வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, July 30, 2010

சீனா - Last Part (4)

சீனா-4
சீனா Part - 1
சீனா Part - 2
சீனா Part - 3


சீனா, இந்தியா இரண்டு நாடுகளும் “BRIC” நாடுகள். போன இரண்டு பதிவுகளிலும் விஜய்காந்த் மாதிரி ஒரே புள்ளி விவராமா சொல்லி மண்ட காய வெச்ச... இப்ப என்னடான்னா “செங்கல் கருங்கல் அப்படீன்னு புதுசா கதை விடற என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது:) இந்த “BRIC” வேற. BRIC- என்பது Brazil, Russia, India, China என்பதின் சுருக்கம். அதாவது இந்த நான்கு நாடுகள்தான் உலகில் வேகமாக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் நாடுகள். குறிப்பாக சீனாவும் இந்தியாவும் மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகள் என்பதால் அடுத்த சில ஆண்டுகளில் உலகின் வல்லரசாக வருவதற்கான சாத்தியங்கள் உள்ள நாடுகள். என்னைப் பொருத்தவரை இப்போதே சீனா வல்லரசு தன்மையை அடைந்து விட்டது என்றுதான் கூறுவேன். இந்தியா வளர்ந்து வருகிறது.... ஆனால் சீனாவுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது நாம் செல்ல வேண்டிய தூரம் அதிகம்......

“சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் ஒரு நடுநிலையான பார்வையில்
சீனா vs. இந்தியா 
[பதிவு எழுத வந்தவுடன் பள்ளியில் படித்த கால கட்டத்தில் பட்டி மண்றத்தில் பேசும்போது நடுவருக்கு ஐஸ் வைப்பதற்கான் சொன்ன திருக்குறள் எல்லாம் இப்ப ஞாபகம் வருது...............:)))].

1. தலைமை

சீனாவின் இந்த அசுர வளர்ச்சிக்குக் முக்கிய காரணம் கம்யூனிஸ்ட் கட்சி என்ற ஒரே கட்சி ஆட்சி முறை. தொலை நோக்கு திட்டத்துடன் செயல்படும் உறுதியான தலைவர்கள்.

இந்தியா அதற்கு எதிர் மறை. ஜனநாயகம் என்ற முறையில் மாறி மாறி வரும் ஆட்சியமைப்புகள். தொலை நோக்கு பார்வை இல்லா திட்டங்கள். பெரும்பாலான திட்டங்கள் ad hoc measures only!.  உறுதியான தலைமை கிடையாது.

2. கருத்து சுதந்திரம்

முன்பே கூறியபடி சீனா கம்யூனிசம் என்ற இரும்புக்கரம் கொண்டு மக்களை ஆண்டு வருகிறது. மக்களுக்கு கருத்துச் சுதந்திரம் கிடையாது.

ஜனநாயக நாடான இந்தியாவில் எல்லோருக்கும் கருத்து சுதந்திரம்.... போராட்டம் நடத்தலாம். வலைப்பதிவுகளில் அரசியல் தலைவர்களை திட்டி எழுதலாம்:) ரொம்ப ஓவரா எழுதி பதிவர் சவுக்குக்கு நேர்ந்த நிலைமை அல்லது ஆட்டோ வந்தால் கம்பெனி பொறுப்பில்லை:)

3. கட்டமைப்பு

சாலைகள், ரயில் பாதைகள், விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற நாட்டின் கட்டமைப்பில் சீனா வளர்ச்சியடைந்த நாடுகள் அளவிற்கு முன்னேறி விட்டது.

இந்தியா கட்டமைப்பில் சீனாவைவிட பல ஆண்டுகள் பின் தங்கியுள்ளது. வர்த்தக தலைநகரங்களான ஷங்காய், மும்பையை ஒப்பிட்டு பார்க்கும் போது மும்பை ஷங்காய் கிட்ட கொஞ்சம் கூட நெருங்க முடியாது.

4. ஊழல், லஞ்சம்

அரசாஙக அலுவலங்களில் ஊழல், லஞ்சம் என்பது சீனா, இந்தியாவிற்கு பொதுவான பிரச்சனை. ஆனால் சீனாவில் லஞ்சம் ஓரளவு acceptable level-ல் உள்ளது எனலாம். ஏனென்றால் ஒரளவுக்கு மேல் லஞ்சம் வாங்கி பிடிபட்டால் எவவளவு பெரிய தலைவர், அதிகாரி ஆனாலும் சிறைத்தண்ட்னை அல்லது மரண தண்டனை உறுதி. கீழ்க்கண்ட இந்த செய்தி ஒரு சமீபத்திய உதாரணம்:


 ஆனால் இந்தியா....  50 ஆயிரம் கோடிக்கும் மேல் 2ஸ்பெக்ட்ரம் ஊழல் செய்த தொலைத்தொடர்பு மந்திரியின் ஊழல் நிருபிக்க பட்டாலும் அவர் இன்றும் மந்திரியாக தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவார்.

