வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, December 08, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Last Part (7)


ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது ஒரு நாள் காலை 9 மணியளவில் முத்துகிருஷ்ணன் சார் அவசர வேலை காரணமாக பள்ளி வரமாட்டார் என்று மூவாநல்லூரிலிருந்து ஒருவர் வந்து தகவல் சொன்னார். 9.30 மணி ஆகியும் சுப்பிரமணியன் சார் வரவில்லை. சார் ஒரு சில நாட்களில் அவருடைய வயல்களுக்குச் சென்றுவிட்டு லேட்டாக வருவார் என்பதால் நான் பெல் படித்து வழக்கம் போல் பிரேயர் முடித்து மாணவர்களை அவர்கள் வகுப்புகளில் அமர வைத்தேன்.

பத்து மணியளவில் எட-கீழையூரிலிருந்து மன்னார்குடி செல்லும் ஒருவர் சுப்பிரமணியன் சாருக்கு உடம்பு சரியில்லை என்று முத்துகிருஷ்ணன் சாரிடம் கொடுக்க சொல்லி அவர் கொடுத்தனுப்பிய லீவு லெட்டரை கொடுத்தார். ஆசிரியர்கள் இருவரும் பள்ளி வரவில்லை என்ற தகவல் அறிந்தவுடன் “இன்னைக்கு பள்ளிக்கூடம் லீவுடோய்..... என்று பசங்க எல்லாம் மகிழ்ச்சியில் துள்ள ஆரம்பித்து விட்டனர். நான் என் நண்பன் எழில்மன்னனிடம் ஆலோசனை செய்து இன்று வழக்கம் போல் பள்ளியை நடத்துவது என்று முடிவு எடுத்தேன். எனது முடிவை கூறியவுடன் என் நண்பர்கள் “நீர் யானைஇளங்கோ, சந்திரசேகரன் போன்றவர்கள் லீவு கிடைக்கவில்லை என்ற ஆதங்கத்தில் எதிர்த்தார்கள். மற்ற பசங்களும் லீவு இல்லை என்றவுடன் சோகமாகி விட்ட்டார்கள்.

எவனாவது ஒழுங்கா உட்கார்ந்து படிக்காமா... சத்தம் போட்டீங்கன்னா.. சுப்பிரமணியன் சாருகிட்ட பேர் எழுதி லிஸ்ட் கொடுத்துடுவேன்... மூங்கி கம்பு அடி வேணுமா?என்று கூறியவுடன் எல்லோரும் கப் சிப் என்று அமைதி காக்க ஆரம்பித்தார்கள். வழக்கம் போல் மதிய உணவு சமைக்க தேவையான பொருட்களை “உருட்டிகிழவியிடம் எடுத்து கொடுத்து மதிய உணவு தயார் செய்து மாணவர்களுக்கு பறிமாரி அன்று ஆசிரியர்கள் இருவரும் இல்லாமல் பள்ளியை வெற்றிகரமாக நண்பர்கள் துணையுடன் நடத்தினேன்.

அடுத்த நாள் காலை முத்துகிருஷ்ணன் சார் வந்தவுடன் அவரிடன் நேற்று நடந்தது பற்றி சொன்னவுடன் அவருடைய முகத்தில் அவ்வளவு மகிழ்ச்சி மற்றும் பெருமிதம். வழக்கம் போல் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டினார். இந்த நிகழ்ச்சியை என் பெரியப்பா (நாட்டாமை) மற்றும் அப்பாவிடம் சொல்லி என்னைப் பாராட்டியிருக்கிறார்.

ஐந்தாம் வகுப்பின் கடைசி கால கட்டமான பிப்ரவரி மாதத்தில் மன்னார்குடியைச் சேர்ந்த பண்டார வாத்தியார் தலைமையாசிரியராக பதவி உயர்வு பெற்று எங்கள் பள்ளிக்கூடத்திற்கு மாற்றலாகி வந்தார். முத்துகிருஷ்ணன் சாரை பக்கத்து கிராமமான பருத்திக்கோட்டை பள்ளிக்கூடத்திற்கு மாற்றல் செய்து விட்டது அரசாங்கம். எங்கள் எல்லோருக்கும் மிகப் பெரிய சோகம்.

