வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Monday, December 06, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 6


மூன்றாம் வகுப்பில் பாஸாகி சுப்பிரமணியன் சாரின் பள்ளியின் இடப்பக்கத்திலிருந்து நான்காம் வகுப்பிற்கு முத்துகிருஷ்ணன் சாரின் பள்ளியின் வலப்பக்கத்திற்கு இடப் பெயர்ச்சி. முத்துகிருஷ்ணன் சார் சுப்பிரமணியன் சார் போல கோபக்காரர் கிடையாது. அமைதியானவர்.. சுப்பிரமணியன் சார் போல பசங்களை மூங்கில் கம்பால் அடிக்க மாட்டார். எப்போதாவது அடித்தாலும் காதைப் பிடித்து லேசாக திருகி முதுகில் கையால் மட்டும்தான் அடிப்பார்.

நான்காம் வகுப்பில்தான் முதன் முதலில் ஆங்கிலம், அறிவியல், வரலாறு+புவியியல் போன்ற பாடங்கள் அறிமுகம். முத்துகிருஷ்ணன் சார்தான் நான்காம் வகுப்பில் A,B,C,D… சொல்லிக்கொடுத்து எழுதவும் சொல்லிக்கொடுத்தார். நான்காம் வகுப்பு முடிந்த போது A,B,C,D படிக்க, எழுத மட்டும்தான் தெரியும். இன்று மூன்றாம் வகுப்பு படிக்கும் என் எட்டு வயது மகன் ஒரு நாளைக்கு ஒரு ஆங்கில கதை புத்தகத்தை சர்வ சாதாரணமாக ப்டிக்கிறான். அவனுடைய Vocabulary  எனனை மிரள வைக்கும். ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் என் பெயரை எழுத சொல்லிக்கொடுத்தார் முத்துகிருஷ்ணன் சார். மேலும் is, this, was போன்ற சிறு வார்த்தைகள் படிக்கத் தெரியும். அவ்வளவுதான் ஆங்கில அறிவு.

வெட்டிக்காட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஆறு, ஏழு வகுப்புகள் படித்த காலத்திலும் அங்கிருந்த ஆசிரியர்கள் ஆங்கில பாடத்தை சரியாக சொல்லித்தர வில்லை. இதனால்தான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் படித்தால் நான் முன்னேற முடியாது என்று நினைத்து ஆர்ட்ஸ் வகுப்பு எடுக்கும் புகழேந்தி சார் “டேய்... ரவி நீ நல்லா படிக்கிற பய... உங்க அப்பாகிட்ட சொல்லி மன்னார்குடி பள்ளிக்கூடத்துல சேர்ந்து படிடாஎன்றார். புகழேந்தி சார் சொன்னதிலிருந்து அப்பாவை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேர்க்க சொல்லி அனத்த ஆரம்பித்து விட்டேன். நான் சைக்கிள் ஓட்ட கற்றுகொண்ட பிறகு என் அண்ணனைப் போல் ஒன்பதாம் வகுப்பில் தேசிய மேல்நிலைப்பள்ளியில் என்னை சேர்க்கலாம் என்று சொல்லிக்கொண்டிருந்த அப்பா என் தொல்லை தாங்க முடியாமல் எட்டாம் வகுப்பில் என்னை மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் சேர்த்து விட்டார். ஆனால் என் ஆங்கில் அறியாமை காரணமாக காலாண்டுத் தேர்வில் காத்திருந்தது பெருத்த அவமானம்!

