற்றிய எனது பார்வை.

சிங்கப்பூருக்கு திரும்பி வந்ததிலிருந்து நல்ல படங்கள் என்றால் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனால்... ராவணன், மதராஸப்பட்டினம், தில்லாலங்கடி போன்ற படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க களவாணி படம் சிங்கப்பூருக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எனவே வீட்டில் Home Theartre-ல் பார்கக வேண்டிய கட்டாயம்.

படம் ஆரம்பித்தவுடன் நன்றி கார்டில் “எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் கிராம மக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு அவர்கள்என்ற பெயர்களை பார்த்தவுடன் ஆச்சரியம்.... அட நம்ம ஊர்களில் எடுத்திருக்கிறார்கள்! முதன்முதலில் நம் ஊர்களை வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலுடன் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை எந்த்வித தொய்வும் இல்லாமல் பர... பரவென சென்றது. விரு..விருப்பான திரைக்கதை. அட்டகாசமான காமெடி. நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தேன். பரந்து விரிந்து கிடக்கும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள் உள்ள எங்கள் ஊர்களின் அழகை மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மைனர்த்தனம் செய்துகொண்டு தருதலையாக திரியும் இளைஞன் பாத்திரத்தை மிக நேர்த்தியாக பாடி லாங்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அட்டகாசமாக செய்துள்ளார் விமல். +1 படிக்கும் ஒரு கிராமத்து பெண்ணிற்கேற்ற பொருத்தமான ஓவியா. கிராமத்தில் நாம் பார்க்கும் ஒரு யதார்த்தமான கோபக்கார அண்ணன் வில்லனாக ஒரு புது முக நடிகர் (பெயர் தெரியவில்லை). ஒரு டிபிகல் கிராமத்து தந்தையாக இளவரசு. இந்த படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த நடிப்பு சரண்யாவுடையதுதான். ஒரு தஞ்சாவூர் கிராமத்து பெண்மனியாகவே வாழ்ந்துள்ளார். தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் போன்ற படங்களை பார்த்த பிறகு நான் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் சரண்யாவின் தீவிர ரசிகன். இந்த படத்தில் மேலும் உயரத்தை தொட்டுள்ளார். அதற்கு காராணம் சரண்யாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு அப்படியே என் அம்மாவையும் எஙகள் கிராமத்து பெண்மணிகளையும் என் முன் நிருத்தியதால்!.

படத்தில் விமல் மரத்தின் மீது ஏறி லாரியிலிருந்து உர மூட்டையை திருடுவார். இதுபோல் எங்கள் ஊரில் திருடியவர்களை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான் படிப்பில் முதல் மாணவன் என்பதால் நல்ல பையன் என்று ஊரில் பெயரெடுத்தவன். ஆனால்... என்னிடம் இருந்த ஒரே களவாணித்தனம் தேங்காய் திருடுவது! தேங்காய் சாப்பிடுவதென்றால்  எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீடு மற்றும் பெரியப்பா, சித்தப்பா வீட்டின் பின்புறத்தில்தான் தேங்காய் மரங்கள் இருந்தன. எனவே திருடுவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. தேங்காய் திருடுவதற்கு எனக்கு உதவியாக இருந்தவன் என் உயிர்த்தோழன் உப்பிலி. தென்னை மரம் ஏறுவதில் நான் கில்லாடி... மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மக்கள் கண் அயரும் மதிய நேரம் அல்லது இரவு நேரம் தான் நானும் என் நண்பனும் தேங்காய் திருட தேர்வு செய்யும் நேரம். நான் மரத்தில் சர... சரவென ஏறி தேங்காயை பறித்து கீழே போட மாட்டேன். தேங்காய் கிழே விழும் சத்தம் கேட்டால் மக்களுக்கு தெரிந்து விடும். என்வே தேங்காயை பறித்து வாயில் வைத்து கவ்விக்கொண்டு கீழே இறங்கி வந்து உப்பிலியிடம் கொடுத்து விட்டு மீண்டும் மரத்தில் ஏறி அடுத்த தேங்காய்.... நான் பறித்து கொடுக்க உப்பிலி மறைத்து வைத்து விடுவான். எதிர்பாராமல் யாராவது வந்தால் ஒரு சில தேங்காயாவது கிடைக்குமே:) பிறகு தேங்காய்களை எடுத்து சென்று மரவள்ளி கிழங்கு செடி கொல்லையிலோ, கரும்பு கொல்லையிலோ அல்லது சோள கொல்லையிலோ நடுவில் உட்கார்ந்து வெட்டி தின்பது அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து சுட்டு தின்பது எங்கள் வாடிக்கை.

