வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, November 03, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 2



சுப்பிரமணியன் சார் மூன்றாம் வகுப்புக்கு ஏதோ பாடம் நடத்தினார். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பதினோறு மணியளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் சுப்பிரமணியன் சாருக்கு டீக்கடையிலிருந்து “டீமற்றும் “மசால் வடைவாங்கி வந்து கொடுத்தான்.

“டேய் ரவி... புது பயலே... இங்கே வாடாஎன்றார் சுப்பிரமணியன் சார். எழுந்து சார் அருகில் சென்றேன். மசால் வடையில் கொஞ்சம் பிய்த்து என்னிடம் கொடுத்து “சாப்பிடுறா...என்றார். நான் மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்டேன்.

சிலேட்டு வச்சிருக்கியாடா...

“ம்ம்ம்

“சிலேட்டை எடுத்துகிட்டு வாடா

உரசாக்கு பையிலிருந்த சிலேட்டையும், சிலேட்டு குச்சியையும் எடுத்து வந்து சுப்பிரமணியன் சாரிடம் கொடுத்தேன்.

சார் சிலேட்டில் “அஎழுதி என் கையைப் பிடித்து “அஎன்று சொல்லிக்கொண்டே அதன் மேல எழுத வைத்தார். அந்த “அ”-வுடன் தொடங்கியது எனது படிப்பு....


மதிய இடைவேளை பெல் அடித்தவுடன் அண்ணன் வந்து என்னை கூப்பிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றான். மதிய உணவு சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டேன். பள்ளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே என் பள்ளிக்கூட முதல் நாள் முடிந்தது. பள்ளிக்கூடமும் எனக்கு பிடித்து போனது... சுப்பிரமணியன் சார் மசால் வடை கொடுப்பார் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம். எனவே தினமும் அண்ணனுடன் பள்ளி செல்ல ஆரம்பித்தேன். ஆனால்.. அதற்கு பிறகு சப்பிரமணியன் சாரிடமிருந்து மசால் வடை கிடைக்கவில்லை!

சுப்பிரமணியன் சார் ஒன்றாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் போது என்னையும் கவணிக்க சொல்வார். அவ்வப்போது சிலேட்டில் எழுத சொல்லி கொடுப்பார். அப்போது ஒன்றாம் வகுப்பில் படித்த அமரபாகம் ராதாயும் நானும் நண்பர்களானோம். இப்படியாக ஒரு மூன்று மாத காலம் பள்ளியில் சேராமலே பள்ளிக்கூடம் சென்று வந்தேன்.

கோடை விடுமுறை முடிந்து அடுத்த ஜூன் மாதத்தில் (1973 ஆம் ஆண்டு) ஒரு நள்ள நாளில் எனது நாலரை வயதில் புது சட்டை, பை, சிலேட்டு, புத்தகம், மிட்டாய்கள் சகிதமாக அப்பா, பெரியம்மாவுடன் வந்து பள்ளியில் என்னை முறைப்படி சுப்பிரமணியன் சார், தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் சேர்த்து விட்டார்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த பிறகு வீட்டிலிருந்து கால் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அண்ணனுடன் சேர்ந்து செல்லாமல் நானே தனியாக சென்று வர ஆரம்பித்தேன். பெரிய பையனா ஆகிட்டோம்ல...

ஒன்னாவதில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பில் படித்த எங்கள் தெருவில் என் வீட்டிற்கு அருகிலிருக்கும் உப்பிலி (எ) எழில்மன்னும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். எழிலமன்னன் பற்றி சற்று பார்ப்போம்... ஏனென்றால அடுத்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு என்னுடைய உயிர்த்தோழனாக விளங்கியன். நானும் எழிலமன்னனும் இரட்டையர்கள் என்று ஊரில் எல்லோரும் பேசுமளவுக்கு நெருங்கிய நண்பர்கள். உப்பிலிக்கு எழில்மன்னன் என்ற அழகிய பெயரை அவனுடைய கும்பகோனம் தாத்தா வைத்திருந்தார். ஆனால் எங்கள் கிராமத்து மனிதர்களிடன் அவன் பெயர் மாட்டி சின்னா பின்னமாகியது. “எழில்மன்னன்எனற பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவனை எல்லோரும் “எலிமன்னன்என்று கூட்பிட ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு நொந்துபோன எழில்மன்னனின் அம்மா அவனுக்கு கும்பகோனத்திலுள்ள “உப்பிலியப்பன்”  சாமி பெயரில் “உப்பிலிஎன்ற மற்றொரு பெயரை கூப்பிடுவதற்கு ஏதுவாக சூட்டினார். ஆனால் என் அம்மா இன்றும் ஊரில் எழிலமன்னனை “எலிமன்னன்என்றுதான் கூப்பிடுகிறார். காரணம்... “உப்பிலிஎன்பது சாமி பெயர் என்பதால் வாடா.. போடா என்று கூப்பிட முடியாதாம்!

உப்பிலியும் நானும் நண்பர்களான பிறகு ஏற்பட்ட மாற்றம்... நாங்களே குளத்திற்கு சென்று குளித்து பள்ளிக்கு தயாராகி செல்வது. தினமும் சரியாக காலை ஆறரை மணியளவில் எங்கள் வீட்டிற்கு உப்பிலி வருவான். இருவரும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே இருக்கும் பெரிய குளம் அல்லது வடக்கே இருக்கும் அய்யனார் கோவில் குளம் நோக்கி நடப்போம். போகிற வழியில் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து பல் விளக்கி கொண்டே, பேசிக்கொண்டே குளத்தையடைவோம். அந்த காலத்தில் கிராமவாசிகளான நாங்கள் டூத்பிரஷ், பேஸ்ட், சோப்பு போன்றவற்றை பார்த்தது கிடையாது. இதெல்லாம் லக்ஸரி அயிட்டங்கள்! ஆறாவது படித்த காலகட்டத்தில்தான் குளிப்பதற்கு சோப்பு கிடைத்தது. அதுவும் சோப்பு தீர்ந்து விட்டால் மறுபடியும் அப்பாவோ, பெரியம்மாவோ மன்னார்குடியிலிருந்து வாங்கி வரும் வரை நோ சோப் குளியல். டூத் பிரஷ்ஸில் பல் விளக்க ஆரம்பித்தது பதினொன்றாம் வகுப்பிற்கு வந்த பிறகுதான்!

