வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, September 27, 2010

டில்லி விமான முனையம்-3

சென்ற வாரம் அலுவலக வேலை காரணமாக டில்லி சென்றிருந்தேன். கல்மாடி & கோ அடிக்கும் காமன்வெல்த் விளையாட்டு போட்டி கூத்துகளைப் பார்த்து நொந்து நூடுல்ஸ் ஆகி போகிவிட்டேன். சரி... 70,000 ஆயிரம் கோடி பணத்தை ஏப்பம் விட்டு இந்தியாவின் மானத்தை உலக அரங்கில் கப்பலேற்றியவற்களைப் பற்றி எல்லோருக்கும் தெரியும். Let’s look at one positive side… இந்த காமன்வெல்த் விளையாட்டு போட்டியினால் கிடைத்திருக்கும் ஒரு மிகப்பெரிய நன்மை. டில்லியின் புதிய விமான முனையம்-3!

- 19-ம் தேதி இரவு டில்லி விமான முனையம் 3-ல் இறங்கி அதன் பிரமாண்டம், தரம், சுத்தம் ஆகியவற்றைப் பார்த்தவுடன் நான் சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்று உணர்தேன்.

- இரண்டு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட உலகத்தின் மூன்றாவது பெரிய விமான முனையம் (1-துபாய், 2-பீஜிங்). மிகக் குறைந்த காலத்தில் இந்த முனையம் கட்டி முடிக்கப்பட்டதற்கு முக்கிய காரணம் தனியார் நிறுவனமான GMAR தலைமையில் இயங்கும் கூட்டமைப்பு (Consortium).

- சிங்கப்பூர் சாங்கி விமான முனையம் 3-ல் இருப்பது போன்ற மிக உயரமான கூரையுடனான விசாலமான அரங்கத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட செக்கின் கவுண்டர்கள் உள்ளன.

- பணியாளர்கள் அடிக்கடி தரையை சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். ஒவ்வொரு டாய்லெட்டிலும் உடனடியாக சுத்தம் செய்வதற்கு ஒரு பணியாளர் உள்ளார்.

- குடிநுழைவு சோதனைக்கு நிறைய கவுண்டர்கள் இருக்கின்றன. அதிக நேரம் காக்கவில்லை.

- பாதுகாப்பு பரிசோதனைக்கு கொஞ்ச நேரம் (15 நிமிடங்கள்) காக்க வைத்து விட்டார்கள். சிங்கப்பூர் விமான நிலையத்தில் மட்டும் பாதுகாப்பு பரிசோதனை விமான கேட்டில் செய்வார்கள். அதனால சிங்கப்பூர் விமான முனையங்களில் உள்ளே செல்லும் வாயில்களில் கூட்டத்தை பார்க்க முடியாது.

- பாதுகாப்பு பரிசோதனை முடிந்து உள்ளே சென்றவுடன் விசாலமான அரங்கத்தில் பயணிகள் அமர்ந்து கொள்ள நல்ல இருக்கைகள், கடைகள், உணவு விடுதிகள் ஏராளம். நான்கு நாட்களாக வட இந்திய உணவுகளை சாப்பிட்டு காய்ந்து போயிருந்த நான் இட்லி.காம்-ல் அருமையான மாசால் தோசை சாப்பிட்டேன்:)

- தாகசாந்திக்காக Delhi Daredevils என்ற அட்டகாசமான பார் உள்ளது.

- 78 ஏரோ பிரிட்ச்கள் கொண்ட பெரிய முனையம் என்பதால் நல்ல நடை பயிற்சி செய்துதான் விமானத்தின் கேட்டை சென்றடைய வேண்டும்.

டில்லி விமான முனையம்-3 If there is a will, There is a way” என்பதற்கான எடுத்துக்காட்டு!

டில்லி காமன்வெல்த் போட்டி If there is a will to loot, there are many ways” என்பதற்கான எடுத்துக்காட்டு!

டில்லி விமான முனையம்-3 படங்கள்















Sunday, September 12, 2010

*13*: நன்றி


நட்சத்திர வாரத்தை என் தந்தையார் பற்றிய இடுகையுடன் ஆரம்பித்து தந்தை பெரியார் பற்றிய இடுகையுடன் நிறைவு செய்திருக்கிறேன்.

நட்சத்திர வாரத்தில் தொடர்ந்து எழுதும் போது ஒரே தளத்தில் எழுதினால் படிப்பவர்களுக்கு போர் அடிக்க ஆரம்பித்துவிடும் என்ற எண்ணத்தில் வெவ்வேறு subject-ல் எழுத வேண்டும் என்று தீர்மானித்தேன். இதனை ஓரளவு நிறைவேற்றியிருக்கிறேன் என்று நம்புகிறேன். நான் சனிக்கிழமை எழுத நினைத்திருந்த பாலி (இந்தோனேசியா) பற்றிய கட்டுரையை நேரப் பற்றாக்குறையால் எழுத முடியவில்லை.

நான் நிறைய படித்த இலக்கியவாதி கிடையாது. எனது எண்ணங்களையும், அனுபவங்களையும் பதிவு செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண மனிதன். எனவே, எனது எழுத்தில் குறைகள் இருக்கலாம்.

நட்சத்திர வார பதிவுகளைப் படித்த, கருத்துகள் தெரிவித்து ஊக்கப்படுத்திய நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள். நீன்ட வார இறுதி விடுமுறை மற்றும் பதிவுகளை தயார் செய்தல் போன்ற காரணத்தால் பின்னூட்டங்களுக்கு உடனே பதில் அளிக்க இயலவில்லை.

என் பதிவுகளை பொறுமையாகப் படித்து எழுத்துப் பிழைகளை திருத்தி கொடுத்த என் மனைவி கீதாவிற்கு நன்றி.

இந்த வார நட்சத்திரமாக என்னை தேர்ந்தெடுத்த தமிழ்மணத்திற்கு மீண்டும் என் நன்றிகள்!

நன்றி ! வணக்கம்!

[படம் உதவி: http://kamna.webdunia.com/]

                 *                 *               *

Saturday, September 11, 2010

*11*: உழவன்

கல்லூரியில் படிக்கும் போது (1987) நான் எழுதிய முதல் கவிதை!