ஊழலை கண்டு பிடிக்கும் I.A.S அதிகாரிக்கு கிடைக்கும் பரிசு சஸ்பென்சன்.

நமது பாராளுமனறத்தை தாக்கிய தீவிரவாதிகள், மும்பையை தாக்கிய தீவிரவாதி ஆகியோர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்றாமல் கோடிக்கண்க்கில் செலவு செய்து பாதுகாப்பு கொடுப்போம்!

5. நீதி, சட்டம் ஒழுங்கு

சீனாவில் கம்யூனிச ஆட்சியின் கீழ் நீதி, சட்டம் ஒழுங்கு சிறப்பாக உள்ளது. எந்த ஊரிலும் ரவுடியிசம், தாதாயிசம் கிடையாது. குற்றம் நிருபிக்கபட்டால் உடனே சிறைதண்டனை அல்லது பெரிய குற்றமென்றால் மரண தண்டனை. பாலில் Melamine” கலந்து விற்ற குற்றத்தில் ஈடுபட்டவர்களுக்கு கிடைத்த பரிசு மரண தண்டனை. இந்த செய்திகளை படித்து பாருங்கள்.



அதனால் சீனாவில் பெரிய குற்றங்கள் செய்வதற்கு பயம் இருக்கின்றது.

இந்தியாவில் நீதி, சட்டம், ஒழுங்கு என்று ஒன்று உள்ளதா என்பது கேள்விக்குறி? எங்கு பார்த்தாலும் கொலை, கொள்ளை, ரவுடியிசம்! ஊழல் செய்யும் அரசியல்வாதிகள் சொரணையே இல்லாமல் சிரித்துக்கொண்டு நீதிமன்ற வாசலில் போஸ் கொடுக்கிறார்கள். அப்படியே தப்பித்தவறி குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை கிடைப்பதற்கு ஒரு பத்து இருபது ஆண்டுகள் ஆகி விடும். அதற்குள் வயசாகி இறந்து விடுபவர்கள் அதிகம். இந்த நிலையில் எப்படி குற்றவாளிகள் பயப்படுவார்கள்?

6. சுகாதாரம்

உலகிலேயே கழிப்பறை பற்றி எந்த விழிப்புணர்வும் இல்லாத நாடு இந்தியாதான். வெட்கம் இல்லாமல் நாம் தெருவில் சிறுநீர் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவோம். நம்மைவிட ஏழை நாடுகளான வியட்நாம், இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் கூட நான் தெருவில் சிறுநீர் கழிக்கும் மனிதர்களை எனது பயணங்களில் பார்த்தது கிடையாது. சாக்கடை, அசுத்தம் இவற்றின் மத்தியில் இந்தியாவில் வாழ பழகிவிட்டோம்.

நம்மைவிட மக்கள் தொகை அதிகமான சீனாவில் மக்கள் சுத்தம், சுகாதாரத்துடன் வாழ்கிறார்கள். நான் ஷங்காய், பீஜிங் நகரங்களில் சிறுநீர் நாற்றத்தை அனுபவிக்க வில்லை. தெருவில் சிறுநீர் கழிக்கும் சீனரையும் பார்க்க்க வில்லை

7. ஆங்கிலம்

ஆங்கில அறிவு மற்றும் புலமையில் இந்தியாவை சீனாவால் எக்காலத்திலும் மிஞ்ச முடியாது. காரணம் ஆங்கிலேயே ஆட்சியினால் நமக்கு கிடைத்த நண்மை! அமெரிக்காவில் பல தொழில்நுட்ப கம்பெனிகளில் உள்ள Engineering, R&amp போன்ற துறைகளில் Director, Vice-President போன்ற பெரிய பதவிகளில் இந்தியர்கள் அதிமாக இருப்பார்கள். காரணம் நமது ஆங்கில அறிவு. சீனர்கள் பெரும்பாலும் பொர்றியாளர்களாகத்தான் (Engineer) இருப்பார்கள்.

8. S/W vs. H/W

இந்தியா மென்பொருள் துறையில் சிறந்து விளங்குகிறது

சீனா பொருள்கள் உற்பத்தியில் சிறந்து விளங்குகிறது.

9. பொருளாதாரம்

சீனா உலகின் மூன்றாவது பெரிய பொருளாதாரம்

இந்தியா உலகின் பதினொன்றாவது பெரிய பொருளாதாரம்

10. வளர்ச்சி

பீகார், உத்தராஞ்சல் மற்றும் சில கிழக்கு பகுதி மாநிலங்களைத்தவிர இந்தியாவின் வளர்ச்சி நாடு முழுவதுமான ஒரே சீராண வளர்ச்சி.

சீனாவின் வளர்ச்சி நாடு முழுவதுமான ஒரே சீராண வளர்ச்சியல்ல. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதிதான் அபாராமாக வளர்ந்துள்ளது

அரசியல்வியாதிகளையும் மீறி இந்தியா தற்போது உலக அரங்கில் வெற்றி நடை போட்டு முன்னேறி வருவதற்கு காரணம் நமது தொழில்நுட்பத்துறையின் வளர்ச்சி (IT and Information Technology) மற்றும் இந்தியர்களின் ஆங்கில அறிவு. நமக்கு நல்ல தொலைநோக்குள்ள சிங்கப்பூரின் லீ குயான் யூ (Lee Kuan Yew) போன்ற தலைவர்கள் கிடைத்தால்........

