யாதும் ஊரே; யாவரும் கேளிர்.
- - கனியன்
பூங்குன்றனார்
சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு
சேர்ப்பீர்.
- பாரதியார்
பல புத்தகங்கள் கொடுக்க முடியாத அனுபவத்தை ஒரு பயணம்
கொடுத்து விடும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. நாம் என்னதான் ஒரு நாட்டையோ அல்லது
நகரத்தைப் பற்றியோ புத்தகத்தில் படித்திருந்தாலும், டிவியில் பார்த்திருந்தாலும் நேரில்
சென்று பார்கும்போது கிடைக்கும் அனுபவம், மகிழ்ச்சி அலாதியானது. கடந்த இருபது வருடங்களாக
உலகிலுள்ள பல்வேறு நாடுகள், நகரங்கள், ஊர்களுக்கு வேலை காரணமாக மற்றும் சுற்றுலாவாக
சென்று வந்து கொண்டிருக்கிறேன். இந்த அனுபவங்களை சேமித்து வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல்.
“யாதும் ஊரே” என்ற இந்த தொடர் மூலம் பயணிக்க போகிறேன்…
ஒரு பிளாஷ்பேக்:
1981-ம் வருடத்தில் ஓர் நாள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி
ஒன்பதாம் வகுப்பு “G” செக்சனில் வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமன் நீராவி இயந்திரம் அறிவியல்
பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முதல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனித்துக்
கொண்டிருந்தேன். பாடம் நடத்திக் கொண்டிருந்த வெங்கட்ராமன் சார் ”ரயில் வண்டியை பார்க்காதவங்க
எல்லாம் கையை தூக்குங்கடா” என்றார். நான் வெட்டிக்காடு அதை சுற்றியுள்ள கிராமங்கள், மன்னார்குடி
டவுன் என்ற 20 கிலோ மீட்டர்கள் வட்டத்தை விட்டு வேறு எங்கும் சென்றது கிடையாது. ரயில்
வண்டியை நேரில் பார்த்தது கிடையாது… எனவே சற்றென்று கையை மேலே தூக்கி விட்டேன். தலையை
திருப்பி பார்த்தால் என்னைத் தவிர இன்னொருத்தன் மட்டும்தான் கையை தூக்கி கொண்டிருந்தான்.
இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அவமானத்தால் கூனி குறுகிப் போனேன். “வெந்த புண்ணில்
வேல் பாய்ச்சுவது போல” அந்த அவமானத்தை அதிகப்படுத்த மத்த பசங்க எல்லாம் ஏளனமாகச் சிரித்தார்கள்.
“ஏன்டா… மூவாநல்லூர் அரசு பள்ளியிலிருந்து மாறுதல் வாங்கிகொண்டு இந்த டவுன் பள்ளிக்கூடத்தில்
சேர்ந்தோம்” என்று நொந்து போனேன்.
ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து வகுப்பில் எப்போதும் முதல்
மாணவனாகத் திகழும் என் மீது வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமனுக்கு மிகுந்த பாசம் உண்டு.
நான் ரயில் வண்டி பார்த்தது கிடையாது என்பதை அவர் எதிர் பார்க்கவில்லை. தான் சாதரணமாக
கேட்ட ஒரு கேள்வியால் நான் அவமானத்தால் தலைகுனிந்து நிற்பதை பார்த்து என்னை உற்சாகப்
படுத்த வேண்டும் என்று இப்படி சொன்னார். “ரவி சின்ன கிராமத்திலிருந்து வந்து படிப்பவன்.
அதனால் அவனுக்கு ரயில் வண்டியை பார்க்க வாய்ப்பில்லை. நீங்க எல்லாம் இவனைப் பார்த்து
சிரித்தீர்கள். இவன் கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்…இப்ப நான் டெஸ்ட் வைச்சன்னா ரவிதான் பர்ஸ்ட்
மார்க் எடுப்பான்… உங்கள்ல யாராவது பர்ஸ்ட் மார்க் எடுக்க முடியுமா? சொல்லுங்கடா….தஞ்சாவூர்ல
இருக்கிற ஆடு, மாடுகள், பன்றிகள் கூடத்தான் ரயில் வண்டியை தினமும் பார்க்கிறது… ஆனா
அதுகளுக்கு ரயில் வண்டியின் நீராவி இயந்திரம் எப்படி இயங்குகின்றது என்று சொல்ல தெரியாது…
ஆனால் ரவி தெளிவா சொல்லுவான். எனவே…நீங்க பார்த்ததற்கும ஆடு மாடுகள் பார்த்ததற்கும்
வித்தியாசம் கிடையாது” என்று கூறி ஏளனமாக சிரித்த பசங்க முகத்தில் கரியை பூசினார்.
