வெட்டிக்காடு

வெட்டிக்காடு
Showing posts with label கதை. Show all posts
Showing posts with label கதை. Show all posts

Friday, October 15, 2010

வெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்

நான் சிறுவனாக இருந்தபோது பெரிய பயந்தாங்கொள்ளி... அதற்கு முக்கிய காரணம் கிராமத்தில் மக்கள் சொல்லும் பேய்க்கதைகள். ஒவ்வொரு காலகட்டதிலும் ஊரில் ஒரு பேய்க்கதை உலா வரும். சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்ட பேய்க்கதைகளில் என்னை மிகவும் பயப்பட வைத்தது அப்பா சொன்ன இந்த பேய்க்கதை. அப்பா இளைஞராக இருந்தபோது (60 வருடங்களுக்கு முன்பு) நடந்த சம்பவம் இது. அப்பா இந்த கதையை பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன்.

வெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்
 சம்மா நெல் அறுவடை முடிந்து நெல்லை களத்தில் பட்டறை போட்டிருந்த மாசி மாத காலம். அப்பா களத்தில் காவலுக்காக தனியாக களத்திலுள்ள ஒரு சிறு கொட்டகையில் இரவில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். நடு நிசி வேலை... கடும் பனி... நல்ல இருட்டு... “டேய்... டேய்...” என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுகிறார். ”யாருடா... அது” என்று கேட்டுக்கொண்டே கொட்டகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியில் யாரும் இல்லை. களத்தை சுற்றி ஒரு வலம் வந்து பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஏதாவது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சிறுநீர் கழித்து விட்டு எழுந்து திரும்புகிறார். சரேலென்று வெண்ணிறத்தில் உருவம் ஒன்று வாயில் நெருப்புடன் அப்பாவைக் கடந்து பாய்ந்து செல்கிறது.

அப்பா ஒரு கணம் திகைத்து, பயத்த்தில் வெல வெலுத்துப் போய் நிக்கிறார். அந்த தீப்பந்தம் கண்ணிமைக்கும் நேரத்தில் களத்திற்கு கிழக்கே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யனார் கோவிலை சென்றடைகிறது. பயத்தில் என்ன செய்வதென்று திகைத்து... ஓடிப் போய் கொட்டகையின் உள்ளே உட்கார்ந்து விட்டார். சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு தைரியத்துடன் கையில் அருவாளை எடுத்துக்கொண்டு கொட்டகையை விட்டு வெளியே வந்து களத்தில் நின்று கொண்டு பார்க்கிறார். இப்போது அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்கள் தெரிகிறது. ஐந்து தீப்பந்தங்களும் கோயிலைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடி வருகின்றன். “கொள்ளிவாய் பிசாசுகள்”  தன்னையறியாமலே அப்பாவின் வாய் முனுமுனுக்கிறது.

கொள்ளிவாய் பிசாசுகள் ஆட்டம் போடுவதைப் பார்த்த அப்பாவிற்கு பயம்... பக்கத்து களத்தில் நெல் போட்டிருந்தவர்கள் எல்லாம் நெல்லை எடுத்து சென்று விட்டதால் யாரும் பக்கத்தில் இல்லை. கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள களத்தில் ராஜாபதி ஆலம்பிரியர் காவலுக்கு படுத்திருக்கிறார். ஆனால்... அரை கிலோ மீட்டர் தூரததை தனியாக நடந்து சென்று ராஜாபதியை கூப்பிடுவதற்கும் பயம். என்னதான் நடக்கிறது... பார்த்து விடலாம் என்று தைரியத்துடன், கையில் பிடித்த அருவாளுடன் களத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து விட்டார் அப்பா.

ஒரு அரை மணி நேரம் கழித்து திடிரென்று அய்யனார் கோவிலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொள்ளிவாய் பிசாசுகள் ஐந்தும் மெதுவாக அங்கிருந்து நகர ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் கழித்துதான் அப்பாவுக்கு உறைத்தது... அந்த தீப்பந்தங்கள் அப்பாவை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று. பயத்தில் நடு நடுங்கி செய்வதறியாது திகைத்து கொட்டகைக்குள் புகுந்து போய் ஒரு ஒரத்தில் ஒடுங்கி உட்கார்ந்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து வெளியே “டேய்.. டேய்.” என்ற இரைச்சலுடன், பயங்கரமாக காற்று வீசுகிறது. சர்... சர்... சர்றென்று பாய்ந்து செல்லும் சத்தம் கேட்கிறது. சப்த நாடியும் ஒடுங்கி நடுக்கத்துடன் அப்பா இருக்கிறார்.