                                                                        உழவன்


கரிய இருட்டின்
கொடுங்கோலாட்சியை ஒழிக்க
கதிரவன் புறப்படும் முன்பே
கலப்பையை
தோளில் சுமந்து சென்று...

கரிய இருளிடம்
போராடி வெற்றிபெற்ற 
இருமாப்பால்
கதிரவன் பவனிவரும்
பகல்பொழுது முழுவதும்
நெற்றி வியர்வை
நிலத்தில் விழ உழைத்து...

கரிய இருளிடம்
இரண்டாம் கட்டப் போரில்
தோல்வியைத் தழுவிய
கதிரவன் ஓடி மறைந்த பின்
வீடு திரும்பும் உழைப்பாளி!

                     *                   *               *

Friday, September 10, 2010

*10*: முதல் மரியாதை


நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.

நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R,  ரஜினி படங்கள்தான்.

1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதைபடத்திற்குச் சென்றோம்.


படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை. ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான். அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம். 

படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான்  வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!

அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.

- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா

-  சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சிஎன்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....


- உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.


- ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.

- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்

- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம் பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.


இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............

முதல் மரியாதை ஒரு அருமையான கிராமத்து காவியம்!

                 *           *         *

*9*: கர்நாடக சங்கீதம்

முஸ்லிம் சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் இனிய நோன்புப் பெருநாள் நல்வாழ்த்துகள்!

கர்நாடக சங்கீதம்

நான் சிறுவனாக இருந்தபோது பார்த்து, கேட்டு வளர்ந்தது தப்பாட்டம், கரகாட்டம், அரிச்சந்திரா, ராமர், வள்ளித்திருமணம் போன்ற தெருக்கூத்து நாடகங்கள். எனவே 23 வயது வரை கர்நாடக சங்கீதம் என்றால் விலை என்ன என்றுதான் கேட்பேன். அப்படி ஒரு ஞானம்! ஆனால்... இன்று கர்நாடக சங்கீத இசை கேட்பது என்பது என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு மற்றும் Relaxation! இதற்கு காரணம்... என் நண்பன் ராஜாராம்! நானும் ராஜாராமும் 10-ம் வகுப்பு முதல் B.E வரை ஏழு வருடங்கள் ஒரே வகுப்பு... ஒரே பெஞ்ச்.

1992 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் C-DOT-ல் வேலை கிடைத்து பெங்களூர் சென்றேன். அப்போது ராஜாராம் I.I.Sc-ல் M.E முடித்துவிட்டு Ph.D பண்ணிக்கொண்டிருந்தான். எனது கல்லூரி நண்பர்கள் பலர் I.I.Sc பக்கத்தில் யஷ்வந்த்பூரிலுள்ள லாட்ஜ் ஒன்றில் மாத வாடகையில் தங்கியிருந்தார்கள். நானும் அங்கே சென்று அடைக்கலமானேன். நான் வேலை நேரம் போக பெரும்பாலும் ராஜாராமனுடன் அவன் ஹாஸ்டல் ரூமில்தான் இருப்பேன். அப்போது அவன் கர்நாடக இசை கேசட்டுகளைப் கேட்டுக்கொண்டிருப்பான். நான் அவன் ரூமுக்கு சென்றவுடன் செய்யும் முதல் காரியம் “டேய்.. என்னடா இந்த ஆளு/அம்மா ஆஆஆ.........ன்னு கத்திகிட்டு இருக்காங்க. இதப்போய் கேட்டுகிட்டுயிருக்கே.. I.I.Sc-க்கு  வந்து கெட்டு போயிட்டடாஎன்று சொல்லி டேப்ரிக்கார்டை ஆப் பண்ணி விட்டு சினிமா பாடல் கேசட்டை சுழல விடுவேன். ஆரம்பத்தில் இதைப்பற்றி ராஜாராம் ஒன்றும் கண்டு கொள்ள மாட்டான்.

ஒரு சில மாதங்கள் கழித்து “டேய்.. நானும் ஒன்ன மாதிரிதான் இரண்டு வருடங்களுக்கு முன்பிருந்தேன். என்னோட பிராமின் நண்பர்கள்தான் எனக்கு சொல்லிக்கொடுத்தார்கள். இத கொஞ்சம்.. கொஞ்சமா கேட்டு பாருடா. அப்ப இந்த இசையின் அருமை புரியும்என்றான்.

Ph.D செய்யும் அறிவாளி சொன்னா சரியாத்தான் இருக்குமென நினைத்து “சரிடா.. நானும் கேட்டுப்பார்க்கிறேன்என்றேன்.

அப்படி வா. வழிக்குஎன்று சொல்லிவிட்டு கர்நாடக இசை என்றால் என்ன? தியாகராஜ சுவாமிகள், முத்துசாமி தீட்சிதர், சியாம சாஸ்திரிகள் மூவரும் சங்கீத மும்மூர்த்திகள் மற்றும் கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி, காப்பி அப்படீன்னு ராகங்கள் என்று என்னமோ சொன்னான்.
“எனக்கு தெரிஞ்சதெல்லாம் குடிக்கிற காப்பிதாண்டா.. ஆனாலும்
கல்யாணி, சண்முகப்பிரியா, ரஞ்சனி, பைரவி அப்படீன்னு பிகர் பெயர்களா நீ சொல்றதனால.. ஒரு கிக் இருக்கும்போல இருக்குடா!

நான் சொன்னது ஒனக்கு ஒன்னும் புரிஞ்ரிக்காதுன்னு எனக்கு நல்லா தெரியும் என்று சொல்லிக்கொண்டே ஒரு கர்நாடக சங்கீத பாடலை போட்டு இத நல்லா கேளு என்றான். கேட்டேன். பிறகு அதே ராகத்திலுள்ள சில சினிமா பாடல்களை போட்டு இந்த பாடல்களையும் கேளு என்றான். கேட்டேன்.

“கர்நாடக சங்கீத பாடலுக்கும்.. இந்த சினிமா பாடல்களுக்கும் என்ன ஒற்றுமை?

