வெட்டிக்காடு

வெட்டிக்காடு
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts
Showing posts with label தொழில்நுட்பம். Show all posts

Monday, December 13, 2010

தொலைபேசி எப்படி ஒட்டு கேட்கப்படுகிறது?

இந்திய அரசியலை தற்போது மையம் கொண்டு தாக்கி வரும் புயல் ஒட்டு கேட்கப்பட்ட நீரா ராடியாவின் தொலைபேசி பேச்சுகள். இதனால் வெளிவரும் பல அரசியல் தகிடு தத்தங்கள். நான் அரசியல் தெரியாத ஒரு அப்பாவி:((( ஆனால் இந்த தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றி நன்றாக தெரியும். பல தொலை பேசி/செல்பேசி நிறுவனங்களுக்கு இந்த ஒட்டு கேட்கும் தொழில் நுட்ப கட்டமைப்பை வடிவமைத்து கொடுத்திருக்கிறேன். தொலைபேசி ஒட்டு கேட்கும் தொழில் நுட்பம் பற்றிய சிறிய விளக்கம்.


Lawful Interception (LI) என்பது நாட்டிலுள்ள சந்தேக நபர்களின் தொலைபேசி பேச்சுகளை ஒட்டு கேட்பதற்காக ITU (International Telecommunication Union - http://www.itu.int ) மற்றும் ANSI (American National Standards Institute - http://www.ansi.org ) போன்ற நியம அமைப்புகளால் ஏற்படுத்தப்பட்ட தகவல் பறிமாற்ற வரையறை.

இதன்படி ஒவ்வொரு தொலைபேசி/செல்பேசி நிறுவனத்தின் கட்டமைப்பிலுள்ள தொலைபேசியை எப்படி ஒட்டு கேட்க வேண்டும் அதற்கான தேவையான கட்டமைப்பு தொழில்நுட்பம் எப்படி இருக்க வேண்டும் என்று வரையறுக்கப் பட்டுள்ளது. நாட்டின் பாதுகாப்பிற்காக பயன்படுத்தப் படும் தொழில்நுட்பம் என்பதால் மிகக் கடுமையான பலத்த பாதுகாப்பு வரையறைகள் இந்த தொழில்நுட்பத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.

நாம் தொலைபேசி வழியாக பேசும் பேச்சுகள் தொலைபேசி கட்டமைப்பிலுள்ள பல விசைமாற்றிகள் (Switches) வழியாக கன நேரத்தில் கடத்தி செல்லப்படுகின்றன.

விசைமாற்றியில் ஒரு கொக்கி போட்டு பேசுபவர்கள் இருவருக்கும் தெரியாத வகையில் விசைமாற்றி அவர்கள் பேசுவதை அப்படியே ஒரு காப்பி எடுத்து CBI, RAW  போன்ற உளவுத்துறை நிறுவனத்திலிருக்கும் LEMF (Law Enforcement Monitoring Facility) என்றழைக்கப்டும் ஒட்டு கேட்கும் நிலையங்களுகு அனுப்பி வைத்து விடும்.

சற்று விரிவாக பார்க்கலாம்...


உளவுத்துறை ஒருவரை சந்தேகத்திற்குரிய நபர் என்று அடையாளம் கண்டு கொண்டவுடன் அவ்ருடைய தொலைபேசியை ஒட்டுகேட்க வேண்டும் என்ற வாரண்டை உளவுத்துறை அதிகாரி LEMF செண்டரில் உள்ள கம்யூட்டரில் பதிவு செய்வார்.

                [கீழ்க்கண்ட தகவல்களுக்கு இந்த படத்தை ரெபர் செய்யவும்]

உடனே அந்த தகவல் அந்த சந்தேக நபரின் தொலைபேசி நிறுவனதிலுள்ள IMC (Interception Management Centre) எனப்படும் கம்யூட்ருக்கு HI-1 (Hand Over Interface-1) என்ற தகவல் பாதை வழியாக வந்து சேரும். அதை நிர்வாகம் செய்யும் அதிகாரி யார்? ஏன்? என்ற எந்த கேள்வியும் கேட்காமல் உடனே அந்த தொலைபேசி எண்ணை ஒட்டு கேட்க IMC-யில் பதிவு செய்து விடுவார்.

