”கொட்டாப்புலி காளைகள்” நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் வீட்டிலிருந்த வண்டி மாடுகளின் செல்லப்பெயர். அப்பா நெல் வியாபாரம் செய்து வந்ததினால் அந்தக் காலத்தில் அவருடைய வியாபாரத்திற்கு மூலதனம் வண்டி மற்றும் காளை மாடுகள். அப்பா எப்போதும் நல்ல விலை கொடுத்து வண்டி மாடுகள் வாங்கி வைத்திருப்பார். எங்கள் வீட்டிலிருந்த மாடுகளிலேயே மறக்க முடியாத மாடுகள் “கொட்டாப்புலி காளைகள்” தான்.
ஒருமுறை அப்பாவின் நண்பர் சைவராசு ஆலம்பிரியருக்கு மாடுகள் வாங்க சைவராசு சித்தப்பாவுடன் பட்டுக்கோட்டை சந்தைக்கு சென்ற அப்பா பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து ஒரே அளவில் இரண்டு கன்றுக்குட்டிகளை வாங்கி வந்திருந்தார். இதைப்பார்த்த பெரியம்மா
“ஏன்யா.. இந்த கன்னுக்குட்டிகளை வாங்கிட்டு வந்திருக்கே?”
“பாத்தவுடனே.. புடிச்சிருந்தது.. அதான் சைவராசு கிட்ட பணம் வாங்கி வாங்கிட்டேன்டி. பின்னாடி நல்ல வண்டி மாடுகளா.. வரும்டி”
இருபது வயதிலிருந்து வண்டி மற்றும் மாடுகள் வைத்து வேலை செய்து வந்ததால் அப்பா எப்போதும் வண்டி மாடுகளை குழந்தைகள் போல்தான் பராமரிப்பார். அதனால் பட்டுக்கோட்டை சந்தையிலிருந்து வாங்கி வந்த காளை கன்னுக்குட்டிகளையும் குழந்தைகளைப்போல் வளர்க்க ஆரம்பித்தார். எங்கள் வீட்டில் வீட்டு நிர்வாகம் மற்றும் சமையல் செய்வது பெரியம்மா. வெளி வேலைகள் மற்றும் மாடுகளை பராமரிப்பது அம்மாவின் வேலை. எனவே அம்மாவும் கன்னுக்குட்டிகளை நன்றாக வளர்த்தார்.
எங்கள் வீட்டில் வேலை பார்த்த கைலாசத்தின் மகன் நாகநாதன் எட்டு வயதில் எங்கள் வீட்டிற்கு வேலைக்கு வந்து சேர்ந்தார். அப்பா மற்றும் அம்மாக்கள் நாகநாதனை பிள்ளை போல் பாவித்து வேலை வாங்குவார்கள். எங்களைப் பொருத்தவரையில் நாகநாதன் அண்ணன் மாதிரி. நாகநாதனும் கன்னுக்குட்டிகளுக்கு புல்,தீவனம் வைத்து நன்றாக வளர்த்தார்.
வைக்கோல், புல், கடலைச்செடி, பருத்திக்கொட்டை+புண்ணாக்கு+தவிடு கலந்த தீவனங்கள் என்ற அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரின் வளர்ப்பால் கன்னுகுட்டிகள் நன்றாக வளர்ந்து வந்தன. சிறுவர்களாகிய நாங்கள் அதன் பக்கத்தில் சென்றால் கோபத்துடன் முட்ட ஆரம்பித்துவிடும். எனவே நாங்கள் கன்னுக்குட்டிகளைப் பார்த்து பயப்படுவோம். ஒன்றாக வளர்ந்து வந்த இரண்டு கன்னுக்குட்டிகளுக்கும் ஒன்றன்மேல் ஒன்றிற்கு அளவு கடந்த பாசம். ஒன்றை ஒன்று நாக்கினால் நக்கிக்கொள்ளும். விளையாட்டாக முட்டிக்கொண்டு வயல்வெளிகளில் ஓடி விளையாடும். அம்மாவின் குரல் கேட்டால் எங்கிருந்தாலும் அம்மாவை நோக்கி கன்னுகுட்டிகள் ஓடி வந்துவிடும்.
