நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கறவை எருமை மாடுகள், பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் 10-லிருந்து 15 மாடுகள் இருக்கும். இந்த மாடுகளை மேய்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் முனியாண்டி என்ற பையன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தான். முனியன் என்னை விட மூன்று வயது பெரியவன். முனியனின் குடும்பம் கடலூர் மாவட்டலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக எங்கள் கிராமத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முனியனின் அப்பா தங்கராசுக்கும் அவரது நண்பர் கட்டாரிக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தங்கராசு தன் குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.
முனியனின் வேலைகள் எனக்கும் என் அண்ணனுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை எனக்கும் உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்கு தீவனங்கள் வைப்பது போன்ற வேலைகள் அண்ணனுக்கும் வழங்கப் பட்டது. தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மாடுகளை மேய்த்து வர வேண்டும். அது போல் சனி, ஞாயிறு கிழமைகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் மாடுகளை மேய்க்க வேண்டும். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலோரின் வேலையும் மாடுகளை மேய்ப்பதுதான். நானும் என் நண்பர்களும் மாடுகளை வயல் வெளிகளில் மேய விட்டு விட்டு ஆட்டம் போடுவோம். இப்படி நான்கைந்து மாதங்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் என் மாடு மேய்க்கும் பணி தொடர்ந்தது.
ஒரு நாள் சுப்பிரமணியன் சார் ஆதி திராவிட காலணியைச் சேர்ந்த என் நண்பன் கண்ணனுக்கு கூட்டல் கணக்கு பல முறை சொல்லிக் கொடுத்தும் தப்பாகவே விடை சொன்னான். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுப்பிரமணியன் சார் “எருமை மாடு மேய்க்கிறவனுக்கும்... மாட்டுக்கறி திங்கறவனுக்கும் படிப்பு வராது” என்று திட்டி மூங்கில் கம்பால் அடித்தார்.
எனக்கோ திக்கென்றது... நானும் தினமும் எருமை மாடுகளை மேய்க்கிறேன். எனவே எனக்கும் படிப்பு ஏறாதா? அன்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் ”எருமை மாடுகளை மேய்த்தால் படிப்பு ஏறாதுன்னு சுப்பிரமணியன் சார் சொன்னாரு. இனிமே நான் மாடு மேய்க்க மாட்டேன்” என்று பெரியம்மா மற்றும் அம்மாவிடம் சொன்னேன். பள்ளிக்கூடத்துல வாத்தியார் ஏதோ சொல்லியிருக்காருன்னு அதைப்பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால்.. தொடர்ந்து அடுத்த சில நாட்கள் நான் மாடு மேய்க்க மாட்டேன் என்று அழுது அடம் பிடித்தவுடன் விஷயம் அப்பாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.
“சுப்பிரமணியன் வாத்தியார் என்ன சொன்னாருன்னு நான் வாத்தியாருகிட்ட கேட்கிறேன்” என்று சொல்லி விட்டார். ஆனால் அடுத்த நாள் வயலில் வேலை பார்த்தவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அம்மா வரும் வழியிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்து விட்டார்.
“வாத்தியாரே... மாடு மேய்ச்சா படிப்பு வராதுன்னு சொன்னீங்கன்னு... இந்த ரவி பய மாடு மேய்க்க மாட்டேங்கிறான்... ஊரு புள்ளங்க எல்லாம் மாடு மேய்க்குது.. இவன் மட்டும் இப்படி சொல்றான்” என்று சுப்பிரமணியன் சாரிடம் சொன்னார். அம்மாவின் வருகையை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. சுப்பிரமணியன் சாருக்கு முதலில் ஒன்றும் புரிய வில்லை. பிறகு அம்மா மற்றும் என்னிடம் கேட்டு நிலைமையை புரிந்து கொண்டார்.
”கண்ணன் கணக்கு தப்பா போட்டான்னு கோபத்தில சொன்னேண்டா... அவன் மக்கு பய... நீ நல்லா படிக்கிறவன். உனக்கு படிப்பு நல்லா வரும்டா... அம்மா சொல்றபடி கேளு” என்று என்னிடம் கூறினார்.
சுப்பிரமணியன் சார் சொல்லி விட்டதால் மாடுகளை தினமும் மேய்க்கும் என் பணி தொடர்ந்தது. 17 வயது வரை மாடுகள் மேய்க்கும் வேலையை செவ்வனே செய்தேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான் மாடு மேய்க்கும் வேலையிலிருந்து விடுதலை!
மாடு மேய்ப்பது பற்றி சுப்பிரமணியன் சாரிடம் வந்து புகார் செய்த நாள் முதல் எனக்கும் அம்மாவிற்கும் ஆரம்பமாகின சண்டைகள். அப்பா நாங்கள் எல்லாம் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பினார். பெரியம்மா படிப்பிற்கு ஆதரவும் கிடையாது... எதிரியும் கிடையாது. ஆனால்... என் படிப்பின் முதல் எதிரி படிப்பறிவில்லா என் அம்மாதான்.
பரீட்சை சமயங்களில், வீட்டுப் பாடங்கள் அதிகம் இருக்கும் சமயங்களில் மாடுகளை மேய்க்க போகாமல் படிப்பில் மூழ்கியிருப்பேன். “ஊர் புள்ளைங்க எல்லாம் மாடு மேய்க்குது...வீட்டு வேலைங்க செய்யுது...இவன் மட்டும் பெரிய தொர வீட்டு புள்ள கலெக்டருக்கு படிக்கிற மாதிரி ஒரு வேலையும் செய்யாம இந்த புத்தகத்த வச்சிகிட்டு உக்காந்திருக்கான்” என்று பாரதிராஜா பட காந்திமதி மாதிரி அம்மா சத்தம் போட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நாட்களில் புத்தகத்தை பிடுங்கி விட்டேறிவார்.
எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் வரலாறு வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். அம்மா வழக்கம் போல் மாடு மேய்க்க போகவில்லை என்று உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். நான் கண்டு கொள்ளாமல் எழுதிக்கொண்டிருந்தேன். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அம்மா “நான் பாட்டுக்கு சொல்லிகிட்டேயிருக்கேன்... என்னடா பெரிய பொடலங்கா படிப்பு படிக்கிறே” என்று சொல்லிக்கொண்டே என் நோட்டு புத்தகத்தை பிடுங்கி கிழித்து விட்டார். கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களை திரும்ப புது நோட்டில் நான் மறுபடியும் எழுத நேரிட்டது.
-- பாடங்கள் தொடரும்...