காலாண்டுத் தேர்வில் ஆங்கில பாடம் தவிர மற்ற பாடங்களில் எல்லாம் எடுத்த மதிப்பெண்கள் 85-க்கும் மேல். ஆனால் ஆங்கிலத்தில் எடுத்த மதிப்பெண்கள் 36 மட்டும். மூன்று மதிப்பெண்கள் வித்தியாசத்தில் நான் வகுப்பில் முதல் மாணவன்.  பர்ஸ்ட் ரேங் என்று சொல்லி பிராக்ரஸ் ரிப்போர்டை என் வகுப்பு ஆசிரியை இந்திரா டீச்சர் கொடுத்து. “நீ பர்ஸ்ட் ரேங்க் என்று சொல்ல வெட்கமாக இருக்கிறது... இன்னும் ஒரு மார்க் ஆங்கிலத்தில் குறைவாக எடுத்திருந்தால் சிகப்பு கோடு வாங்கியிருப்பே... 8A (English Medium) பர்ஸ்ட் ரேங்க் மாணவன் சீனிவாசன் ஆங்கிலத்தில் 98... நீயெல்லாம் கிராமத்தில் மாடு மேய்க்கதான் லாயக்கு என்று திட்டோ திட்டு என்று திட்டினார். பர்ஸ்ட ரேங்க் வாங்கியும் வெட்கித் தலைகுணிந்து அவமானத்தால் அழுத அந்த நாள் என்றும் மறக்க முடியாது. ஆனால் அதே இந்திரா டீச்சரிடம் எனது பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் வரலாறு+புவிவியல் பாடத்தில் மாநிலத்தில் முதல் மதிப்பெண்(98) மற்றும் 455 மதிப்பெண்கள் என்று மதிப்பெண்கள் பட்டியலை காட்டியபோது அவருடைய முகத்தில் ஏற்பட்ட மகிழ்ச்சி, தலையில் கை வைத்து ஆசிர்வதித்து அவர் பாராட்டிய அந்த நாளையும் மறக்க முடியாது.

என்னுடைய ஆங்கில அறிவுக்கு முத்துகிருஷ்ணன் சாரை எந்த விதத்திலும் குறை சொல்ல முடியாது. ஒரே ஆசிரியர் நான்கு, ஐந்தாம் வகுப்பு வகுப்புகளுக்கு எல்லா பாடங்களையும் எப்படி எடுக்க முடியும்? சுப்பிரமணியன் சார் வராத நாட்களில் ஒன்று, இரண்டு, மூன்றாம் வகுப்புகளையும் பார்த்து கொள்ள வேண்டும். மதிய உணவு சமையல் பணிகளையும் கவணிக்க வேண்டும். அரசு தொடக்க பள்ளிகளின் நிலைமை இன்றும் இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் கிராமங்களில் படித்து வரும் ஒவ்வொரு மாணவனுக்கும் ஆங்கிலம் மிகப் பெரிய சவாலாக இருக்கிறது. நகரத்தில் படிக்கும் மாணவர்கள் ஆங்கிலம் பேசுவதைப் பார்த்தவுடன் பயந்து தாழ்வு மணப்பான்மைக்கு அவர்களை இட்டுச் செல்கிறது.

முத்துகிருஷ்ணன் சார் பள்ளியை ஐந்தாம வகுப்பு மாணவகளைக் கொண்ட ஒர் அமைச்சரவை அமைத்து நிர்வாகம் செய்வார். முதல் மந்திரி, உணவு மந்திரி, பாதுகாப்பு மந்திரி, துப்புரவு மந்திரி, விளையாட்டு மந்திரி என்ற ஐந்து மந்திரிகள் கொண்ட மந்திரி சபை. ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்குதான் மந்திரி பதவி என்ற விதிமுறையை மாற்றி நான்காம் வகுப்பு படித்த எனக்கு பாதுகாப்பு மந்திரி பதவி கொடுத்து மந்திரிசபையில் என்னை சேர்த்து ஆச்சரியப்படுத்தினார். பள்ளியில் ஏதாவது பொருள் தொலைந்தால் பாதுகாப்பு மந்திரியின் பொறுப்பு என்பதால் சின்சியர் சிகாமணியான நான் என் “பாதுகாப்பு மந்திரிபொறுப்பை செவ்வணே செய்து முத்துகிருஷ்ணன் சாரிடம் நல்ல பெயர் எடுத்தேன்.  