இந்த IMC-யை ஆபரேட் செய்வதற்கு பலத்த பாதுகாப்பு வரையறைகள் உள்ளன. அவ்வளவு சுலபமாக இதை யாரும் ஹேக் செய்ய முடியாது. IMC கம்யூட்டரை நிர்வகிக்க ITU மற்றும் ANSI நியமனப்படி தேவையான பாதுகாப்பு விதிமுறைகளை தொலைபேசி நிறுவணம் பின்பற்றா விட்டால் அதன் லைசன்ஸ் ரத்து செய்யப் பட்டு விடும். இது தெரியாமல்தான் நீரா ராடியா தன்னுடைய நிறுவனமான டாடா நிறுவன செல்பேசி வழியே பேசினால் யாரும் ஒட்டு கேட்க மாட்டார்கள் என்ற தப்புக் கணக்கு போட்டு “வல்லவனுக்கு வல்லவன்இந்த உலகத்தில் உண்டு என்ற உண்மையை உணராமல் மாட்டிக் கொண்டார்:( ஒரு சில முறை தப்பு செய்து மாட்டிக்கொள்ளவில்லை என்றால் நாம் செய்யும் தப்பை யாராலும் கண்டு கொள்ள முடியாது என்ற அகம்பாவம் மனிதனுக்கு வந்து விடுகிறது. எனவே தொடர்ந்து தப்புகளை செய்கிறான். ஆனால்... “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்பட்டு கொள்வான்இதுதான் உண்மை. Law of Average!

சந்தேக நபர் கால் செய்யும்போதோ அல்லது அவருக்கு கால் வரும்போதோ அந்த தொலைபேசி எண் ஒரு சந்தேகப் பேர்வழியின் எண் என்று விசைமாற்றி (Switch)-க்கு தெரிந்து விடும். உடனே அவர் யாருக்கு போன் செய்கிறார் அல்லது யாரிடமிருந்து போன் வருகிறது என்ற தகவல்களை HI-2 (Hand Over Interface-2) என்ற தகவல் பாதை வழியாக உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF-செண்டருக்கு அனுப்பி விடும். உடனே... பழைய படத்தில் வில்லன் நம்பியார், பி.ஸ்.வீரப்பா அவர்கள் உட்கார்ந்திருக்கும் இடத்தில் சிவப்பு கலர் பல்பில் லைட் எரிவது போல் LEMF செண்டரில் உட்கார்ந்திருக்கும் உளவுத்துறை அதிகாரியின் மேசையில் சிவப்பு கலர் அலராம் அடிக்க ஆரம்பித்து விடும். அவர் ஒரு ஹெட்போனை மாட்டிக்கொண்டு ரெடியாக உட்கார்ந்து விடுவார்.
 இப்போது இருவரின் தொலைபேச்சுகளை விசைமாற்றி கொக்கி போட்டு அப்படியே LEMF செண்டருக்கு HI-3 (Hand Over Interface-3) என்ற தகவல் பாதை வழியாக அனுப்பி வைத்து விடும்.
இந்த பேச்சுகள் LEMF செண்டரிலுள்ள ஹார்டு டிஸ்க்கில் MP-3 பைலாக சேமிக்க படும். ஆனால்.. நம் ஊடகங்கள் (Media) டேப் என்று சொல்லி ஏதோ டேப்பில்தான் ரெக்கார்ட் செய்யப்ப்டுகிறது என்று நம் காதில் பூ சுற்றிக் கொண்டுள்ளார்கள்:) இந்த காலத்தில் யார் டேப் பயன்படுத்துகிறார்கள்? டேப்பில் பதிவு செய்தல் ஒரு காயலான் கடை தொழில்நுட்பம்:)))

தேவைப்ப்ட்டால் இந்த பேச்சுகளை CBI, RAW, Economic Enforcement, State Police போன்ற பல உளவுத்துறை நிறுவனங்களுக்கும் ஒரே நேரத்தில் அந்தந்த உளவுத்துறை நிறுவனத்திலுள்ள LEMF செண்டருக்கு அனுப்பி வைக்க முடியும். எனவே சந்தேக நபர் பேசுவதை பல உளவுத்துறை நிறுவனங்கள் ஒரே சமயத்தில் கண்காணிக்க முடியும்.

