சில நாட்களுக்கு முன்பு டாக்டர் சாம்.பிட்ரோடா (Telecom guru of India) பற்றி தொடர் ஒன்று எழுதினேன். கடந்த சில நாட்களாக என் மனதில் ஒடிக்கொண்டிருக்கும் எண்ணம்.... சாம் அவர்களைப்பற்றி எழுதியதுபோல் என்னைக் கவர்ந்த,பாதித்த மறக்க முடியாத மனிதர்களைப்பற்றி என் பார்வையில் ஒரு தொடர் எழுதினால் என்ன? சரி என்று நினைத்து ஒரு பட்டியல் தயார் செய்தேன்... அந்தப் பட்டியல்:
1. வை.சி.சோமு ஆலம்பிரியர் (என் தந்தையார்)
2. தந்தை பெரியார்
3. பெருந்தலைவர் காமராஜர்
4. காந்தியடிகள்
5. பாரதியார்
6. இந்திரா காந்தி
7. சாரதாம்பாள் சோமு (பெரியம்மா, அப்பாவின் முதல் மனைவி)
8. வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் (பெரியப்பா, வெட்டிக்காடு கிராம நாட்டாமை)
9. சோ.தவசுமணி, காவல்துறை ஆய்வாளர் (என் அண்ணன்)
10. டாக்டர்.தனபாலன் (என் மாமனார்)
11. வா.செ.குழந்தைசாமி (முன்னாள் அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர்)
12. சிவாஜி கணேசன்
13. பாரதிராஜா
14. வைரமுத்து
15. இளையராஜா
16. ரஜினிகாந்த்
17. கமலஹாசன்
18. A.R.ரகுமான்
19. கபில்தேவ்
20. ஸ்ரீகாந்த்
21. சச்சின் டெண்டுல்கர்
22. M.S.தோனி
23. Lee Kuan Yew (Father of Singapore )
24. John.F.Kennedy
25. Barack Obama
26. Steve Jobs (Founder of Apple)
27. Warren Buffet (3rd Richest person in the world)
28. Lee Iacocca (Former CEO of Chrysler)
29. Jack Welch (Former CEO of GE)
30. Daniel Scanlon (My boss for 6 years in the US )
[ 25 எனது இலக்கு. ஆனால், எவ்வளவு முயன்றும் 30-காக மட்டும் குறைக்க முடிந்தது]
என் தந்தையார் வை.சி.சோமு ஆலம்பிரியர் அவர்களைப் பற்றிய நினைவுகளுடன் இந்த தொடரை ஆரம்பிக்கின்றேன்......
மறக்க முடியாத மனிதர்கள்-1: வை.சி.சோமு ஆலம்பிரியர்
வை.சி.சோமு ஆலம்பிரியர் - வெட்டிக்காடு என்னும் ஒரு சிறிய கிராமத்தில் 1920 ஆம் ஆண்டு பிறந்து, வாழ்ந்து, 1989 ஆம் ஆண்டு மறைந்த ஓர் மாமனிதர். ”தந்தை” என்ற சொல்லுக்கு இலக்கணமாக விளங்கிய என் தந்தையார்...ஒரு படிக்காத மேதை!
