வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, March 11, 2013

பொன்னியின் செல்வன் - 2

பொன்னியின் செல்வன் கற்பனையோடு கலந்து எழுதப்பட்ட வரலாற்று நாவல். கல்கியின் கற்பனையில் உதித்த கதாபாத்திரங்களை தன்னுடைய அபார ஓவியத் திறமை மூலம் நம் கண் முன்பே உலவ விட்டிருப்பார் ஒவியர் மணியன். மணியனின் ஓவியங்கள் இல்லாத பொன்னியின் செல்வன் புத்தங்களை படிப்பதற்கு நான் நிச்சயமாக பரிந்துரை செய்ய மாட்டேன். கல்கியில் மணியன் ஓவியங்களுடன் தொடராக வந்தபோது அதன் பக்கங்களை கிழித்து பைண்ட் செய்த புத்தகங்களை படிப்பது சிறந்தது.


வானர் குலத்து வீரன் வல்லவரையன் வந்தியத் தேவன் காஞ்சியிலிருந்து ஆதித்த கரிகாலன் கொடுத்தனுப்பிய ஓலைகளை எடுத்துக் கொண்டு தஞ்சாவூர் நோக்கி தற்போது வீராணம் ஏரி என்றழைக்கப்படும் வீர நாரயண ஏரிக்கரையில் பயணிக்கும் காட்சியுடன் தொடங்குகிறது கதை. முதல் அத்தியாத்திலேயே சோழ மன்னர்களின் பெருமையை பறைசாற்றும் வீர நாரயண ஏரியுடன் கதையை தொடக்குகிறார் கல்கி அவர்கள். கரிகாலன் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு காவிரியின் குறுக்கே கல்லணையை கட்டி சாதனை செய்தான். கரிகாலச் சோழனின் பரம்பரையில் வந்த இராஜாதித்த சோழன் தன் படை வீரர்களைக் கொண்டு கடலில் வீணாக கலக்கும் வட காவேரி என்றழைக்கப்படும் கொள்ளிடத்தின் தண்ணீரை விவசாயத்திற்கு பயண்படுத்துவதற்காக கடல் போன்ற ஏரியை வெட்டி அதற்கு தன் தந்தையின் பெயரால் வீர நாரயண ஏரி என்றழைத்தான்.

***
விஜயாலய சோழனின் பேரனான முதற் பராந்தக சோழன் 'மதுரையும், ஈழமும் கொண்ட கோப்பரகேசரி' என்ற பட்டம் பெற்றவன். சோழப் பேரரசுக்கு அஸ்திவாரம் அமைத்தவன் அவனே. தில்லைச் சிற்றம்பலத்துக்கு அவன் பொன் கூரை வேய்ந்து சரித்திரப் புகழ்பெற்றவன். சோழ சிகாமணி, சூரசிகாமணி முதலிய பல விருதுப் பெயர்களோடு வீரநாராயணன் என்னும் சிறப்புப் பெயரையும் அவன் கொண்டிருந்தான்.
பராந்தகனுடைய காலத்தில் வடக்கே இரட்டை மண்டலத்து ராஷ்டிரகூட மன்னர்கள் வலிமை பெற்று விளங்கினார்கள். மானிய கேடத்திலிருந்து அவர்கள் படையெடுத்து வரக் கூடுமென்று பராந்தகன் எதிர்பார்த்தான். எனவே, தனது முதற்புதல்வனாகிய இளவரசன் இராஜாதித்தனை ஒரு பெரிய சைன்யத்துடன் திருமுனைப்பாடி நாட்டில் இருக்கச் செய்தான். அந்தச் சைன்யத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான வீரர்கள் வேலையின்றிச் சும்மா இருக்க நேர்ந்த காலத்தில் இராஜாதித்தன் ஒரு யோசனை செய்தான். குடிமக்களுக்கு உபயோகமான ஒரு பெரும் பணியை அவர்களைக் கொண்டு செய்விக்க எண்ணினான். வட காவேரி என்று பக்தர்களாலும் கொள்ளிடம் என்று மற்றவர்களாலும் அழைக்கப்பட்ட பெருநதியின் வழியாக அளவில்லாத வெள்ள நீர் ஓடி வீணே கடலில் கலந்து கொண்டிருந்தது. அதில் ஒரு பகுதியைப் பயன்படுத்த எண்ணித் தன் வசமிருந்த வீரர்களைக் கொண்டு கடல் போன்ற விசாலமான ஏரி ஒன்றை அமைத்தான். அதைத் தன் அருமைத் தந்தையின் பெயரால் வீரநாராயண ஏரி என்று அழைத்தான். அதன் கரையில் வீரநாராயண புரத்தை ஏற்படுத்தி அதில் ஒரு விண்ணகரையும் எடுத்தான். விஷ்ணுக்கிருஹம் என்பது அந்நாளில் விண்ணகரம் என்று தமிழாக்கப்பட்டு வழங்கிற்று. ஸரீமந் நாராயணமூர்த்தி நீரில் பள்ளிகொண்டு நீர்மயமாக இருப்பவர் அல்லவா? எனவே, ஏரிகளைக் காத்தருளுவதற்காக ஏரிக் கரையையொட்டி ஸரீ நாராயண மூர்த்திக்குக் கோயில் எடுப்பது அக்காலத்து வழக்கம். அதன்படி வீரநாராயணபுர விண்ணகரத்தில் வீரநாராயணப் பெருமாளைக் கோயில் கொண்டு எழுந்தருளச் செய்தான்.
***
கல்கி அவர்கள் இந்த நாவலில் சங்க இலக்கிய பாடல்களை கதையின் போக்கோடு பொறுத்தி வெவ்வேறு கதாபாத்திரங்கள் பாடுவது போன்று கதையோடு சேர்ந்து இலக்கிய விருந்தும் படைக்கிறார்.


