வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, September 08, 2010

*5*: புத்தகம் - The Monk Who Sold His Ferrari


சமீபத்தில் படித்த புத்தகங்களில் என்னுள் ஒரு பெரிய தாக்கம் ஏற்படுத்திய புத்தகம் Robin Sharma எழுதிய “The monk who sold his Ferrari” என்ற புத்தகம். இந்த புத்தகம் பற்றிய எனது பார்வை.

கடந்த ஜூன் மாதத்தில் Reliance Communication-ல் ஒரு பிஸினஸ் மீட்டிங் முடித்து விட்டு சிங்கபூருக்கு திரும்பி வரும் போது மும்பை விமான நிலையத்திலுள்ள புத்தக கடையொன்றில் புத்தங்களை மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது கண்ணில் பட்ட “The monk who sold his Ferrari” புத்தகத்தை வாங்கினேன். இந்த புத்தகம் பற்றி எந்த பேக்கிரவுண்ட்டும் தெரியாமல் புத்தகத்தை படிக்க ஆரம்பித்தேன்.

ஒரு திருப்பத்துடன் ஆரம்பிக்கும் கதை போல் ஆரம்பம். ஆனால்...இது நாவல் அல்ல.... ஒரு சுய முன்னேற்ற(Self Improvement) புத்தகம். புத்தகத்தின் சுவாரசியத்தால் ஈர்க்கப்பட்டு ஒரு சில நாட்களில் புத்தகத்தை படித்து முடித்து விட்டேன். நான் ஆங்கிலத்தில் பல சுய முன்னேற்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். ஆனால் இந்த புத்தகத்திற்கும் மற்ற புத்தங்களுக்கும் வித்தியாசம் இருக்கிறது.

பெரும்பாலான சுய முன்னேற்ற புத்தகங்கள் கருத்து கந்தசாமிகளாக இப்படி செய், அப்படி இரு என்ற பெரிய பட்டியல்களை கொடுத்து படிக்கும்போது படிப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் ஒரு டிரை பீலிங்கை ஏற்படுத்தும். ராபின் சர்மா இந்த புத்தகத்தில் ஒரு கதை வழியாக சுய முன்னேற்ற தத்துவங்களைச் சொல்கிறார். சந்தோசத்துடனும், குறிக்கோளுடன் வாழ ஏழு வழிகளைச் சொல்லி அந்த ஏழு வழிகளையும் சுலபமாக மனதில் வைத்துக்கொள்ள ஒரு குட்டிக்கதை... அந்த கதையில் வரும் கதாபாத்திரம் மற்றும் பொருள்கள் மூலமாக சொல்லிக் கொடுகிறார். மேலும் இந்த ஏழு வழிமுறைகள் இமயமலையில் வாழும் யோகிகள் போதித்த கோட்பாடுகள் என்று சொல்கிறார். இதனால்தான் இந்த புத்தகம் மற்ற புத்தகங்களிலிருந்து வேறுபடுகிறது.

ஜூலியன் மேண்டில்(Julian Mantle) என்ற 53 வயது புகழ்பெற்ற வக்கீல் கோர்ட்டில் வாதாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பால் மயங்கி விழுகிறார். ஜூலியன் புகழ்பெற்ற ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் (Harvard University) சட்டம் படித்து, பல முக்கியமான கேஸ்களில் வாதிட்டு வெற்றி வாகை சூடி வரும் அமெரிக்க வக்கீல். அவர் வாதிடும் கேஸ்கள் எல்லாம் அமெரிக்க செய்தித்தாள்களில் முதல் பக்க செய்தி. பல மில்லியன் டாலர்கள் சொத்துக்கு அதிபதி, பெரிய வீடு, Ferrari கார், புகழ்பெற்ற மாடல்களுடன் பார்களில் குடி, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம், கியூபா சிகார், விலையுயர்ந்த ரெஸ்டாரண்ட்களில் டின்னர் என்று கும்மாளமாக வாழ்ந்துகொண்டிருந்த ஜூலியன்தான் அன்று கோர்ட்டில் மாரடைப்பால் மயங்கி விழுந்தார். ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி குணமடைந்தபின்பு அவர் அலுவலகத்திற்கோ, கோர்ட்டுக்கோ திரும்பி வரவில்லை. ஒரு சில நாட்கள் கழித்து எல்லோரும் தெரிந்துகொண்டது ஜூலியன் அவருடைய வீடு, பெராரி கார், சொத்துகள் எல்லாவற்றையும் விற்றுவிட்டு தனியாக இந்தியா சென்றுவிட்டார் என்பதுதான். அதற்குப்பிறகு யாருக்கும் ஜூலியனைப்பற்றி ஒன்றும் தெரியவில்லை!

மூன்று வருடங்கள் கழித்து ஜுலியன் தனது ஜூனியரான ஜான்(John)-யை பார்க்க வருகிறார். 53 வயதில் பெரிய தொப்பையுடன் 60 வயது ஆள் போல் தோற்றமளித்த ஜூலியன் இப்போது டிரிம்மாக 40 வயது ஆடவர் போல் தன் அலுவலகத்தில் நுழைந்தபோது ஜூலியனை அடையாளம் காண முடியாமல் தடுமாறுகிறார் ஜான்.