காலைக்கடன்களை முடித்து, குளத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வருவதற்கு ஒரு எழரை மணியாகிவிடும். பெரியம்மா தினமும் கொடுக்கும் காலை சாப்பாடான தயிர் சாதம் (பழைய சோற்றை பிழிந்து அதில் தயிர் அல்லது மோர்) மற்றும் மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் வைத்து சாப்பிட்டு விட்டு அரை மணி நேரத்தில் ரெடியாகிவிடுவேன். இட்லி, தோசை போன்ற காலை சாப்பாடு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும்தான் கிடைக்கும். வருடத்தில் 95% நாட்களில் காலை சாப்பாடு தயிர் சாதம்தான்!

நானும், உப்பிலியும் சரியாக எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பிவிட்டோம் என்றால் மணி எட்டு என்பதை ஊர் மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாங்கள் இருவரும் எட்டு மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பியது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம் காலை 9.30 மணி... ஆனால் நானும் உப்பிலியும்தான் 8.15 மணி அளவில் முதன் முதலில் பள்ளிக்கு வந்து விடுவோம்.

ஊர் பிள்ளைங்க எல்லாம் ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடம் போவுது.. இவிங்க ரெண்டு பேரும் மட்டும்தான்யா எட்டு மணிக்கு போய் பள்ளிக்கூடம் காணம போகப்போகுதுன்னு காவல் காக்கிறாங்க... எட்டு மணிக்கு பள்ளிகூடத்துக்கு போயி என்னா பண்ணாறங்கன்னு தெரியலய்யா...என்று அப்பா அடிக்கடி சத்தம் போடுவார்.

“அவெங்க எட்டு மணிக்கு போனா என்ன... ஒன்பது மணிக்கு போனா ஒனக்கு என்னடா... நல்லா படிக்கிற பசங்கதாண்டா சீக்கிரம் பள்ளிக்கூடம் போவாங்க...என்று பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் எங்களுக்கு சப்போர்ட் பன்னுவார்.

ஆனால்... எனக்கும் உப்பிலிக்கும் பர்ஸ்டா பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு சந்தோசம். அவ்வளவுதான்...                                           
                                                    -- பாடங்கள் தொடரும்...

10 comments:

எம்.எம்.அப்துல்லா said...

புதுக்கோட்டை நகரத்தை ஒட்டி இருந்த கிராமத்தில்தான் எங்க வீடு(இப்ப அது நகரமாகி போன எலக்‌ஷனில் நகராட்சியுடன் இணைந்து 42வது வார்டாயிருச்சு).நீங்க வாழ்ந்த அதே வாழ்க்கைதான் எனக்கும்.உப்பிலிக்கு பதிலாக ஆனந்தன்.எங் கதையைப் படிக்கிற மாதிரியே இருக்கு.

தமிழ் திரு said...

சூப்பரா இருக்கு ..தொடருங்கள் ....தீபாவளி வாழ்த்துகள் அங்கிள் !!!

RVS said...

அண்ணே... உங்கள் பள்ளி நினைவுகள் சூப்பர்.

Ravichandran Somu said...

எம்.எம்.அப்துல்லா-- தம்பி, தாங்களும் ”மஞ்சள் பை” கிராமத்து மனிதர் என்பதில் மகிழ்ச்சி:)

கிராமத்து வாழ்கையை பதிவு செய்யும் முயற்சியின் ஒரு பகுதிதான் இந்த தொடர். அமெரிக்காவில் பிறந்து, வளர்ந்த என் குழந்தைகள் இந்த கதைகளை எல்லாம் நம்ம மாண்டேன் என்கிறார்கள்:((( அவர்கள் சொல்வது “Dad... you are either exaggerating too much or lieing"

Ravichandran Somu said...

தமிழ் திரு-- நன்றி

RVS-- நன்றி

ஜோதிஜி said...

மஞ்சள் பை மனிதர்கள். இதில் கூட நிறைய எழுதலாம் போலிருக்கே.

எம்.எம்.அப்துல்லா said...

// “Dad... you are either exaggerating too much or lieing"

//


:))))))

ஜோதிஜி said...

தீபாவளிக்கு விடுமுறை உண்டா? பரபரப்பு இல்லாமல் குடும்பத்தினருடன் கொண்டாட முடிந்ததா ரவி.

குடும்பத்தினருக்கு எங்கள் வாழ்த்துக்களை தெரியப்படுத்துங்க,

கிச்சா said...

என்னுடைய கதையும் இதே மாதிரிதான், அதனால் பழைய "நியாபகம் வருதே", தொடருங்கள் நண்பரே.

Ravichandran Somu said...

ஜொதிஜி-- நன்றி நண்பரே. தீபாவளியன்று சிங்கையில் பொது விடுமுறை. மூன்று நாட்கள் நீண்ட வார விடுமுறையென்பதால் தீபாவளி சிறப்பாக கொண்டாடினோம்.

கிச்சா-- நன்றி!