கொஞ்ச நேரம் கழித்து சத்தம் எல்லாம் அடங்கி... மயான அமைதி! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பா கொட்டடகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியே யாரும் இல்லை... கிழக்கே அய்யனார் கோவில் பக்கம் திரும்பி பார்க்கிறார்... கொள்ளிவாய் பிசாசுகள் இருப்பதற்கான சுவடுகள் எதுவும் தெரியவில்லை. அப்பாடா... என்று பெரு மூச்சுடன் திரும்பி மேற்கு பக்கம் பார்த்தவர் அதிர்ந்து போனார்...

மேற்கே.. வெட்டிக்காடு-எட கீழையூர் கிராம எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்களும் ஆடுவது தெரிந்தது. கிழக்கேயிருந்த அய்யனார் கோவிலிருந்து ஐந்து கொள்ளிவாய் பிசாசுகளும் அப்பாவைக் கடந்து மேற்கேயிருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்று விட்டன. மறுபடியும் அப்பா களத்தில் பெஞ்சில் உட்கார்ந்து விட்டார். தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தீப்பந்தங்கள் நகர ஆரம்பித்தன. மெதுவாக அப்பாவை நோக்கி வருவதை உணர்ந்தவர் முன்பு போல் ஓடி கொட்டகையில் உட்கார்ந்து விட்டார். ஐந்து நிமிடங்கள்.. பத்து நிமிடங்கள்.. பதினைந்து நிமிடங்களாயிற்று... எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. அப்பா கொட்டகையை விட்டு வெளியே வந்து பார்க்கிறார். மேற்கு அய்யனார் கோவிலில் தீப்பந்தங்களை காண வில்லை. ஆனால்... இப்போது தீப்பந்தங்கள் களத்திலிருந்து சற்று தொலைவில் வடக்கே இருக்கும் சுடுகாட்டில்!

சுடுகாடு சற்று பக்கத்திலிருந்ததால் தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவது அப்பாவிற்கு நன்றாக தெரிகிறது. அவ்வப்போது திடீரென்று “டேய்... டேய்” என்ற சத்தம் கேட்கிறது. என்னதான் இந்த கொள்ளிவாய் பிசாசுகள் செய்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அப்பா களத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அதிகாலை மணி சுமார் நான்கு இருக்கும்.. திடிரென்று சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருந்த ஐந்து தீப்பந்தங்களையும் காணவில்லை. அதன் பிறகு எந்த சத்தமும் கேட்கவில்லை. கொள்ளிவாய் பிசாசுகள் காற்றோடு காற்றாக மறைந்து விட்டன.  பொழுது விடிய ஆரம்பித்தது. ஓரளவு பொழுது விடிந்தவுடன் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடி வந்து விட்டார் அப்பா!
                       *           *            *
பி.கு:

இந்த கதை உண்மையா அல்லது அப்பாவின் அதீத கற்பனையா என்று எனக்கு தெரியாது. ஆனால்... அப்பா இந்த கதையை பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன். நான் பயந்தாங்கொள்ளியாக விளங்கியதற்கு இந்த பேய்க்கதையும்.. இது போன்ற பல பேய்க்கதைகளும்தான் முக்கியமான காரணம். இதனால்... நான் இரவில் தனியாக எங்கும் செல்ல மாட்டேன். நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் மின்சாரம் கிடையாது. அதனால் தெருவில் விளக்குகள் கிடையாது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் கிராமத்த்திற்கு மின்சாரம் வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் வீட்டிற்கு மின்சாரம் வந்தது. அதுவரையில் இரவில் படிப்பது, எழுதுவது எல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான்!