தனது 17 வருட முதல் மணவாழ்க்கையில் குழந்தையில்லா சோகத்தை அனுபவித்தவர். அதனால் குழந்தைகள் மீது அளவிலா பாசம் கொண்டவர். கிராமத்தில் எந்த ஓர் பெண்மணி தனது குழந்தையை அடித்தாலும் பொறுக்க மாட்டார். அந்த பெண்னை திட்டி குழந்தையை ஓடிச்சென்று தூக்கிக்கொண்டு வந்து விடுவார். மிகவும் மிதவாதியான அவர் மன்னார்குடியில் ஓர் பெண்ணை சாட்டையால் அடித்து விட்டார். காரணம்.. மன்னார்குடியில் வயலுக்கு மாட்டு வண்டியில் எரு அள்ள சென்ற இடத்தில் அந்தப்பெண் தன் குழந்தையை விளக்கமாற்றால் அடித்திருக்கிறார். இதைப்பார்து கோபப்பட்ட அப்பா அந்த பெண்ணை வண்டி மாடுகளை அடிக்க வைத்திருந்த சாட்டையால் அடித்து விட்டார். அந்த அளவுக்கு குழந்தைகள் மீது பிரியம் கொண்டவர். எங்களை (அண்ணன், நான், தம்பி) எக்காரணம் கொண்டும் அடிக்க மாட்டார். நான் ஒரே ஒரு முறை ஏழாவது படிக்கும்போது அப்பாவிடம் ஒரு அடி வாங்கியிருக்கிறேன். காராணம்.. ஒரு பெரிய நாவற்பழ மரத்தின் உச்சி கிளையில் நான் என் நண்பர்களுடன் உட்கார்ந்து நாவற்பழம் பறிப்பதை பார்த்துவிட்டார்.
அப்பா ஒரு கடினமான உழைப்பாளி. குடும்பத்தில் பாகம் பிரித்தபோது தனக்கு கிடைத்த ஒரு ஏக்கர் நிலத்தை கிட்டத்தட்ட பத்து ஏக்கர் நிலம், போர்செட், ஓட்டு வீடு (கிராமத்தில் முதன் முதலில் ஓட்டு வீடு கட்டியவர், போர்செட் போட்டவர்களில் அப்பாவும் ஒருவர்) என்று உழைப்பால் உயர்ந்தார். விவசாயம் தவிர வெட்டிக்காடு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் “நெல் வியாபாரம்” செய்தார். இதனால் எல்லோரும் அப்பாவை “யாவாரி” என்றுதான் கூப்பிடுவார்கள். கிராமத்தில் மற்றவர்கள் எல்லாம் விவசாய வேலைகள் இல்லாத சமயத்தில் டீ கடைகளில் உட்கார்ந்து வெட்டிப் பேச்சுகள் பேசுவது, சீட்டு விளையாடுவது என்று பொழுதைக் கழிப்பார்கள். ஆனால்.. அப்பாவிற்கு தெரிந்தது எல்லாம் விவசாயம், நெல் வியாபாரம், வண்டி சத்தம் (வாடகை) விடுவது என்ற உழைப்புதான்!
அப்பா அவ்ருடைய ஆர்வத்தால் அய்யர் ஒருவருக்கு பணிவிடைகள் செய்து திண்ணை பள்ளிக்கூடத்தில் ஒரு சில வருடங்கள் படித்தார். இதனால் தமிழ் எழுத, படிக்க தெரியம். கணக்கும் நன்றாக மனப்பாடமாக போடுவார். தான் வயல்களில் வேலை பார்த்து கஷ்டப்படுவதுபோல் தன் குழந்தைகள் கஷ்டப்படக்கூடாது என்று எண்ணி எங்கள் மூவரைய்யும் பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். என் அண்ணனை திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் B.Sc படிக்க வைத்தார். என்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் B.E படிக்க வைத்தார்.
”ரெண்டு பசங்கள படிக்க வைச்சிட்ட.... வயசான காலத்தில ஒனக்கு விவசாய வேலையில ஒத்தாச செய்ய கடைசி பயல (என் தம்பி) படிக்க வைக்க வேண்டாம்யா” என்று படிக்காத அம்மா அடிக்கடி சத்தம் போடுவார்.
”ஏண்டி...படிப்ப.. பத்தி ஒனக்கு என்னடி... தெரியும்? ஒப்பன் ஒன்ன ரெண்டு எழுத்து படிக்க வைச்சிருந்ததானே?” என்று அம்மாவைத் திட்டுவார். மிகுந்த பணத் தட்டுப்பாடு நிலவிய அவருடைய கடைசி கால கட்டத்திலும் தம்பியையும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தார். தம்பி இன்று M.S – Computer Science பட்டம் பெற்று மென்பொருள் துறையில் மேனேஜராக பணியாற்றுகிறான்.