சீனா சோவியத் யூனியனின் வீழ்ச்சி மற்றும் ஜப்பானின் தவறான பொருளாதாரக் கொள்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் கற்றுக் கொண்ட பாடங்களின் மூலம் அது போன்ற தவறுகளை செய்யாமல் இன்னும் ஒரு சில ஆண்டுகளில் உலகின் மிகப் பெரிய சக்தி மிகுந்த நாடாக விளங்கும் என்பது உறுதி! 

                      -- நிறைவு--
சீனா படங்கள்:
                                Great Wall-2010
                         Great Wall - 1997
                       Forbidden City - Emperor Palace
                           Summer Palace Lake
                           Dragon Building 

Tuesday, July 27, 2010

சீனா - Part 3

சீனா - Part 1

சீனா - Part 2

                                                                     சீனா-3

பிரச்சனைகள் இல்லாத மனிதன் கிடையாது... பிரச்சனைகள் இல்லாத நாடும் கிடையாது. சீனாவின் தற்போதைய பிரச்சனைகள் என்ன? எதிர் நோக்கும் சவால்கள் என்ன?

1. சீன அரசாங்கம் கம்யூனிசம் என்ற இரும்புக்கரத்தைக் கொண்டு தன் நாட்டு மக்களை ஆண்டு வருகிறது. மக்களுக்கு கருத்து சுதந்திரம் கிடையாது. முப்பது ஆண்டுகளுக்கு முன்னால பசி, பஞ்சத்தில் வாடிய சீனர்கள் இன்று வசதியாக வாழ்கிறார்கள். ஆனால், கூண்டுக்குள் அடைக்கப் பட்டிருக்கும் பறவைகள் போன்ற வாழ்க்கைதான். இத்தகைய இருக்கததை என்னால் பீஜிங் நகரில் நன்றாக உணர முடிந்தது. பீஜிங் நகரில் Tiananmen Square, Chairman Mao Memorial, Forbidden City, Summer Palace போன்ற முக்கியமான பகுதிகளில் எல்லாம் அணிவகுத்து நிற்கும் ராணுவ வீரர்களை பார்த்தவுடன் நம்மையறியாமல் ஒரு சிறிய பயம் மனதிற்குள் வந்து விடுகிறது. இப்படி எவ்வளவு காலம் சீனா தன் மக்களை அடக்கி வைத்திருக்க முடியும்? 1989 ஆம் ஆண்டு Tiananmen Square போன்ற ஒரு எதிர்ப்பை சீனா வருங்காலத்தில் சந்திக்க நேரிடலாம்....

2. கருத்து சுதந்திரம் இல்லாததால் சீனாவில் பத்திரிக்கைகள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், இணைய தளங்கள் எல்லாம் அரசாங்கத்தினால் கட்டுப்படுத்தப் படுகின்றன. மக்களின் கருத்து சுதந்திரத்தை அடக்கும் விதமாக FaceBook, Blogger போன்ற தளங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. There’s no media freedom in China! இதனால்தான் கூகுள் (Google) சீனாவிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு வெளியேறி விட்டது.

3. மிக குறைந்த தொழிலாளர்கள் கூலி காரணமாகத்தான் இன்று சீனா உலகத்தின் தொழிற்சாலையாக விளங்குகிறது. ஆனால்... குறைந்த உற்பத்தி செலவு, பெரிய லாபம் இதை மட்டுமே குறிக்கோளாக கொண்டு இயங்கும் சீனாவின் தொழிற்சாலை முதலாளிகள் தொழிலாளர்களுக்கு தேவையான வசதிகளை செய்து கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்தி வேலை வாங்கிறார்கள் என்ற செய்திகள் அவ்வப்போது வந்துகொண்டிருக்கின்றன. சமீபத்திய உதாரணம், Apple, Dell, HP போன்ற நிறுவனங்களின் பாகங்களை உற்பத்தி செய்யும் சென்சென் (Shenzhen)நகரிலிருக்கும் Foxconn Electronics நிறுவனத்தில் ஒரு சில நாட்களில் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொண்ட செய்தி. காரணம் இந்த தொழிற்சாலையில் வேலைபார்க்கும் 300,000 (மூன்று லட்சம்) தொழிலாளர்களை மாடுகளை தொழுவத்தில் அடைத்து வைத்திருப்பதைப் போல வசதிகள் இல்லாத விடுதியில் (Dormitory) தங்க வைத்து தினமும் ஓவர் டைம் வேலை செய்ய வைக்கும் கொடுமை! மூன்று இலட்சம் தொழிலாளர்கள் வேலை பார்க்கும் இந்த தொழிற்சாலையில் இவர்களுக்கென்று ஒரு யூனியன் கிடையாது!
  