ஏப்ரல் மாத ஆரம்பத்தில் முழு ஆண்டுத் தேர்வு... முதல் பரீட்சை தமிழ். பண்டார வாத்தியார் சில நாட்களுக்கு முன்புதான் மாற்றலாகி வந்ததால் பசங்களின் படிப்பு திறமை மீது நம்பிக்கை இல்லை. மேலும் பெரும்பாலன மாணவர்களை பாஸ் செய்து உயர்நிலை பள்ளிக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. ஆனால்... பள்ளி ஆய்வு அதிகாரி பரீட்சை பேப்பர்களை ஆய்வு செய்து பார்த்து விட்டால் என்றால் என்ன செய்வது என்ற நினைப்பில் போர்டில் கேள்விக்கு பக்கத்தில் சில கேள்விகளுக்கான பதில் இருக்கும் பக்கத்தையும் எழுதி போட்டு “பசங்களா புத்தகத்தை பார்த்து எழுதுங்கடாஎன்று கூறினார். பசங்க எல்லாம் மகிழ்ச்சியாகிவிட்டார்கள்.

எனக்கோ அதிர்ச்சியாகி விட்டது. முத்துகிருஷ்ணன் சாரும், சுப்பிரமணியன் சாரும் காப்பி அடிக்க கூடாது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள். இந்த வாத்தியார் “காப்பி அடிங்கடாஎன்று சொல்கிறாரே? எனக்கு பெரும்பாலன கேள்விகளுக்கு பதில் தெரியும் என்பதால் நான் புத்தகத்தை பார்க்காமல் தேர்வு எழுதிக்கொண்டிருந்தேன். இதைக் கவணித்த பண்டார வாத்தியார் “ரவி நீ ஏன்டா... புத்தகத்த பாக்காம எழுதுறஎன்று கேட்டார். “சார்... காப்பி அடிக்கிறது தப்புன்னு... முத்துகிருஷ்ணன் சார் சொல்லிக் கொடுத்திருக்கார் சார்... எனக்கு பதில்கள் தெரியும் சார்என்றேன். இந்த பதிலைக் கேட்டு ஒரு கணம் திகைத்து விட்டார். பிறகு “சரிடா... நீ எழுதுடாஎன்று கூறி விட்டு நாற்காலியில் அமைதியாக உட்கார்ந்து விட்டார்.

இந்த நிகழ்ச்சி என் வாழ்க்கையில் என்றும் மறக்க முடியாது. காரணம்... நான் என் வாழ்க்கையில் எந்த ஒரு டெஸ்ட் மற்றும் பரீட்சையில் காப்பி அடித்தது கிடையாது. கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்த கால கட்டத்தில் டெஸ்டில் பசங்க மற்றும் பெண்கள் காப்பி அடிப்பார்கள். “பெண்களே தைரியமாக காப்பி அடிக்கும் போது நாமும் அடித்தால் என்ன?என்று பல சமயங்களில் மனம் சஞ்சலப் படும். அப்போது ஐந்தாம் வகுப்பில் நடந்த இந்த நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வரும். ஒரு சில இன்டர்னல் மார்க்குக்காக இத்தனை நாள் கடைப்பிடித்து வந்த கொள்கையையும், மன உறுதியையும் விட்டுக்கொடுப்பதா? என்று நினைத்து மனம் தெளிவடைந்து விடும்.

நான்காவது செமஸ்டரில் Accoustics” என்ற மிகவும் கடினமான பாடம். புதிதாக சேர்ந்த கீதா மேடம் இந்த பாடத்தை எடுத்தார். முதல் இரண்டு டெஸ்டுகளிலும் எல்லோரும் எடுத்தது சொற்ப மதிப்பெண்கள். கடைசி மூன்றாவது டெஸ்டில் மதிப்பெண்கள் எடுத்தே ஆகவேண்டு என்ற கட்டாயத்தில் கிட்டடத்தட்ட மொத்த வகுப்பே முதல் ராத்திரி உட்கார்ந்து பிட்கள் தாயார் செய்து ரெடியாக இருந்தது.  டெஸ்ட் அன்று டெஸ்ட் ஆரம்பித்த சில நிமிடங்களில் பிட் தூள் பறக்குது. முதல் மாணவர்களான கோபால், சந்தானம், சுதிர் போன்றவர்களும், பெண்களும் மும்முரமாக பிட் அடிப்பதை பார்த்து கீதா மேடம் அதிர்ந்து போய் விட்டார். உடனே “நீங்க எல்லாரும் பிட் வச்சிருக்கீங்கன்னு எனக்கு தெரியும். நான் இப்ப ஒவ்வொருத்தரா செக் பண்ண வருவேன்.. நீங்களா எடுத்து கொடுத்திட்டீங்கன்னா ஒன்னும் செய்ய மாட்டேன். நான் கண்டு புடிச்சேன்னா இண்டர்னல் மார்க் முட்டைதான்என்றார். 65 பேர்கள் வகுப்பில் ஒரு ஏழு பேரிடம் மட்டும் பிட் இல்லை. அதில் நானும் ஒருவன்!