எல்லா பாடல்களும் ஒரு சில சமயங்களில் கேட்கும்போது ஒரே மாதிரியா இருந்ததுடா

Good…இந்த பாடல்கள் எல்லாம் ஒரே ராகம்டா

சட்டென ஏதோவொரு ஈர்ப்பு ஏற்பட்டது. மேலும் ராஜா பல முக்கியமான ராகங்களின் கர்நாடக சங்கீத பாடல்கள் மற்றும் அந்த ராகத்திலுள்ள பாடல்கள் எல்லாவற்றையும் சொல்லி எழுதிக்கொடுத்து கேசட்டுகளை கொடுத்து கேட்க சொன்னான். அந்த சமயத்தில் என்னிடம் டேப் ரிக்கார்டர் கிடையாது. கர்நாடக இசையை கற்றுக்கொள்ளும் ஆர்வத்தில் உடனே ஒரு டேப் ரிக்கார்டர் வாங்கி ராஜாராம் கொடுத்த கேசட்டுகளையும், பாடல்களையும் கேட்க ஆரம்பித்தேன். கர்நாடக இசை கேட்க ஆரம்பித்தவுடன் எனக்கு முதலில் பிடித்தது.. பாடகர் பல விதங்களில் ஸ்வரங்கள் பாடுவது அதை வயலினிஸ்ட் பாலோ செய்வது. மிருதங்க வித்வானின் தனி ஆவர்த்தனம் ஆகியவை. இந்த ஆர்வத்தில் தொடர்ச்சியாக கேட்க ஆரம்பித்தேன்.

பையனுக்கு கர்நாடக சங்கீதத்தில் ஆர்வம் வந்துவிட்டதை தெரிந்துகொண்ட ராஜா அடுத்த தூண்டிலை எனக்கு வீசினான்.

இந்த வெள்ளிக்கிழமை சாயங்கலாம் மல்லேஸ்வரம் கோவிலில் கச்சேரி இருக்கு நான் போறேன்.. நீயும் வற்றியாடா?என்றான்.
சரியென்று சொல்லிவிட்டு கச்சேரிக்கு ராஜாராம் மற்றும் அவன் I.I.Sc நண்பர்களுடன் சென்றேன். ஹைதராபாத் சகோதரர்களின் கச்சேரி. அந்த கச்சேரி ஒரு மறக்க முடியாத அனுபவம். ஹைதராபாத் சகோதரர்களில் ராகாவாச்சாரிக்கு கனீரென்ற குரல்... சேஷாத்திரிக்கு சற்று மென்மையான குரல். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு  பாடுகிறார்கள்.... மிருதங்கத்தில் திருவாரூர் பக்தவச்சலம் அதகளமாக பின்னி பெடலெடுக்கிறார்... வயலின் வித்வானும் அருமையாக வாசிக்கிறார். கர்நாடக இசை, ராகங்கள் பற்றி எதுவும் தெரியாத நான் ஏதோ ஒரு சக்தியின் பிடியில் மெய்மறந்து கேட்டேன். கச்சேரி முடிந்ததும் ராஜாவிடம் சொன்னது.

ராஜா.. இனிமேல் எங்கு கச்சேரிக்கு போனாலும். என்னையும் கூட்டிக்கிட்டு போடா
அடுத்து சென்ற கச்சேரி கத்ரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் கச்சேரி. எனக்கு சிறு வயதிலிருந்து நாதஸ்வரம், மேளம் கேட்க மிகவும் பிடிக்கும். காரணம்.. எட-அன்னவாசல் கிராமத்திலிருக்கும் என் அம்மா வழி தாத்தா  வீட்டிற்கு பக்கத்தில் நாதஸ்வர, மேள வாத்திய கலைஞர்கள் வாழ்ந்தார்கள். சிறுவனாக தாத்தா வீட்டிற்கு செல்லும்போது அவர்கள் வாசிப்பை கேட்பேன். கதரியின் சாக்ஸபோன் இசை நாதஸ்வர இசை போன்று இருந்ததால் சட்டென்று சாக்ஸ் இசை மீது அளவில்லா ஆர்வம். சாக்ஸபோன் ஒரு வெஸ்டர்ன் இசைக்கருவி அதில் கர்நாடக சங்கீத சுரங்கள் வாசிப்பது மிகவும் கடினம். கதரி ஒரு ஜீனியஸ் என்றான் ராஜா. அன்றிலிருந்து இன்றுவரை கதிரி கோபால்நாத்தின் சாக்ஸபோன் இசைக்கு நான் அடிமை!
நானும் ராஜாராமும் மாதா மாதம் HMV சென்று M.S.சுப்புலட்சுமி, D.K.பட்டம்மாள், M.L.வசந்தகுமாரி, T.N.சேஷகோபாலன்,T.Vசங்கரநாரணன், ஹைதராபாத் சகோதரர்கள், மகாராஜபுரம் சந்தானம், கதிரி கோபால்நாத், மாண்டலின் சீனிவாசன், சுதா ரகுநாதன் etc., போன்ற சங்கீத வித்வான்களின் கேசட்டுகளை பட்டியல் போட்டு வாங்கினோம். அந்த பழக்கம் இன்று வரை தொடர்கிறது!

சென்னை டிசம்பர் மாத சங்கீத கச்சேரிகள் கேட்பதற்காக நானும் ராஜாராமனும் 1992-ஆம் ஆண்டு டிசம்பரில் சென்னை சென்று வரும் அளவிற்கு என் கர்நாடக சங்கீத ஆர்வம் வளர்ந்துவிட்டது. அதன்பிறகு, பாஸ்டன், சிங்கப்பூரில் கச்சேரிகள் நடக்கும்போது வாய்ப்பு கிடைக்கும்போது கச்சேரிகளுக்கு சென்று வந்துகொண்டிருக்கிறேன்.

நான் முறையாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொண்டவனல்ல. இன்றுவரை எனக்கு ராகங்களின் ஆரோகனம், ஆவரோகனம் பற்றி எதுவும் தெரியாது. ஹம்சத்வனி, ஆபேரி, சண்முகப்பிரியா, கரகரப்பிரியா, கல்யாணி, நாட்டை, மோகனம், சிவரஞ்சனி, சுப பந்துவரளி etc., போன்ற முக்கியமான ராகங்களின் பாடல்களை கேட்டு Pattern Recognition முறையில் ராகங்களை தெரிந்து கொள்ள முடியும். நான் கர்நாடக சங்கீதம் கேட்க கற்றுக்கொண்டது Pattern Recognition மற்றும் சினிமா பாடல்களின் மூலமாகத்தான்.
உதாரணமாக “சண்முகப்பிரியாராகத்தை எடுத்துக்கொள்வோம். இந்த ராகத்திலுள்ள “சரவணபவ என்னும் திருமந்திரம்என்ற இந்த பாடலைக் கேளுங்கள்.