4. எதையும் காப்பியடிப்பதில் சீனாவை மிஞ்ச இந்த உலகத்தில் யாரும் கிடையாது! இந்த செய்தியை படித்து பாருங்கள். மிரண்டு விடுவீர்கள்.


போலி பொருட்களை (Fake Branded items) உற்பத்தி செய்து விற்பதில் உலகின் முதல் நாடாக சீனா விளங்குகிறது. ஷங்காய் நகரில் Nanjing Road, பேஷன் தெரு (Fashion Street) என்றழைக்கப்படுகிறது. இந்த தெருவில் உள்ள கடைகளில் டாப் பிராண்ட் பொருட்கள் கிடைக்கும். ஆனால் அந்த தெருவில் நடந்து செல்லும்போது கைகளில் பெரிய போலி பொருட்களின் பட்டியலுடன் (Catalogue) பயணிகளை மொய்ப்பார்கள். அவர்கள் அழைத்து சென்று விடும் சிறிய சந்து கடைகளில் விற்கும் போலி பொருட்களுக்கும் உண்மையான பொருட்களுக்கும் வித்தியாசம் கண்டுபிடிப்பது சிரமம். நான் அசந்துபோய் விட்டேன்! என் ஆஸ்திரேலிய வகுப்புத்தோழன் மிக அபாராமாக பேரம் பேசி 100 Yuan-க்கு (6000 ரூபாய்) 10 Rolex கைக்கடிகாரங்கள் வாங்கினான்!! இந்த திருட்டுத்தனத்தை (Piracy) தடுக்காத சீனாவை நோக்கி உலக நிறுவனங்கள் குற்றம் சாட்டுகின்றன. ஆனால சீனா இதற்காக எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதாக தெரியவில்லை. காராணம் இந்த தொழில் சீனாவில் ஒரு மிகப் பெரிய வர்த்தகம் (Industry)

5. மேலே சொன்னதைப் போன்ற பல காரணங்களால் உலக நாடுகள் எல்லாம் சீனாவை நோக்கி கூறும் குற்றம் மனித உறிமைகள் மீறல் (Human Rights violation).

6. சீனாவின் அரசாங்க அலுவலங்களில் இந்தியாவைப்போல் பரந்து விரிந்து கிடக்கும் லஞ்சம். பணம் கொடுக்காமல் எந்த காரியத்தையும் சாதிக்க முடியாது

7. சீனாவின் வளர்ச்சி சீனா முழுவதுமான ஒரு சீராண வளர்சியல்ல. சீனாவின் கிழக்கு கடற்கரை பகுதி (East coastal region) தான் தொழிற்சாலைகளால் வளர்ச்சியடைந்துள்ளது. சீனாவின் உள்நாட்டு பகுதி, மேற்கு பகுதிகள் பெரிதாக வளர்சியடையவில்லை. காரணம் தொழிற்சாலைகள் கிடையாது. இதனால் கிராமப்புற உள்நாட்டு, மேற்கு பகுதிகளிலிருந்து சீனாவின் கிழக்கு கடற்கரை நகரங்களையும், தொழிற்பேட்டைகளையும் நோக்கி தினமும் ஆயிரக்கணக்கில் மக்கள் நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த பிரச்சினை சீனாவிற்கு தற்போது பெரும் சவாலாக உள்ளது.

8. திபெத், தைவான் பிரச்சனைகள்.....

9. சீனாவின் பொருளாதாரம் கடந்த முப்து ஆண்டுகளாக சராசரியாக ஆண்டிற்கு 10% வளர்ச்சியடைந்து வருகிறது. இதே அளவு வளர்ச்சி வரும் ஆண்டுகளிலும் தொடரும் என்பது கேள்விக்குறி? பொருளாதாரத்தின் வளர்ச்சி குறைந்தால் அதனால் ஏற்படும் பிரச்சனைகளை சீனா சமாளிக்க வேண்டும்.

10. சீனா தன் நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களின் விலை குறைவாக இருக்க வேண்டும் என்பதற்காக அதன் நாணயம் யுவான் (Currency) மதிப்பை குறைவாக வைத்துக்கொள்ள (Undervalued ) பல யுக்திகளை கையாண்டு வருகின்றது. அமெரிக்கா மற்றும் உலக நாடுகள் இதை கடுமையாக கண்டிக்கின்றன. எவவளவு காலம் இதை தொடர முடியும்?


