வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, November 22, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 4



இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி...

முத்துகிருஷ்ணன் சார் விடுமுறையில் இருந்த ஒரு நாளில் சுப்பிரமணியன் சார் நான்காம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக எழுந்து ஒரு பாடத்தை உரக்க படிக்கச் சொன்னார். அப்போது முருகன் என்ற மாணவன் பாடம் படிக்கும்போது “ஒளவையார்என்று படிக்காமல் மற்றும் வைப் பிரித்து ஒ-ளவையார்என்று படித்தான். சுப்பிரமணியன் சார் பல முறை திரும்ப படிக்க சொல்லியும் ஒ-ளவையார் என்றே படித்தான். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை அழைத்து புத்தகத்தை வாங்கி படிக்க சொன்னார். நான் சரியாக “ஒளவையார் என்று படித்தேன். சுப்பிரமணியன் சார் என்னைப்பார்த்து முருகன் கண்ணத்தில் ஐந்து அறைகள் விடச் சொன்னார் (ஐந்து முறை தவறாக முருகன் படித்ததால்!) முருகன் வகுப்பிலேயே உயரமானவன்... நானோ சின்ன பையன். எனவே என்னை ஒரு பெஞ்சு மேல் ஏறி நிற்கச் சொல்லி முருகன் கண்ணத்தில் அறை விட சொன்னார். நான் பய்ந்து கொண்டே முருகனுக்கு ஐந்து அறைகள் விட்டேன்...  
  
எங்கள் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள்தான் என்று முன்பே கூறியிருந்தேன். ஒருவர் முத்துகிருஷ்ணன் ஆசிரியர்... இவர் தலைமை ஆசிரியர். நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். இவருடைய மற்ற பெயர் அஞ்சாவது சார். மற்றவர் சுப்பிரமணியன் சார்... ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். மூனாவது சார் என்பது இவருடைய மற்ற பெயர்.

ஏதாவது ஒரு சார் விடுமுறைபென்றால் நடுவில் இருக்கும் தட்டியை நகர்த்தி ஓரத்தில் வைத்துவிட்டு ஐந்து வகுப்புகளையும் கண்காணித்துக் கொள்ளும் ஒர் சகலகலா வல்லவராகத் திகழ்வார் மற்ற ஆசிரியர். அச்சகலகலா வல்லவருக்கும் சில சமயங்களில் தர்மசங்கடமான நிலைகள் வருவதுண்டு!

உதாரணமாக... இயற்கையின் உபாதையை போக்க வந்து ஒரு விரலை மூக்கின் மேல் வைத்து அனுமதி கேட்கும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு அனுமதி வழங்குவதா? அல்லது இரண்டாம் வகுப்பில் நடக்கும் மற்போருக்கு தீர்ப்பு சொல்வதா? அல்லது மூன்றாம் வகுப்பில் நடக்கும் மாணவிகளின் குடுபி சண்டைக்கு தீர்ப்பு வழங்குவதா? அல்லது நான்காம் வகுப்பில் நடக்கும் குத்துச் சண்டைக்கா? இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதிய உணவு சமைக்கும் கிழவி வராததால் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளை வைத்து மதிய உணவு தயார் செய்யும் வேலையை பார்வையிடுவதா? என்று அவர் குழம்பி பரிதவிக்கும் நிலையை காணவேண்டுமே?

பள்ளிக்கு தேர்வு செய்யும் அதிகாரி ஆய்வுக்காக வரும்போது இரண்டு ஆசிரியர்களும் மிகவும் டென்சனாக இருப்பார்கள்... இருக்காதா என்ன? ஏனென்றால்...பள்ளிக்கு பாதி மாணவர்களுக்கு மேல் வந்திருக்கும் அதிசயம் ஒரு சில நாட்களுக்குத்தான் நடக்கும்.

தேர்வு அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஆசிரியர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படைசூழ மாணவர்களை அழைத்து வர கிளம்பி விடுவார்கள்.

பள்ளிக்கு வரமாட்டேன் என்று அழுது, அடம் பிடிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களை ஐந்தாம் வகுப்பு மாணவர்களை விட்டு அலேக்காக தூக்கி வரச்சொல்லி விடுவார்கள். இவ்வாறு மாணவர்களைத் தூக்கி வரும்போது இந்த வாத்தி பயலுகளுக்கு வேற வேலை இல்லைஎன்பது போன்ற சில தாய்மார்களின் வசைமொழிகளையும் வாங்கி கட்டிக் கொள்வதுண்டு.

குருவையும் மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டல்லவா?. தொலை தூரத்தில் மாணவர்கள் படையுடன் ஆசிரியர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தவுடன் தண்ணிடம் உள்ள ஒன்றிரண்டு சட்டைகளை தண்ணீரில் மூழ்கி வைத்து விட்டு, ஒரு சிறிய கோமணத்துடன் ஆசிரியர் முன் தோன்றி “சார்... என் சட்டைகளை எல்லாம் இப்பதான் தொவச்சு போட்டுருக்கேன்... என்னுகிட்ட வேறு சட்டைகள் இல்லை சார்...என்று பரிதாபமாகக் கூறி தப்பித்துக்கொள்ளும் புத்திசாலி மாணவர்களும் உண்டு.

சில மாணவர்கள்... ஆசிரியரைப் பார்த்தவுடன் கரும்பு கொல்லையிலோ, மரவள்ளி கிழங்கு கொல்லையிலோ அல்லது சவுக்குத் தோப்பிலோ ஓடி ஒளிந்து விடுவார்கள்.

இவ்வளவு இடையூருகளுக்கு இடையே பள்ளி ஆய்வு முடிந்த பிறகு அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது!

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உழவர்கள் எல்லாம் குருவை நெற்பயிரை அறுவடை செய்வதற்காக மழை பெய்யக்கூடாது என்று கடவுளிடன் வேண்டிகொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் மழை பெய்ய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். ஏன்.... வேறொன்றுமில்லை... பள்ளியின் திறந்த கூரை வழியே மழை நீர் உள்ளே பிரவேசிக்கும். பிறகென்ன... விடுமுறைதான்..!                                       
                                              -- பாடங்கள் தொடரும்...

6 comments:

அமுதா கிருஷ்ணா said...

இண்ட்ரெஸ்டிங்..தொடரட்டும்..

ஜோதிஜி said...

சிறப்பான நினைவுகளும் தேர்ந்த எழுத்தாள நடையும்.

Unknown said...

தொடக்கப்பள்ளி அனுபவங்கள் மட்டுமே பசுமையான நினைவுகள்...

தமிழ் திரு said...

நல்லா இருக்கு தொடருங்கள் ....

Thoduvanam said...

நானும் ஒங்க பள்ளிக்கூடத்திலேயே படித்திருக்கலாம் என தோணுது.ரொம்ப
அருமையா எழுதுறிங்க.

Ravichandran Somu said...

கருத்துகள் தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி!