வெட்டிக்காடு

வெட்டிக்காடு
Showing posts with label சினிமா. Show all posts
Showing posts with label சினிமா. Show all posts

Friday, September 10, 2010

*10*: முதல் மரியாதை


நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.

நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R,  ரஜினி படங்கள்தான்.

1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதைபடத்திற்குச் சென்றோம்.


படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை. ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான். அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம். 

படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான்  வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!

அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.

- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா

-  சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சிஎன்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....


- உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.


- ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.

- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்

- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம் பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.


இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............

முதல் மரியாதை ஒரு அருமையான கிராமத்து காவியம்!

                 *           *         *

Wednesday, August 04, 2010

களவாணி - எங்க ஊர் படம்


திரைப்படம் பற்றி இதுவரையில் எழுதியது கிடையாது. முதன் முதலில் “களவாணிதிரைப்படம் பற்றி எழுதுகிறேன். காரணம் இந்தப் படத்தின் கதைக்களம் எங்கள் தஞ்சைத்தரணி. படம் எடுத்தது....நான் ஓடி விளையாடிய என் சொந்தங்கள் வாழும் பக்கத்து கிராமங்களான எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் மற்றும் நான் படித்த மன்னார்குடி நகரம். மலரும் நினைவுகளுடன் “களவாணிபடம் பற்றிய எனது பார்வை.

சிங்கப்பூருக்கு திரும்பி வந்ததிலிருந்து நல்ல படங்கள் என்றால் திரையரங்கிற்கு சென்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளேன். ஆனால்... ராவணன், மதராஸப்பட்டினம், தில்லாலங்கடி போன்ற படங்கள் தியேட்டர்களை ஆக்கிரமித்துக் கொண்டிருக்க களவாணி படம் சிங்கப்பூருக்கு வருவதற்கான அறிகுறிகள் தெரியவில்லை. எனவே வீட்டில் Home Theartre-ல் பார்கக வேண்டிய கட்டாயம்.

படம் ஆரம்பித்தவுடன் நன்றி கார்டில் “எட கீழையூர், எட மேலையூர், வடுவூர் கிராம மக்கள் மற்றும் முன்னாள் அமைச்சர் அழகு.திருநாவுக்கரசு அவர்கள்என்ற பெயர்களை பார்த்தவுடன் ஆச்சரியம்.... அட நம்ம ஊர்களில் எடுத்திருக்கிறார்கள்! முதன்முதலில் நம் ஊர்களை வெள்ளித்திரையில் பார்க்கும் ஆவலுடன் படத்தை பார்க்க ஆரம்பித்தேன்.

படம் ஆரம்பித்ததிலிருந்து கடைசி வரை எந்த்வித தொய்வும் இல்லாமல் பர... பரவென சென்றது. விரு..விருப்பான திரைக்கதை. அட்டகாசமான காமெடி. நீண்ட நாட்களுக்குப் பிறகு கஞ்சா கருப்பின் காமெடிக்கு விழுந்து விழுந்து சிரித்தேன். பரந்து விரிந்து கிடக்கும் பச்சை பசேலென்ற வயல்வெளிகள் உள்ள எங்கள் ஊர்களின் அழகை மிக அற்புதமாக படம் பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். மைனர்த்தனம் செய்துகொண்டு தருதலையாக திரியும் இளைஞன் பாத்திரத்தை மிக நேர்த்தியாக பாடி லாங்வேஜ் மற்றும் வசன உச்சரிப்பு மூலம் அட்டகாசமாக செய்துள்ளார் விமல். +1 படிக்கும் ஒரு கிராமத்து பெண்ணிற்கேற்ற பொருத்தமான ஓவியா. கிராமத்தில் நாம் பார்க்கும் ஒரு யதார்த்தமான கோபக்கார அண்ணன் வில்லனாக ஒரு புது முக நடிகர் (பெயர் தெரியவில்லை). ஒரு டிபிகல் கிராமத்து தந்தையாக இளவரசு. இந்த படத்திலேயே என்னை மிகவும் கவர்ந்த நடிப்பு சரண்யாவுடையதுதான். ஒரு தஞ்சாவூர் கிராமத்து பெண்மனியாகவே வாழ்ந்துள்ளார். தவமாய் தவமிருந்து, எம்டன் மகன் போன்ற படங்களை பார்த்த பிறகு நான் அம்மா பாத்திரத்தில் நடிக்கும் சரண்யாவின் தீவிர ரசிகன். இந்த படத்தில் மேலும் உயரத்தை தொட்டுள்ளார். அதற்கு காராணம் சரண்யாவின் உடல் மொழி, வசன உச்சரிப்பு அப்படியே என் அம்மாவையும் எஙகள் கிராமத்து பெண்மணிகளையும் என் முன் நிருத்தியதால்!.