சோழ நாட்டிற்கு முதன் முதலாக வரும் வந்தியத் தேவன் சோழ நாட்டின் இயற்கை காட்சிகளையும், பொன்னி நதியின் செழிப்பையும் பார்த்து பரசவமடைகிறான். 
***
குடந்தை நகரிலிருந்து தஞ்சாவூர் செல்வோர் அந்தக் காலத்தில் அரிசலாற்றங்கரையோடாவது காவேரிக் கரையின் மேலாவது சென்று, திருவையாற்றை அடைவார்கள். அங்கிருந்து தெற்கே திரும்பித் தஞ்சாவூர் போவார்கள். வழியிலுள்ள குடமுருட்டி, வெட்டாறு, வெண்ணாறு, வடவாறு நதிகளைத் தாண்ட அங்கே தான் வசதியான துறைகள் இருந்தன.
குடந்தையிலிருந்து புறப்பட்ட வல்லவரையன், முதலில் அரிசிலாற்றங்கரையை நோக்கிச் சென்றான். வழியில் அவன் பார்த்த காட்சிகள் எல்லாம் சோழ நாட்டைக் குறித்து அவன் கேள்விப்பட்டிருந்ததைக் காட்டிலும் அதிகமாகவே அவனைப் பிரமிக்கச் செய்தன. எந்த இனிய காட்சியையும் முதல் முறை பார்க்கும்போது அதன் இனிமை மிகுந்து தோன்றுமல்லவா? பசும்பயிர் வயல்களும், இஞ்சி மஞ்சள் கொல்லைகளும், கரும்பு வாழைத் தோட்டங்களும், தென்னை, கமுகுத் தோப்புகளும், வாவிகளும், ஓடைகளும், குளங்களும், வாய்க்கால்களும் மாறி மாறி வந்து கொண்டேயிருந்தன. ஓடைகளில் அல்லியும் குவளையும் காடாகப் பூத்துக் கிடந்தன. குளங்களில் செந்தாமரையும் வெண்தாமரையும் நீலோத்பவமும் செங்கழுநீரும் கண்கொள்ளாக் காட்சியளித்தன. வெண்ணிறக் கொக்குகள் மந்தை மந்தையாகப் பறந்தன. செங்கால் நாரைகள் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்தன. மடைகளின் வழியாகத் தண்ணீர் குபுகுபு என்று பாய்ந்தது. நல்ல உரமும் தழை எருவும் போட்டுப் போட்டுக் கன்னங்கரேலென்றிருந்த கழனிகளின் சேற்றை உழவர்கள் மேலும் ஆழமாக உழுது பண்படுத்தினார்கள். பண்பட்ட வயல்களில் பெண்கள் நடவு நட்டார்கள். நடவு செய்து கொண்டே, இனிய கிராமிய பாடல்களைப் பாடினார்கள். கரும்புத் தோட்டங்களின் பக்கத்தில் கரும்பு ஆலைகள் அமைத்திருந்தார்கள். சென்ற ஆண்டில் பயிரிட்ட முற்றிய கருப்பங்கழிகளை வெட்டி அந்தக் கரும்பு ஆலைகளில் கொடுத்துச் சாறு பிழிந்தார்கள். கரும்புச் சாற்றின் மணமும், வெல்லம் காய்ச்சும் மணமும் சேர்ந்து கலந்து வந்து மூக்கைத் தொளைத்தன.
தென்னந்தோப்புகளின் மத்தியில் கீற்று ஓலைகள் வேயப்பட்ட குடிசைகளும் ஓட்டு வீடுகளும் இருந்தன. கிராமங்களில் வீட்டு வாசலைச் சுத்தமாக மெழுகிப் பெருக்கித் தரையைக் கண்ணாடி போல் வைத்திருந்தார்கள். சில வீடுகளின் வாசல்களில் நெல் உலரப் போட்டிருந்தார்கள். அந்த நெல்லைக் கோழிகள் வந்து கொத்தித் தின்றுவிட்டு, "கொக்கரக்கோ!" என்று கத்திக் கொண்டு திரும்பிப் போயின. நெல்லைக் காவல் காத்துக் கொண்டிருந்த பெண் குழந்தைகள் அக்கோழிகளை விரட்டி அடிக்கவில்லை. "கோழி அப்படி எவ்வளவு நெல்லைத் தின்றுவிடப் போகிறது?" என்று