தொலைபேசி பேச்சுகள் மட்டுமன்றி சந்தேக நபர்களின் மின்னஞ்சல் (E-mail), மின் அரட்டை (Chat) போன்றவைகளையும் இதே தொழில் நுட்ப அடிப்படையில் ஒட்டு கேட்கலாம்.

போனில் பேசும்போது பார்த்து சூதனமா பேசுங்க... சொந்த செலவில் சூன்யம் வைத்துக் கொள்ளாதீர்கள்:)))

Wikileaks பற்றி அண்ணன் சுடுதண்ணி கொதிக்க கொதிக்க எழுதும் தொடரையும் படித்து பாருங்கள்...

                                                       *              *        *                        
பி.கு:

2.5 வார விடுமுறையில் இந்த வாரம் இந்தியா செல்கிறேன். நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்-2011
                                                                 
                                                                       *                *             *

Tuesday, September 07, 2010

*3*: 4G - நான்காவது தலைமுறை கட்டமைப்பு

நான் தொலை தொடர்புத்துறை(Telecommunications)யில் அடுத்த தலைமுறை கட்டமைப்பு(Next Generation Network) என்ற வருங்கால தொழில்நுட்பத்தில் பணியாற்றி வருகிறேன். என் துறை சார்ந்த 4G Network பற்றி ஒரு சிறிய அறிமுகம். இப்பத்தான் 50,000 ஆயிரம் கோடி 2G Spectrum ஊழல் எல்லாம் ஒரு வழியாக அடங்கி... 3G ஏலம் முடிஞ்சி... 3G சேவைகளுக்காக காத்துக்கிட்டிருக்கோம். நீ என்னடான்னா... அதுக்குள்ள... 4G-ன்னு என்னமோ சொல்ற? என்று ஒரு சிலர் நினைப்பது எனக்கு புரிகிறது:)


இன்னும் சில ஆண்டுகளில் உலகில் உள்ள எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும். ஏன்.. அதன் காரணங்களைப் பார்ப்போம். அதற்கு முன்னால் இந்த 1G, 2G, 3G என்றால் என்ன என்று சுருக்கமாக விளக்குகிறேன்.

1G Network:
1G கட்டமைப்பு என்பது 1980-களில் முதன்முதலாக செல்பேசி சேவை அறிமுகப்படுத்தப்பட்டபோது செல்பேசி கட்டமைப்புக்காக ஏற்பட்ட தொழில்நுட்பம். இது ஒரு தொடரிசை (Analog) FDMA (Frequency Division Multiplexing) தொழில்நுட்பம். இதனை AMPS (Advanced Mobile Phone System) என்றும் கூறுவார்கள். இந்த தொழில்நுட்பத்தின்படி நாம் செல்பேசி வழியாக பேச மட்டும்தாம் முடியும். SMS போன்ற சேவைகள் இந்த தொழில்நுட்பத்தில் கிடையாது.

2G Network:
2G கட்டமைப்பு 1990-களின் ஆரம்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட எண்ணியல் (Digital) தொழில்நுட்பம். இது TDMA (Time Division Multiplexing) மற்றும் CDMA (Code Division Multiplexing) என்னும் தொழில்நுட்பத்தில் இயங்குவது. இதன் மூலம் செல்பேசியில் பேசுவதோடு மட்டுமல்லாமல் பல புதிய சேவைகளை செல்பேசியில் பயன்படுத்தலாம். எடுத்துக்காட்டாக குறுஞ்செய்தி (SMS), தொலை பேசுபவர்களின் செல்பேசி எண் (Caller Id) சேவைகள். இந்தியாவில் 1990-களின் மத்தியில் 2G தொழில்நுட்பத்தைக்கொண்டுதான் செல்பேசி சேவை தொடங்கப்பட்டது.

