வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, October 27, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 1


வெட்டிக்காடு என்ற சிறிய கிராமம்... இவ்வுலகின் முதன்மைத் தொழிலான உழவுத் தொழில் புரியும் உழவர்கள் வாழும் ஊர். அச்சிறிய கிராமத்தின் நடுவே ஓர் பள்ளிக்கூடம். ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி, வெட்டிக்காடு என்ற ஒரு பழைய பெயர்ப் பலகையை தாங்கி நின்றது.

பள்ளிக்கூடம் என்றவுடன் நகர வாசிகள் தாங்கள் பயின்ற ஆங்கிலப் பள்ளியையோ அல்லது நகரத்தில் தாங்கள் பார்த்த ஓர் பள்ளியையோ தங்கள் மணக்கண் முன் நிறுத்திப் பார்த்துக்கொள்ளக்கூடும். ஆனால்... அது அப்படிப்பட்ட ஓர் பள்ளிக்கூடம் அல்ல!

கல்வி என்பது நகரவாசிகள் மற்றும் பணக்காரர்கள் மட்டுமே அனுபவிக்கின்ற ஆற்றலாக இல்லாமல் எல்லோரும் கல்வியின் பயன்பெற வேண்டும் என்ற உயரிய குணம் கொண்ட பெருந்தலைவர் காமராஜரின் தயவால் அக்கிராமத்திற்கு கிடைக்கப்பெற்ற பள்ளிக்கூடம்தான் அது.

ஆசிரியர்கள் கரும்பலகையில் எழுதும் எழுத்துகள் மாணவர்களுக்கு நன்றாக தெரிய வேண்டும் என்பதற்காகவோ என்னவோ கதிரவனின் ஒளிக்கிரணங்கள் நன்றாக உள்ளே விழும்படி கூரை என்ற பெயரில் ஆங்காங்கே சில ஓடுகளை தாங்கி நின்ற ஒட்டுக் கட்டிடம். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்புகள் வரை அப்பள்ளியில் பயிலும் கிட்டத்தட்ட 75 மாணவர்களுக்கு இரண்டு ஆசிரியர்கள் போதும் என்று இரண்டு ஆசிரியர்களை அரசாங்கம் நியமித்திருந்தது.

தாங்கள் வயல் வேலைக்கு சென்றிருக்கும் நேரத்தில் தம் குழந்தைகளுக்கு மதிய வேளையில் உணவு கிடைக்கின்றதே என்ற காரணத்திற்காக தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தார்கள் அக்கிராமத்து பெற்றோர்கள். முதன் முதலில் என் பெற்றோர்கள் என்னை பள்ளிக்கு அனுப்பி வைக்கவில்லை... நான்தான் அழுது அடம்பிடித்து பள்ளிக்கு செல்ல ஆரம்பித்தேன்!

அப்போது எனக்கு வயது நான்கு... ஒரளவு விவரம் தெரிய ஆரம்பித்த பருவம். ஒரு மஞ்சள் கலர் பையில் சில புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள் மற்றும் சிலேட்டையும் வைத்துக்கொண்டு பள்ளிக்கு செல்லும் நான்காம் வகுப்பு மாணவனா என் அண்ணனைப் போல் நானும் பள்ளி செல்ல வேண்டும் என்ற ஆசை. ஒரு நாள் அப்பாவிடம் “நானும் அண்ணனோட பள்ளிக்கூடம் போறேம்பாஎன்றேன். என்னடா இவன் தானாக வந்து பள்ளிக்கூடம் போறேங்கிறான் என்று அவருக்கு ஆச்சரியம். “படுவா பயலே.. அடுத்த வருஷம் போலாம்.. போடாஎன்று கூறிவிட்டார். எனக்கோ மிகுந்த ஏமாற்றம்.

தினமும் அண்ணன் பள்ளிக்கு போகும்போது நானும் போவேன்என்று அழுது அடம் பிடிக்க ஆரம்பித்து விட்டேன். என் தொல்லையை பொறுக்க முடியாமல் அப்பாவின் நண்பரான மூன்றாம் வகுப்பு ஆசிரியர் சுப்பிரமணியன் சாரிடம் அனுமதி பெற்று வந்து எனக்கு பச்சைக்கொடி காட்டினார்.

மறுநாள் என் அண்ணனுடன் என்னையும் பெரியம்மா சட்டை போட்டு, தலை சீவி, பவுடர் போட்டு பள்ளிக்கு தயார் படுத்தினார். என் அண்ணனின் உடைந்த பழைய கல் சிலேட்டை ஓரு உர சாக்கு பையில் எடுத்துக்கொண்டு தயாரானேன். அட... நானும் பள்ளிக்கூடம் போக நானும் ரெடி!

இவ்வாறு தயாரன என்னை ஒர் எதிரியை பார்ப்பது போல் பார்த்தான் என் அண்ணன். அவனுக்கோ நான் அவனுடன் செல்வதால் அவனுடைய சுதந்திரம் பறி போகிறது எனற சுயநலம். அப்பா மற்றும் பெரியம்மாவின் கட்டளை என்பதால் என்னை வேண்டா வெறுப்பாக பள்ளிக்கு அழைத்துச் சென்றான் அண்ணன்.