கடந்த 17 ஆண்டுகளாக அமெரிக்கா, சிங்கப்பூர் வாழ்க்கை... 15 ஆண்டுகளாக உலகிலுள்ள பல நாடுகளுக்கு வேலை காரணமாக பிசினஸ் கிளாஸ் விமான பயணங்கள், ஐந்து நட்சத்திர விடுதி வாழ்க்கை என்று வாழ்க்கைப் பயணம் தொடர்கிறது. இதற்கு காரணம்... ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, வெட்டிக்காடு அமைத்துக் கொடுத்த அடித்தளம். அந்த பள்ளியில் நான் கற்றுக்கொண்ட நல்ல பண்புகள் பசுமரத்து ஆணியாய் மனதில் பதிந்து இருப்பது!

படிப்பு - ஆசிரிரியர்களிடம் நல்ல பெயர் எடுக்க வேண்டும், அடி வாங்காமல் தப்பிக்க வேண்டும் என்ற காரணங்களுக்காக படித்த படிப்பு

நேரந் தவறாமை 9.30 மணி பள்ளிக்கூடத்திற்கு 8 மணிக்கே சென்ற பழக்கம் இன்றும் தொடர்கிறது. எந்த ஒரு மீட்டிங் என்றாலும் ஐந்து, பத்து நிடங்களுக்கு முன்பாகவே சென்று விடுவேன். தவிர்க்க முடியாத காரணத்தால் லேட்டாகும் என்றால் தகவல் சொல்லி விடுவேன்.

பொறுப்பு - ஒரு வேலையையோ, பொறுப்பையோ எடுத்துக்கொண்டால் முழு ஈடுபாட்டுடன் செய்து வெற்றிகரமாக முடிக்க வேண்டும்

நேர்மை - நான் பல குறைகள் கொண்ட சராசரி மனிதன். ஆனால்... மனசாட்சியின்படி நேர்மையாக வாழ வேண்டும் என்ற எண்ணம் கொண்டவன். முடிந்த அளவு பின் பற்றி வருகிறேன்.

வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கும், என் ஆசிரியர்களுக்கும் வணக்கமும்...நன்றிகளும்!
                              *        *       *
பி.கு:

- கடந்த பத்து ஆண்டுகளாக நான் படித்த வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான பல நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்

- வெட்டிக்காட்டில் என் தந்தையார் வை.சி.சோமு ஆலம்பிரியர் நினைவாக ஒரு நூல் நிலையம் (Library) அமைத்து கொடுத்துள்ளேன்.

- கிராமப்புற ஏழை மாணவர்கள் பலருக்கு படிப்புக்காக பண உதவிகள் செய்து வருகிறேன்.

- AIMS India (www.aimsindia.net) தொண்டு நிறுவனத்தின் சார்பாக நான் படித்த மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல கிராம பள்ளிக் கூடங்களுக்கு கம்யூட்டர்கள், பெஞ்ச், டெஸ்க் வாங்கி கொடுப்பது, நூல் நிலையங்கள் அமைத்து கொடுப்பது போன்ற பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறேன்.

கிராமப்புற மாணவர்களுக்காக என்னால் முடிந்த சிறு உதவிகள்... It’s a way of giving back to the Society!
-- நிறைவு --

24 comments:

Ravichandran Somu said...

Test...

ஜோதிஜி said...

வணக்கம் ரவி.

உங்கள் குழந்தைகள் இந்த தொடரை எதிர்காலத்தில் படிக்கக்கூடிய வாய்ப்பு இருக்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் எளிதான ஆங்கிலத்திலும் எழுதி வைத்து விடுங்கள். ஏதோவொரு புரிதல் அவர்களுக்கு உங்களுக்கு பிறகு உருவாக்கக்கூடியது.