இளம் வயதில் மனதில் விதைக்கப்பட்ட பேய்கதைகளால் வளர்ந்து ஓரளவு பெரியவனான பிறகும் பயம் என்னை விட்டு போக வில்லை. இரவிலோ, மதிய வேளையில் தனியாக நடந்து செல்லும் போதோ அல்லது தனியாக மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருக்கும் போது உடனே மனக்கண் முன் தோன்றுவது சமீபத்தில் இறந்தவர்கள், அவர்களை பிணமாக தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி மற்றும் சமீபத்தில் கேள்விப்பட்ட பேய்க்கதைகள்தான்.

பத்தாம் வகுப்பு படிக்கும்போது டியூசனுக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் மரண பயம்தான். பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்திற்காக G.N (G.Natarajan) சாரிடம் டியூசன் வைத்திருந்தேன். ஆனால் டியூசன் நேரம் காலை ஆறு மணி. எங்கள் ஊர் வெட்டிக்காட்டிலிருந்து மன்னார்குடியிலிருக்கும் G.N சார் வீடு கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர்கள். எனவே தினமும் காலை நான்கரை மனிக்கு எழுந்து குளித்து, சாப்பிட்டு விட்டு ஐந்தேகால் மணியளவில் சைக்கிளில் கிளம்பி மன்னார்குடியை நோக்கி அதிகாலை இருட்டில் பயத்துடன் பயணிப்பேன்.

மன்னார்குடியை நெருங்கும்போது குறுக்காற்று பாலத்திற்கு அருகிலிருக்கும் சுடுகாடு என்னுடைய பயம் சென்டர். அது கொஞ்சம் பிஸியான சுடுகாடு... எனவே, ரெகுலராக பிணம் எரிந்து கொண்டிருக்கும். சுடுகாட்டை நெருங்க... நெருங்க பயம் எகிற ஆரம்பிக்கும். சுடுகாட்டிற்கு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவில் சைக்கிளை நிறுத்தி விடுவேன்.. யாரவது பால்காரரோ அல்லது வேறு யாரோ சைக்கிளில் வந்தால் அவருடன் சேர்ந்து போய்விடுவேன். சில நாட்களில் ரொம்ப நேரம் காத்திருந்தும் யாரும் வர மாட்டார்கள். அந்த நாட்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சைக்கிளை புயல் வேகத்தில் மிதித்து தெப்ப குளக்கரை வந்துதான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வேன்.

இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியான என்னை ஓரளவு தைரியசாலியாக்கியது இந்திரஜித் அண்ணன். பெரியப்பா மகன் இந்திரஜித் பெயருக்கேற்றார்போல் மிகப் பெரிய தைரியசாலி. இரவில் தன்னந்தனியாக எங்கும் செல்லும் துணிச்சல்காரர். சண்டை என்று வந்து விட்டால் முதல் அடி இந்திரஜித்துடையதாகத்தான் இருக்கும். தற்போது வெட்டிக்காட்டின் நாட்டாமை!

அண்ணன் இந்திரஜித்தும் நானும் நல்ல நண்பர்கள். தன் தம்பி இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியாக இருக்கிறானே என்று நினைத்து தைரியமாக இருப்பதற்கான பல ஆலோசனைகளை எனக்கு கூறுவார். இரவில் அண்ணன் தனியாக செல்லும் போது என்னையும் கூட்டி செல்வார். கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெளிய ஆரம்பித்தது. ஆனால்.. சுடுகாட்டு பயம் விலகவில்லை. இதை நன்றாக தெரிந்து வைத்திருந்த அண்ணன் யாரோ ஒருவர் இறந்த அடுத்த நாள் தெற்கே குளத்திற்கு போயிட்டு வரலாம் வாடா என்று இரவு பதினோரு மணிக்கு கூப்பிட்டார். சரியென்று அண்ணனுடன் கிளம்பினேன். பள்ளிக்கூடத்தைக் கடந்து தெற்கே செல்லும் ரொட்டில் நடந்து போகிறோம். தெற்கே சிறிது தூரம் சென்று மேற்கே திரும்பும் குளத்திற்கான பாதையில் திரும்பாமல் அண்ணன் சுடுகாட்டை நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு பயத்தில் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது. 

