வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, September 10, 2010

*10*: முதல் மரியாதை


நான் பார்த்த திரைப்படஙகளிலேயே என்னை மிகவும் பாதித்த படம் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த ”முதல் மரியாதை”.

நான் பள்ளியில் படித்த பதினேழு வயது வரை பார்த்த படங்களின் எண்ணிக்கை ஒரு பதினைந்து இருக்கும் அவ்வளவுதான். காரணம்.. அப்பா எங்களை படம் பார்க்க அனுமதிக்க மாட்டார். படம் பார்த்தால் படிப்பு கெட்டுவிடும் என்பது அவருடைய நம்பிக்கை. நானும் நல்ல பிள்ளையாக பள்ளியில் படித்து வந்ததால் அண்ணன் மாதிரி அப்பாவிற்கு தெரியாமலோ அல்லது பள்ளியை கட் அடித்து விட்டோ சினிமாவிற்கு சென்றது கிடையாது. பள்ளியில் படித்தபோது எல்லோரையும் போல் எனக்கு M.G.R மற்றும் ரஜினி படங்கள்தான் பிடிக்கும். காரணம்.. சண்டைக் காட்சிகள் மற்றும் மசாலா. குறிப்பாக சிவாஜி படங்கள் பிடிக்கவே பிடிக்காது. நினைவு தெரிந்து நான் பார்த்த முதல் சிவாஜி படம் “தெய்வ மகன்”... அந்த படத்தில் கோர முகத்துடன் நடித்த சிவாஜியை பார்த்து படம் பார்க்கும்போதே அழுதுவிட்டேன். இனிமேல் இந்த அழுமூஞ்சி சிவாஜி படம் பார்க்கக் கூடாது என்று முடிவெடுத்தேன். அதற்குப் பிறகு பார்த்த படங்கள் உரிமைக்குரல், விவசாயி, முரட்டுக்காளை, பில்லா... போன்ற பெரும்பாலும் M.G.R,  ரஜினி படங்கள்தான்.

1985-ஆம் ஆண்டு கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்து கிட்டத்தட்ட ஒரு மாதம் ஆன பிறகு நானும் என் நண்பன் ராஜாராமும் ஒரு ஞாயிற்றுக்கிழமை ஏதோவொரு புகழ்பெற்ற புதிய ஆங்கிலப்படம் பார்க்கலாம் என்ற பிளானுடன் தேவி தியேட்டருக்கு மேட்னி ஷோ போனோம். ஆனால் டிக்கெட் கிடைக்கவில்லை. வேறு வழி இல்லாமல் பக்கத்திலிருந்த சாந்தி தியேட்டரில் ஓடிக்கொண்டிருந்த “முதல் மரியாதைபடத்திற்குச் சென்றோம்.


படம் ஆரம்பித்தவுடன் அப்படியே எங்கள் கிராமத்தில் நடக்கும் உண்மை சம்பவங்கள் போல் என் கண் முன்பே காட்சிகள் நடக்கின்றன. படத்தில் வரும் சிவாஜி மாதிரியேதான் என் அப்பாவின் தோற்றம் இருக்கும். படத்தில் சிவாஜி கொஞ்சம் பருமனாக இருப்பார். அப்பா சற்று மெலிந்த தேகம்...சிவாஜியின் உடல்மொழி அப்படியே அப்பாவின் உடல்மொழி! முதன் முறையாக ஒரு படத்தை அதன் கதைக்காவும், சிவாஜி என்ற நடிகரின் நடிப்புக்காவும், இயக்குநரின் திறமைக்காவும், இசைக்காவும், பாடல்களுக்காவும் ரசித்து பார்த்த படம். படம் முடிந்தவுடன் படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து விடுபட்டு உடனே என்னால் எழ முடியவில்லை. ராஜா என்னைப்பார்த்து “ஏன்டா... ஒரு மாதிரி இருக்கிறாய் என்றான். அவன் ஒரு சினிமா புலி. மன்னார்குடியில் செண்பகா தியேட்டருக்கு எதிரில்தான் அவன் வீடு. வாரத்திற்கு ஒரு படம் பார்த்தவன் அவன். ஆனால்... இந்த படம் என் முகத்தில் அறைந்து படம் என்பது சண்டை காட்சிகள் மற்றும் மாசாலாவிற்காக மட்டும் பார்ப்பது கிடையாது என்று உணர்த்திய படம். சிவாஜி கணேசன் என்ற மாபெரும் நடிகரையும், பாரதிராஜா என்ற கலைஞனையும், இளையராஜா என்ற இசை மேதையையும், வைரமுத்து என்ற கவிஞனையும் எனக்கு அறிமுகப் படுத்திய படம். 