அலட்சியத்துடன் அக்குழந்தைகள் சோழியும் பல்லாங்குழியும் ஆடிக் கொண்டிருந்தார்கள். குடிசைகளின் கூரைகளின் வழியாக அடுப்புப் புகை மேலே வந்து கொண்டிருந்தது. அடுப்புப் புகையுடன் நெல்லைப் புழுக்கும் மணமும், கம்பு வறுக்கும் மணமும், இறைச்சி வதக்கும் நாற்றமும் கலந்து வந்தன. அக்காலத்தில் போர் வீரர்கள் பெரும்பாலும் மாமிசபட்சணிகளாகவே இருந்தார்கள். வல்லவரையனும் அப்படித்தான்; எனவே அந்த மணங்கள் அவனுடைய நாவில் ஜலம் ஊறச் செய்தன.
ஆங்காங்கே சாலை ஓரத்தில் கொல்லர் உலைக்களங்கள் இருந்தன. உலைகளில் நெருப்புத் தணல் தகதகவென்று ஜொலித்தது. இரும்பைப் பட்டறையில் வைத்து அடிக்கும் சத்தம் 'டணார், டணார்' என்று கேட்டது. அந்த உலைக் களங்களில் குடியானவர்களுக்கு வேண்டிய ஏர்க்கொழு, மண்வெட்டி, கடப்பாரை முதலியவற்றுடன், கத்திகள், கேடயங்கள், வேல்கள், ஈட்டிகள் முதலியன கும்பல் கும்பலாகக் கிடந்தன. அவற்றை வாங்கிக் கொண்டு போகக் குடியானவர்களும் போர் வீரர்களும் போட்டி போட்டுக் கொண்டு காத்திருந்தார்கள்.
சிறிய கிராமங்களிலும் சின்னஞ்சிறு கோவில்கள் காட்சி அளித்தன. கோவிலுக்குள்ளே சேமக்கலம் அடிக்கும் சத்தமும், நகரா முழங்கும் சத்தமும், மந்திரகோஷமும், தேவாரப் பண்பாடலும் எழுந்தன. மாரியம்மன் முதலிய கிராம தேவதைகளை மஞ்சத்தில் எழுந்தருளப் பண்ணிக் கொண்டு பூசாரிகள் கரகம் எடுத்து ஆடிக் கொண்டும் உடுக்கு அடித்துக் கொண்டும் வந்து நெல் காணிக்கை தண்டினார்கள். கழுத்தில் மணி கட்டிய மாடுகளைச் சிறுவர்கள் மேய்ப்பதற்கு ஓட்டிப் போனார்கள். அவர்களில் சிலர் புல்லாங்குழல் வாசித்தார்கள்!
குடியானவர்கள் வயலில் வேலை செய்த அலுப்புத் தீர மரத்தடியில் உட்கார்ந்து இளைப்பாறினார்கள். அப்போது செம்மறியாடுகளைச் சண்டைக்கு ஏவிவிட்டு அவர்கள் வேடிக்கை பார்த்தார்கள். வீட்டுக் கூரைகளின் மேல் பெண் மயில்கள் உட்கார்ந்து கூவ, அதைக் கேட்டு ஆண் மயில்கள் தோகையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு ஜிவ்வென்று பறந்துபோய் அப்பெண் மயில்களுக்கு பக்கத்தில் அமர்ந்தன. புறாக்கள் அழகிய கழுத்தை அசைத்துக் கொண்டு அங்குமிங்கும் சுற்றின. பாவம்! கூண்டுகளில் அடைபட்ட கிளிகளும் மைனாக்களும் சோக கீதங்கள் இசைத்தன. இப்படிப்பட்ட காட்சிகளையெல்லாம் பார்த்துக் களித்துக் கொண்டு வந்தியத்தேவன் குதிரையை மெல்ல செலுத்திக் கொண்டு சென்றான்.
அவனுடைய கண்களுக்கு நிறைய வேலை இருந்தது. மனமும் இந்தப் பல்வேறு காட்சிகளைப் பார்த்து மகிழ்ந்து கொண்டிருந்தது.
***
அப்போது காவிரியின் சிறப்பை கூறும் இந்த சிலப்பதிகார பாடலை இளைய பிராட்டி குந்தவை தேவியும் வானதியும் பாடிக் கொண்டு பொன்னி நதியில் படகில் வருகிறார்கள் என்று காட்சியமைக்கிறார்.