சீனா vs. இந்தியா பற்றி அடுத்த பதிவில்....................
                                       --- தொடரும்
சீனா படங்கள்:
                            Chinese Soldiers
                            Tiananmen Square
                            Beijing Traffic Jam
                            Beijing Pollution
                           Chinese Soldiers



Tuesday, July 20, 2010

சீனா- Part 2

சீனா-2

டெங் ஜியாபெங் திறந்த பொருளாதார கொள்கையின்படி சீனாவின் சந்தையை ஒரேயடியாக திறந்து விடாமல் படிப்படியாக திறந்து விட்டார். நிர்வாகத்தில் சிறந்து விளங்கும் அதிகாரிகளை முக்கிய பொறுப்புகளில் அமர்த்தி சீனாவின் பொருளாதாரத்தை ஒரு கட்டுப்படுத்தப்பட்ட பொருளாதாரமாக (Controlled Economy) வழிநடத்தி சென்றார். சீனாவின் இந்த பொருளாதார கொள்கையினால் அடைந்த சாதனைகள்:

1. டெங் ஜியாபெங் முதன்முதலில் “Special Economic Zone (சிறப்பு பொருளாதார மண்டலம்)என்ற திட்டத்தை அறிமுகப் படுத்தினார். இந்த சிறப்பு பொருளாதார வட்டத்தில் வெளிநாட்டு நிறுவனங்கள் தொழிற்சாலைகள் அமைக்க அனைத்து வசதிகள் மற்றும் வரிச்சலுக்கைகள் கொடுக்கப்பட்டன. இதனால் பல வெளிநாட்டு நிறுவனங்கள் தங்களின் தொழிற்சாலைகளை இந்த சிறப்பு பொருளாதார வட்டாரத்தில் தொடங்கின. 20 வருடங்களுக்கு முன்பு ஹாங்கிங்கிற்கு அருகில் ஒரு சிறிய கிராமமாக இருந்த சென்சென் (Shenzhen) இன்று ஒரு கோடி மக்கள்கள் வசிக்கும் ஒரு நகரமாக திகழ்கிறது. சீனாவின் கிழக்கு கடற்கரையையொட்டியுள்ள பகுதிகளில் மட்டும் தற்போது 14 சிறப்பு பொருளாதார மண்டலங்கள் உள்ளன. ஷங்காய் நகருக்கு அருகிலுள்ள ஷுஜாவு (Shouzou) நகரில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்திலிருக்கும் Michell wool தொழிற்சாலைக்கு சென்று வந்தோம். மிக அருமையான கட்டமைபு வசதிகள் இந்த சிறப்பு பொருளாதார மண்டல தொழிற்பேட்டையில். இந்த தொழிற்சாலையில் பணியாற்றும் சவுத் ஆப்பிரிக்கா நாட்டைச் சேர்ந்த பொது மேலாளர் ஷுஜாவு (Shouzou) நகர அதிகாரிகள் செய்து கொடுக்கும் வசதிகளையும், உதவிகளையும் மிகவும் பாராட்டினார். சீனாவின் இந்த சிறப்பு பொருளாதார மண்டல திட்டத்தின் வெற்றியைப் பார்த்த்துதான் இன்று இந்தியா, பிரேசில் போன்ற மற்ற நாடுகள் இந்த திட்டத்தை பின்பற்றி வருகின்றன

2. கடந்த முப்து ஆண்டுகளாக சீனாவின் பொருளாதாரம் சராசரியாக ஆண்டிற்கு 10% வளர்ச்சியடைந்து வருகிறது. உலகிலேயே ஒரு நாட்டின் பொருளாதாரம் தொடர்ச்சியாக இந்த அளவிற்கு வளர்சியடைந்து வருவது இதுதான் முதல் தடவையாகும்.

 3. அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு அடுத்து சீனா இன்று உலகின் மூன்றாவது பெரிய பொருளதாராமாக விளங்குகிறது. 2009-ஆம் ஆண்டின் சீனாவின் பொருளாதாரத்தின் மதிப்பு $4.99 Trillion.  சீனாவின் அந்நிய செலவாணி கையிருப்பு $2.44 Trillion.  இன்னும் ஒரு சில ஆண்டுகளில் சீனா அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளிவிட்டு உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக முதல் இடத்திற்குச் சென்று விடும்.

4. கடந்த 30 ஆண்டுகளில் கோடிக்கணக்கான மக்கள் வறுமைக்கோட்டிலிருந்து வெளியே வந்துள்ளார்கள். சீனாவின் கணக்குப்படி சீனாவில் வறுமையில் வாடும் மக்களின் சதவீதம் 1981 ஆம் ஆண்டு 53%. அது 2005-ஆம் ஆண்டு வெறும் 2.5 சதவீதம்தான்.

5. சீனாவின் சாலைகள், தொடர் வண்டி பாதைகள் (Railways), விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற கட்டமைப்பு (Infrastructure)  வள்ர்ச்சியடைந்த நாடுகள்களுக்கு இணையாக தற்போது உள்ளன. ஷங்காய் நகரிலிருந்து பீஜிங் நகருக்கு தொடர் வண்டியில் பயணம் செய்தபோது ஐரோப்பா அதிவிரைவு தொடர்வண்டி பயணம் போல மிக அருமையாக இருந்தது.