2.5G Network:
2.5G தொழில்நுட்பத்தில் முதன் முதலாக தகவல் பெட்டகம் (Packet) என்ற கட்டமைப்பு சேர்க்கப்பட்டது. இதனால் செல்பேசி வழியாக இணையம் (E-mail, Internet) சேவைகளை வழங்க முடிந்தது.

3G Network:
2.5G தொழில்நுட்பத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட தகவல் பெட்டகம் (Packet) கட்டமைப்பின் வேகம் வீடியோ மற்றும் அகன்ற அலைவரிசை (Broadband) செயலிகளுக்கு (Applications) போதுமானதாக இல்லை. எனவே இந்த 3G தொழில்நுட்பத்தில் அகன்ற அலைவரிசை (Broadband) வேகம் அதிகரிக்கப்பட்டது. 3G கட்டமைப்பு 2003-ஆம் ஆண்டு காலகட்டதில் முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது.
  
4G NETWORK
 4G எனப்படும் இந்த நான்காவது தலைமுறை கட்டமைப்பு தொழில்நுட்பத்தின் முக்கிய மூன்று காரணிகள்(Factors): 
  1. அதி வேக அகன்ற அலைவரிசை சேவை (High Speed Mobile Broadband)
  2. குரல் (Voice) மற்றும் தரவு (Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு
  3. பெறுவெளி சுதந்திரம் (Access Independence)
1.அதிவேக அகன்ற அலைவரிசை (Mobile Broadband)

4G தொழில்நுட்பத்தால் 100MB/s-க்கும் அதிகமாக வேகமுள்ள அகன்ற அலைவரிசை சேவையை (Mobile Broadband) அளிக்க இயலும். இந்த அதிவேக அலைவரிசையினால் கிடைக்கப்போகும் சில சேவைகள்.
Mobile TV


1. அதிக வரையறை (High Definition) வீடியோ படங்களை அதி வேகத்தில் செல்பேசியில் பார்க்க இயலும்.

2. Mobile TV சேவை வழியாக நாம் எங்கிருந்தாலும் நம்முடைய விருப்ப TV சேனலை செல்பேசியில் பார்க்க முடியும்.



Mobile TV
3. Live Streaming முறையில் செல்பேசி வழியாக ஒரு நிகழ்ச்சியை நேரலையாக உலகத்தின் எந்த மூலையிலும் இருக்கும் உறவினர்கள், நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். 
Live Streaming
உதாரணமாக உங்கள் குழந்தை அமெரிக்காவில் ஒரு கலை நிகழ்ச்சியில் டான்ஸ் ஆடுகிறது. அதை உங்கள் செல்பேசி காமிரா வழியாக படம் பிடித்து இந்தியாவிலுள்ள உங்கள் பெற்றோர்களுடன் நேரலையாக (Live Telecast) பகிர்ந்து கொள்ளலாம்.





Video Calling
4. Video Calling சேவை மூலமாக நாம் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டே பேச முடியும். நண்பர்களுடன் உட்கார்ந்து தண்ணி அடித்துக்கொண்டு இருக்கும்போது மனைவி செல்பேசியில் கூப்பிட்டால் நான் ஆபிசுல முக்கியமான மீட்டீங்ல இருக்கேன்னு டபாய்க்க முடியாது:(((
[ங்கொய்யால... இந்த சேவையை தடை செய்ய சொல்லனும்டா... என்று பல பேர் நினைப்பது எனக்கு நன்றாக கேட்கிறது:)))]



2.கட்டமைப்பு (Network)