இதே ““சண்முகப்பிரியாராகத்திலுள்ள சினிமாப் பாடல்கள்:

  1. மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன... (தில்லானா மோகனாம்பாள்)
  2. நினைந்து நினைந்து நெஞ்சம் உருகுதே... (பழைய பாடல் படம் தெரியவில்லை)
  3. தம்.. தம். தன தாளம் வரும் (புதிய வார்ப்புகள்)
  4. கண்ணுக்குள் நூறு நிலவா.. (வேதம் புதிது)
  5. தகிட.. தமிதி.. தந்தான.. (சலங்கை ஒலி)
இப்படி கேட்டு “கர்நாடக சங்கீதம்தெரியாதவர்கள் கற்றுக்கொள்ளலாம்.  திரைப்படப்பாடல்கள் மூலமாக கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள சிகாகோவிலுள்ள தமிழ் மொழி அறக்கட்டளையின் நிறுவனர் திரு. ராம்மோகன் அவர்களின் முயற்சியில் “திரைப்படப் பாடல்களில் மரபிசைஎன்ற தலைப்பில் 7 CD-கள் உள்ள தொகுப்பை வெளியிட்டிருக்கிறார்கள். அதன் விவரம் இங்கே.


எனக்கு கர்நாடக சங்கீதம் கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைக்கவில்லை. ஆனால்.. என் குழந்தைகள் இருவரும் தற்போது கர்நாடக சங்கீதம் கற்றுகொண்டு வருகிறார்கள். மகளின் பெயர் சுருதி!

வேலை டென்சன் மற்றும் மன அழுத்தங்கள் இருக்கும்போது நான் ரிலாக்ஸ் செய்யும் முறை இதுதான். ஒரு மணி நேரம் வியர்த்துக்கொட்ட மெது ஓட்டம் அல்லது ஜிம்மில் workout. பிறகு வெண்ணீரில் நல்ல குளியல். Bose- ஹோம் தியேட்டரில் ஒரு கர்நாடக இசைவட்டை சுழலவிட்டுவிட்டு கையில் பியர்! அடடா.... அந்த சுகத்தை அனுபவித்து பார்த்தால்தான் தெரியும்.

இசை என்பது நாம் கேட்டு மகிழ கடவுள் நமக்கு கொடுத்திருக்கும் ஒரு அற்புதமான கலை. காலில் சக்கரம் கட்டிக்கொண்டு அலையும் இந்த அவசர வாழ்க்கையில் உங்களுக்கு பிடித்த இசையை தினமும் கேட்டு மகிழுங்கள். குறிப்பாக படுக்க போகும் முன்பு கண்ட குப்பை சீரியல்களையும், செய்திகளையும் TV-யில் பார்க்காமல் அமைதியான இசையை கேட்டுக்கொண்டு ஒரு நல்ல புத்தகத்தை ஒரு அரை மணி நேரம் படியுங்கள். ஆனந்தமாக தூக்கம் வரும்!


எனக்கு கர்நாடக இசையை சொல்லிக்கொடுத்து அறிமுகப்படுத்திய என் நண்பன் ராஜாராமுக்கு என் நெஞ்சார்ந்த நன்றிகள்!


M.S.சுப்புலெட்சுமி அம்மாவின் தெய்வீக குரலில் இந்த கரகரப்பிரியா ராக பாடலைக் கேட்டு பாருங்கள்! You'll start liking carnatic music!


                   *           *           *

Thursday, September 09, 2010

*7*: வெட்டிக்காடு கதைகள்-2: கொட்டாப்புலி காளைகள்



கொட்டாப்புலி காளைகள் நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலிருந்த வண்டி மாடுகளின் செல்லப்பெயர். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததினால் அந்தக் காலத்தில் அவருடைய வியாபாரத்திற்கு மூலதனம் வண்டி மற்றும் காளை மாடுகள். அப்பா எப்போதும் நல்ல விலை கொடுத்து வண்டி மாடுகள் வாங்கி வைத்திருப்பார். எங்கள் வீட்டிலிருந்த மாடுகளிலேயே மறக்க முடியாத மாடுகள் “கொட்டாப்புலி காளைகள்தான்.

ஒருமுறை அப்பாவின் நண்பர் சைவராசு ஆலம்பிரியருக்கு மாடுகள் வாங்க சைவராசு சித்தப்பாவுடன் பட்டுக்கோட்டை சந்தைக்கு சென்ற அப்பா பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து ஒரே அளவில் இரண்டு கன்றுக்குட்டிகளை வாங்கி வந்திருந்தார். இதைப்பார்த்த பெரியம்மா 

“ஏன்யா.. இந்த கன்னுக்குட்டிகளை வாங்கிட்டு வந்திருக்கே?

“பாத்தவுடனே.. புடிச்சிருந்தது.. அதான் சைவராசு கிட்ட பணம் வாங்கி வாங்கிட்டேன்டி. பின்னாடி நல்ல வண்டி மாடுகளா.. வரும்டி

இருபது வயதிலிருந்து வண்டி மற்றும் மாடுகள் வைத்து வேலை செய்து வந்ததால் அப்பா எப்போதும் வண்டி மாடுகளை குழந்தைகள் போல்தான் பராமரிப்பார். அதனால் பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து வாங்கி வந்த காளை கன்னுக்குட்டிகளையும் குழந்தைகளைப்போல் வளர்க்க ஆரம்பித்தார். எங்கள் வீட்டில் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் செய்வது பெரியம்மா. வெளி வேலைகள் மற்றும் மாடுகளை பராமரிப்பது அம்மாவின் வேலை. எனவே அம்மாவும் கன்னுக்குட்டிகளை நன்றாக வளர்த்தார்.