ஐந்தாம் வகுப்பில் எதிர்பார்ததது போல் “முதல் மந்திரிபொறுப்பை என்னிடம் கொடுத்தார் முத்துகிருஷ்ணன் சார். முதல் மந்திரி என்பதால் நிறைய பொறுப்புகள். எனது முதல் மந்திரி பணிகள்...

- வழக்கம்போல் நானும் என் நண்பன் “உணவு மந்திரிஎழில்மன்னனும் எட்டு மணிக்கு பள்ளி வந்து விடுவோம். பள்ளியின் சாவி என்னிடம் இருக்கும். பள்ளியைத் திறந்து எல்லா பொருட்களையும் எடுத்து அதற்குறிய இடங்களில் வைப்போம்.

- தண்ணீர் குடிக்கும் டிரம்மில் தண்ணீர் நிரப்பி வைக்க வேண்டும்.

- என் வகுப்பு தோழிகள் குப்பம்மா, சித்ரா ஆகியோர் இருவரும் 8.30 மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு வர வேண்டும் என்பது என் கட்டளை. அவர்கள் வந்தவுடன் பள்ளியையும், பள்ளிக்கு முன்பிருக்கும் பிரேயர் திடலையும் அவர்கள் கூட்டி, சுத்தம் செய்ய்ம் பணியை மேற்பாடுவையிடுதல்.

- ஆசிரியர்கள் இருவரும் 9.30 மணி பள்ளிக்கூடத்திற்கு 9.15 மணியளவில் சைக்கிளில் அவர்களுடைய பக்கத்து கிராமங்களான மூவாநல்லூர், எட-கீழையூர் ஆகியவற்றிலிருந்து வருவார்கள். பள்ளி புதுப்பொலிவுடன் இருப்பதைப் பார்த்து முத்து கிருஷ்ணன் சார் மகிழ்ச்சியுடன் ஒரு சில நாட்களில் முதுகில் தட்டி கொடுப்பார்.

- காலை 11 மணியளவிலும், மதியம் 3 மணியளவிலும் ஆசிரியர்கள் இருவருக்கும் டீக்கடையிலிருந்து டீ வாங்கி கொடுக்க வேண்டும்.

- மதிய உணவு சமைக்க வரும் “உருட்டிகிழவி பல நாட்கள் மட்டம் போட்டு விடுவார். அந்த நாட்களில் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகள் சமையல் செய்வதை மேற்பார்வையிட வேண்டும்.

- சுப்பிரமணியன் சாரின் வயல்கள் எங்கள் வயல்களுக்கு பக்கத்தில் இருக்கிறது. சாரின் வயலில் நடவு, அறுவடை போன்ற வேலைகள் நடைபெறும் நாட்களில் வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு டீ, வடை வாங்கி கொடுத்து வரச் சொல்லி சுப்பிரமணியன் சார் கொடுக்கும் வேலைகளை செய்ய வேண்டும்.

- பள்ளி முடிந்தவுடன் பாதுகாப்பு மந்திரி சந்திரசேகரன், என் நண்பன் எழில்மண்ணன் ஆகியோர்கள் உதவியுடன் எல்லா பொருட்களையும் பள்ளியின் உள்ளே எடுத்து வைத்து விட்டு பள்ளியை பூட்டி சாவியை எடுத்து கொண்டு ஆசிரியகளுக்கு விடை கொடுத்து விட்டுதான் வீட்டிற்கு வருவேன்.                           
                                              -- பாடங்கள் தொடரும்...

19 comments:

Ravichandran Somu said...

Test

எம்.எம்.அப்துல்லா said...