படத்தில் விமல் மரத்தின் மீது ஏறி லாரியிலிருந்து உர மூட்டையை திருடுவார். இதுபோல் எங்கள் ஊரில் திருடியவர்களை நான் சிறு வயதில் பார்த்திருக்கிறேன். நான் படிப்பில் முதல் மாணவன் என்பதால் நல்ல பையன் என்று ஊரில் பெயரெடுத்தவன். ஆனால்... என்னிடம் இருந்த ஒரே களவாணித்தனம் தேங்காய் திருடுவது! தேங்காய் சாப்பிடுவதென்றால்  எனக்கு மிகவும் பிடிக்கும். எங்கள் வீடு மற்றும் பெரியப்பா, சித்தப்பா வீட்டின் பின்புறத்தில்தான் தேங்காய் மரங்கள் இருந்தன. எனவே திருடுவது அவ்வளவு சுலபமான காரியம் கிடையாது. தேங்காய் திருடுவதற்கு எனக்கு உதவியாக இருந்தவன் என் உயிர்த்தோழன் உப்பிலி. தென்னை மரம் ஏறுவதில் நான் கில்லாடி... மதிய சாப்பாடு சாப்பிட்டுவிட்டு மக்கள் கண் அயரும் மதிய நேரம் அல்லது இரவு நேரம் தான் நானும் என் நண்பனும் தேங்காய் திருட தேர்வு செய்யும் நேரம். நான் மரத்தில் சர... சரவென ஏறி தேங்காயை பறித்து கீழே போட மாட்டேன். தேங்காய் கிழே விழும் சத்தம் கேட்டால் மக்களுக்கு தெரிந்து விடும். என்வே தேங்காயை பறித்து வாயில் வைத்து கவ்விக்கொண்டு கீழே இறங்கி வந்து உப்பிலியிடம் கொடுத்து விட்டு மீண்டும் மரத்தில் ஏறி அடுத்த தேங்காய்.... நான் பறித்து கொடுக்க உப்பிலி மறைத்து வைத்து விடுவான். எதிர்பாராமல் யாராவது வந்தால் ஒரு சில தேங்காயாவது கிடைக்குமே:) பிறகு தேங்காய்களை எடுத்து சென்று மரவள்ளி கிழங்கு செடி கொல்லையிலோ, கரும்பு கொல்லையிலோ அல்லது சோள கொல்லையிலோ நடுவில் உட்கார்ந்து வெட்டி தின்பது அல்லது பொட்டுக்கடலை, வெல்லம் வைத்து சுட்டு தின்பது எங்கள் வாடிக்கை.

இன்னொரு காட்சியில் விமல் குயில் தட்டியில் மாட்டிய குயிலை பிடித்து பறக்க விடுவார். சிறுவனாக இருந்தபோது இதுபோல் நானும் நண்பர்களும் குயில்தட்டிகள் வைத்து நிறைய குயில்களை பிடித்துள்ளோம். கோவைப் பழத்தை குயில் தட்டியில் கட்டி வைத்து நரம்பினால குயில் தட்டியின் பல இடங்களில் பொறி (Trap) வைத்து சாயங்காலத்தில் மரங்கள், செடிகளில் குயில் தட்டிகளை வைத்து விட்டு வந்து விடுவோம். காலையில் எழுந்தவுடன் முதல் வேலையாக செய்வது குயில் தட்டி வைத்திருந்த இடங்களை நோக்கி ஓடுவதுதான்.

படத்தில் வருவது போல் எங்கள் ஊர் வெட்டிக்காட்டிற்கும் பக்கத்து ஊர் பருத்திக்கோட்டைக்கும் நான் சிறுவனாக இருந்தபோது அடிக்கடி சண்டைகள் வரும். சண்டையில் அரிவாள் வெட்டு, வேல் கம்பு வீச்செல்லாம் உண்டு! வீடு புகுந்து பெண் தூக்கும் சம்பங்கள் பல நடந்திருக்கின்றன

இந்த படத்தில் நாயகியின் தந்தை நெல் வியாபாரம் செய்பவர். எனது தந்தையாரும் எங்கள் ஊரில் விவசாயத்தோடு சேர்ந்து நெல் வியாபாரம் செய்தார். அதனால் எங்கள் கிராமம் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் எல்லோரும் அப்பாவை “யாவாரிஎன்றே அழைப்பார்கள். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததனால் எப்போதும் எஙகள் வீடு நிறைய ஆட்களுடன் கலகலப்பாக இருக்கும்.

சரண்யா இந்த படத்தில் அடிக்கடி சொல்லும் வசனம் “அவனுக்கு கெரகம் புடிச்சிருக்கு மற்றும் “ஆனி போய்... ஆவணி வந்தால்... அவன் டாப்ல போயிடுவான்னு ஜோசியர் சொல்லியிருக்காருஅப்படியே என் அம்மா பேசுவது போல் இருந்தது படம் பார்க்கும்போது. எங்கள் வீட்டில் யாருக்காவது உடம்பு சரியில்லை அல்லது ஏதாவது பிரச்சனை என்றால் உடனே அம்மா போய் நிற்பது வடுவூரில் உள்ள பச்சக்கல் ஐயர் வீடு.... சோதிடம் பார்க்க! பச்சக்கல் ஐயருக்கு எங்கள் வீட்டு ஜாதகம் மற்றும் என் முன்னோர்கள் ஜாதகம் முதற்கொண்டு அத்தனையும் அத்துப்படி:)) அவரும் ஒவ்வோரு முறையும் பிரச்சனைக்கு தகுந்த மாதிரி சுழற்சி அடிப்படையில் மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள கோவில்களில் ஏதாவது ஒரு கோவிலை தேர்ந்தெடுத்து விளக்கு போடு என்று அம்மாவிடம் பரிகாராம் சொல்வார். விளக்கு போட்டு வந்துவிட்டு “பச்சக்கல் ஐயர் சொன்னமாதிரி விளக்கு போட்டுட்டேன்... கெரகம் வெளகி போயிடும்... எல்லாம் சரியா போயிடும்என்பார். அம்மாவின் விளக்கு போடும் படலம் இன்றும் தொடர்கிறது! அது மட்டுமல்ல இப்போது ஒவ்வொரு முறையும் ஊருக்கு போகும்போது ஒரு பை நிறைய பல கோவில்களின் திருநீர் பொட்டலங்கள் கிடைக்கும்!