படம் பார்த்துவிட்டு விடுதிக்கு திரும்பி வந்ததிலிருந்து எந்நேரமும் படத்தைப்பற்றியே நினைத்துக்கொண்டிருந்தேன். படத்தின் காட்சிகள், பாடல்கள் என் மணக்கண்ணில் ஓடிக்கொண்டேயிருந்தன. இரண்டு வாரங்கள் கழித்து ஒரு நாள் தைரியாமாக பஸ்ஸில் தனியாக சாந்தி தியேட்டர் சென்று இரண்டாவது முறையாகப் பார்த்தேன். நான்  வாழ்க்கையில் இரண்டாவது தடவைப் பார்த்த முதல் படம்!

அப்பா இறந்தவுடன் அப்பா ஞாபகம் வரும்போதெல்லாம் இந்த படத்தைப் பார்ப்பேன். இதுவரை கிட்டத்தட்ட 25 தடவைக்கு மேல் இந்தப் படத்தைப் பார்த்திருப்பேன்.

- மிகையான நடிப்பு, செட் போட்டு ஸ்டியோக்களில் எடுக்கப்படும் படங்கள் என்றிருந்த தமிழ் சினிமாவிற்கு உண்மையான கிராமம், யதார்தமான நடிப்பு, நல்ல ஒளிப்பதிவு என்பதன் மூலம் புதிய சினிமாவை தமிழகத்திற்கு அறிமுகப் படுத்தியவர் பாரதிராஜா. சிவாஜி இறக்கும் தருவாயில் இருக்கும் காட்சியில் ஆரம்பித்து.. பிளாஸ்பேக்கில் கதை சொல்லி நம்மை படத்துடன் கட்டிப் போட்டு விட்டிருப்பார் பாரதிராஜா

-  சிவாஜி கணேசன் என்ற கலைஞன் ஒரு “அட்சய பாத்திரம்என்று சிவாஜியின் தீவிர ரசிகரான நண்பர் ஜோ கூறுவார். அது முற்றிலும் உண்மை. யதார்த்தமான நடிப்பு, மிகையான நடிப்பு என்று டைரக்டர் தனக்கு தேவைப்பட்டதை அந்த அட்சய பாத்திரத்திலிருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த படத்தில் பாரதிராஜா எதிர்பார்த்த பெரிய மனிதர் மலைச்சாமி தேவர் என்ற கதாபாத்திரத்திற்கான யாதார்தமான நடிப்பை கொடுத்திருப்பார் நடிகர் திலகம். உயிருக்குப் போராடிக்கொண்டிருக்கும் இறுதி காட்சி, “உன் கை பக்குவத்தை சாப்பிடும்போது என் ஆத்தா ஞாபகம் வந்திடுச்சிஎன்று கண்கலங்கி ராதா வீட்டில் மீன் குழம்பு சாப்பிடும் காட்சி. “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடலுக்கு காட்டும் முகபாவணைகள் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்....


- உடையிலும், நடிப்பிலும் கிராமத்து பெண்ணாகவே வாழ்ந்து நடித்த ராதாவிற்கு இந்த படம் ஒரு மைல் கல்.


- ஒரு கிராமத்து அடங்காப் பிடாரி பெண்மணியாக இந்த படத்தில் வாழ்ந்திருப்பார் வடிவுக்கரசி. இந்த மாதிரி வேடத்தில் காந்திமதியை விட என்னால் சிறப்பாக செய்ய முடியும் என்று நிரூபித்திருப்பார்.

- காமெடிக்கு ஜனகராஜ்... மக்கள் ஓட்டுவதற்கு ஒவ்வொரு கிராமத்திலும் ஜனகராஜ் போன்ற இளிச்சவாயன் இருப்பார்

- இளையராஜா பாடல்கள் + பிண்ணனி இசை இரண்டிலும் ஒரு இசை வேள்வியே நடதியிருப்பார். குறிப்பாக “பூங்காற்று திரும்புமாஎன்ற பாடல். இந்தப் பாடல் என்னுடைய ஆல் டைம் பேவரைட் பாடல். இந்தப் பாடலைப் கேட்கும் போதெல்லாம் மனம் என்னவோ செய்யும். கவிஞர் வைரமுத்துவிற்கு தேசிய விருது வாங்கித் தந்த பாடல். வைரமுத்து வார்த்தைகளில் புகுந்து விளையாடிருப்பார். அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன்”, “வெட்டி வேரு வாசம் பாடல்களும் அருமையான பாடல்கள். இளையராஜா, வைரமுத்து என்ற இரண்டு மகா கலைஞர்கள் தங்களின் ஈகோவால் ரசிகர்களாகிய நமக்கு துரோகம் செய்து விட்டார்கள் என்றுதான் கூறுவேன்.


இப்படி இந்த படத்தைப் பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்............

முதல் மரியாதை ஒரு அருமையான கிராமத்து காவியம்!

                 *           *         *
Post a Comment