அப்பா நன்றாக பாடுவார்... வயல்களில் வேலை செய்யும் போது அசதி தெரியாமல் இருப்பதற்கு பாடுவார். இளம் வயதில் வள்ளித் திருமணம் நாடகத்தில் வள்ளியாகவும் மற்றும் குறவன் குறத்தி டான்ஸில் குறத்தியாகவும் வேடம் போட்டவர். பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர்தான் வேடன். நான் பார்த்தது கிடையாது... ஆனால் ஊர் பெரிசுகள் பெரியப்பா, அப்பாவின் வள்ளித் திருமண நாடகததின் சிறப்பு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் அதன் புகழ் பற்றி நிறைய கதைகள் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறேன். ஊரில் அப்பாவின் விசில் “யாவாரி விசில்” என்று பிரபலம். தூரத்தில் செல்பவர்களை அப்பாவிடம் விசில் அடிக்க சொல்லி கூப்பிடச் சொல்வார்கள். அப்பா ஒரு சில நாட்களில் சாராயம் சாப்பிடுவார். அப்போது அவர் சொன்னதையே திரும்ப... திரும்ப சொல்லி பெரியம்மா (அப்பாவின் முதல் மனைவி)-யிடம் வாங்கும் திட்டுகள் பார்ப்பதற்கு ஜாலியாக இருக்கும். மாட்டுப்பொங்கல் அன்று சாராயம் போட்டுவிட்டு யாரும் கிட்ட நெருங்க முடியாத எங்கள் வீட்டு “கொட்டாப்புலி” காளைகளை அலங்கரித்து கையில் பிடித்துக்கொண்டு கம்பீரமாக வலம் வருவார். நெல் வியாபாரி என்பதால் களத்தில் உட்கார்ந்து “லாபம், ரெண்டு, மூனு...” என்று அனாசயமாக மரக்காலால் நெல் அளந்து மூட்டையில் வீசுவார்.
நெல் வியாபாரம் செய்ததால் அப்பாவிடம் பணம் புழக்கம் இருக்கும். ஊரில் இருக்கும் ஏழை குடும்பங்கள் தீபாவளி, பொங்கல் பண்டிகைகளை மகிழ்ச்சியுடன் கொண்டாட, விவசாயம் செய்ய பணம் கொடுத்து உதவுவார். யார் வந்து உதவி கேட்டாலும் “வக்காலி...எங்கிட்ட... எங்கடா.... பணம் இருக்கு?” என்று முதலில் இல்லை என்று சொல்லுவார். பிறகு மனம் கேட்காமல் கொஞ்ச நேரம் கழித்தோ அல்லது சில நாட்கள் கழித்தோ பணம் கேட்டவர் கஷ்டப்படுவதை பார்த்து பொருக்க முடியாமல் கூப்பிட்டு கொடுப்பார். இது அவரது சுபாவம். ஊர் மக்கள் அறிந்த உண்மை. நெல் வியாபாரத்தில் மிகுந்த நேர்மையை கடைபிடித்தார். ஒரு மூட்டைக்கு 50 காசு முதல் ஒரு ரூபாய் என்று லாபம் வைத்துதான் விற்பார். அப்பாவின் வியாபார நேர்மையால் மன்னார்குடியில் அரிசி ஆலை வைத்து நெல் வியாபாரம் செய்த உத்திராபதி செட்டியார் அப்பாவின் நண்பர். அப்பா எவ்வளவு பணம் கேட்டாலும் தயங்காமல் கொடுப்பார். வெட்டிக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களிலுள்ள விவாசாயிகளில் அப்பா சிபாரிசு செய்பவர்களுக்கு மட்டும் உத்திராபதி செட்டியார் கடன் கொடுப்பார். அப்பா மீது அவருக்கு அவ்வளவு நம்பிக்கை!
அப்பாவிற்கு என்னை மிகவும் பிடிக்கும். அதற்கு பல காரணங்கள்... நான் பார்ப்பதற்கு அப்பா மாதிரியே இருப்பேன். அதனால் ஊரில் என்னை “சின்ன யாவாரி” என்று கூப்பிடுவார்கள். நான் வெள்ளிக்கிழமை பிறந்தவன் என்பதால் அப்பா என்னைத்தான் விதை நெல் எடுத்து நாற்றாங்காளில் முதன் முதலில் வீசச் சொல்லுவார். முதல் அறுவடையும் நான்தான் செய்ய வேண்டும். மேலும் நான் படிப்பில் முதல் மாணவன். அதனால் என் ஆசிரியர்கள் என்னைப்பற்றி அப்பாவிடம் நல்ல பையன் என்று சொன்னதால் வேறு...!
அப்பாவுடன் நான் கழித்த சிறு வயது நாட்கள் என்றும் மறக்க முடியாதவை.... அவருடன் கடலை கொல்லையில் கவளையில் தண்ணீர் இறைப்பது, மடை கட்டுவது, வயலில் களை எடுப்பது, கதிர் அறுப்பது, இரவில் களத்திற்கு காவலுக்கு படுக்க போவது, மன்னார்குடிக்கு மாட்டு வண்டி மற்றும் சைக்கிளில் சென்று வந்தது.... அப்பா மன்னார்குடி செல்லும் நாட்களில் அவர் வாங்கி வரும் குஞ்சான் செட்டியார் கடை பக்கோடா, மிக்சர் இவற்றிற்காக தூங்காமல் காத்து இருப்பது.... “அப்பா அஞ்சு காசு கொடுப்பா” என்று அப்பாவைக் கேட்கும்போதெல்லாம் “படுவா... பய.. காசு காசுன்னு ஏன்டா உசுர எடுக்கிற?” என்று கடிந்து கொண்டு கொடுப்பது என்று பட்டியல் போட்டுக்கொண்டே போகலாம்...
நான் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் ரேங்க் எடுத்தவுடன் அப்பாவிற்கு நான் எஞ்சினீயர் அல்லது டாக்டர் ஆகி விடுவேன் என்ற நம்பிக்கை. நான் +2 படிக்கும் காலத்தில் அப்பா என்னிடம் ”நீ நல்லா படிச்சு.... சக்திவேல் (எங்கள் ஊரின் முதல் இஞ்சினீயர்) மாதிரி இஞ்சினீயர் அல்லது அமெரிக்காவிலிருக்கும் எட-மேலையூர் டாக்டர் அழகு.கணேசன் மாதிரி... பெரிய ஆளா... வரனும்டா தம்பி” என்று அடிக்கடி கூறுவார். +2 முடித்தவுடன் எஞ்சினியரிங், டாக்டர், B.Tech, B.Sc (Agri) போன்ற அனைத்து Professional படிப்புகளுக்கும் எனக்கு மெரிட்டில் சீட் கிடைத்தது. இதைப்பார்த்து அப்பா அளவிலா மகிழ்ச்சியடைந்தார்.