இன்னொரு காட்சியில் விமல் குயில் தட்டியில் மாட்டிய குயிலை பிடித்து பறக்க விடுவார். சிறுவனாக இருந்தபோது இதுபோல் நானும் நண்பர்களும் குயில்தட்டிகள் வைத்து நிறைய குயில்களை பிடித்துள்ளோம். கோவைப் பழத்தை குயில் தட்டியில் கட்டி வைத்து நரம்பினால குயில் தட்டியின் பல இடங்களில் பொறி (Trap) வைத்து சாயங்காலத்தில் மரங்கள், செடிகளில் குயில் தட்டிகளை வைத்து விட்டு வந்து விடுவோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக செய்வது குயில் தட்டி வைத்திருந்த இடங்களை நோக்கி ஓடுவதுதான்.

படத்தில் வருவது போல் எங்கள் ஊர் வெட்டிக்காட்டிற்கும் பக்கத்து ஊர் பருத்திக்கோட்டைக்கும் நான் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி சண்டைகள் வரும். சண்டையில் அரிவாள் வெட்டு, வேல் கம்பு வீச்செல்லாம் உண்டு! வீடு புகுந்து பெண் தூக்கும் சம்பங்கள் பல நடந்திருக்கின்றன

இந்த படத்தில் நாயகியின் தந்தை நெல் வியாபாரம் செய்பவர். எனது தந்தையாரும் எங்கள் ஊரில் விவசாயத்தோடு சேர்ந்து நெல் வியாபாரம் செய்தார். அதனால் எங்கள் கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எல்லோரும் அப்பாவை “யாவாரிஎன்றே அழைப்பார்கள். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததனால் எப்போதும் எஙகள் வீடு நிறைய ஆட்களுடன் கலகலப்பாக இருக்கும்.

சரண்யா இந்த படத்தில் அடிக்கடி சொல்லும் வசனம் “அவனுக்கு கெரகம் புடிச்சிருக்கு மற்றும் “ஆனி போய்... ஆவணி வந்தால்... அவன் டாப்ல போயிடுவான்னு ஜோசியர் சொல்லியிருக்காருஅப்படியே என் அம்மா பேசுவது போல் இருந்தது படம் பார்க்கும்போது. எங்கள் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை அல்லது ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அம்மா போய் நிற்பது வடுவூரில் உள்ள பச்சக்கல் ஐயர் வீடு.... சோதிடம் பார்க்க! பச்சக்கல் ஐயருக்கு எங்கள் வீட்டு ஜாதகம் மற்றும் என் முன்னோர்கள் ஜாதகம் முதற்கொண்டு அத்தனையும் அத்துப்படி:)) அவரும் ஒவ்வோரு முறையும் பிரச்சனைக்கு தகுந்த மாதிரி சுழற்சி அடிப்படையில் மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து விளக்கு போடு என்று அம்மாவிடம் பரிகாராம் சொல்வார். விளக்கு போட்டு வந்துவிட்டு “பச்சக்கல் ஐயர் சொன்னமாதிரி விளக்கு போட்டுட்டேன்... கெரகம் வெளகி போயிடும்... எல்லாம் சரியா போயிடும்என்பார். அம்மாவின் விளக்கு போடும் படலம் இன்றும் தொடர்கிறது! அது மட்டுமல்ல இப்போது ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும்போது ஒரு பை நிறைய பல கோவில்களின் திருநீர் பொட்டலங்கள் கிடைக்கும்!