”இங்க வாட ரவி…” என்று கூப்பிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து
“நீ கவலைப்படாதடா… நீ நல்லா படிச்சு பெரிய என்சினீயரா வருவடா” என்று சொன்னார்.
அன்று மனதில் பதிந்த எண்ணம்தான் பொறியியல் படிக்க வேண்டும்!!!
சாயங்காலம் சைக்கிளில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து
வீட்டு வேலைகள், வீட்டு பாடங்கள் முடித்து விட்டு திண்ணையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும்
மக்கள்களுடன் வந்து உட்கார்ந்து இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது
அப்பா எட-அன்னவாசல் கிராமத்திற்கு சென்றுவிட்டு மாட்டு வண்டியில் திரும்பி வந்தார்.
அப்பாவை பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டேன். அப்பா பதறிப் போய் “ஏன்டா தம்பி அழுவுற…” என்று
கேட்டுக்கொண்டே மாடுகளை அப்படியே விட்டு விட்டு என்கிட்டே வந்தார். அழுதுகொண்டே அன்று
பள்ளியில் நடந்ததை சொன்னேன். ”எங்க கிளாஸ்ல…நான் மட்டும்தாம்பா… ரயில பார்க்ல... என்ன
தஞ்சாவூர் கூட்டிக்கிட்டு போய் ரயில காட்டுப்பா” என்று அழுதேன்.
“படுவா பயலே… அழாதட… நான் அடுத்த வாட்டி தஞ்சாவூர் போறப்ப உன்ன அழச்சிகிட்டு போறேன்டா… வக்காலி… அவன்... அவன் நொய்க்கு அழுவுறான்… இவன் நெய்க்கு அழுவுறான்யா”
என்று சொல்லிக்கொண்டே மாடுகளை தேடி வைக்கப் போருக்கு போய்விட்டார்.
இத பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெரியம்மா “ஏன்டா
ரவி இதுக்கா அழுவுற… ரயிலு என்னடா ரயிலு…நீதான் நல்லா படிக்கிற… நீ பெரிய படிப்பு
படிச்சு ஏரோப்பிளேன்ல எல்லாம் பறந்து போவடா” என்றார்.
- பறக்கலாம்...
|
Singapore Airlines |
|
Taj Mahal, Agra - 1991 |
|
Singapore - 1994 |
|
Harvard University, Boston - 1996 |
|
Great Wall, China - 1997 |
|
Seoul - 1997 |
|
Buckingham Palace, London - 1997 |
|
Niagara Falls, USA - 2000 |
|
Disney World, Orlando - 2000 |
|
New York - 2001 |
|
Eiffel Tower, Paris - 2007 |
|
Bali, Indonesia - 2008 |
|
Harbour Bridge, Sydney - 2008 |
|
Shanghai - 2010 |
|
Burj Khalifa Tower, Dubai - 2011 |
51 comments:
உலகம் சுற்றும் வாலிபன்:)
Good Post Sir!
முயற்சி திருவினையாக்கும்'ன்னு நிரூபிச்சிருக்கீங்க.. வாழ்த்துக்கள்..
//அந்த அவமானத்தை அதிகப்படுத்த மத்த பசங்க எல்லாம் ஏளனமாகச் சிரித்தார்கள்.//
அந்த பசங்களுக்குத்தான் நன்றி சொல்லணும் :))
கலக்கல் தலைவரே, தொடர்ந்து எழுதுங்க!
செம ஆஆஆரம்பம்.
சூப்பர். கலக்குங்க தம்பி
சூப்பர் ரவி, தொடர்ந்து பயணிக்க ஆவலா இருக்கேன்
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
நல்லாருக்குண்ணே.. நம்ம தஞ்சைத் தமிழ்ல எழுதுனா மண்வாசனையோட இருக்கும்ல?
too good ravi.
was moved to hear about your episode on rail engines.
you deserve everything you are experiencing now.
and it is not only you, when i met you recently, but i am seeing lots of our guys who have reached the pinnacle of success and yet are soooo grounded.
this one quality really raises you guys to real heroes, real champions.
share stories. and show to the world that dreams CAN be achieved.