6. பொருளாதார தலைநகரான ஷங்காய் நகரின் கட்டமைப்பு வியக்கும் வகையில் உள்ளது. நான் கடந்த 17 வருடங்களாக வேலை நிமித்தம் உலகிலுள்ள பல நாடுகள், நகரங்களுக்கு பயணம் செய்து வருகிறேன். ஷங்காய் நகரின் கட்டமைப்பைக் கண்டு பிரமித்து போனேன்! ஷங்காய் நகரின் கட்டமைப்பு வளர்ச்சியடைந்த நாடுகளின் கட்டமைப்பு குறிப்பாக நியுயார்க் நகரித்தின் கட்டமைப்பைவிடச் சிறப்பாக உள்ளது. நகர் முழுவதும் பறக்கும் அதிவிரைவு சாலைகள் (Elevated highways), சைக்கிள் மற்றும் இரு சக்கர வாகணங்களுக்கு தனி சாலைப் பாதை, 11 வழித்தடங்கள் உள்ள மெட்ரோ ரயில், புதிய விமான நிலையம், நகர் முழுவதும் வானுயர்ந்த கட்டிடங்கள் என்று ஷங்காய் நகரின் கட்டமைப்பைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்....

7. உலகமே மூக்கின் மேல் விரல் வைத்து வியக்கும் வண்ணம் 2008 ஒலிம்பிக் போட்டிகளை வெற்றிகரமாக பீஜிங் நகரில் சீனா நடத்திக்காட்டி தன்னுடைய பொருளாதார சக்தியை உலகுக்கு காட்டியது.

8. ஷங்காய் நகரில் Expo-2010 உலக வர்த்தக கண்காட்சிக்காக ஹுயாங் பூ (Huang Pu) ஆற்றங்கரையில் 5.5 சதுர கிலோ மீட்டரில் புதிய நகரத்தை உருவாக்கி தற்போது வெற்றிகரமாக Expo-2010 கண்காட்சியை சீனா நடத்தி வருகிறது.

9. சீனா வாங்கி வைத்திருக்கும் அமெரிக்காவின் கருவூல கடன் பத்திரங்கள்களின் (Treasury Bills) மதிப்பு கிட்டத்தட்ட $1 Trillion. இதன் மூலம் அமெரிக்கா-சீனா வர்த்தக பேச்சு வார்த்தைகளின்போது அமெரிக்காவின்மீது சீனாவால் கடுமையான் அழுத்தம் கொடுக்க முடியும்.


10. தன்னிடம் உள்ள அபரிதமான அந்நிய செலவாணியைக் கொண்டு சீனா பல நாடுகளிலுள்ள இயற்கை வளங்களை முக்கியமாக எண்ணெய் வயல்களை (Oil Fields) வாங்கி வருகின்றது.


11. தொலை நோக்கு திட்டத்தில் ஆப்ரிக்கா கண்டத்தில் பல நாடுகளில் நிலங்களை சீனா வாங்கி குவித்து வருகின்றது. வருங் காலத்தில் சீனாவில் உணவு பற்றாக்குறை ஏற்பட்டால இந்த நிலங்களில் உணவு உற்பத்தி செய்வதற்காக!


12. சீனாவின் குறைந்த உற்பத்தி செலவு காரணமாக இன்று சீனா உலக மக்களுக்கு தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையாக விளங்குகிறது. 

சீனாவின் வளர்ச்சி மற்றும் சாதனைகளைப் இப்படி அடுக்கிக்கொண்டே போகலாம்..... சீனாவின் பிரச்சனைகள், சீனா எதிர்நோக்கும் சவால்கள் என்ன?
                                                      --தொடரும்
சீனா படங்கள்:

                                Tiaanmen Square

                               Shanghai Stock Exchange

                                Michell Wool Factory 
                           Wu Zen Cultural Village

                             Shanghai Railway Station 

Tuesday, July 13, 2010

சீனா

பதிமூன்று வருடங்களுக்குப் பிறகு சீனாவிற்கு கடந்த ஏப்ரல் மாதம் சென்று வரும் வாய்ப்பு கிடைத்தது. எனது MBA படிப்பில் “Business in China” என்ற ஒரு பாடத்திற்குகாக சீனாவில் இரண்டு வாரங்கள் தங்கி படிக்க வேண்டும். அதன்படி ஏப்ரல் மாதத்தில் ஷங்காய் (Shanghai) நகரில் ஒரு வாரமும், பீஜிங் (Beijing) நகரில் ஒரு வாரமும் வகுப்புகள் நடைபெற்றன. கடந்த பத்து ஆண்டுகளில் சீனாவின் வளர்ச்சி அசாத்தியமானது. சீனாவின் இந்த வளர்ச்சி பற்றி ஊடகங்கள் (Media) வழியாக கேட்டு தெரிந்து கொண்டதுதான். இரண்டு வாரங்கள் சீனாவில் தங்கி படித்த இந்த அனுபவம் சீனாவைப்பற்றி எனக்கு ஓரு Eye opener. நான் நேரில் பார்த்த புதிய சீனாவைப் பற்றி எனது பார்வையில் இந்த கட்டுரை.
                                