படத்தின் மிகப்பெரிய பலம். கஞ்சா கருப்பின் காமெடி. கஞ்சா கருப்பு போல இளைஞர்கள் கலாய்க்க ஒரு இளிச்சவாயன் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பார். கஞ்சா கருப்பை விமலின் நண்பர்கள் ரீட்டா டாண்ஸ்லில் மாட்டி விடுவது போல என் நண்பர்கள் சிலர் ஒரு அப்பிராணியை அவர் கொடுத்த்தாக சொல்லி “ஐந்து ரூபாய்அன்பளிப்பை நாடக நடணக்காரி(டாண்ஸ்)யிடம் கொடுத்து மாட்டி விட்ட கதை ஞாபகம் வந்து விழுந்து விழுந்து சிரித்தேன். கஞ்சா கருப்பு பால்டாயில் குடிக்க வைக்கப்பட்டது, அவர் இறந்து விட்டதாக அறிவிப்பு செய்வது மற்றும் கிளைமாக்ஸ் காமெடி அதகளம்.

படத்தில் முக்கிய காதாபாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையான கிராமத்த்து மனிதர்கள்... குறிப்பாக நாயகியின் தந்தை, நாயகனின் தங்கை, பாரின் பாட்டில் கேட்கும் பிரசிடெண்ட், பொரணி பேசும் பெண்கள் (குறிப்பாக மாட்டு வண்டியில் வரும் இரண்டு பெண்கள் பேசுவது அட்டகாசம்). தஞ்சாவூர் கிராமத்து மக்களின் யதார்த்தமான வசனங்கள். ஒரு சில உதாரணங்கள்.. “கெரகம் புடிச்சிருக்கு, ஒப்ரான... ஒப்பந்தன்னான”, ஏட்டி நான்... என்னடி சொன்னேன்... நீ என்னடி செய்யிறே,ஏ... ஆயீ...” போன்றவைகள். தஞ்சை பகுதி கிராமங்களின் மாற்றங்களுடன் தற்போதுள்ள உன்மையான கிராமத்தை காட்டியுள்ளார்கள். குறிப்பாக மோட்டர் பைக்கில் வலம் வரும் இளைஞர்கள், டிராக்டர்கள், கதிர் அறுவடை செய்யும் எந்திரங்கள், மினி பஸ், கலை இரவு டான்ஸ் (குத்தாட்டம்!), கிரிக்கெட் டோர்னமெண்ட்.....

பக்கத்து கிராமங்கள், நான் படித்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, நடந்து திரிந்த மன்னார்குடி நகர வீதிகள் என்று படத்தில் பார்த்தவுடன் எங்கள் ஊருக்கு சென்று ஒரு சில நாட்கள் தங்கி, எம் மக்களோடு பழகி, பேசி, சிரித்து வந்ததுபோன்ற ஒரு உணர்வு!


களவாணி- குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ வேண்டிய படம்!

பி.கு-1:
கடந்த 21 ஆண்டுகளில் நான் அதிகபட்சமாக எங்கள் ஊர் வெட்டிக்காட்டில் தங்கியிருந்த நாட்கள் ஒரு வாரம்...என் தம்பியின் திருமணத்தின்போது 2007 ஆம் ஆண்டு. மற்றபடி இந்தியா செல்லும்போது ஊரில் செலவிடும் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள். இந்த படம் பார்த்த பிறகு, கடந்த 10 நாட்களாக Laptop, Blackberry,Conference calls, Business meetings  போன்ற இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு மாத காலம் ஊரில் சென்று தங்கி வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது...... பார்க்கலாம் நடக்குமா என்று!


பி.கு-2:
களவானி படம் என் மனைவியின் பார்வையில்:
http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html