எங்கள் வீட்டில் வேலை பார்த்த கைலாசத்தின் மகன் நாகநாதன் எட்டு வயதில் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து சேர்ந்தார். அப்பா மற்றும் அம்மாக்கள் நாகநாதனை பிள்ளை போல் பாவித்து வேலை வாங்குவார்கள். எங்களைப் பொருத்தவரையில் நாகநாதன் அண்ணன் மாதிரி. நாகநாதனும் கன்னுக்குட்டிகளுக்கு புல்,தீவனம் வைத்து நன்றாக வளர்த்தார்.

வைக்கோல், புல், கடலைச்செடி, பருத்திக்கொட்டை+புண்ணாக்கு+தவிடு கலந்த தீவனங்கள் என்ற அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரின் வளர்ப்பால் கன்னுகுட்டிகள் நன்றாக வளர்ந்து வந்தன. சிறுவர்களாகிய நாங்கள் அதன் பக்கத்தில் சென்றால் கோபத்துடன் முட்ட ஆரம்பித்துவிடும். எனவே நாங்கள் கன்னுக்குட்டிகளைப் பார்த்து பயப்படுவோம். ஒன்றாக வளர்ந்து வந்த இரண்டு கன்னுக்குட்டிகளுக்கும் ஒன்றன்மேல் ஒன்றிற்கு அளவு கடந்த பாசம். ஒன்றை ஒன்று நாக்கினால் நக்கிக்கொள்ளும். விளையாட்டாக முட்டிக்கொண்டு வயல்வெளிகளில் ஓடி விளையாடும். அம்மாவின் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் அம்மாவை நோக்கி கன்னுகுட்டிகள் ஓடி வந்துவிடும்.

கன்னுக்குட்டிகள் வளர.. வளர.. அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரைத்தவிர வேறு யாராவது கிட்டே சென்றாலும் முட்ட ஆரம்பித்து விட்டன. காளைகளின் கோபத்தைப் பார்த்து அம்மா காளைகளுக்கு வைத்த செல்லப்பெயர் “கொட்டாபுலிகள்”.

கன்னுகுட்டிகள் வளர்ந்து காளைகள் ஆனவுடன் அப்பாவும், நாகநாதனும் ஏரில் பூட்டி பழக்கினார்கள். இரண்டு காளைகளும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனே ஏரில் நன்றாக பழகி விட்டார்கள். காளைகள் நன்றாக வளர்ந்தவுடன் அப்பாவும், நாகநாதனும் வண்டியில் பூட்டி வண்டி பழக்கினார்கள். ஏர் உழ கற்றுக்கொண்டது போல வண்டி இழுக்கவும் காளைகள் உடனே பழகிவிட்டன.

இரண்டு மாடுகளில் ஒரு மாட்டின் கொம்பு உயரமாக, உடம்பு சற்று ஒல்லியாக இருக்கும். இதன் பெயர் “பெரிய கொட்டாப்புலிஇன்னொரு மாடு சற்று குண்டாக இருக்கும். இந்த மாட்டின் பெயர் “சின்ன கொட்டாப்புலி”. அப்பா, அம்மா மற்றும் நாகநாதன் ஆகிய மூவரைத் தவிர யாரவது கிட்டே நெருங்கினால் முட்ட வந்து துரத்த ஆரம்பித்து விடும். அவ்வளவு கோபக்கார காளைகள்.

“வக்காலி.. யாவாரி மாட்டை யாரலயும் புடிக்க முடியலடாஎன்று ஊரில் பேசிக்கொள்வார்கள்.

மாட்டு பொங்கலன்று அப்பா கொட்டாப்புலி காளைகளை நன்றாக அலங்கரித்து பிடித்துக்கொண்டு கம்பீரமாக வலம் வருவார். சில சமயங்களில் மாடுகளின் கொம்பில் நூரு ரூபாய் பணத்தை பையில் வைத்து கட்டி “வக்காலி... தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுதுக்கொள்ளுங்கடாஎன்பார். யாரும் பணத்தை எடுத்தது கிடையாது!

இரண்டு மாடுகளும் எவ்வளவு பாரம் வண்டியில் வைத்தாலும் அனாயசமாக இழுத்துச் செல்லும். மன்னார்குடியிலிருந்து ஆறு கிலோ மீட்டர்கள் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரின் வழி மாடுகளுக்கு அத்துப்படி. சில சமயங்களில் இரவு நேரத்தில் மன்னார்குடி தெப்ப குளத்தை தாண்டியவுடன் அப்பா வண்டியின் உள்ளே படுத்து தூங்கி விடுவார். மாடுகள் நேராக.. வீட்டிற்கு வந்துவிட்டு கத்தி அப்பாவை எழுப்பி விடும். அவ்வளவு புத்திசாலி காளைகள்!

இந்தக் கதையின் முக்கிய காதாபாத்திரம்... திண்டாயுதம் ஆலம்பிரியர். திண்டாயுதம் அண்ணன் பெரியப்பா கடுப்படி மருதமுத்து ஆலம்பிரியரின் ஒரே மகன். வெட்டிக்காட்டின் சண்டியர். நல்ல திடகாத்திரமான உடம்பு, முருக்கு மீசை, ஒரு கையில் அருவாள், மறு கையில் சுளுக்கி சகிதமாக அண்ணன் வயலிலுள்ள களத்திற்கு காவலுக்கு செல்வதைப் பார்த்தால் மலையூர் மம்பட்டியான் மாதிரி இருப்பார். சிறுவர்களாகிய எங்களுக்கெல்லாம் திண்டாயுதம் அண்ணன் ஒரு பெரிய ஹீரோ!

சண்டியர் என்பதால் ஊரில் எல்லோரையும் வாடா, போடா, வாடி, போடி என்றுதான் கூப்பிடுவார். “எலேய்... சித்தப்பா... ஏட்டி பெரியம்மாஎன்று மரியாதையுடன்தான் கூப்பிடுவார். சண்டியர் என்பதால் ஊரில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். எங்கள் கிராமத்தின் நாட்டாமை பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் சொன்னால் கொஞ்சம் கேட்பார். பெரியப்பாவின் நெருங்கிய நண்பர் கடுப்படிபெரியப்பாவிடம் வந்து “எலேய்... ராமா...நீ சொன்னாத்தாண்டா அவன் கேட்பான்..நீ அவன்கிட்ட சொல்லுடாஎன்பார்.