சற்று நேரத்திற்கு முன் கனடாவில் உள்ள ஒரு பெண்மணியுடன் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

உங்கள் குழந்தை (10 மாதம்) எதிர்காலத்தில் (அவர் ஈழ பெண்மணி) தமிழ் படிக்க பேச வாய்ப்பு இருக்குமா? என்று கேட்டேன்.

பொன்னியின் செல்வன் மொத்த பாகத்தையும் படிக்க வைக்க வேண்டும் என்ற என் லட்சியத்திறகாக அவரை தமிழ் பேச எழுத படிக்க வைப்பது தான் என் லட்சியம் என்றார்.

உங்கள் தொடரை முழுமையாக படித்த பிறகு உருவான சந்தோஷம் அந்த பெண்மணி நோக்கத்தை கேட்ட அளவிற்கு மகிழ்ச்சியை உருவாக்கியது.

பெரும்பாலும் வந்த பாதையை பலரும் மறந்து விடுவதுண்டு. அல்லது சொல்ல வெட்கப்பட்டுக் கொண்டு தன்னை ஒரு கணவானாக அதீத கற்பனை (வெளிநாட்டில் வாழ்க்கை அமையப்பெற்றவர்கள்) செய்து கொள்வதுண்டு.

அதிலும் நீங்க வித்யாசம் தான்.

நிறைய எழுத வேண்டும் போலுள்ளது.

நல்வாழ்த்துகள் உங்களின் சேவை மனப்பான்மைக்கு ரவி.

ஜோசப் பால்ராஜ் said...

அண்ணே,
நீங்க தொடர எழுத ஆரம்பிச்சுதல இருந்து வாசிச்சாலும், இன்னைக்கு தான் பின்னூட்டம் போட முடிஞ்சது.

ஒரு ரீவைண்ட் பட்டன அழுத்துன மாதிரி இருந்துச்சு.

மஞ்சப் பையில சிலேட்டு, நாலு வயசுலயே பள்ளிகூடத்துக்கு போனது, ஐந்தாம் வகுப்பு வரை மாரனேரியிலயே படிச்சது, ஆறாம் வகுப்புல இருந்து 2 கி.மீ தொலைவில் இருக்க மேகளத்தூர் என்ற ஊரில் படிச்சது எல்லாம் அப்டியே கண்ணு முன்னாடி வந்துட்டு போவுது.

ILA (a) இளா said...

// It’s a way of giving back to the Society!//
அருமைங்க..

எம்.எம்.அப்துல்லா said...

// கடந்த பத்து ஆண்டுகளாக நான் படித்த வெட்டிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு தேவையான பல நலத்திட்ட பணிகளை செய்து கொடுத்து வருகிறேன்

- வெட்டிக்காட்டில் என் தந்தையார் வை.சி.சோமு ஆலம்பிரியர் நினைவாக ஒரு நூல் நிலையம் (Library) அமைத்து கொடுத்துள்ளேன்.

- கிராமப்புற ஏழை மாணவர்கள் பலருக்கு படிப்புக்காக பண உதவிகள் செய்து வருகிறேன்.

- AIMS India (www.aimsindia.net) தொண்டு நிறுவனத்தின் சார்பாக நான் படித்த மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மற்றும் பல கிராம பள்ளிக் கூடங்களுக்கு கம்யூட்டர்கள், பெஞ்ச், டெஸ்க் வாங்கி கொடுப்பது, நூல் நிலையங்கள் அமைத்து கொடுப்பது போன்ற பல நலத்திட்ட பணிகளை செய்து வருகிறேன்.

கிராமப்புற மாணவர்களுக்காக என்னால் முடிந்த சிறு உதவிகள்... It’s a way of giving back to the Society!


//

நான் உங்களைவிட வயதில் மிகவும் சிறியவன்.வயதையும் மீறி வாழ்த்துகிறேன் “நீங்களும் உங்கள் சந்ததியும் தளைத்துக் கிடப்பீர்கள்”.

எம்.எம்.அப்துல்லா said...

// ஒரு ரீவைண்ட் பட்டன அழுத்துன மாதிரி இருந்துச்சு
//

இரவி அண்ணே, இந்த ஜோசப் பய வாழ்க்கை மட்டும் உங்களை மாதிரியில்ல,குணமும்தான்.எனக்குத் தெரிஞ்சு நிறையபேரை படிக்க வச்சுகிட்டு இருக்கான்.