தனது ஜூனியரிடம் தன் மூன்று வருட கதையையும், இந்த மூன்று வருடத்தில் தன்னுள் ஏற்பட்ட மிகப் பெரிய மாற்றத்தையும் சொல்கிறார். தனது சொத்துக்களை விற்றவுடன் மன அமைதி மற்றும் ஆன்மீகத்தை தேடி இந்தியாவிற்கு செல்கிறார். இந்தியாவில் காசி மற்றும் பல புன்னிய தலங்களுக்குச் சென்று கிட்டத்தட்ட ஒரு வருடம் சுற்றிவிட்டு இமயமலையில் வாழும் யோகிகளை சந்திக்க வேண்டும் என்ற திட்டத்துடன் இமயமலைக்கு செல்கிறார். தனியாக ஒரு வாரத்திற்கும் மேல் இமயமலையில் ஏறி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்போது ராமன் என்ற யோகியை சந்திக்கிறார். ஜூலியனின் கதையைக் கேட்ட யோகி ராமன் ஜூலியனை தன்னுடைய சீடராக ஏற்றுக்கொண்டு தான் வாழும் யோகிகள் கிராமத்திற்கு அழைத்துச்சென்று அவருக்கு உபதேசம் மற்றும் வாழ்வியல் தத்துவங்களை ஒரு சிறிய கதை மூலம் சொல்லிக் கொடுக்கிறார். அந்தக் கதை:

--- அழகிய மலர்கள் மற்றும் ரோஜாக்கள் நிறைந்த நறுமணம் வீசும் தோட்டம் ஒன்றிருக்கிறது. அந்த தோட்டதின் மத்தியில் ஆறு மாடிகள் உயரமுள்ள சிவப்பு நிறத்திலாளான ஒரு பெரிய கலங்கரை விளக்கம் (Light house) இருக்கிறது. திடீரென்று அந்த கலங்கரை விளக்கத்தின் கதவைத் திறந்துகொண்டு ஒன்பதடி உயரம், 900 பவுண்ட் எடையுள்ள ஒரு பெரிய ஜப்பானிஸ் சுமோ பயில்வான் வெளியே வருகிறார். அவர் இடுப்பில் ஒரு இளஞ்சிவப்பு நிறத்திலான மெல்லிய கம்பியில் கட்டிய சிறிய சுமோ ஆடையை மட்டும் அணிந்திருக்கிறார். தோட்டதில் நடந்து கொண்டிருந்த சுமோ பயில்வான் பல வருடங்களுக்கு முன்பு யாரோ விட்டுச்சென்ற தங்க கடிகாரமொன்றை கண்டெடுக்கிறார். அந்த தங்க கடிகாரத்தை கையிலெடுத்தவுடன் கீழே விழுந்து மயக்கமடைகிறார். சிறிது நேரம் கழித்து நினைவு திரும்பி எழுந்து பார்க்கிறார். அப்போது அந்த தோட்டத்தில் வைரங்கள் கொட்டிக்கிடக்கும் ஒரு பாதையை பார்க்கிறார். அந்த பாதையின் வழியே சென்று முக்தியடைகிறார். ---

இந்த கதையில் என்ன இருக்கின்றது நமக்கு தோன்றும்? ஆனால் இந்த கதையின் வழியாகத்தான் யோகி ராமன் வாழ்வின் தத்துவங்களை ஜூலியனுக்கு பல விளக்கங்களுடன் சொல்லி விளக்குகிறார்.

பண்பு (Virtue)                                        குறியீடு (Symbol)

1.மனதை ஒருநிலைப்படுத்துதல்                     தோட்டம்
(Master Your Mind)                                                          (The Garden)

2. குறிக்கோளைக் நோக்கி வெற்றிநடை போடுதல்     கலங்கரை விளக்கம்
(Follow Your Purpose)                                                                   (The Lighthouse)

3. தொடர் முன்னேற்றம்                            சூமோ பயில்வான்
(Practice Kaizen)                                                                          (The Sumo Wrestler)
                              
4. சுயகட்டுப்பாடு                                   இளஞ்சிவப்பு கம்பி
(Live with Discipline)                                                                    (The Pink Wire Cable)

5. நேரத்திற்கு மதிப்பு கொடுத்தல்                     தங்க கடிகாரம்
(Respect Your Time)                                                                      (The Gold Stopwatch)

6. சேவை செய்தல்                                 ரோஜா மலர்கள்
(Selflessly Serve Others)                                                                (The Roses)

7. நிகழ்காலத்தில் மகிழ்ச்சியுடன் வாழ்தல்             வைரங்கள்
(Embrace the Present)                                                                  (Diamonds)  

நம்மில் பலரும் Career, பணம் இவற்றை மட்டும் வாழ்க்கையில் முக்கிய குறிக்கோள்களாகக் கொண்டு ஓடி, ஒடி உழைத்துக் கொண்டிருக்கிறோம். ஏன் ஒடுகிறோம் என்று தெரியாமல் எல்லோரும் ஓடுகிறார்கள் நானும் ஓடுகிறேன் என்று ஓடிக்கொண்டிருக்கிறோம். இந்த ஓட்டத்தில் தற்போதைய நிகழ்காலத்தை ரசித்து, மகிழ, குழந்தைகளுடன் நேரம் செலவிட மறந்து விடுகிறோம். 

The past is history, future is mystery and the present is a gift and that’s why it is called Present” என்ற உண்மையை நம்மால் இந்த புத்தகத்தை படித்தவுடன் உணர முடியும்.       

நீங்களும் இந்த புத்தகத்தை படித்து பாருங்கள்!
                     *          *          *
Post a Comment