அண்ணே, நான் காலேஜில் சேர்ந்த முதல்நாள் எங்க எச்.ஓ.டி வாட்ஸ் யுவர் ஃபாதர்னு கேட்டாரு. நான் பொறுப்பா மை ஃபாதர் நேம் இஸ் இஸ்மாயில்னு பதில் சொன்னேன்.கிராமப்புறத்தில் இருந்து செல்பவர்களுக்கு ஆங்கிலம் என்றும் சவால்தான்.ஆனா கத்துக்க ஆரமிச்ச பின்னாடி நம்மகிட்ட யாரும் நிக்க முடியாது என்பதும் உண்மை.

அமுதா கிருஷ்ணா said...

முன்பெல்லாம் ஆங்கில பாடத்தில் டிகிரி வாங்கியவர்களை ஆங்கில ஆசிரியராக நியமிக்கவில்லை. ஆசிரியருக்கே ஆங்கிலம் தெரியாமல் எப்படி மாணவர்களுக்கு போதிப்பார்கள்.

jay said...

ரவி நான் உங்கள் வெட்டிகாடு கருத்துக்களை மிகவும் ரசிக்கிறேன். இவ்வளவு அருமையாக உங்கள் கருத்தை கூறுகிறீர்கள்.

தினேஷ்குமார் said...

அனுபவத்தை அருமையாக பகிந்துள்ளீர்கள் அண்ணே

மாணவன் said...

அருமை சார்,

அழகான உணர்வுகளுடன் உங்களது பள்ளிப் பருவ நிகழ்வுகளை பதிவு செய்து பகிர்ந்து வருகிறீர்கள் சூப்பர்

தொடரட்டும் உங்கள் பொன்னான பணி

வாழ்க வளமுடன்

நன்றி
என்றும் நட்புடன்
மாணவன்

மாணவன் said...

//தஞ்சைத்தரணியில் மன்னார்குடிக்கு அருகிலுள்ள வெட்டிக்காடு கிராமத்தைச் சேர்ந்த புலம் பெயர்ந்த அமெரிக்கத் தமிழன். தற்போது வசிப்பது சிங்கப்பூர். தொலைத் தொடர்பு பொறியாளர்.//

நமக்கு அரியலூர் மாவட்டத்தில் திருக்கோணம் என்ற கிராமம் சார் “பணத்தைத் தேடி பாசத்தை தொலைத்து” வாழும் நண்பர்களில் நானும் ஒருவன் தற்பொழுது பிழைப்பிற்காக இங்க சிங்கையில் பணிபுரிகிறேன் சார்,

இங்கு நான் பணி புரியும் கம்பெனியில் நிறைய நண்பர்கள் தஞ்சை மன்னார்குடியை சேர்ந்தவர்கள் பணிபுரிகிறார்கள்

உங்களது தளத்துக்கு வந்தது மிகவும் மகிழ்ச்சி சார்

தொடரட்டும் உங்கள் பணி...

நன்றி

ஜோதிஜி said...

எழில் மன்னன் இப்போது என்ன செய்து கொண்டுருக்கிறார்? எப்படி ஒரு இது போன்ற வித்யாசமான பெயர்?

Unknown said...

//ஐந்தாம் வகுப்பில் ஆங்கிலத்தில் என் பெயரை எழுத சொல்லிக்கொடுத்தார் முத்துகிருஷ்ணன் சார்.//

நானும் ஐந்தாம் வகுப்பில்தான் பெயரை ஆங்கிலத்தில் எழுதக் கற்றுக் கொண்டேன்!

கொசுறு - என் அப்பாவும் தேசியப் பள்ளியில்தான் படித்தார்!

@அப்துல்லா
//கிராமப்புறத்தில் இருந்து செல்பவர்களுக்கு ஆங்கிலம் என்றும் சவால்தான்.ஆனா கத்துக்க ஆரமிச்ச பின்னாடி நம்மகிட்ட யாரும் நிக்க முடியாது என்பதும் உண்மை.//

என் அனுபவத்திலும் கண்ட உண்மை இது. பள்ளி மாறும்போதோ, கல்லூரியில் சேரும்போதோ வரும் அந்தத் தாழ்வு மனப்பான்மை எமனை ஜெயித்து விட்டால், கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்!!