”யாவாரி” என்ற பட்டப்பெயருடன் ஊரில் செல்வாக்காக வாழ்ந்த மனிதர் தனது கடைசி ஐந்து ஆண்டுகள் வாழ்க்கையில் பட்ட இன்னல்கள்தான் எத்தனை? எத்தனை? அண்ணனின் காவல்துறை உதவி ஆய்வாளர் (Sub-Inspector of Police) வேலைக்காக கொடுத்த 50 ஆயிரம் ரூபாய் பணம் (1985 ஆம் ஆண்டு இது பெரும் தொகை) மற்றும் என்னை சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் படிக்க வைக்க செலவு போன்ற பணத் தேவைகளுக்காக அம்மாக்களின் நகைகளை விற்றார். அவருடைய சக்திக்கு மீறிய கடன் வாங்க வேண்டிய கட்டாயம். எவ்வளவு கஷ்டம் வந்தாலும் என் பூமியை விலை பேச மாட்டேன் என்ற வைக்கிராக்கியத்துடன் நானும், அண்ணனும் எவ்வளவோ சொல்லியும் நிலங்களை விற்க மறுத்துவிட்டார். ”நான் ஒவ்வொரு காசாக சேர்த்து வாங்கிய, உழைத்த பூமி.. என் பூமியை விலை பேச மாட்டேன்.. இன்னும் கொஞ்ச நாள் தம் புடிச்சிட்டன்னா போதும்... அப்புறம் நீங்க ரெண்டு பேரும் வேலைக்கு போயிடுவீங்க” என்று கூறினார். அப்பா மன்னார்குடி மற்றும் அடுத்த கிராமங்களுக்கு செல்லும்போது சலவை மடியாத வெள்ளை கதர் சட்டைகளை மட்டும் போடும் பழக்கம் உள்ளவர். அப்படிப்பட்டவர் ஒரு முறை மன்னார்குடிக்கு கசங்கிய நிலையில், ஓட்டைகளுடன் உள்ள கதர் சட்டையில் கிளம்பி சென்றபோது பார்த்து என் மனம் அடைந்த வேதனைகளை சொல்ல முடியாது!
அப்பா தனது 69-ஆம் வயதில் 1989 ஆம் ஆண்டு மே 2-ம் தேதி மஞ்சள்காமாலை (Jaundice) நோயினால் இறந்து போனார். ஆனால் மே மூன்றாம் தேதிதான் என்னுடைய B.E கடைசி செமஸ்டர் முதல் பரீட்சை. அப்பா இறந்ததை என்னிடம் யாரும் சொல்ல வில்லை. பத்து நாட்கள் பரீட்சைகள் முடிந்தவுடன் தெரிந்து கொண்டதால் என்ன பயன்? அப்பாவின் உடலைக்கூட பார்க்க எனக்கு கொடுத்து வைக்க்வில்லை! அப்பா ஆசைப்பட்டது போல் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து அமெரிக்கா சென்று, அமெரிக்க குடியுரிமை பெற்று இன்று நல்ல வேலையில் ஓரளவு வசதியான வாழ்க்கை. ஆனால்... பார்க்கத்தான் அப்பா இல்லை!
* * *
33 comments:
//அப்பாவின் உடலைக்கூட பார்க்க எனக்கு கொடுத்து வைக்க்வில்லை! அப்பா ஆசைப்பட்டது போல் கிண்டி பொறியியல் கல்லூரியில் பொறியியல் படித்து//
இதுபோல் எனக்கும் நடந்ததுங்க ரவி.
:(
ஆஹா! ரவியா இந்த வாரம்? கலக்குங்க. :-) வாழ்த்துகள் ரவி!
மிக அருமையான தொடக்கம். நெகிழ்வான பகிர்வு.
நல்ல நெகிழ்வான பதிவு! என் அனுபவத்தை வைத்து கூறுகிறேன், பெற்றோர் மீது மரியாதை வைத்தவர்கள் என்றும் வீணாக மாட்டார்கள்!
வாழ்த்துகள், ரவி அண்ணே!
:(
நானும் சின்ன வயதில் அஞ்சு காசுதான் கேட்பேன். அதனால் எனக்கு அஞ்சுகாசுகிராக்கி என்றே பெரியவர்களிடம் பெயர்! கரம்பக்குடியிலேருந்து மன்னார்குடிக்கு விடுமுறைக்குப் போறது. அந்த பஸ்சுல போட்டு உலுக்கி நசுக்கி வாயால வந்துரும். வெட்டிக்காடு வந்துருச்சுன்னா, அப்பாடா இன்னும் கொஞ்ச தூரந்தான்னு ஆறுதலா இருக்கும்! நல்ல பதிவு. மேலும் உயர்க!