2G மற்றும் 3G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகளை (Voice) கடத்தி செல்வதற்கு சுற்றமைப்பு விசைமாற்றி (Circuit Switching) என்ற தனி கட்டமைப்பு. இணைய (Internet) சேவைகளை வழங்க தகவல் பெட்டக விசைமாற்றி (Packet Switching) என்ற தனி கட்டமைப்பு. ஆனால் 4G தொழில்நுட்பத்தில் இரண்டிற்கும் சேர்த்து ஒரே கட்டமைப்புதான். அதாவது 2G/3G கட்டமைப்பில் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நாம் பேசுவது (குரல்) ஒரு பாதை வழியாகவும், இணைய சேவைகள் (E-mail, Web Browsing) இன்னொரு பாதை வழியாகவும் நம் செல்பேசியை வந்தடைகிறது. உதாரணமாக சென்னையிலிருந்து தஞ்சாவூருக்கு குரல் ரோடு வழியாகவும், இணைய சேவை ரயில் பாதை வழியாகவும் வந்து சேருகிறது. 4G தொழில்நுட்பத்தில் நாம் பேசும் பேச்சுகள் எல்லாம் Voice over IP என்ற தொழில்நுட்பத்தின் வழியாக தகவல் பெட்டக (Packet) முறையில் கடத்தி செல்லப்படுகிறது. சென்னையிலுருந்து தஞ்சாவூருக்கு குரல், இணைய சேவைகள் இரண்டும் ஒரே ரயில் பாதையில் வந்து சேருகிறது. கீழேயுள்ள படத்தை பாருங்கள். தெளிவாக புரியும்...LTE (Long Term Evolution) என்பது 4G கட்டமைப்பின் ஒரு பகுதி.

4G Core Network
குரல்(Voice) மற்றும் தரவு(Data) இரண்டிற்கும் ஒரே கட்டமைப்பு என்பதனால் 4G கட்டமைப்பை நிறுவ ஏற்படும் செலவு குறைவு (Low Capital Expenses). ஒரே பாதை என்பதால் சாலையை அமைக்க ஆகும் செலவு கம்மி...ரயில் பாதை மட்டும் போதும்... ரோடு தேவையில்லை. அதேபோல் இந்த 4G கட்டமைப்பை (ஒரே பாதை) பராமரிக்க ஆகும் செலவும் குறைவு (Low Operational Expenses).

3.பெறுவெளி சுதந்திரம் (Access Independence)

4G தொழில்நுட்பத்தின் அடுத்த முக்கியமான அம்சம். 2G, 3G, WiMax போன்ற தற்போதைய பெறுவெளிகளையும் (Access) இந்த கட்டமைப்பு பயன்படுத்த உதவுகிறது. கீழேயுள்ள படத்தில் தெளிவாக விளக்கப் பட்டுள்ளது.


மேலும் 4G கட்டமைப்பினால் ஏற்படும் நன்மைகள்:

  1. மிகச்சிறந்த அகன்ற அலைவரிசை செயலிகள் (Broadband Applications)
  2. அலைவரிசை ஆற்றல் (Bandwidth Efficiency)
  3. நிறமாலை ஆற்றல் (Spectrum Efficiency)
  4. குறைந்த எடுத்து செல்லும் செலவு (Low Transportation costs)
மேலே சொன்ன காரணங்களினால் 4G கட்டமைப்பு தவிர்க்க முடியாத ஒன்று. எனவே சில ஆண்டுகளில் எல்லா செல்பேசி நிறுவனங்களும் தங்கள் சேவையை 4G-க்கு மாற்றி விடும்!

தமிழ் தொழில்நுட்ப வார்த்தைகளைத் தேடி எழுதுவதற்குள் டவுசர் கிழிஞ்சிருச்சு...:((( [நன்றி-லக்கிலுக்]. ஏதோ.... ஒரளவு 4G கட்டமைப்பு பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன்:)


பி.கு:
4G தொழில் நுட்பம் பற்றி அனைவரும் புரிந்து கொள்ளும் விதத்தில் எழுத வேண்டும் என்ற முயற்சியில் எழுதிய பதிவு இது. புரிகிறதா, இல்லையா மற்றும் உங்கள் ஆலோசனைகளைக் கூறினால் தொலை தொடர்பு தொழில்நுட்பம் பற்றி வருங்காலத்தில் எழுத உதவியாக இருக்கும்.
                                *       *       *