நல்ல துவக்கம், தொடர்ந்து பறக்கலாம் :)
படிப்புலதான் ஃபர்ஸ்கிளாஸ்னா பயபுள்ள ஃபிளைட்லயும் ஃபர்ஸ்ட்கிளாஸில்தான் உக்காந்திருக்கு :)
ரவி , தன்னுடைய வளர்ச்சிகளை , எண்ணங்களை தெளிவாக , அழகாக எடுத்து சொல்வதில் உனக்கு நிகர் நீயே! வாழ்க உன் தமிழ் !!!
ரவி , தன்னுடைய வளர்ச்சிகளை , எண்ணங்களை தெளிவாக , அழகாக எடுத்து சொல்வதில் உனக்கு நிகர் நீயே ! வாழ்க உன் தமிழ் !!!
பூ...! ட்ரெயின் பார்க்காத பயல் ...!
படம் காட்டிட்டீங்களே :)
பாலி போட்டோ தான் பெஸ்ட் ! சூப்பர்
பாலி போட்டோ தான் பெஸ்ட் ! சூப்பர்
மகிழ்ச்சி இரவி.
தொடரட்டும் தங்கள் சாதனை.
மு.இளங்கோவன்
புதுச்சேரி
நல்ல ஆரம்பம் . :)
வாழ்க்கைல ஒரு ரீவைண்ட் பட்டன் இருந்தா எவ்ளோ நல்லா இருக்கும்?!! நல்ல பகிர்வு.
அந்த வாத்தியாரையும் பக்கத்துக்கு வீட்டு பெரியம்மாவையும் மறுபடியும் சந்தித்தீர்களா?
நல்ல ஆரம்பம். கலக்குங்க!
கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் நன்றி!!!
//புதுகை.அப்துல்லா said...
படிப்புலதான் ஃபர்ஸ்கிளாஸ்னா பயபுள்ள ஃபிளைட்லயும் ஃபர்ஸ்ட்கிளாஸில்தான் உக்காந்திருக்கு :)//
தம்பியண்ணன், அது Singapore Airlines new Business class. ஒரு தடவை Frankfort to Singapore Platinum club member என்பதால் First class free upgrade கிடைச்சது. அது இதவிட சூப்பர்... சுவாரசிகமான நிகழ்வு அது. ஒரு எபிசோட்ல எழுதுறேன்:)))
//Ramya Nageswaran said...
அந்த வாத்தியாரையும் பக்கத்துக்கு வீட்டு பெரியம்மாவையும் மறுபடியும் சந்தித்தீர்களா?//
ஆசிரியரை சந்திக்க வாய்ப்பு கிட்டவில்லை. பெரியம்மாவை ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் சந்திக்கிக்கிறேன்.
//தருமி said...
பூ...! ட்ரெயின் பார்க்காத பயல் ...!//
:)))
பசுமை நினைவுகள் ..
நிகழ்கால வசந்தத்திற்கு அடித்தளமிட்ட நம் மன்னை தேசிய மேல்நிலை பள்ளி ...
நமது ஆசான் வெங்கட்ராமன் அய்யா அவர்கள்...
என்னையும் முப்பது வருடம் பின்னால் திரும்பி பார்க்க வைத்து ,
பழைய நினைவுகளில் பள்ளி மாணவன் ஆக்கி விட்டாய் ...
உன்னுடைய எழுத்துக்கு (PRESENTATION ) நான் என்றும் ரசிகன் .
A Nathar
மன்னார்குடியில் ஆரம்பித்த பயணம் உலகமெங்கும் சிறப்பாகத் தொடர்கிறது உங்களுக்கு. எங்களோடும் உங்கள் பயணம் தொடரட்டும், ரயில் பயணம் போல் சுகமாக, உங்கள் பயணத்
தொடர் மூலமாக. வாழ்த்துக்கள் ரவி.
வாவ்..
மாற்றம் ஒன்றே மாறாததுன்னு சொல்றாங்க! நீங்க எப்படி தலைவா, முதல் படத்துலேருந்து கடைசி வரைக்கும் அப்படியே இருக்கீங்க?
$$$$$$$$$$$$$$$$$$$$
www.coinsgallery.net
வவவ.காசுகளஞ்சியம்.பினை
வாழ்த்துகள் நன்னை மைந்தன்!
-சமஸ்.
வாழ்த்துகள் நன்னை மைந்தன்!
வாழ்த்துகள் மன்னை மைந்தன்!
சுவாரஸ்யமான துவக்கம்
நிச்சயம் இந்தப் பயணக் கட்டுரை
வித்தியாசமானதாக இருக்கும்
என்கிற செய்தியைச் சொல்லிப் போகிறது
மனம் கவர்ந்த் பதிவு
தொடர வாழ்த்துக்கள்
தொடருங்கள் நண்பா!
