வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, July 07, 2010

வெட்டிக்காடு

பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் கவிஞர் வைரமுத்து அவர்கள் “எங்கள் ஊர்” என்ற தலைப்பில் அவருடைய கிராமத்தைப் பற்றி எழுதிய கவிதையை வார இதழ் ஒன்றில் படித்தேன். அதன் பாதிப்பில் நான் பிறந்து வளர்ந்த என்னுடைய ஊரான வெட்டிக்காட்டை பற்றி எழுதிய கவிதை இது.  இதை கொஞ்சம் மாற்றி இப்போது எழுதலாம் என்று தோன்றியது. வேண்டாம்..... இப்படியே இருக்கட்டும்.

                                                                      வெட்டிக்காடு


காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு
நான் பிறந்த ஊர்!

o

காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளைகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.

o

ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.

என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!

நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?

o

'
வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?

அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.

o

ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.

ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!

தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'
உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.

o

ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்

அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்

கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்

கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்

ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!

அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.

0

பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!

விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை

வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...

கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.

அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!

இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.

o

ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!

           *    *   *14 comments:

ஜோதிஜி said...

நிறைய எழுதுங்கள்.

மன்னார்குடி said...

அருமை.

Dilip Subramanian said...

wonderful

குடுகுடுப்பை said...

do you know sembian teacher from Kaatur?

ரவிச்சந்திரன் said...

Dilip - Thanks Machi!

ரவிச்சந்திரன் said...

ஜோதிஜி - நன்றி

மன்னார்குடி - நன்றி

ரவிச்சந்திரன் said...

குடுகுடுப்பை - தங்கள் வருகைக்கு நன்றி குடுகுடுப்பையாரே. No.. I don't know Sembian Teacher. I guess you might have thought I am from "Vettikkadu" village near to Thanjavur. I am from other "Vettikkadu" which is in between Mannargudi and Eda-Melaiyur.

Senthil Kumar said...

வெட்டிக்ஸ்

எழுத்து நன்றாக உள்ளது. படமும் அருமை.

வெட்டிக்காடு என்ற பெயர் இப்படித் தான் வந்ததா! இன்று தெரிந்து கொண்டேன்.

குடுகுடுப்பை said...

Thanks ravi
sorry for English

ரவிச்சந்திரன் said...

VSS - நன்றி

amudhan said...

"வெட்டிகாடு" படித்தவுடன் .....கண் மூடினேன்
உள்ளம் துள்ளியது
நெஞ்சை கிள்ளியது
எண்ணம் எள்ளி நகையாடி
எங்கே இருக்கிறாய் என்றது?
கண் விழித்தேன்....நான் குடிகாட்டில் !!!!

ரவிச்சந்திரன் said...

அமுதன் -- சான் பிராண்சிஸ்கோவிலிருந்து குடிக்காடு சென்று வந்தததில் மகிழ்ச்சி

புவனேஸ்வரி ராமநாதன் said...

அருமையான பதிவு. வாழ்த்துக்கள்.

அரசூரான் said...

கவிதை அருமை. தமிழ்மண நட்சத்திர வாழ்த்துக்கள்