அண்ணன் கம்பு (சிலம்பம்) சுற்றுவதில் கில்லாடி. மாட்டுப்பொங்கல் அன்று அண்ணன் விளையாட்டுத் திடலில் இறங்கி கம்பு சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றார் என்றால் அண்ணனை எதிர்த்து சிலம்பம் விளையாட பயந்து யாரும் வர மாட்டார்கள். எனக்கு தெரிந்து அண்ணனுடன் சிலம்பம் விளையாண்டவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் மற்றும் தெக்கித்தெரு சின்னபுள்ள.

ஒருமுறை திண்டாயுதம் அண்ணன் மாட்டு வண்டியில் மரவள்ளி கிழங்கு விற்பதற்காக ராயபுரம் சென்றபோது அந்த ஊர் டீ கடையில் அண்ணனுக்கும் ஊர்க்காரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் கடையின் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து சுற்றி ஏழு பேரை அடித்து நொருக்கிவிட்டு ஓடி வந்த கதை சுற்று வட்டார கிராமங்களில் புகழ்பெற்ற சண்டியர் கதை. பிறகு பெரியப்பா சென்று பஞ்சாயத்து பேசி சமாதனம் செய்து வண்டியை ராயபுரத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்.

எந்த பொருப்பும் இல்லாமல் சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியேயடா... வீட்டில் அரிசி இல்லை.. பருதிக்கோட்டை மில்லில் போய் அரிசி அரைச்சிகிட்டு வாடாஎன்று ஒரு நாள் காலையில் திண்டாயுதம் அண்ணனை பெரியம்மா திட்டிவிட்டது. அந்த கோபத்தில் நேராக எங்கள் வீட்டிற்கு வந்தார். காலை மணி பத்து மணியிருக்கும். நான் அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தேன். பெரியம்மா வாசலில் நெல் காய வைத்துக்கொண்டிருந்தார்.

“ஏட்டீ... சின்னம்மா... ஒங்க வண்டியும், மாட்டையும் கொடுடீ. பருத்திக்கோட்டைக்கு போய் நெல் அரைச்சிக்கிட்டு வர்ரேன்

கொடுக்க முடியாது என்று சொன்னால் சண்டை போடுவானே என்று பெரியம்மா நினைத்துக்கொண்டுஎங்க மாட்டைதான்... யாரும் புடிக்க முடியாதுன்னு ஒனக்கு தெரியுமேடா... முடிஞ்சா ஓட்டிக்கிட்டு போடா” என்றார்.

“என்னடி... பெரிய கொட்டாப்புலி மாடு.. நான் ஓட்டிக்கிட்டு போறேன்டிஎன்று சொல்லிவிட்டு வீட்டின் எதிர்புறம் உள்ள வைக்கோல் போரில் கட்டியிருந்த கொட்டாப்புலி காளைகளை நோக்கி சென்றார். நல்ல காலை வெயில்... அண்ணன் சென்று காளைகளைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தவுடன் கொட்டாப்புலி காளைகள் ரெண்டும் அண்ணனை இழுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடி... தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன.

“ஏட்டீ... சின்னம்மா.. என்னமோ.. பெரிய..கொட்டாபுலி மாடு.. புடிக்க முடியாதுன்ன... யாருகிட்டடி... திண்டாயுதம் ஆலம்பிரியன்கிட்டவா?

தாகம் தீர தண்ணீர் குடித்து முடித்த கொட்டாப்புலி காளைகள் “யாருடா இது... நம்மள புடிச்சிக்ருக்கிற புது ஆளுஎன்று பார்த்தன. கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்ன கொட்டாப்புலி அப்படியே இரண்டு அடிகள் பின் சென்று சீறி வந்து அண்ணனை முட்டி பக்கத்திலிருந்த கள்ளி செடிகள் நிறைந்த வேலியில் வீசியது. சற்றும் இதை எதிர்பார்க்காத அண்ணன் சுதாரித்து எழுந்து “ஏய்.. ஏய்என்று அதட்டிக்கொண்டு எழுந்து நின்றார். இதைப்பார்த்த பெரியம்மா “அய்யோ...அய்யோஎன்று கத்த ஆரம்பித்துவிட்டார்.

“ஏய்..சின்னம்மா... ஏன்டீ இப்ப கத்துற?என்று சொல்லிக்கொண்டு ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தார். இந்த முறை பெரிய கொட்டாப்புலி சீறிக்கொண்டு வந்து முட்டி மறுபடியும் அண்ணனை வேலியில் தள்ளியது.

“பாவி... பயலே... எந்திரிச்சு வீட்டுக்குள்ள ஓடிப்போடா...அய்யோ கொல்லப்போகுதே... கொல்லப்போகுதே.. எல்லாரும் ஓடி வாங்கலேன்என்று கத்திய பெரியம்மாவின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஓடி வந்து சத்தம் போடுகிறார்கள்.

அண்ணன் சண்டியர் என்பதால் தன்னுடைய வீரம் பழிக்கப்படும் என்ற காரணத்தால் எழுந்து ஓடாமல் அப்படியே வேலியை பிடித்தபடியே நிற்கிறார். அந்த சமயத்தில் வடக்கே நல்ல தண்ணீர் கிணத்தில் தண்ணீர் தூக்கிக்கொண்டு முச்சந்திக்கு வந்தார் அம்மா. அம்மாவைப் பார்த்த பெண்மனி ஒருவர் “ஏஏஏ... குன்டு... கொட்டாப்புலி மாடுகள் திண்டாயுதத்தை கொல்ல போவுதுடீ....என்று சத்தம் போட்டார்.

தெருவில் நிற்கும் கொட்டாப்புலி மாடுகள்.. வேலியில் கிடக்கும் திண்டாயுதம் அண்ணன்... இதைப் தூரத்திலிருந்து பார்த்தவுடன் நிலைமையை சற்றென்று புரிந்துகொண்ட அம்மா “ஏஏஏ... கொட்டாபுலிகளா... இங்க வாங்கடா....என்று சத்தம் போட்டார்.

அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தன கொட்டாப்புலி காளைகள். தூரத்தில் அம்மாவைப் பார்த்தவுடன்.. காளைகள் ரெண்டும் அம்மாவை நோக்கி ஓடின. வலது கையில் வைத்திருந்த தண்ணீர் குடத்தை கீழே வைத்துவிட்டு கையால் இரண்டும் மாடுகளையும் தடவிக் கொடுத்தார். காளைகள் இரண்டும் அம்மாவின் இரு பக்கங்களிலும் நடந்து வர இடுப்பில் ஒரு குடத்துடனும், கையில் ஒரு குடத்துடனும் அம்மா ஜான்சிரானி மாதிரி நடந்து வந்த அந்த காட்சி இன்றும் என் மனக்கண்ணில் நிற்கிறது.

திண்டாயுதம் அண்ணன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விட்டார். அதற்கு பிறகு அண்ணன் மற்ற பெண்மணிகளையெல்லாம் வழக்கம்போல் “வாடி... போடி.என்றுதான் கூப்பிட்டு வந்தார். அம்மாவை மட்டும் அவர் அப்படி கூப்பிட மாட்டார்!

                  *           *         *
பி.கு:
வெட்டிக்காடு கதைகளின் background மற்றும் முதல் கதை- அய்யனார் சாமி:
http://vssravi.blogspot.com/2010/08/1.html



Wednesday, September 08, 2010

*6*: ஈழம்

ஈழத்தில் வாழும் எம் மக்களின் நிலை கண்டு கண்ணீர் வடிக்கும் சாமண்யன் நான். சுயநல, நயவஞ்சக தமிழக அரசியல்வாதிகளையும், முதுகெலும்பில்லா மத்திய அரசையும் பார்த்து கோபப்படும் சாமண்யன் நான். என் சகோதர, சகோதரிகளின் நிலை கண்டு ஒரு சாதாரண மனிதனாகிய என் மனதின் வலி, இயலாமை, தார்மீக கோபம் போன்றவற்றை என் மனைவி ”எதிர்காலம்”ன்ற கவிதையில் அவருடைய பார்வையில் சொல்லியிருக்கிறார்
.


எதிர்காலம்:
http://geetharachan.blogspot.com/2010/08/blog-post_19.html




*5*: புத்தகம் - The Monk Who Sold His Ferrari


சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னுள் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்திய புத்தகம் Robin Sharma எழுதிய “The monk who sold his Ferrari” என்ற புத்தகம். இந்த புத்தகம் பற்றிய எனது பார்வை.

கடந்த ஜூன் மாதத்தில் Reliance Communication-ல் ஒரு பிஸினஸ் மீட்டிங் முடித்து விட்டு சிங்கபூருக்கு திரும்பி வரும் போது மும்பை விமான நிலையத்திலுள்ள புத்தக கடையொன்றில் புத்தங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட “The monk who sold his Ferrari” புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகம் பற்றி எந்த பேக்கிரவுண்ட்டும் தெரியாமல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு திருப்பத்துடன் ஆரம்பிக்கும் கதை போல் ஆரம்பம். ஆனால்...இது நாவல் அல்ல.... ஒரு சுய முன்னேற்ற(Self Improvement) புத்தகம். புத்தகத்தின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு சில நாட்களில் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் பல சுய முன்னேற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்திற்கும் மற்ற புத்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பெரும்பாலான சுய முன்னேற்ற புத்தகங்கள் கருத்து கந்தசாமிகளாக இப்படி செய், அப்படி இரு என்ற பெரிய பட்டியல்களை கொடுத்து படிக்கும்போது படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் ஒரு டிரை பீலிங்கை ஏற்படுத்தும். ராபின் சர்மா இந்த புத்தகத்தில் ஒரு கதை வழியாக சுய முன்னேற்ற தத்துவங்களைச் சொல்கிறார். சந்தோசத்துடனும், குறிக்கோளுடன் வாழ ஏழு வழிகளைச் சொல்லி அந்த ஏழு வழிகளையும் சுலபமாக மனதில் வைத்துக்கொள்ள ஒரு குட்டிக்கதை... அந்த கதையில் வரும் கதாபாத்திரம் மற்றும் பொருள்கள் மூலமாக சொல்லிக் கொடுகிறார். மேலும் இந்த ஏழு வழிமுறைகள் இமயமலையில் வாழும் யோகிகள் போதித்த கோட்பாடுகள் என்று சொல்கிறார். இதனால்தான் இந்த புத்தகம் மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுகிறது.

ஜூலியன் மேண்டில்(Julian Mantle) என்ற 53 வயது புகழ்பெற்ற வக்கீல் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மயங்கி விழுகிறார். ஜூலியன் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) சட்டம் படித்து, பல முக்கியமான கேஸ்களில் வாதிட்டு வெற்றி வாகை சூடி வரும் அமெரிக்க வக்கீல். அவர் வாதிடும் கேஸ்கள் எல்லாம் அமெரிக்க செய்தித்தாள்களில் முதல் பக்க செய்தி. பல மில்லியன் டாலர்கள் சொத்துக்கு அதிபதி, பெரிய வீடு, Ferrari கார், புகழ்பெற்ற மாடல்களுடன் பார்களில் குடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கியூபா சிகார், விலையுயர்ந்த ரெஸ்டாரண்ட்களில் டின்னர் என்று கும்மாளமாக வாழ்ந்துகொண்டிருந்த ஜூலியன்தான் அன்று கோர்ட்டில் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி குணமடைந்தபின்பு அவர் அலுவலகத்திற்கோ, கோர்ட்டுக்கோ திரும்பி வரவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து எல்லோரும் தெரிந்துகொண்டது ஜூலியன் அவருடைய வீடு, பெராரி கார், சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு தனியாக இந்தியா சென்றுவிட்டார் என்பதுதான். அதற்குப்பிறகு யாருக்கும் ஜூலியனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை!

மூன்று வருடங்கள் கழித்து ஜுலியன் தனது ஜூனியரான ஜான்(John)-யை பார்க்க வருகிறார். 53 வயதில் பெரிய தொப்பையுடன் 60 வயது ஆள் போல் தோற்றமளித்த ஜூலியன் இப்போது டிரிம்மாக 40 வயது ஆடவர் போல் தன் அலுவலகத்தில் நுழைந்தபோது ஜூலியனை அடையாளம் காண முடியாமல் தடுமாறுகிறார் ஜான்.