தொடர் விறுவிறுப்பாகத் துவங்கி இருக்கு, நல்வாழ்த்துகள், நினைவுகளின் சேமிப்பு மிக அவசியம், குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் பொக்கிஷம்,
அடேயப்பா... எங்க பக்கத்து வெட்டிக்காட்டு அண்ணன் இன்னிக்கு வெளிநாடு சுத்தும் அண்ணனா இருப்பதை நினைத்து மிகவும் பெருமைப்படுகிறேன்..
உளமார்ந்த வாழ்த்துக்கள் அண்ணா!
வாழ்த்துக்கள்....
uliyal sethukka sethukka than paraiyum sirpam ahum......indraiya muyarchi nalaya vetri....nanum muyarchi seikiran
Miga arumai. Valzhuthukal!!!
பயணங்கள் முடிவதில்லை. உங்கள் பயணமும் முடிய கூடாதென்று வலங்கைமான்-ல் இருந்து வாழ்த்தும் நெஞ்சம். தொடரட்டும் உங்கள் பயணம்
பார்ப்பதற்கு எளிய வலைப்பக்கம்
ஆனால்,
நீங்கள் பிரமாண்டம் சார்...
வாழ்த்துக்கள்
இன்னும் உயரம் செல்வீர்கள்
- தஞ்சையில் இருந்து .. கவிநவன்...
Antha nigalvukku vilakkamaga photokkal . very good.
pathilai vaarthaigalinri padangalaga dhoguthadhu arumai
அருமை
அட! இப்பதான் பார்த்தேன். எல்லா ஊரையும் வெட்டிக்காடா பார்த்தேன். நன்றி ரவி. :-)
மனித்ல கலவையான நெகிழ்ச்சியான உணர்வலைகளை வந்து அடித்துக்கொண்டேயிருக்கிறது.
Good start ..:)
வாவ் பொதுவா வெளிநாட்டுல் இருக்கற பல பேர்கிட்ட சொல்லி இருக்கேன்...அந்த அனுபவங்களை பதிந்து வைங்க.. அது பல பேருக்கு உந்துதலா இருக்கும்ன்னு பட் வெளிநாட்டுக்கு போனதும் இந்தியாவுல இருக்கறவனை நொட்டை சொல் சொல்லுவதற்கே நேரம் சரியாக போய் விடுகின்றது.
பட் அருமையா ஆரம்பிச்சி இருக்கிங்க... நானும் நீங்களும் பெங்களுர்ல ஒரு அரேபியன் ஓட்டலில் சாப்பிடும் போது உங்களை பார்த்து நான் நினைத்த விஷயம்... இப்படி ஒரு கிராமத்து பின்புலத்தில் இருந்து வந்து இத்தனை ஊர் சுற்றி இருக்காரே... இவர்கிட்ட எவ்வளவு அனுபவம் இருக்கும்... இந்த அனுபவம் நமக்கு இருந்த எழுதி அசத்திடலாம் என்று யோசித்து இருக்கின்றேன்... ஆனால் நீங்கள் அசத்த ஆரம்பித்து விட்டீர்கள்.. அசத்துங்கள்...உங்க அப்பா எங்க அப்பா லோலத்தான்... ஆனா அந்த வாத்தியாரும் உங்க அத்தையும் தான் முக்கியமானவர்கள்..
கலக்கல் தலைவரே
திரு. ரவி,
நல்ல (வாழ்க்கை) பயணம், நல்ல (பகிர்வு) தொடக்கம். தொடர்க.
வலைப்பூ முகப்பில் இருக்கும் சிலை எங்குள்ள ஒன்று?
ஒரு சில போட்டோக்கள்ல பார்க்க அசப்புல என்னுடைய பள்ளி கால நண்பர் திரு. சசிகுமார் போல இருந்தீர்கள்.
அது சரி, பார்க்க இவ்வளவு பணிவாக, எளியவராக தெரிகிறீர்களே, எப்படி சமாளிக்கிறீர்கள்? விட்டால், முகத்தில் திமிர் தெரியாவிட்டால் ஏறி மிதிக்க காத்திருக்கும் இந்த உலகில்.
எனக்கென்னவோ, கண்களில் கனவினை தேக்கிய, வேறேதும் தெரியாத ஓர் எளிய வெள்ளந்தி கிராமத்தான் தான் தெரிகிறார் அந்த 'Disney World - Orlando - 2000' புகைப்படத்தில்.
http://www.concurrentmusingsofahumanbeing.blogspot.com/
neenga nalla sirukathai aasiriyara varalaam. try pannunga
IRA.SHADAGOPAN
Post a Comment