அண்ணன் என்னைப்பார்து “உன்னோட பயத்தை போக்கத்தான் நான் குளத்திற்கு போவலாம்னு சொல்லி கூப்பிட்டு வந்தேன்டா.. பேய்.. பிசாசெல்லாம்... கட்டுக்கதைகள்.. நேரா இப்ப சுடுகாட்டுக்கே போய் நேத்து செத்து போனவர் பேயா இருக்கிறார்ன்னு பார்த்துடலாமுன்னு” என்று சொல்லிக்கொண்டே என் கையைப் பிடித்து அழைத்து (இழுத்து) சென்றார். இருட்டில் சுடுகாட்டில் மாலைகள் மற்ற பொருட்கள் சிதறி கிடக்கின்றன். “பார்டா.. எங்கடா பேய்.. எங்கடா பிசாசு” என்று சுடுகாட்டை சுற்றிக் காட்டுகிறார். பிறகு எரிக்கப்பட்ட பிணத்தின் எலும்புகளையும், மண்டை ஓட்யையும் காண்பிக்கிறார். அண்ணணின் கையைப் பிடித்துக்கொண்டே நிற்கிறேன்... பார்க்கிறேன். பேய்.. பிசாசு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.. பயம் கொஞ்சம் தெளிய.. அண்ணனின் கையை விட்டு விட்டேன். பயத்தையும் விட்டு விட்டேன்!

                   *          *         *

Tuesday, September 07, 2010

*4*: வேலியில போற ஓணான...

4G பதிவில் அகன்ற அலை வரிசை, தரவு, நிறலி.. இப்படின்னு படிச்சு ஒரு சிலர் மண்ட காய்ந்து போய் இருப்பீர்கள்:( கொஞ்சம் சிரித்து மகிழ என் கல்லூரி கால ராகிங் கதை:))) இது ஒரு மீள் பதிவு…

வேலியில போற ஓணான…..

கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.

ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்!

எங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.

ராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது? என்று சபை களை கட்டும்.

சீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க!

சீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்!

ராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு "ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்...." என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.

எல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்(?!) கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.

பனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி "நான் சூப்பர்மேன்!" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.

கிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். "டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, "நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது?" என்று அக்கறையாக் கேட்பானுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. "டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா" என்றார்கள்.

"
சரிங்க சார்..." பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.

5B
பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் "டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.

இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க! போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.

எங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்சுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.

ஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள்! கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.

பட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.

வச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.

சோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒன்னும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போனா சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.

வழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். "நானும் உங்களோட மெஸ்சுக்கு வர்றேன்டா" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.

"
மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா" என்றேன் நான்.

"
வெட்டிக்ஸ் வேண்டான்டா" என்றான் பட்டு.

புட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.

முட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.

அந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் "பேரு என்னடா?"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.

மூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன "மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டி முன் நின்று கிண்டி சல்யூட் அடித்து "வணக்கம் சார்!" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...

"
என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.

"
இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.

"
மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா? இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.

முனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.

பசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.

"
வேலியில போற ஓணான... எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு!
        *     *       *

Friday, August 06, 2010

வெட்டிக்காடு கதைகள்-1: அய்யனார் சாமி

சில வருடங்களுக்கு முன்பு வெட்டிக்காடு மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் நான் பார்த்த, கேட்ட உண்மைச் சம்பவங்களைக் கொண்டு “வெட்டிக்காடு கதைகள்” என்று ஒரு தொடர் எழுதலாம் என்று எண்ணி “அய்யனார் சாமி” என்ற கதையை எழுதினேன். ஆனால்... அதற்க்குப் பிறகு என் வலைப்பதிவிற்கு ஒரு பூட்டை போட்டு பூட்டிவிட்டு போய் விட்டேன். கடந்த சில நாட்களாக “களவாணி” படம் ஏற்படுத்திய பாதிப்பில் ஊர் கதைகள் ஞாபகம் வர மீண்டும் “வெட்டிக்காடு கதைகள்” தொடருக்கு உயிர் கொடுத்து எழுதலாம் என்ற எண்ணம். முதல் கதையான “அய்யனார் சாமி”-யை இப்போது மீள் பதிவு செய்கிறேன். இந்த உண்மைச் சம்பவம் நான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது நடந்தது.
                                                             அய்யனார் சாமி
                                                                     


மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் “எமன்“ சவுந்தர்ராஜன் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்ம்பித்து விடும்.


