வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, March 05, 2013

பொன்னியின் செல்வன் - 1


கடந்த டிசம்பர் மாதம் சிதம்பரம் நடராஜரைத் தரிசித்து வர தஞ்சாவூரிலிருந்து அதிகாலை வேளையில் கிளம்பி சிதம்பரம் நோக்கி காரில் பயணமானேன். மார்கழி மாத அதிகாலைப் பயணத்தில் பரந்து விரிந்து செல்லும் பச்சை கம்பளம் போல் காணப்படும் நெல் வயல்களின் வழியாக சோழ வள நாட்டின் அழகை ரசித்துக் கொண்டே கும்பகோணம், மயிலாடுதுறை, சீர்காழி, கொள்ளிடம் கடந்து சிதம்பரம் சென்று நடராஜரை தரிசித்து விட்டு உடனே தஞ்சாவூர் நோக்கி திரும்பி பயணம். கொள்ளிடத்தைக் கடக்கும் போது வீராணம் ஏரி ஞாபகத்தில் வந்தது. தமிழகத்தின் மிகப் பெரிய ஏரியான வீராணம் ஏரியை நான் இதுவரையில் பார்த்தது கிடையாது. வீராணம் ஏரியைப் பற்றி நினைத்தவுடன் உடனே மனக்கண்ணில் தோன்றியது பொன்னியின் செல்வன் கதையின் முதல் அத்தியாத்தில் வல்லவரையன் வந்த்தியத் தேவன் வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரி வழியாக குதிரையில் பயணத்து வரும் அந்த காட்சிதான்.
சிறுவயதிலிருந்து வரலாறு எனக்கு மிகவும் பிடித்த பாடம். வரலாறு பாடம் படிக்கும் போது அதில் வரும் வரலாற்று நாயகர்களை கற்பனை செய்து கொண்டு படிப்பேன். எத்தனையோ முறை வீரபாண்டிய கட்டபொம்மன், சிவாஜி, கப்பலோட்டிய தமிழன், பாரதியார் என்று என்னை நான் கற்பனை செய்து கொண்டு வீட்டின் பின்புறமுள்ள மாமரத்தடியில், கடலை கொல்லையில் யாரும் பார்க்கா வண்ணம் நடித்திருக்கிறேன். வரலாறு பாடத்தில் படித்ததை அப்படியே என் மனதில் பதிந்து வைத்துக் கொள்ள முடிந்த்து. இதனால்தான் வரலாறு+புவியியல் பாடத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் 98 மதிப்பெண்க்ள் எடுத்து மாநிலத்தில் முதல் மாணவனாக வந்தேன் என்றால் மிகையாகாது.

இப்படி வராலாறு படிப்பதில் ஆர்வமுடைய எனக்கு பொன்னியின் செல்வன் கதையை முதன் முதலில் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படிக்கும்போது (1987) படித்தேன். அப்போது ஏற்பட்ட பரவச அனுபவத்தை வார்ததைகளில் விவரிக்க் முடியாது என்பதுதான் உண்மை. கதையை படித்த ஒரு மாத கால கட்டத்தில் அப்படியே ஆயிரம் வருடங்களுக்கு பின் சென்று சோழ சாம்ராஜ்த்தில் வாழ்ந்தது போன்ற பேரானந்த அனுபவம் அது. பொன்னியின் செல்வன் பாதிப்பிலிருந்து வெளியே வர கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் ஆயிற்று.

1996 ஆம் ஆண்டு திருமண ஆன போது என் மாமியார் கல்கியில் வந்த பொன்னியின் செல்வன் கதையை கிழித்து பைண்ட் செய்து வைத்திருந்த ஐந்து பாகங்களையும் என் மனைவியுடன் சேர்த்து அபகரித்துக் கொண்டு சிங்கப்பூர் வந்து விட்டேன். இரண்டாவது முறையாக அலுவலகத்திற்கு செல்லும் ஒரு மணி நேர மெட்ரோ ரயில் பயணத்தில் தொடர்ச்சியாக படித்து முடித்தேன்.  கடைசியாக படித்து பதினாறு வருடங்கள் ஆகிவிட்ட படியால் கதையில் வரும் ஒரு சில நிகழ்ச்சிகளைத் தவிர வேறு எதுவும் ஞாபகம் இல்லை. எனவே மீண்டும் படிக்க வேண்டும் என்று நினைத்து அட்டைப் பெட்டியில் பதுங்கி கிடந்த பொன்னியின் செல்வன் ஐந்து பாகங்களையும் எடுத்து கடந்த 1.5 மாதங்களாக தொடர்ந்து நிதானாமாக படித்து முடித்தேன். ”பொன்னியின் செல்வன்” அமரர் கல்கி அவர்களால கல்கி பத்திரிக்கையில் 1950 ஆம் ஆண்டு முதல் 1954 வரை கிட்டத்தட்ட மூன்றரை வருடங்கள் ஐந்து பாகங்களாக வந்த வரலாற்று நாவல்.
பொன்னியின் செல்வன் பற்றிய என் எண்ணங்களை பதிவு செய்து வைக்க விரும்புகிறேன்.

                                                                                 --- தொடரும்

3 comments:

ILA(a)இளா said...

ஆரம்பிங்க,, காத்திட்டு இருக்கோம்

Vasu Balaji said...

அடி தூள். உங்கூரு சோழர் ஒருத்தர் 5 வருஷமா படிக்கறேன்னு சொல்லிட்டிருக்காரு:))

NIZAMUDEEN said...

பயண அனுபவம் + கல்கியின் நாவல் வாசிப்பனுபவம் சேர்ந்த இனிய பதிவு. தொடருங்கள்.