                                                                  சீனா


இரண்டாவது உலகப் போரில் ஜப்பானியர்களின் பிடியில் மாட்டி சீனர்கள் அனுபவித்த சித்ரவதைகள் எண்ணிலடாங்கதவை. அதன்பின் சீனாவின் பொருளாதாரம் முற்றிலும் சீர்குலைந்து போனது. பல போரட்டங்களுப்பிறகு மா செதுங் (Mao Zedong) தனது தலைமையில் 1949 ஆம் ஆண்டு அக்டோபர் 1 ஆம் தேதி பீப்பிள்ஸ் ரிபபளிக் சைனா (Peoples Republic of China) என்னும் புதிய சீனாவை கம்யூனிச கொள்கைகளின் அடிபபடையில் நிறுவினார்.

                                                           சேர்மன் மா செதுங்

சேர்மன் மா செதுங் புதிய சீனாவின் தந்தை என்றழைக்கப்ப்டுகிறார். ஆனால் கம்யூனிசத்தை அடிப்படையாகக் கொண்ட அவருடைய அபார முன்னோக்கி தாவுதல் (The Great Leap Forward)மற்றும் கலாட்சார புரட்சி(Cultural Revolution)கொள்கைகள் மிகப்பெரும் தோல்வி அடைந்தன. இதனால் சீனர்கள் ஏராளமான தொல்லைகளை அனுபவித்தார்கள். குறிப்பாக அபார முன்னோக்கி தாவுதல்கொள்கையால் 1958-1961 காலகட்டத்தில் சீனாவில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை இரண்டு கோடிக்கும் மேல் (20 Million). மாவின் ஆட்சிக் காலத்தில் சீனா குறிப்பிடத்தக்க பொருளாதார வளர்ச்சி எதுவும் அடையவில்லை.

1976 ஆம் ஆண்டு சேர்மன் மா இறந்த பிறகு மாவின் கம்யூனிச கொள்கைகளை ஆதரிப்பவர்களுக்கும் மாவின் காலாட்சார புரட்சி கொள்கையை எதிர்த்தவர்களுக்கும் நடந்த மோதலில் காலாட்சார புரட்சியை எதிர்த்த டெங் ஜியாபிங் (Deng Xiaoping) ஆட்சியைக் கைப்பற்றி 1978 ஆம் ஆண்டு சீனாவின் சனாதிபதியானார். கம்யூனிச கொள்கைகளால் மக்களுக்கு குடிப்பதற்கு கஞ்சி கூட கிடைக்காது என்ற உண்மையை உணர்ந்து சீனாவின் சந்தையை உலக நிறுவனங்களுக்கு திறந்துவிட்டு சீனாவின் “திறந்த பொருளாதாரம் (Open Economy)”  கொள்கைக்கு அடிததளம் அமைத்தார். 1949 ஆம் ஆண்டு மாவின் கம்யூனிச கொள்கையால் வெளியேற்றப்பட்ட கோகோ கோலா (Coca-Cola) போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு திரும்பி வர சீனா சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்றது. டெங் ஜியாபிங் உயரத்தில் சிறியவராக இருந்தாலும் அவருடைய தொலைநோக்கு கொள்கைகளால் உயரமானவர்! அதனால்தான் டெங் ஜியாபிங் புதிய சீனாவின் சிற்பி (Architect of Modern China)என்றழைக்கப்படுகிறார். டெங் ஜியாபிங் தனது திறந்த பொருளாதார கொள்கையில் உறுதியாக இருந்து மேலும் பல சீர்சிறுத்தங்கள் செய்து சீனாவின் சந்தையை கம்யூனிசத்திலிருந்து கேபிடலிசத்திற்கு(Capitalism) படிப்படியாக மாற்றினார். இதன் காரணமாக சீனாவின் பொருளாதாரம் அசுர வேகம் எடுத்து வளர ஆரம்பித்தது. 
                                டெங் ஜியாபிங்
டெங் ஜியாபிங்கிற்கு பதவி ஏற்றுக்கொண்ட ஜியாங் ஜெமின் (Jiang Zemin), ஹு ஜிண்டாவு (Hu Jintao) போன்ற தலைவர்கள் திறந்த பொருளாதார கொள்கையை பின்பற்றி சீனாவை வளர்ச்சி பாதையில் வழிநடத்தி சென்று கொண்டிருக்கிறார்கள். கடந்த முப்பது ஆண்டுகளில் குறிப்பாக கடந்த பத்து ஆண்டுகளில் சீனா அடைந்திருக்கும் முன்னேற்றங்கள் என்ன?
                                                           - தொடரும்.

சீனா சில படங்கள்:

                                                  
                                                                      Expo-2010


                                                          Shanghai - View from Hung Pu river


                                                                   Shanghai - Night View


                                     சீன உணவு - பொறித்த தேள்கள் (Fried Scorpions)


    சீன உணவு - பாம்பு, அட்டை... சரி சரி நீங்களே படித்துக் கொள்ளுங்கள்:)

Thursday, July 08, 2010

தேடுகிறேன்.....

