வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, March 14, 2013

பொன்னியின் செல்வன் - 3

தஞ்சாவூர் பெரிய கோவிலை கட்டி வரலாற்றில் தன் பெயரை பதிவு செய்த ராஜராஜ சோழன் என்றழைக்கப்பட்ட மாவீரன் அருள்மொழி வர்மனின் பெயர்தான் பொன்னியின் செல்வன். நாவலின் தலைப்பு பொன்னியின் செல்வன் என்றாலும் கதையின் ஐந்து பாகங்களிலும் பயணித்து வரும் வந்தியத் தேவன்தான் கதையின் நாயகன். பலதரப்பட்ட தடைகளைத் தாண்டி ஆதித்த கரிகாலன் தன் தந்தை சுந்தர சோழருக்கு கொடுத்தனுப்பிய ஓலையை வந்தியத்தேவன்  நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாய் இருக்கும் சுந்தர சோழரை சந்தித்து கொடுக்கிறான். அச்சமயம் புலவர்கள் பலர் வந்து சுந்தர சோழர் மற்றும் சோழ மன்னர்களின் பெருமையை பாடல்களாக பாடுகின்றனர். அத்தகைய பாடல்களில் இந்த பாடல் மிகச் சிறந்த பாடல். சுந்தரசோழ சக்ரவர்த்தியின் பெருமையை இதை விட சிறப்பாக சொல்ல முடியுமோ?