மருங்கு வண்டு சிறந்து ஆர்ப்ப,
மணிப்பூ ஆடை அதுபோர்த்துக்
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்தாய் வாழி! காவேரி!
கருங்கயற்கண் விழித்து ஒல்கி
நடந்த எல்லாம் நின்கணவன்
திருந்து செங்கோல் வளையாமை
அறிந்தேன் வாழி! காவேரி!

பூவர் சோலை மயிலாடப்
புரிந்து குயில்கள் இசைபாடக்
காமர் மாலை அருகசைய 
நடந்தாய் வாழி! காவேரி!
காமர் மாலை அருகசைய 
நடந்த வெல்லாம், நின் கணவன்
நாம வேலின் திறங்கண்டே
அறிந்தேன் வாழி! காவேரி!

குடகு நாட்டில் பிறந்து வளர்ந்த காவிரி பெண் கன்னிப் பருவம் வந்ததும் தன் காதலலான கடல் அரசனிடம் சேர குதுகாலத்துடனும், பூரிப்புடனும் வருகிறாள். சோழ நாட்டில் பொன்னி நதியின் இரு கரைகளிலுமுள்ள வண்டுகள் ஆர்ப்பரித்தும், குயில்கள் பாட்டிசைத்தும், மயில்கள் நடனமாடியும், புன்னை மரங்களும், கடம்ப மரங்களும் மஞ்சள், சிவப்பு வண்ண மலர்களை சூடியும், பச்சை வயல்வெளிகள் பச்சை பட்டுடித்தியும் காவிரி பெண்ணை அலங்கரித்து மகிழ்ச்சியடைகின்றனர்.

நடந்தாய் வாழி!! காவேரி !!!



                                                                                                                                                                                                 - தொடரும்


*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

2 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பொன். செல்வன் பகுதிகளுடன் உங்கள் கருத்துக்களையும் இணைத்து இனியதொரு தொடர்.

Ravichandran Somu said...

நன்றி Nizamudeen.