அருமையாப் பதிவு செஞ்சுருக்கீங்க ரவி. படிக்க நல்லா இருக்கு.
மன நெகிழ்வை ஏற்படுத்துகிற பதிவு! சின்னச் சின்ன நிகழ்வுகளையும் குறிப்பிட்டமை நன்று!
மனதை மென்மையாக வருடச் செய்து, இறுதியாக அப்பாவின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் வஞ்சனை செய்த காலத்தை நினைந்து கலங்கடிக்க வைத்து விட்டது இந்தப் பதிவு.
ம்ம்ம்...
மன உணர்வு தூண்டக்கூடிய பதிவு.
// கரம்பக்குடியிலேருந்து மன்னார்குடிக்கு
//
கரம்பக்குடி எங்க அப்பாவுக்குப் பிடிக்காத ஊர். எனக்குப் பிடித்த ஊர். ரெண்டுக்கும் ஒரே காரணம்தான்...அது எங்க அம்மா ஊர் :)
கோவி.கண்ணன்-- :(((
பா.ராஜாராம்-- மிக்க நன்றி அண்ணா
பெயர் சொல்ல விருப்பமில்லை-- நன்றி ஜூனியர் தம்பி
எம்.எம்.அப்துல்லா-- நன்றி தம்பி
சுந்தரவடிவேல்-- வாங்க தலைவரே! அந்த காலத்தில் அஞ்சு பைசா தந்த இன்பம் தனி!
இரா. செல்வராசு-- நன்றி செல்வராசு
அத்திவெட்டி ஜோதிபாரதி-- நன்றி தம்பி
Thekkikattan|தெகா-- நன்றி தெக்கிகாட்டாரே!
நந்தா ஆண்டாள்மகன்-- நன்றி
Thamizhla type adikkatheiriyala, romba kalangittenda Ravi. onga appavoda asigal onnakku eppodum irukkumda.... Hari
நெகிழ்வாக இருந்தது ரவி... :( :(
அன்புடன் ஆர்.வி.எஸ்.
வாழ்த்துக்கள், ரவி.
நெகிழ்வான விரிவான பதிவு. அப்பாவின் ஆன்மா மேலிருந்து வாழ்த்திக்கொண்டு இருக்கும். வளர்க!
அப்பாவின் நினைவுகளோடு நட்சத்திர வாரத்தை ஆரம்பித்து வைத்துள்ள ரவிக்கு வாழ்த்துகள்..//அப்பாவின் உடலைக்கூட பார்க்க எனக்கு கொடுத்து வைக்கவில்லை//// எனக்கும் அதே தான் நடந்தது..
நல்ல பதிவு..கலக்குங்க ரவி!! வாழ்த்துகள்
முதலில் நட்சத்திர வாழ்த்துக்கள்.
அப்பா என்பது மந்திரச்சொல். உருக்கமாக பகிர்ந்திருக்கிறீர்கள் அவரின் வாழ்க்கையை.
நானும் அப்பா பற்றி எழுதியிருந்தேன்சில காலங்களுக்கு முன்னால். பார்க்க: http://visaran.blogspot.com/2009/01/blog-post_11.html
நன்றி
சரியான சமயத்தில் அப்பாவுக்கு நினைவு கூறல். தொடர்கின்றேன்.
தங்கள் அப்பாவினைப்பற்றி நல்ல பகிர்வு. டாக்டர் தனபாலன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது
அன்ணே முதலில் தமிழ்மண நட்சத்திரத்திற்கு வாழ்த்துக்கள். நீங்களும் அப்பா பிரியரா...ரொம்ப சந்தோஷம்.
அப்பாவை கண்முன்னே கொண்டாந்து நிப்பாட்டிடீங்க.நன்றி பகிர்வுக்கு.