படத்தின் மிகப்பெரிய பலம். கஞ்சா கருப்பின் காமெடி. கஞ்சா கருப்பு போல இளைஞர்கள் கலாய்க்க ஒரு இளிச்சவாயன் ஒவ்வொரு கிராமத்திலும் இருப்பார். கஞ்சா கருப்பை விமலின் நண்பர்கள் ரீட்டா டாண்ஸ்லில் மாட்டி விடுவது போல என் நண்பர்கள் சிலர் ஒரு அப்பிராணியை அவர் கொடுத்த்தாக சொல்லி “ஐந்து ரூபாய்அன்பளிப்பை நாடக நடணக்காரி(டாண்ஸ்)யிடம் கொடுத்து மாட்டி விட்ட கதை ஞாபகம் வந்து விழுந்து விழுந்து சிரித்தேன். கஞ்சா கருப்பு பால்டாயில் குடிக்க வைக்கப்பட்டது, அவர் இறந்து விட்டதாக அறிவிப்பு செய்வது மற்றும் கிளைமாக்ஸ் காமெடி அதகளம்.

படத்தில் முக்கிய காதாபாத்திரங்களைத் தவிர மற்ற கதாபாத்திரங்கள் எல்லாம் உண்மையான கிராமத்த்து மனிதர்கள்... குறிப்பாக நாயகியின் தந்தை, நாயகனின் தங்கை, பாரின் பாட்டில் கேட்கும் பிரசிடெண்ட், பொரணி பேசும் பெண்கள் (குறிப்பாக மாட்டு வண்டியில் வரும் இரண்டு பெண்கள் பேசுவது அட்டகாசம்). தஞ்சாவூர் கிராமத்து மக்களின் யதார்த்தமான வசனங்கள். ஒரு சில உதாரணங்கள்.. “கெரகம் புடிச்சிருக்கு, ஒப்ரான... ஒப்பந்தன்னான”, ஏட்டி நான்... என்னடி சொன்னேன்... நீ என்னடி செய்யிறே,ஏ... ஆயீ...” போன்றவைகள். தஞ்சை பகுதி கிராமங்களின் மாற்றங்களுடன் தற்போதுள்ள உன்மையான கிராமத்தை காட்டியுள்ளார்கள். குறிப்பாக மோட்டர் பைக்கில் வலம் வரும் இளைஞர்கள், டிராக்டர்கள், கதிர் அறுவடை செய்யும் எந்திரங்கள், மினி பஸ், கலை இரவு டான்ஸ் (குத்தாட்டம்!), கிரிக்கெட் டோர்னமெண்ட்.....

பக்கத்து கிராமங்கள், நான் படித்த மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, நடந்து திரிந்த மன்னார்குடி நகர வீதிகள் என்று படத்தில் பார்த்தவுடன் எங்கள் ஊருக்கு சென்று ஒரு சில நாட்கள் தங்கி, எம் மக்களோடு பழகி, பேசி, சிரித்து வந்ததுபோன்ற ஒரு உணர்வு!


களவாணி- குடும்பத்துடன் பார்த்து சிரித்து மகிழ வேண்டிய படம்!

பி.கு-1:
கடந்த 21 ஆண்டுகளில் நான் அதிகபட்சமாக எங்கள் ஊர் வெட்டிக்காட்டில் தங்கியிருந்த நாட்கள் ஒரு வாரம்...என் தம்பியின் திருமணத்தின்போது 2007 ஆம் ஆண்டு. மற்றபடி இந்தியா செல்லும்போது ஊரில் செலவிடும் நாட்கள் இரண்டு அல்லது மூன்று நாட்கள். இந்த படம் பார்த்த பிறகு, கடந்த 10 நாட்களாக Laptop, Blackberry,Conference calls, Business meetings  போன்ற இவற்றையெல்லாம் மறந்துவிட்டு ஒரு மாத காலம் ஊரில் சென்று தங்கி வர வேண்டும் என்று மனம் ஏங்குகிறது...... பார்க்கலாம் நடக்குமா என்று!


பி.கு-2:
களவானி படம் என் மனைவியின் பார்வையில்:
http://geetharachan.blogspot.com/2010/07/blog-post_27.html