தமிழ் திரு said...

//காலை 11 மணியளவிலும், மதியம் 3 மணியளவிலும் ஆசிரியர்கள் இருவருக்கும் டீக்கடையிலிருந்து டீ வாங்கி கொடுக்க வேண்டும்//

எங்கள் ஊர் ஊராட்சி பள்ளியிலும் இப்படிதான் நடக்கும்.நானும் பார்த்து வேதனை பட்டிருக்கிறேன் .

எம்.எம்.அப்துல்லா said...

// எங்கள் ஊர் ஊராட்சி பள்ளியிலும் இப்படிதான் நடக்கும்.நானும் பார்த்து வேதனை பட்டிருக்கிறேன் .

//

இதில் வேதனைப்பட ஒன்றும் இல்லை.நாங்கள் அதை அப்போது மகிழ்வுடனே செய்தோம்.இப்போதும் ஆசிரியருக்கு பணிவிடை செய்ததை நினைத்தால் மகிழ்ச்சிதான் வருகின்றது.உண்மையா இல்லையா என இரவி அண்ணனே சொல்லட்டும்.

Anonymous said...

மன்னார்குடி ஏன் இப்படி ஆனது?
http://ta.indli.com/user/vaduvursomu

Ravichandran Somu said...

எம்.எம்.அப்துல்லா-- நாம் இருவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள்:)))

அமுதா கிருஷ்ணா-- கருத்துக்கு நன்றி சகோதரி

jay -- நன்றி

dineshkumar-- நன்றி

Ravichandran Somu said...

மாணவன்-- நன்றி மாணவன் அப்துல் கலாம் சார்:)

ஜோதிஜி-- எழில்மன்னன் பற்றிய விவரங்கள் பகுதி-2 ல் உள்ளது.

http://vssravi.blogspot.com/2010/11/part-2.html

தற்போது உங்கள் ஊரில்தான் வேலை பார்த்து வருகிறான்.

Ravichandran Somu said...

தஞ்சாவூரான்--
//என் அனுபவத்திலும் கண்ட உண்மை இது. பள்ளி மாறும்போதோ, கல்லூரியில் சேரும்போதோ வரும் அந்தத் தாழ்வு மனப்பான்மை எமனை ஜெயித்து விட்டால், கிராமங்களில் இருந்து வரும் மாணவர்கள் பின்னிப் பெடல் எடுத்து விடுவார்கள்!!//

நிதர்சனமான உண்மை!

Ravichandran Somu said...

தமிழ் திரு-- தம்பி அப்துல்லா சொன்னது போல் வருத்தப்பட தேவையில்லை. உண்மையில் நான் ஆசிரியர்கள் சொல்லும் வேலைகளை மிக்க மகிழ்ச்சியுடன்தான் செய்தேன். முக்கியமாக இந்த வேலைகளை செய்ததனால் என்னுடைய தன்னம்பிக்கைதான் உயர்ந்தது. காரணம்... ஆசிரியர்கள் மற்ற மாணவர்களைவிட எனக்கு முக்கியத்துவம் கொடுத்ததால்!

Ravichandran Somu said...

Anonymous-- நன்றி... படிக்கிறேன்.

ரோஸ்விக் said...

நல்லாயிருக்குண்ணே..

ரொம்ப நாளா எனது கிராமத்து படிப்பு அனுபவங்களையும் எழுதனும்னு நினைச்சு கிடப்பில் போட்டிருக்கேன். விரைவில் எழுதுகிறேன்.

guna said...

u r simply great mama. Though u r from a small village,u reached a Pinnacle of Success by Studies and Career. Thumbs Up! Sorry I dont have tamil software to type in.