பள்ளிக்கூடம் ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்பாக என் அண்ணனுடன் பள்ளியைச் சென்றடைந்தேன். பள்ளியில் சேராமல் புதிதாக சென்ற என்னைப் பார்த்து சீனியர் மாணவ, மாணவியினர் ஓர் ஆச்சரிய பார்வையை வீசினர். சிலர் என் அண்ணனிடம் என்னைப் பற்றி விசாரிக்க ஆரம்பித்தனர். அப்போது ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டு பள்ளியின் “முதல் மந்திரிபதவி வகித்த அண்ணன் இந்திரஜித் (பெரியப்பா மகன்)  தன் படை சூழ பள்ளியில் நுழைந்தார். அவருடைய நண்பர்களைப் பார்த்து “என் தம்பியை, யாரவது ஏதாவது பண்ணீங்க... தொலைச்சு புடுவேன்என்று மிரட்டும் தோனியில் கூறிவிட்டு என்னைப் பார்த்து “நீ போய் அந்த ஒன்னாவது பெஞ்சுல உட்காருடாஎன்று கூறிவிட்டு சென்று விட்டார்.

பள்ளியில் நுழைந்தவுடன் என்னை மிகவும் கவர்ந்தது அங்கு மாட்டியிருந்த பல தலைவர்களின் போட்டாக்கள்தான்! ஆசிரியர்கள் வர, மணி அடித்து பிரேயர் முடிந்தது. ஒன்றாம் வகுப்பில் புதிதாக உட்கார்ந்திருந்த என்னை சுலபமாக அடையாளம் கண்டு கொண்டார் சுப்பிரமணியன் சார்.

“யாருடா இது புது ஆள்... இங்கே வாடாஎன்று என்னைப் பார்த்து கூப்பிட்டார். எழுந்து சுப்பிரமணியன் சார் அருகில் சென்றேன்.

“யாவாரி பையன் தானே நீ

“ம்ம்ம்...

“உன் பேர் என்னடா?

“ரவிச்சந்திரன்

“அப்பாகிட்டே பள்ளிக்கூடம் போவேன்னு அடம் பிடிச்சியா?

“ம்ம்ம்..

“இனிமே தெனமும் ஒழுங்கா பள்ளிக்கூடம் வரனும் தெரியுதா... போய் உட்காருடா... யாவாரி மாதிரியே இருக்கான்யா!”

இதுதான் எனக்கும் சுப்பிரமணியன் சாருக்கும் இடையே நடந்த முதல் உரையாடல்.

                                                  -- பாடங்கள் தொடரும்...

9 comments:

ஜோதிஜி said...

என்ன தலைவரே என்னாச்சு? எழுத்து நடையெல்லாம் மாறி சும்மா ஜம்ன்னு டாப் கியர்ல தொடக்கத்தை ஏத்தியிருக்கீங்க....

இது போன்ற விசயங்கள் நிறைய எழுத வேண்டும். கண்ணன் சொன்னது போல தலைமுறைக்கு உதவும்.

ரொம்பவே ஆச்சரியப்படுத்திட்டீங்க ரவி.

அடுத்து எதிர்பார்ப்புடன்.

தேவன் மாயம் said...

நலம்தானே ! வாங்க ! பிரமாதம் !!

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்) said...

உங்களுக்கு 4 வயதில் நடந்தது எல்லாம் நினைவு உள்ளதா?

வாழ்துக்கள்

தமிழ் திரு said...

தொடர்ந்து எழுதுங்கள் ....கிராமத்திற்கு சென்று வர ஆவலாக உள்ளது .

RVS said...

நம்ம ஊரு கதை எப்பவுமே டாப்பு... ;-)


அண்ணே... அடிச்சு விளையாடுங்க... நல்ல தொடக்கம்.... கடைசியில "பாடங்கள் தொடரும்.." அப்படின்னு ஒரு கார்டு போட்டீங்க பாருங்க... அங்கதான் நீங்க நிக்கிறீங்க... ;-)

DHANS said...

nice, many wont know the life At school somewhere in a village.

very good post.

ரவிச்சந்திரன் said...

ஜோதிஜி--

//என்ன தலைவரே என்னாச்சு? எழுத்து நடையெல்லாம் மாறி சும்மா ஜம்ன்னு டாப் கியர்ல தொடக்கத்தை ஏத்தியிருக்கீங்க....//

ஒரு வேளை நானும் என்னையறியாமலே இலக்கியவாதியாயீட்டேனா:)))

//இது போன்ற விசயங்கள் நிறைய எழுத வேண்டும். கண்ணன் சொன்னது போல தலைமுறைக்கு உதவும்.//

இதனால்தான் வெட்டிக்காட்டு அனுபவங்களை எழுதுகிறேன்

நன்றி தலைவரே

ரவிச்சந்திரன் said...

தேவன் மாயம்-- நன்றி...மிக்க நலம்... நலம் இல்லேன்னா உங்ககிட்டதான் வரனும் டாக்டர் :)))

ராயல் ராஜ்(பெயரில் மட்டும்)-- நன்றி

தமிழ் திரு-- நன்றி. எழுதிடலாம்:)

RVS-- நன்றி தம்பி!

DHANS-- நன்றி

தஞ்சாவூரான் said...

அருமை. தொடருங்கள்!!