Thamizhan said...

பட்டிக்காட்டில் பிறந்து பட்டணங்களுடன் போட்டியிட்டு வெற்றிப் பாதையில் மிதந்தாலும் மண்ணின் மணத்தை அனுபவித்து எழுதி சிறப்படைந்த ரவிக்கு வழ்த்துக்கள்.நன்றிப் பெருக்கால் செய்யும் உதவிகள் பெருமைப் பட வைக்கின்றன்.நம்மைப் போல் ஒவ்வொரு பட்டிக்காட்டு வார்ப்புக்கள் அந்தந்த கிராமங்களுக்கு உதவினாலே தமிழகம் தலை நிமிர்ந்து விடும்.வாழ்க, வளர்க.

அமுதா கிருஷ்ணா said...

இத்தொடர் last part என்று இருந்தது பார்த்து கஷ்டமாக இருக்குது ரவி சார். மிக அற்புதமான ஆசிரியர்களை பெற்று இருக்கிறீர்கள். எல்லோருக்கும் இப்படி அமைவதில்லை. அமைந்தாலும் உங்களை மாதிரி நினைவில் வைத்து அவர்கள் சொன்னதை வாழ்க்கையில் கடை பிடிப்பவர்கள் மிக சொற்பம். உங்கள் சேவைக்கு எனது வாழ்த்துக்கள்.

Ranjit said...

I'm reading all your posts, It really remind me my school days !!

Thoduvanam said...

மிக அருமை ரவி.உழைப்பு,நேரம் தவறாமை எல்லாவற்றிலும் மேலாய் மனசாட்சியுடன் நடப்பது.பள்ளியில் படித்த நாட்களை நினைவு படுத்திட்டிங்க.உதவும் கரங்களாக, பல கல்விப் பணிகள் செய்வது பற்றி என் இதயம் நிறைந்த வாழ்த்துக்கள்.you are a role model to be emulated by the younger generation.all the best..

Ravichandran Somu said...

ஜோதிஜி-- நன்றி தலைவரே!

இந்த தொடரை எழுத முக்கிய காரணம் 21 ஆண்டுகளுக்கு பின்பு சந்தித்த என் நண்பன் கல்யாண ராமன் (http://vssravi.blogspot.com/2010/11/kal-raman-tv.html)

தாங்கள் அடிக்கடி கூறும் “நம் குழந்தைகளுக்காக வாழ்க்கையை பதிவு செய்து வைக்க வேண்டும்” என்பதும் இந்த தொடருக்கு ஒரு காரணம்.

Ravichandran Somu said...

ஜோசப் பால்ராஜ்-- நாமெல்லாம் மஞ்சள் பை மனிதர்கள் தம்பி:)))

Ravichandran Somu said...

ILA(@)இளா-- முதல் வருகைக்கு நன்றி விவசாயி! நியுயார்க்கிலிருந்து நம்ம ஊர் பாஸ்டனுக்கு வந்தீட்டீங்க போலிருக்கு! பாஸ்டன்ல விவசாயம் எப்படி இருக்கு?

Ravichandran Somu said...

எம்.எம்.அப்துல்லா-- நெகிழ்ச்சி... நன்றி தம்பி. பி.கு - முதலில் எழுத வேண்டாம் என்றுதான் எண்ணினேன். ஆனால் எழுதியதற்கு இரண்டு காரணங்கள்.
1. இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சொல்லிவிட்ட்டு அந்த பள்ளிக்கூடத்திற்கு நன்றிக் கடனாக செய்ததையும் கூறலாமே என்ற எண்ணம்.

2. இதை படிக்கும் யாரோ ஒருவருக்கு தான் படித்த கிராமத்து பள்ளிக்கூடத்திற்கும் அல்லது ஒரு கிராம மாணவனுக்கும் உதவலாம் என்றும் தோன்றலாமே?

Ravichandran Somu said...

எம்.எம்.அப்துல்லா--

//இரவி அண்ணே, இந்த ஜோசப் பய வாழ்க்கை மட்டும் உங்களை மாதிரியில்ல,குணமும்தான்.எனக்குத் தெரிஞ்சு நிறையபேரை படிக்க வச்சுகிட்டு இருக்கான்.//

தம்பி ஜோசப் செய்துகொண்டிருக்கும் அனைத்து சமுதாயப் பணிகளையும் நான் நன்கு அறிவேன். தாங்கள் மற்றும் ஜோசப் போன்ற இளைஞர்கள் நம் நம்பிக்கை நட்சத்திரங்கள்!