வெள்ளை வேட்டி, சட்டை, முருக்கிய பெரிய மீசை, இடுப்பில் சொருகியிருக்கும் கத்தி, கையில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு சகிதமாக தமிழ் ஐயா நடந்து வருவதைப் பார்த்தால் பரவை முனியம்மா பாடும் “மதுரை வீரன் தானே.... “ என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.


“
கயவாலிப் பயலுகளா... என்னாடா அங்க சத்தம்...? வந்தேன்னா... குன்டிய ராவிபுடுவேன்“ என்று எமன் ஒரு குரல் கொடுத்தாரென்றால் பசங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் மரம், செடி கொடிகள் கூட ஆடாமல், அசையாமல் அமைதி காக்கும்.

நாயகன் வேலு நாயக்கரப்போல தமிழ் ஐயா நல்லவரா ? கெட்டவரா ? என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர்.

பாடம் படித்து வராத, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை மூங்கில் கம்பாலும், கிளோரியா கம்பாலும் வகுப்பின் மூலை முடுக்கெல்லாம் விரட்டி, விரட்டிச் சென்று அடி பிண்ணி எடுப்பார். பெண்களை கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்காது. பெண்களின் கட்டுரை நோட்டுப்புத்தகத்தை வாங்கி பேருக்கு ஏனோதானோவென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு “இது என்ன கையெழுத்து ? “ என்று கூறி எழுதிய பக்கங்களை கிழித்து எறிவார். ஆனால்.. சில பசங்களின் கோழி கிறுக்கல் கையெழுத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.

ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். பத்தாம் வகுப்பு மாணவர்களையெல்லாம் பொதுத்தேர்வு படிப்பு விடுமுறை மற்றும் பரீட்சை நாட்களில் மன்னார்குடி டவுனில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு, பாடங்கள் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பார்.

ஐயாவைப் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல... தலைமையாசிரியர் அப்பிரானி நாரயணன் மற்றும் சக ஆசிரியர்கள் கூடப் பயந்து ஐயா முன்பு அடகக ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள்.

ஐயாவுக்கு தலைமையாசிரியார் நாரயணனை கொஞ்சம்கூட பிடிக்காது. எப்படி பிடிக்கும்...? ஐயா பழுத்த நாத்திகவாதி. பெரியாரின் சீடர். பசங்க தப்பித்தவறிக்கூட சாமி, பேய், பூதம் என்று சொன்னால் தொலைத்து விடுவார். ஆனால் தலைமையாசிரியர் நாரயணனோ பழுத்த ஆத்திகவாதி. நெற்றி நிறைய நாமத்துடன் வலம்வரும் ஓர் அப்பிரானி.

கல்வி அதிகாரி (D.E.O) எந்த நேரத்திலும் பள்ளியை ஆய்வு செய்ய வருவார் என்ற பயத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொன்டிருந்த காலக்கட்டத்தில் ஓர் நாள் தமிழ் ஐயா தலைமயாசிரியர் நாரயணன் அறைக்குச்சென்று கிராமத்திலுள்ள அவருடைய வயலில் அறுவடை நடைபெறுவதால் “ரெண்டு நாட்கள் லீவு வேண்டும் “ என்று தலைமையாசிரியரைப் பார்த்து கேட்டார்.

“
என்ன சார்... D.E.O எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வருவார். இப்ப போய் லீவு கேட்கிறீங்களே.. ? “ என்று இழுத்தார் நாரயணன்.

சரேலென்று இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மேசை மீது ஓங்கி குத்திவிட்டு “பாப்பாரப் பயலே...இப்ப லீவு தர முடியுமா ? முடியாதா ? “ என்றார் எமன்.

“
நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானானும் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் சார்.. D.E.O கேட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறேன் “ என்று நடுங்கிக்கொண்டே சொல்லி அன்று எமனோட கத்திகிட்டேயிருந்து தப்பித்தார் நாரயணன்.

மூவாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்ற கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலி கொடுத்து... கரகாட்டம், வள்ளித் திருமணம், பவளக்கொடி நாடகங்களுடன் திருவிழாக்கள் களை கட்டும் ஆடி மாதத்தில் ஓர் நாள்...

ஏழாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் ரெண்டாவது பீரியட் தமிழ் பாடத்தை நினைத்துக்கொண்டு மனதில் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். காரணம்... தமிழ் ஐயா திடீரென்று நேற்று இன்று எல்லோரும் மூன்று செய்யுள்கள் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். பள்ளி விட்டவுடன் வீட்டிற்குச் சென்று புத்தகப்பையை ஒரு மூலையில் கடாசிவிட்டு வயல்வெளிகளிலும், குளத்திலும் ஆட்டம் போடும் பசங்க... அடுத்த நாள் காலையில பள்ளிக்கூடத்திற்கு போகும்போதுதான் புத்தகப்பையைத் தேடுவார்கள். இப்படிப்பட்ட படிப்பாளிகளிடம் திடீரென்று மூன்று செய்யுள்களை ஒரே நாளில் படித்து ஒப்புவிக்க வேண்டும் என்று எமன் கூறினால் பாவம்... அவர்கள் என்ன பண்ணுவார்கள் ? குறைந்தபட்சம் ஒரு மூன்று, நான்கு நாட்கள் கொடுத்தாலாவது கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பார்கள்.

முதல் மார்க் வாங்கும் ரவிச்சந்திரனைத் தவிர மற்ற எல்லோருக்கும் இன்று சரியான மண்டகப்படி உண்டு என்ற பயத்தில் மாணவர்களிருக்க இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கான மணியும் அடித்தது. ஐந்து நிமிடங்களாயிற்று... பத்து நிமிடங்களாயிற்று.. ஐயா இன்னும் வரவில்லை. வகுப்புத் தலைவன் ரவி ஆசிரியர்கள் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து “சார்.. இன்னிக்கு வரலைடா“ என்றான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்தார்கள்.

“
டேய்... சத்தம் போடாதிங்கடா... புகழேந்தி சாருக்கு டீ வாங்க நான் காடுவெட்டியார் கடைக்குப் போறேன்... சத்தம் போடாம இருங்கடா “ என்று கூறிவிட்டு ரவி சென்றுவிட்டான். கணக்கு வாத்தியார் புகழேந்திக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் காடுவெட்டியார் கடை டீதான் பிடிக்கும். பக்கதிலுள்ள கோவிந்தராசு டீக்கடை டீ அவருக்கு பிடிக்காது.

செய்யுள் படித்து வரச்சொன்ன எமன் வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கொஞ்சநேரம் கூட சுதந்திரமாக பேசவிடாமல் பேசியவர்கள் பெயர் என்ற லிஸ்ட் ஒன்றைக் கொடுத்து வாத்தியார்களிடம் மாட்டிவிடும் சகுனி ரவியும் வகுப்பில் இல்லை. மாணவர்களின் மகிழ்ச்சியைக் கேட்கவும் வேண்டுமா ? அடி தூள் பறக்குது.....

ரவி போன ஐந்து நிமிடங்கள் கழித்து வயலுக்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வந்த தமிழ் ஐயா பள்ளியை சைக்கிளில் நெருங்கும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவருடைய ஏழாம் வகுப்பு சென்னை கார்ப்பரேசன் கவுன்சில் மீட்டீங் போல சத்தமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். பள்ளியின் முன்வாசல் வழியாக பள்ளிக்குள் வராமல் அப்படியே பள்ளியின் பின்பக்கம் சென்று அங்கிருக்கும் ஒத்தையடிப்பாதை வழியாக உள்ளே நுழைந்து பள்ளிக்குள் வந்தார்.

வேட்டைக்குச் செல்லும் புலி போல மெல்ல பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக ஏழாம் வகுபின் பின்பகுதிக்குச் சென்று பாதி சுவருக்கு மேலேயிருக்கும் மூங்கில் தட்டியின் ஒட்டை வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் ரவியை காணவில்லை. மாணவர்கள் சத்தம் போட்டு ஓடி பிடித்து விளையாடுகிறார்கள். மாணவிகள் பெஞ்சு மேல் சாக்பீசால் கட்டம் போட்டு தாயம் விளையாடுகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்தார் எமன்.