நாம் படிக்கும்போது அப்பாவிடம் பல முறை பேசும் வாய்ப்பு கிடைத்து பேசி இருக்கிறேன் .என்ன ஒரு அன்பு .மிகுந்த உண்மையான அன்பு .அப்படிப்பட்ட மனிதர்களை கிராமத்தில் தான் பார்க்க முடியும் .அப்பாவின் உருவம் இன்னும் என் கண் முன்னே நிற்கிறது- கதர் வெட்டி ,சட்டை .மறக்க முடியவில்லை .அப்பா இறந்த செய்தி என்னை மிகுந்த அதிர்சிகுள்ளகியது.
என் ஆழ்ந்த அனுதாபங்கள் ரவி.
Valupaiyan
நெகிழ்வான இடுகை.
அப்பாவைப் பற்றியது அருமையான இடுகை . உங்க லிஸ்டில் உள்ளவர்களில் எல்லோரும் அனேகமாக எல்லோருக்கும் பிடித்தமானவர்களாய் இருப்பர் .
என் நண்பன் வெட்டுக்காடு, வெட்டிக்காடு அல்ல. பேராவூரணி பக்கம். தஞ்சாவூர் பக்கம் நிறைய வெட்டு\டிக்காடு இருக்குமாட்டக்குது.
Thamizhan-- நன்றி ஹரி
RVS-- நன்றி
தஞ்சாவூரான்-- நன்றி தலைவரே
அ.வெற்றிவேல் -- :(((
விசரன்-- நன்றி
ஜோதிஜி-- நன்றி
குடுகுடுப்பை-- நன்றி குடுகுடுப்பையாரே!
//டாக்டர் தனபாலன் கேள்விப்பட்ட பெயராக இருக்கிறது//
கேள்விப்பட்டிரூப்பீர்கள். மாமா தஞ்சாவூரில் புகழ்பெற்ற மருத்துவர்.
மரா-- நன்றி தம்பி
வாலு பையன்-- நன்றி NHSS தோழா!
வி.பாலகுமார்-- நன்றி
Mahi_Granny-- நன்றி
குறும்பன்-- நன்றி. ஆம் நண்பரே. தஞ்சைத்தரணியில் நிறைய வெட்டிக்காடுகள் உள்ளன!
எங்க குடும்பத்துல கடைசி பையன் அப்பாவோட செல்லப் புள்ள நான். என்னாலயும் அப்பா இறந்தப்ப உடனே ஊருக்கு போக முடியல. நான் போறதுக்குள்ள அடக்கம் பண்ணிட்டாங்க.
தலைவரே ! மிக அருமையான பதிவு ! கலக்கீட்டீங்க !
என்ன ஒரே வருத்தம்னா...... மறக்க முடியாத மனிதர்களில் தவறுதலா என்னோட பெற விட்டுடீங்க போல இருக்கே
தோழர் ... நெகிழச் செய்யும் பதிவு ... தங்கள் அப்பாவிற்கு எனது வணக்கங்கள்!
ஜோசப் பால்ராஜ்-- :(((
Naval-- நன்றி.
//என்ன ஒரே வருத்தம்னா...... மறக்க முடியாத மனிதர்களில் தவறுதலா என்னோட பெற விட்டுடீங்க போல இருக்கே//
ஆமாம்.. மறந்து விட்டேன்... தலைவரே!
நியோ-- நன்றி
heart throbbing ending...
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பாரம்..! அப்பாக்கள் நம்முடைய ஆளுமையில் ஒளிந்திருக்கிறார்கள் என்பது உண்மை..! ரவி ஸார்.. இன்றைய பொழுதுக்கு இந்த ஒரு போஸ்ட் போதும்..!
Heart touching
அப்பா என்ற அரும் பெரும் ஆசான். என்றும் இதயம் நிறைந்த நீங்காத, அவர் நினைவுகள்.நெகிழ் ஊட்டும் பகிர்வு...
Post a Comment