****
புலவர் கையில் கொண்டு வந்திருந்த ஓலையைப் பிரித்துப் படிக்கலுற்றார்;

     "இந்திரன் ஏறக் கரி அளித்தார்
          பரிஏ ழளித்தார்
     செந்திரு மேனித் தினகரற்கு
          சிவனார் மணத்துப்
     பைந்துகி லேறப் பல்லக்களித்தார்,
          பழையாறை நகர்ச்
     சுந்தரச்சோழரை யாவரொப்பார்கள் இத்
          தொன்னிலத்தே!"
பாடலைப் புலவர் படித்து முடித்ததும் சபையிலிருந்த மற்ற புலவர்கள் எல்லாரும் சிரக்கம்ப கரக்கம்பம் செய்தும், 'ஆஹாகாரம்' செய்தும், "நன்று! நன்று!" என்று கூறியும் தங்கள் குதூகலத்தை வெளியிட்டார்கள்.
சுந்தரசோழர் முக மலர்ச்சியுடன், "இந்தப் பாடலின் பொருள் இன்னதென்பதை யாராவது விளக்கிச் சொல்ல முடியுமா?" என்றார்.
ஒரே சமயத்தில் பலர் எழுந்து நின்றார்கள். பிறகு நல்லன் சாத்தனாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் உட்கார்ந்தார்கள். நல்லன் சாத்தனார் பாடலுக்குப் பொருள் கூறினார்.
"ஒரு சமயம் தேவேந்திரனுக்கும் விருத்திராசுரனுக்கும் போர் நடந்தது. அதில் இந்திரனாருடைய ஐராவதம் இறந்து போய் விட்டது. அதற்கு இணையான வேறொரு யானை எங்கே கிடைக்கும் என்று இந்திரன் பார்த்துக் கொண்டிருந்தான். கடைசியில் பழையாறை நகரில் வாழ்ந்த சுந்தரசோழ சக்கரவர்த்தியிடம் அவன் வந்து 'ஐராவதத்துக்கு நிகரான ஒரு யானை வேண்டும்' என்று யாசித்தான். 'ஐராவதத்துக்கு நிகரான யானை என்னிடம் இல்லை. அதைவிடச் சிறந்த யானைகள் தான் இருக்கின்றன!" என்று கூறி, இந்திரனைத் தமது யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கே குன்றங்களைப் போல் நின்ற ஆயிரக்கணக்கான யானைகளைத் தேவேந்திரன் பார்த்துவிட்டு, 'எதைக் கேட்பது?' என்று தெரியாமல் திகைத்து நின்றான். அவனுடைய திகைப்பைக் கண்ட சுந்தர சோழர், தாமே ஒரு யானையைப் பொறுக்கி இந்திரனுக்கு அளித்தார். 'அந்த யானையை எப்படி அடக்கி ஆளப்போகிறோம்? நம் வஜ்ராயுதத்தினால் கூட முடியாதே!' என்ற பீதி இந்திரனுக்கு உண்டாகி விட்டதைக் கவனித்து வஜ்ராயுதத்தைவிட வலிமை வாய்ந்த ஓர் அங்குசத்தையும் அளித்தார்..."
"பின்னர் ஒரு காலத்தில், செங்கதிர் பரப்பி உலகுக்கெல்லாம் ஒளி தரும் சூரிய பகவானுக்கும் ராகு என்னும் அரக்கனுக்கும் பெரும் போர் மூண்டது. ராகு, தினகரனை விழுங்கப் பார்த்தான் முடியவில்லை! தினகரனுடைய ஒளி அவ்விதம் ராகுவைத் தகித்துவிட்டது. ஆனால் சூரியனுடைய தேரில் பூட்டிய குதிரைகள் ஏழும் ராகுவின் காலகோடி விஷத்தினால் தாக்கப்பட்டு இறந்தன. சூரியன் தன் பிரயாணத்தை எப்படித் தொடங்குவது என்று திகைத்து நிற்கையில், அவனுடைய திக்கற்ற நிலையைக் கண்ட சுந்தரசோழர் ஏழு புதிய குதிரைகளுடன் சூரிய பகவானை அணுகி, 'ரதத்தில் இந்த குதிரைகளைப் பூட்டிக்கொண்டு சென்று உலகத்தை உய்விக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். தன் குலத்தில் வந்த ஒரு சோழ சக்கரவர்த்தி இவ்விதம் சமயத்தில் செய்த உதவியைச் சூரியனும் மிக மெச்சினான்."
"பின்னர் சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும் கைலையங்கிரியில் திருமணம் நடந்தது. பெண் வீட்டார் கலியாணச் சீர்வரிசைகளுடன் வந்திருந்தார்கள். ஆனால் பல்லக்குக் கொண்டு வரத் தவறிவிட்டார்கள். ஊர்வலம் நடத்துவதற்கு எருது மாட்டைத் தவிர வேறு வாகனம் இல்லையே என்று கவலையுடன் பேசிக் கொண்டார்கள். இதை அறிந்த சுந்தர சோழ சக்கரவர்த்தி, உடனே, பழையாறை அரண்மனையிலிருந்து தமது முத்துப் பல்லக்கைக் கொண்டுவரச் சொன்னார். பயபக்தியுடன் சிவபெருமான் திருமணத்துக்குத் தம் காணிக்கையாக அப்பல்லக்கை அளித்தார். அப்படிப்பட்ட சுந்தர சோழ சக்கரவர்த்திக்கு உவமை சொல்லக் கூடியவர்கள் இந்த விரிந்து பரந்த, அலைகடல் சூழ்ந்த பெரிய உலகத்தில் வேறு யார் இருக்கிறார்கள்?..."
***
                                                                                                                                                                                                 - தொடரும்


*** <  > *** உள்ள பகுதிகள் “பொன்னியின் செல்வன்” புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்ட பத்திகள்

நன்றி: http://ta.wikisource.org/

4 comments:

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று!

இந்தப் பதிவுகள், 5 பாகங்களின் கதைச் சுருக்கமா?

அல்லது திறனாய்வுக் கட்டுரையா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்று!

இந்தப் பதிவுகள், 5 பாகங்களின் கதைச் சுருக்கமா?

அல்லது திறனாய்வுக் கட்டுரையா?

Ravichandran Somu said...

Nizamudeen - கதைச் சுருக்கம் கிடையாது. என் எண்ணங்களோடு மிக்க தாக்கம் ஏற்படுத்திய பகுதிகளை பகிர்ந்து கொள்ளும் ஒரு அனுபவத் தொடர்...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நன்றி. தொடர்க...