வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, March 19, 2013

பொன்னியின் செல்வன் - 4

சோழ மன்னர்கள் பெரும்பாலும் சைவ வழியில் சிவபெருமானை வழிபட்டு வந்தார்கள். ராஜராஜ சோழன் கட்டிய தஞ்சை பெரிய கோவில், ராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம் கோவில் மற்றும் சோழ நாட்டிலுள்ள எண்ணிலடங்கா சிவாலயங்கள் இதை பறைசாற்றுகின்றன. அதே சமயம் சோழ மன்னர்கள் வைணைவத்தையும் ஆதரித்தார்கள்.  சோழ மன்னர்களால் கட்டப்பட்ட ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி போன்ற பிரமாண்டமான விஷ்ணு தலங்கள் இதற்கு சாட்சியாக விளங்குகின்றன. 

சுந்தர சோழர் சைவம், வைணைவம் இரண்டையும் ஆதரித்தார் என்பதை கல்கி அவர்கள் இந்த கதையில் வரும் பாத்திரங்கள் மூலம் நமக்கு தெரியப்படுத்துகிறார். சேந்தன் அமுதன் என்றழைக்கப்பட்ட சுந்தர சோழருக்கு பிறகு அரியணை ஏறிய மதுராந்தக தேவர் ஒரு பழுத்த சிவ பக்தர். அதே போல் இந்த கதையின் முக்கிய பாத்திரமான ஆழ்வார்க்கடியான் என்கிற முதல் மந்திரி அநிருத்த பிரம்மரின் ஒற்றன் எப்போதும் பெருமாளின் புகழ் பாடும் பாசுரங்களை பாடித்திரியும் ஒரு முரட்டு வைஷ்ணவன்.

சேந்தன் அமுதன் ”பொன்னார் மேனியனே” என்ற தேவரா பாடலைக் அடிக்கடி பாடிக்கொண்டு சிவபெருமானை நித்தம் வணங்கும் சிவ பக்தன். சுந்தரமூர்த்தி சுவாமிகளால் இந்த பாடல் பாடப்பெற்ற கதையை கல்கி இப்படி கூறுகிறார்.


***
செம்பியன் மாதேவியின் அரண்மனை முற்றத்திலும் சபா மண்டபத்திலும் சிற்பிகளின் கூட்டமும் தேவாரப் பாடகர்களின் கோஷ்டியும் ஜேஜே என்று எப்போதும் கூடியிருப்பது வழக்கம். தூர தூர தேசங்களிலிருந்து சிவனடியார்களும் தமிழ்ப் புலவர்களும் அடிக்கடி வந்து பரிசில்கள் பெற்றுப் போவது வழக்கம். சிவ பூஜைப் பிரசாதம் கொண்டு வரும் அர்ச்சகர்களின் கூட்டமும் அதிகமாகவே இருக்கும்.
அன்றைக்குத் திருமுதுகுன்றம் (விருத்தாசலம்), தென்குரங்காடுதுறை, திருமழபாடி முதலிய ஊர்களிலிருந்து சிற்பிகளும் சிவபக்தர்களும் வந்து தத்தம் ஊர்களில் கோயில்களில் கருங்கல் திருப்பணி செய்வதற்கு மகாராணியின் உதவியைக் கோரினார்கள். கோயில்களை எந்தெந்த ஊர்களில் என்ன முறையில் கட்ட உத்தேசம் என்பதற்குச் சித்திரங்களும் பொம்மைக் கோயில்களும் கொண்டு வந்திருந்தார்கள்.
முதலாவது இரண்டு கோயில்களின் திருப்பணியைச் செய்ய உதவி அளிப்பதாகச் சொல்லிவிட்டு, "மழபாடியா? எந்த மழபாடி?" என்று பெரிய பிராட்டி கேட்டார்.
"சுந்தரமூர்த்தி சுவாமிகளைக் குரல் கொடுத்து அழைத்துப் பாடல் பெற்றாரே, அந்தப் பெருமான் வீற்றிருக்கும் மழபாடிதான்!" என்று அந்த ஊர்க்காரர் சொன்னார்.
"அது என்ன சம்பவம்?" என்று மழவரையரின் செல்வி கேட்க, மழபாடிக்காரர் கூறினார்:
"சுந்தரமூர்த்தி சுவாமிகள் சோழ நாட்டு ஸ்தலங்களுக்கு யாத்திரை செய்து கொண்டிருந்தபோது ஒரு நதியைக் கடக்க வேண்டியதாயிருந்தது.
நதியைத் தாண்டி அப்பால் செல்லத் தொடங்கினார். அப்போது, 'சுந்தரம்! என்னை மறந்தாயோ!' என்று ஒரு குரல் கேட்டது.
சுந்தரமூர்த்தி திடுக்கிட்டார் அது தம்மை ஆட்கொண்ட இறைவனுடைய குரல் என்பதை உணர்ந்தார்.
பக்கத்தில் இருந்த சீடர்களைப் பார்த்து 'இங்கே சமீபத்தில் எங்கேயாவது சிவன் கோயில் இருக்கிறதா?' என்று கேட்டார்.
'ஆம், சுவாமி! அந்தக் கொன்னை மரங்களின் மறைவில் மழபாடி கிராமத்துச் சிவன் கோயில் இருக்கிறது!' என்று சீடர்கள் சொன்னார்கள்.
உடனே சுந்தரமூர்த்தி அங்கே சென்றார். பூத்துக் குலுங்கிய கொன்னை மரங்களின் மறைவில் ஒரு சிறிய கோவில் இருந்தது. சுந்தரமூர்த்தி அங்கே சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு மனமுருகிப் பாடினார். அன்றொரு நாள் தன்னைத் தடுத்தாட்கொண்டது போல், இன்றைக்குத் தன்னைக் கூப்பிட்டு அருள்புரிந்த கருணைத் திறனை வியந்தார். 'சுவாமி! தங்களை நான் மறந்து விடுவேனா? என்ன கேள்வி கேட்டீர்கள்? தங்களை மறந்துவிட்டு வேறு யாரை நினைப்பேன்?' என்னும் கருத்து அமைத்து,
பொன்னார் மேனியனே!
புலித் தோலை அரைக்கசைத்து
மின்னார் செஞ்சடைமேல்
மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மாமணியே
மழபாடியுள் மாணிக்கமே!
அன்னே உன்னையல்லால்
இனி யாரை நினைக்கேனே?
என்று பாடினார். தாயே! இன்னும் அந்தக் கோயில் சிறிய கோயிலாகக் கொன்னை மரங்களின் மறைவிலேயே இருக்கின்றது. அதற்குத்தான் உடனே திருப்பணி ஆரம்பிக்க வேண்டும் என்று கோருகிறோம்."
"அப்படியேயாகட்டும்!" என்றார் செம்பியன் மாதேவி.
***
திருமழபாடி கோவில்
பொன்னார் மேனியனே....

                                                                                                                                               - தொடரும்
*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

2 comments:

ஜோதிஜி said...

பெரிதாக எழுதிய விமர்சனம் புடுங்கிக் கொண்டு போய்விட்டது.

Ravichandran Somu said...

ஜோதிஜி - தலைவரே, நீங்கள் எழுதிய விமர்சனத்தை சொல்கிறீர்களா? அல்லது இந்த தொடரையா :)))