அந்த நேரம் பார்த்தா... கடைசி பெஞ்ச் ராமமூர்த்திக்கு சாமி ஆட வேண்டும் என்ற ஆசை வரவேண்டும் ? திடீரென்று பெஞ்ச் மேல ஏறி “டேய்... நான்தான்டா அய்யானார் சாமி “ என்று கூறிக்கொண்டு ”டேய்..டேய்.. ” என்று சத்தம் போட்டு சாமி ஆட ஆரம்பித்தான். மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சத்தத்தை நிறுத்திவிட்டு ராமமூர்த்தியின் சாமியாட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

உடனே பக்கத்திலிருந்த அவன் நண்பன் வேல்மணி பூசாரியாக மாறி “அய்யனார் சாமீ... நீதான் எங்களை காப்பத்தனும்... உனக்கு என்ன குறையிருந்தாலும் எங்ககிட்ட சொல்லு... நாங்க தீர்த்து வைக்கிறோம் சாமீ “ என்றான்.

“
எனக்கு ஏன்டா... இந்த வருஷம் ரெண்டு கரும்புதான் (ஆடு) வெட்டியிருக்கீங்க “

”அடுத்த வருஷம் நெறைய வெட்றோம் சாமி “

பக்தன் செல்வராசு அய்யனார் சாமியிடம் சென்று “சாமீ...நான் படிக்காமலேயே பாசாகனும் சாமீ.. அதுக்கு நீதான் ஒரு வழியச் சொல்லனும் சாமீ “ என்றான்.

“
டேய்.. எனக்கு ஒரு குஞ்சு (கோழி) காவு குடுடா...நீ படிக்காம பாசாக நான் ஏற்பாடு பன்றேன் “

பிறகு மேலும் ஒரு சில பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு மலையேறி விட்டது அய்யனார் சாமி. அய்யனார் சாமி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எமன் ஒன்றும் செய்யாமல் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.

அன்று மதியம் ஏழாம் வகுப்பிற்கு மூன்றாவது பீரியட் ஓவிய வகுப்பு. ஓவிய வகுப்பென்றால் மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான். ஏனென்றால் ஓவிய ஆசிரியர் முருகன் அம்புலிமாமா, ரத்னபால சிறுவர் கதை புத்தகங்களை படித்து அந்த கதைகளை ”அழகி” பட பிச்சாண்டி வாத்தியார் போல ஆக்சன் போட்டு ரசித்து சொல்லுவார். இதனால் பசங்களுக்கு முருகன் வாத்தியாரை ரொம்பப் பிடிக்கும். “மகேந்திரபுரி இளவரசி“  கதையின் நான்காம் பாகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.

மூன்றாவது பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தவுடன் ஒவிய ஆசிரியர் முருகனுக்குப் பதிலாக தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார். ஓவிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதில் எமன் வந்துவிட்டார். பசங்களுக்கு செய்யுள் சொல்லவேண்டுமே என்ற பயத்தில் குப்புனு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் வந்து அமர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் பசங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். புயல் அடிப்பதற்கு முன்பு நிலவும் மயான அமைதி.

“
டேய்.. ரவி காலையில வகுப்ப பார்த்துக்காம எங்கடா போயிருந்தே? “

“
புகழேந்தி சாருக்கு டீ வாங்கிவர காடுவெட்டியார் கடைக்கு போயிருந்தேன் சார் “

“
சரி..சரி... போயி வேப்ப இலை நிறைய ஒடிச்சுக்கிட்டு வாடா “

“
டேய்.. செல்வம் நீ போயி ஒரு டப்பாவுல எதிர்த்த வீட்டு குப்பையில சாம்பல் அள்ளிகிட்டு வாடா “

“
டேய்.. மதி நீ போயி பெரிசா ஒரு ஏழெட்டு கிளோரியா கம்பு ஒடிச்சிகிட்டு வாடா “

ஐயா சாலமன் பாப்பையா சொல்வது போல பசங்களுக்கு ஒன்னும் புரியல.. வெளங்கல....

வேப்ப இலை, சாம்பல், கிளோரியா கம்புகள் எல்லாம் எமன் முன்னாடி உள்ள மேசையில்.