தனது ஜூனியரிடம் தன் மூன்று வருட கதையையும், இந்த மூன்று வருடத்தில் தன்னுள் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தையும் சொல்கிறார். தனது சொத்துக்களை விற்றவுடன் மன அமைதி மற்றும் ஆன்மீகத்தை தேடி இந்தியாவிற்கு செல்கிறார். இந்தியாவில் காசி மற்றும் பல புன்னிய தலங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் சுற்றிவிட்டு இமயமலையில் வாழும் யோகிகளை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இமயமலைக்கு செல்கிறார். தனியாக ஒரு வாரத்திற்கும் மேல் இமயமலையில் ஏறி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்போது ராமன் என்ற யோகியை சந்திக்கிறார். ஜூலியனின் கதையைக் கேட்ட யோகி ராமன் ஜூலியனை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு தான் வாழும் யோகிகள் கிராமத்திற்கு அழைத்துச்சென்று அவருக்கு உபதேசம் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு சிறிய கதை மூலம் சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் கதை:

--- அழகிய மலர்கள் மற்றும் ரோஜாக்கள் நிறைந்த நறுமணம் வீசும் தோட்டம் ஒன்றிருக்கிறது. அந்த தோட்டதின் மத்தியில் ஆறு மாடிகள் உயரமுள்ள சிவப்பு நிறத்திலாளான ஒரு பெரிய கலங்கரை விளக்கம் (Light house) இருக்கிறது. திடீரென்று அந்த கலங்கரை விளக்கத்தின் கதவைத் திறந்துகொண்டு ஒன்பதடி உயரம், 900 பவுண்ட் எடையுள்ள ஒரு பெரிய ஜப்பானிஸ் சுமோ பயில்வான் வெளியே வருகிறார். அவர் இடுப்பில் ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான மெல்லிய கம்பியில் கட்டிய சிறிய சுமோ ஆடையை மட்டும் அணிந்திருக்கிறார். தோட்டதில் நடந்து கொண்டிருந்த சுமோ பயில்வான் பல வருடங்களுக்கு முன்பு யாரோ விட்டுச்சென்ற தங்க கடிகாரமொன்றை கண்டெடுக்கிறார். அந்த தங்க கடிகாரத்தை கையிலெடுத்தவுடன் கீழே விழுந்து மயக்கமடைகிறார். சிறிது நேரம் கழித்து நினைவு திரும்பி எழுந்து பார்க்கிறார். அப்போது அந்த தோட்டத்தில் வைரங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு பாதையை பார்க்கிறார். அந்த பாதையின் வழியே சென்று முக்தியடைகிறார். ---

இந்த கதையில் என்ன இருக்கின்றது நமக்கு தோன்றும்? ஆனால் இந்த கதையின் வழியாகத்தான் யோகி ராமன் வாழ்வின் தத்துவங்களை ஜூலியனுக்கு பல விளக்கங்களுடன் சொல்லி விளக்குகிறார்.

பண்பு (Virtue)                                        குறியீடு (Symbol)

1.மனதை ஒருநிலைப்படுத்துதல்                     தோட்டம்
(Master Your Mind)                                                          (The Garden)

2. குறிக்கோளைக் நோக்கி வெற்றிநடை போடுதல்     கலங்கரை விளக்கம்
(Follow Your Purpose)                                                                   (The Lighthouse)

3. தொடர் முன்னேற்றம்                            சூமோ பயில்வான்
(Practice Kaizen)                                                                          (The Sumo Wrestler)
                              
4. சுயகட்டுப்பாடு                                   இளஞ்சிவப்பு கம்பி
(Live with Discipline)                                                                    (The Pink Wire Cable)

5. நேரத்திற்கு மதிப்பு கொடுத்தல்                     தங்க கடிகாரம்
(Respect Your Time)                                                                      (The Gold Stopwatch)

6. சேவை செய்தல்                                 ரோஜா மலர்கள்
(Selflessly Serve Others)                                                                (The Roses)

7. நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்தல்             வைரங்கள்
(Embrace the Present)                                                                  (Diamonds)  

நம்மில் பலரும் Career, பணம் இவற்றை மட்டும் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு ஓடி, ஒடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ஒடுகிறோம் என்று தெரியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் தற்போதைய நிகழ்காலத்தை ரசித்து, மகிழ, குழந்தைகளுடன் நேரம் செலவிட மறந்து விடுகிறோம். 

The past is history, future is mystery and the present is a gift and that’s why it is called Present” என்ற உண்மையை நம்மால் இந்த புத்தகத்தை படித்தவுடன் உணர முடியும்.       

நீங்களும் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்!
                     *          *          *

Tuesday, September 07, 2010

*4*: வேலியில போற ஓணான...

4G பதிவில் அகன்ற அலை வரிசை, தரவு, நிறலி.. இப்படின்னு படிச்சு ஒரு சிலர் மண்ட காய்ந்து போய் இருப்பீர்கள்:( கொஞ்சம் சிரித்து மகிழ என் கல்லூரி கால ராகிங் கதை:))) இது ஒரு மீள் பதிவு

வேலியில போற ஓணான..

கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.

ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்!

எங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.

ராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது? என்று சபை களை கட்டும்.

சீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க!

சீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்!

ராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு "ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்...." என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.

எல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்(?!) கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.

பனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி "நான் சூப்பர்மேன்!" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.

கிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். "டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, "நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது?" என்று அக்கறையாக் கேட்பானுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. "டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா" என்றார்கள்.

"
சரிங்க சார்..." பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.

5B
பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் "டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.

இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க! போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.

எங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்சுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.

ஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள்! கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.

பட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.

வச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.

சோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒன்னும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போனா சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.

வழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். "நானும் உங்களோட மெஸ்சுக்கு வர்றேன்டா" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.

"
மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா" என்றேன் நான்.

"
வெட்டிக்ஸ் வேண்டான்டா" என்றான் பட்டு.

புட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.

முட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.

அந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் "பேரு என்னடா?"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.

மூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன "மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டி முன் நின்று கிண்டி சல்யூட் அடித்து "வணக்கம் சார்!" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...

"
என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.

"
இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.

"
மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா? இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.

முனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.

பசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.

"
வேலியில போற ஓணான... எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு!
        *     *       *