கோட் சூட் போட்டுகிட்டு இன்று உலகம் முழுவதும் சுற்றி வந்தாலும் அடிப்படையில் நான் ஒரு மஞ்சள் பை கிராமத்து மனிதன். இப்போது மஞ்சள் பைக்கு பதிலாக லேப்டாப் பை.... இதுதான் வித்தியாசம்:) நான் எடுத்துக்கொண்ட புகைப்படங்களிலேயே எனக்கு மிகவும் பிடிதத படம்.... எங்கள் ஊர் நாட்டாமை என் பெரிய்ப்பா (தேவர் மகன் சிவாஜி கணேசன் மாதிரி இருப்பார்) ஸ்டைலில் பெரிய மீசை வைத்து எடுத்துக் கொண்ட புகைப்படம்தான். அதைத்தான் என் புரொபைல் படமாக வைத்துள்ளேன். வலது பக்கம் உள்ள புகைப்படத்தில் நான் மாறி விட்டதைப்போல் எங்கள் வெட்டிக்காடு மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் இந்த 25 வருடங்களில் காலச்சக்கரம் மற்றும் விஞ்ஞான வளர்ச்சியால் மாறிவிட்டன. கடந்த 2004 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை கொண்டாட வெட்டிக்காட்டிற்கு சென்றபோது எழுதிய கவிதை!
                                                                     தேடுகிறேன்.....


பொறியியல் படித்து
அமெரிக்கா வந்து
வருடங்கள் பத்து
உருண்டோடி விட்டன!

இரண்டு வருடங்களுக்கொருமுறை
இந்தியா என்ற அட்டவணைப்படி
இன்று நான் என் கிராமத்தில்...

பத்து வருடங்களில்
எப்படியெல்லாம் மாறிவிட்டது
எனது கிராமம்!

கிட்டி, கிளி கோடு பாய்தல்
விளையாடும் சிறுவர்கள் இல்லை.
கிரிக்கெட் விளையாடும்
சிறார்கள்!

பாவாடை, தாவாணி மறந்து
சுடிதாரில் உலா வரும்
பள்ளிக்கூட மாணவிகள்!

மாட்டு வண்டி பூட்டி
மன்னார்குடி டவுன் சென்ற
மக்கள்
போகிறார்கள் இன்று
புழுதி பறக்கச் செல்லும்
சிறு பேருந்தில்!

காளைகளை ஏரில் பூட்டி
கலப்பயை கையில் பிடித்து
ஏர் உழும் காட்சிகள் இல்லை.
டிராக்டர் வைத்து
உழும் விவசாயிகள்!

முப்பது அடி கிணறு வெட்டி
முகத்தடியில் மாடுகள் பூட்டி
தண்ணீர் இறைக்கும்
காட்சிகளை காணவே முடியவில்லை.
முன்னூறு அடி
ஆழ்குழாய் கிணறு தோண்டி
மோட்டார் வைத்து
தண்ணீர் இறைக்கும் முறை!

நெற்கதிர்களை லாவகமாக
கையில் தூக்கி, கல்லில் அடித்து
கதிர் அடிக்கும் காட்சிகள் இல்லை.
இதற்கும் வந்து விட்டது
இயந்திரம்!

கோயில் திருவிழாக்களில்
அரிச்சந்திரா, பவளக்கொடி
வள்ளித் திருமணம்
நாடகங்கள் இல்லை.
திரை கட்டி காட்டப்படும்
சினிமாக்கள்!

கரகாட்டாம், மயிலாட்டம்
குறவன் குறத்தி ஆட்டம் இல்லை.
கோடம்பாக்கம் குமரிகள் போடும்
குத்தாட்ங்கள்!

முச்சந்தியில் கூடி
பேசி, பாடி, சிரித்து
மகிழ்ந்த மக்கள் இன்று
மூலைக்குள் முடங்கிக் கிடக்கின்றார்கள்
தொலைக்காட்சி பெட்டி முன்பு !

காலச் சக்கரம், விஞ்ஞான வளர்ச்சி
ஏற்படுத்திய மாற்றங்கள்!
நான் மட்டும் தேடுகிறேன்.....
நான் ஓடி விளையாண்ட

என் கிராமத்தை.....?!
                     * * *


                                                                                              




Wednesday, July 07, 2010

வெட்டிக்காடு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் வைரமுத்து அவர்கள் “எங்கள் ஊர்” என்ற தலைப்பில் அவருடைய கிராமத்தைப் பற்றி எழுதிய கவிதையை வார இதழ் ஒன்றில் படித்தேன். அதன் பாதிப்பில் நான் பிறந்து வளர்ந்த என்னுடைய ஊரான வெட்டிக்காட்டை பற்றி எழுதிய கவிதை இது.  இதை கொஞ்சம் மாற்றி இப்போது எழுதலாம் என்று தோன்றியது. வேண்டாம்..... இப்படியே இருக்கட்டும்.

                                                                      வெட்டிக்காடு


காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்



அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு
நான் பிறந்த ஊர்!

o

காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளைகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.

o

ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.

என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!

நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?

o

'
வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?

அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.

o

ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.

ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!

தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'
உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.

o

ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்

அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்

கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்

கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்

ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!

அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.

0

பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!

விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை

வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...

கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.

அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!

இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.

o

ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!

           *    *   *