Ravichandran Somu said...

Thamizhan -- தந்தை பெரியார் காட்டிய வழியில் சமுதாய தொண்டுகள் பல ஆற்றி வரும் மருத்துவர் அய்யா அவர்களுக்கு மிக்க நன்றி!

Ravichandran Somu said...

அமுதா கிருஷ்ணா-- இந்த தொடரை தொடர்ந்து படித்து கருத்துகள் தெரிவித்தற்கு மிக்க நன்றி சகோதரி!

Ranjit-- நன்றி

Kalidoss-- மிக்க நன்றி ஐயா!

குடுகுடுப்பை said...

ரவி உங்களை என் நட்பு வட்டாரத்தில் இணைத்துக்கொண்டதில் மிகவும் பெருமிதப்படுகிறேன்.

குடுகுடுப்பை said...

1. இவ்வளவு தூரம் பள்ளிக்கூடத்தைப் பற்றி சொல்லிவிட்ட்டு அந்த பள்ளிக்கூடத்திற்கு நன்றிக் கடனாக செய்ததையும் கூறலாமே என்ற எண்ணம்.//

சில நேரங்களில் நல்லது செய்வதை விளம்பரம் செய்வது மேலும் சிலரை நல்லது செய்யவைக்கும். அந்த வகையில் நான் இந்த மாதிரி விளம்பரத்திற்கு ஏக ஆதரவாளன்.

Unknown said...

I am really proud of you, Ravi!!

வேறு எதுவும் சொல்லத் தோன்றவில்லை. எய்ம்ஸ் மூலம் பள்ளிகளுக்கு நீங்கள் செய்த உதவியை நான் அறிவேன்.

நீடு வாழ்க...

தமிழ் திரு said...

இதை படிக்கும்பொழுது "தான் வந்த பாதையை திரும்பி பார்க்கும்பொழுதுதான் மனிதன் முழுமையடைகிறான்" என்று எங்கோ படித்த வாசகம் ஞாபகம் வருகிறது. தொடர் முடித்து விட்டீர்களே அங்கிள் ... பள்ளியின் அனுபவங்களை மீண்டும் தந்ததற்கு நன்றி !

Anonymous said...

மிக்க மகிழ்ச்சி தலைவா...

நன் உங்களைவிட சிறியவன்தான்....நானும் ஊ ஒ தொ பள்ளியில் படித்தவன்...என் தந்தை வேறு ஒரு பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்தார்...தானியார் பள்ளிகளில் படிக்கவைக்கும் வசதியும் வாய்ப்பும் இருந்தும், என் தந்தை என்னை இந்த பள்ளியில் தான் படிக்கவைத்தார்...நன் தமிழ் வழிக்கல்வியில் தான் படிக்க வேண்டும் என்று பிடிவாதமாக இருந்தார்...

மறக்க முடியாத அனுபவங்கள்...

இதை போன்ற பள்ளியில் நான் படிக்காமல் இருந்திருந்தால் தமிழை இழந்திருப்பேன்...என்னுடைய ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரையிலான தமிழ் ஆசிரியர்களையும் அவர்கள் நடத்திய வகுப்புகளையும் மறக்க முடியாது...

உங்களின் நற்பணிகள் தொடரட்டும்...வாழ்த்துக்கள்...

Ponchandar said...

வணக்கம் ! ! அருமை..அருமை.... நல்லதொரு பள்ளியிலும், நல்ல ஆசிரியர்கள் துணையுடனும் உயர்ந்ததொரு இடத்தை அடைந்துள்ளீர்கள் ! ! என் தந்தையின் பணி நிமித்தம் 12 வகுப்புகளை ஒன்பது வெவ்வேறு பள்ளியில் படித்து முடித்தேன். அனைத்தும் அரசு பள்ளிகளே ! ! உங்கள் எழுத்துக்கள் என்னையும் எழுதத் தூண்டுகின்றன..

Unknown said...

cettappa unkala enaku putekum, eppo romba putekum. namba 2murai than meetpannerukom? 1 singapor gandhirestaurant.2vettikkadu.enrum etha nenaniukoludu!enrum unkalai nasekkum m.silambarasan...