வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Thursday, November 18, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3


ஆசிரியர்கள்தான் இந்த உலகத்திலேயே உயர்ந்த மனிதர்கள் மற்றும் பவர்புல் மனிதர்கள் அதனால் ஆசிரியர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறு வயதில் என் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியன் சார் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவணமாக கேட்பேன். கொடுக்கும் வீட்டு பாடங்களை உடனே செய்து விடுவேன். எனவே, நன்றாக படிக்கும் நல்ல பையன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பல மாதங்கள் ஓடி விட்ட தருணத்தில் கலாவதி அக்காவின் (பெரியப்பா மகள்) திருமணம் வந்தது. திருமணத்திற்காக பெரியப்பா மற்றும் எங்கள் வீட்டு வாசல்களை அடைத்து பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நாளன்று ஒன்பது மணி திருமணத்திற்கு எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நான் மட்டும் வழக்கம் போல் ரெடியாகி எட்டு மணிக்கு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிவிட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு எல்லோரும் டென்சன் ஆகிவிட்டார்கள்.

அப்பா என்னைப்பார்த்து “படுவா பய... பெரிய கலெக்டருக்கு படிக்கிற மாதிரி பள்ளிக்கூடத்து கிளம்பி நிக்கிறான்யா... இன்னிக்கு பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா... போயி பைய வைச்சிட்டு கல்யாணத்தை பார்றாஎன்றார்.

“பள்ளிக்கூடம் போவலண்ணா சார் அடிப்பாருஎன்றேன்

“நான் வாத்தியாருகிட்ட சொல்லிக்கிறேன்... பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் பள்ளிக்கூடத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பள்ளிக்கூடம் போவலைன்னா சுப்பிரமணியன் சார் அடிப்பாருன்னு எனக்கு பயம் வந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் கொல்லைபுறம் வழியாக புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு ஓடி வந்து விட்டேன்.

9.30 மணிக்கு பெல் அடித்து அசெம்பளி ஆரம்பமானது. ஒன்றாம் வகுப்பு வரிசையில் வழக்கம்போல் முதல் மாணவனாக நின்ற என்னைப் பார்த்து சுப்பிரமணியன் சாரும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். நாட்டாமை வீட்டு கல்யாணத்தில் ஊரே கூடியிருக்கும்போது நான் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதுதான்!

“ரவி.... நீ ஏண்டா அக்கா கல்யாணத்தை பார்க்காமல் பள்ளிக்கூடம் வந்தே?என்று கேட்டார் சுப்பிரமணியன் சார்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் நின்றேன்.

இங்கே வாடா... ரவிஎன்று முத்துகிருஷ்ணன் சார் கூப்பிட்டார்.

அவர் பக்கத்தில் சென்றேன். என் முதுகில் தட்டிக்கொடுத்து மாணவர்களைப் பார்த்து பேசினார். “பசங்களா... பாருங்கடா...அக்கா கல்யாணத்திற்கு போகாமல் பள்ளிக்கூடத்திற்க்கு வந்திருக்கான்... எல்லோரும் இவன் மாதிரி இருக்கனும்டா... என்ன காரணமாக இருந்தாலும் தினமும் பள்ளிக்கூடம் வரனும்

அசெம்பளி முடிந்தவுடன் முத்துகிருஷ்ணன் சார் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து பத்து காசுக்கு கடலை மிட்டாய் வாங்கி வரச்சொல்லி எனக்கு கொடுத்தார். சுப்பிரமணியன் சார் அடிப்பார் என்று பயந்துகொண்டு பள்ளிக்கூடம் வந்த நான் பாராட்டுகள் மற்றும் கடலை மிட்டாய்களை எதிர்பார்க்கவில்லை. ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் என் பழக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டது.

பணிரெண்டு ஆண்டுகள் பள்ளிக்கூட வாழ்க்கையில் இரண்டு முறைதான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு ஏழு நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அடுத்து... பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அரை நாள். அதிக காய்ச்சலுடன் வகுப்பில் படுத்திருந்த என்னை ஆசிரியர் வீட்டிற்கு போடா என்று கட்டாயப்படுத்தி பள்ளியைவிட்டு அனுப்பி வைத்தார். மற்ற பத்து ஆண்டுகள் அட்டெண்டஸ் 100%.

ஒரு சில நாட்கள் மழை, உடம்பு சரியில்லை மற்றும் வேறு காரணங்களால் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்று தோன்றும். ஆனால் அப்போது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சி மணக்கண்ணில் தோன்றும்... உடனே மனதில் உறுதி தானாக வந்து விடும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பல நாட்கள் எங்கள் ஊருக்கு வரும் ஒரே பேருந்தான 11 நம்பர் டவுன் பஸ் வராது. சில நாட்கள் பஸ் டிக்கெட்டிற்கு தேவையான 35 காசுகள் இருக்காது. அந்த சமயங்களில் வெட்டிக்காட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தே செல்வேன். எட்டாவது படிக்கும்போது எனக்கு சைக்கிள் சரியாக ஒட்டத்தெரியாது... சைக்கிளும் கிடையாது. அப்போது பள்ளியில் ஷிப்ட் முறை... எட்டாம் வகுப்பிற்கு மதிய ஷிப்ட் (1 மணி முதல் 5.30 மணி வரை). மதிய வேலையில் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்லும்போது (அப்போது கிராமவாசிகளான எங்களுக்கு செருப்பும் லக்சரி பொருள்தான்!) ஒரு சில நாட்களில் கடும் வெயிலால் ரோட்டிலிருக்கும் தார் உருகி காலில் ஒட்டிக்கொள்ளும். எங்காவது கிடைக்கும் நிழலில் நின்று தாரை துடைத்து விட்டு நடைப்பயணத்தை தொடருவேன். 

இந்த மன உறுதியை எனக்கு கொடுத்தது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான்!

                                            -- பாடங்கள் தொடரும்...
Post a Comment