“
யாருடா.. அந்த அய்யனார் சாமி? “

பசங்களுக்கு இப்ப வெளங்கிடுச்சி. அந்த அய்யனார் சாமியே வந்தாக்கூட நம்மல இன்னிக்கு எமன்கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது என்று நினைத்துக்கொண்டே மரண பயத்துடன் மெதுவாக எழுந்தான் ராமமூர்த்தி.

“
பூசாரியும், படிக்காமலேயே பாசக வேணும்னு வரம் கேட்ட பக்தனும் எழுந்திருங்க“

வேல்மணியும், செல்வராசுவும் மெதுவாக எழுந்தார்கள்.

எமன் திடீரென்று ஒரு கையில் சாம்பலையும் மறுகையில் வேப்பிலையும் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி தலையில் சாம்பலைக் வீசிக்கொண்டே “அய்யனாரே... என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு “ என்று கூறிக்கொண்டே வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்தார்.

பிறகு ராமமூர்த்தி, வேல்மணி, செல்வராசு மூன்று பேரையும் கிளோரியா கம்பால் தாக்க ஆரம்பித்தார். பசங்க மூனு பேரும் அடி தாங்கமுடியாம வகுப்போட ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறி மாறி ஓடறாங்க. எமன் விடாமல் துரத்தித் துரத்தி அடிக்கிறார். பசங்க மூனு பேரும் போட்ட அலறல் சத்தத்தைக்கேட்டு மத்த வகுப்பு ஆசிரியர்களெல்லாம் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஏழாம் வகுப்பை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.

மீண்டும் மீண்டும் ராமமூர்த்தியை மட்டும் கட்டம் கட்டி “அய்யனார் சாமீ.. என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு “ என்று சொல்லிக்கொண்டே வேப்பிலையாலும், கிளோரியா கம்பாலும் அடி பிண்ணி எடுக்கிறார். அடி தாங்கமுடியாமல் “நான் ஓடிப்போயிடுறேன்.. நான் ஓடிப்போயிடுறேன் “ என்று ராமமூர்த்தி அலறுகிறான்.

அவிழ்ந்த கோவணத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டே மறு கையிலுள்ள கிளோரியா கம்பால் ராமமூர்த்தியை தாக்கிக்கொண்டே இருக்கிறார் எமன். இதற்கு மேல் இங்கேயிருந்தால் மனுசன் இன்னிக்கு அடிச்சே கொன்னுடுவார் என்ற பயத்தில் ராமமூர்த்தி வகுப்பை விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.

அன்று பள்ளியைவிட்டு ஓடியவன்தான் அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி திரும்பி வரவேயில்லை......!
                                                       *        *       *

பி.கு:
தமிழ் ஐயாவிடமிருந்து எங்கள் வகுப்பில் ஒரு முறை கூட அடி வாஙகமல் தப்பித்தவன் நான் ஒருவன் மட்டும்தான்! “குன்டமுட்டு பயலே எங்கிட்டேயிருந்து அடி வாங்காம தப்பிகிறவன் நீதான்டா” என்று அடிக்கடி சொல்லி காட்டுவார். தமிழ் ஐயாவின் அடியிலிருந்து தப்பிப்பதற்காக மற்ற பாடங்களை விட தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து உடனுக்குடன் படித்து விடுவேன். தமிழ் ஐயாவிடம் பயம் இல்லாமல் இருந்திருந்தால் இப்ப்டி வலைப்பதிவில் தமிழில் என்னால் எழுதிக்கொண்டிருக்க முடியாது. தமிழ் ஐயாவிற்கு என் நன்றிகள்!


இரண்டு வருடங்களுக்கு முன்பு ஊருக்கு சென்றிருந்தபோது தமிழ் ஐயாவை பார்த்து பேசிக்கொண்டிருந்தேன். “தம்பீ.. எப்படிடா இருக்கே என்று வாஞ்சையுடன் கையைப் பிடித்து கேட்டபோது” உடம்பில் ஏற்பட்ட சிலிர்ப்பை விவரிக்க முடியாது!! நீரிழிவு நோயினால் ஐயாவின் உடல் தளர்ந்து விட்டது. ஆனால் முறுக்கிய நரை மீசையுடன் அதே “அய்யனார் சாமி” கம்பீரம் முகத்தில்! சிங்கம் எப்போதும் சிங்கம்தான்....