கன்னுக்குட்டிகள் வளர.. வளர.. அப்பா, அம்மா, நாகநாதன் ஆகிய மூவரைத்தவிர வேறு யாராவது கிட்டே சென்றாலும் முட்ட ஆரம்பித்து விட்டன. காளைகளின் கோபத்தைப் பார்த்து அம்மா காளைகளுக்கு வைத்த செல்லப்பெயர் “கொட்டாபுலிகள்”.
கன்னுகுட்டிகள் வளர்ந்து காளைகள் ஆனவுடன் அப்பாவும், நாகநாதனும் ஏரில் பூட்டி பழக்கினார்கள். இரண்டு காளைகளும் நெருங்கிய நண்பர்கள் என்பதால் உடனே ஏரில் நன்றாக பழகி விட்டார்கள். காளைகள் நன்றாக வளர்ந்தவுடன் அப்பாவும், நாகநாதனும் வண்டியில் பூட்டி வண்டி பழக்கினார்கள். ஏர் உழ கற்றுக்கொண்டது போல வண்டி இழுக்கவும் காளைகள் உடனே பழகிவிட்டன.
இரண்டு மாடுகளில் ஒரு மாட்டின் கொம்பு உயரமாக, உடம்பு சற்று ஒல்லியாக இருக்கும். இதன் பெயர் “பெரிய கொட்டாப்புலி” இன்னொரு மாடு சற்று குண்டாக இருக்கும். இந்த மாட்டின் பெயர் “சின்ன கொட்டாப்புலி”. அப்பா, அம்மா மற்றும் நாகநாதன் ஆகிய மூவரைத் தவிர யாரவது கிட்டே நெருங்கினால் முட்ட வந்து துரத்த ஆரம்பித்து விடும். அவ்வளவு கோபக்கார காளைகள்.
“வக்காலி.. யாவாரி மாட்டை யாரலயும் புடிக்க முடியலடா” என்று ஊரில் பேசிக்கொள்வார்கள்.
மாட்டு பொங்கலன்று அப்பா கொட்டாப்புலி காளைகளை நன்றாக அலங்கரித்து பிடித்துக்கொண்டு கம்பீரமாக வலம் வருவார். சில சமயங்களில் மாடுகளின் கொம்பில் நூரு ரூபாய் பணத்தை பையில் வைத்து கட்டி “வக்காலி... தைரியம் இருக்கிறவன் பணத்தை எடுதுக்கொள்ளுங்கடா” என்பார். யாரும் பணத்தை எடுத்தது கிடையாது!
இரண்டு மாடுகளும் எவ்வளவு பாரம் வண்டியில் வைத்தாலும் அனாயசமாக இழுத்துச் செல்லும். மன்னார்குடியிலிருந்து ஆறு கிலோ மீட்டர்கள் தொலைவிலிருக்கும் எங்கள் ஊரின் வழி மாடுகளுக்கு அத்துப்படி. சில சமயங்களில் இரவு நேரத்தில் மன்னார்குடி தெப்ப குளத்தை தாண்டியவுடன் அப்பா வண்டியின் உள்ளே படுத்து தூங்கி விடுவார். மாடுகள் நேராக.. வீட்டிற்கு வந்துவிட்டு கத்தி அப்பாவை எழுப்பி விடும். அவ்வளவு புத்திசாலி காளைகள்!
இந்தக் கதையின் முக்கிய காதாபாத்திரம்... திண்டாயுதம் ஆலம்பிரியர். திண்டாயுதம் அண்ணன் பெரியப்பா ”கடுப்படி” மருதமுத்து ஆலம்பிரியரின் ஒரே மகன். வெட்டிக்காட்டின் சண்டியர். நல்ல திடகாத்திரமான உடம்பு, முருக்கு மீசை, ஒரு கையில் அருவாள், மறு கையில் சுளுக்கி சகிதமாக அண்ணன் வயலிலுள்ள களத்திற்கு காவலுக்கு செல்வதைப் பார்த்தால் மலையூர் மம்பட்டியான் மாதிரி இருப்பார். சிறுவர்களாகிய எங்களுக்கெல்லாம் திண்டாயுதம் அண்ணன் ஒரு பெரிய ஹீரோ!
சண்டியர் என்பதால் ஊரில் எல்லோரையும் வாடா, போடா, வாடி, போடி என்றுதான் கூப்பிடுவார். “எலேய்... சித்தப்பா... ஏட்டி பெரியம்மா” என்று மரியாதையுடன்தான் கூப்பிடுவார். சண்டியர் என்பதால் ஊரில் யாரும் கண்டு கொள்ள மாட்டார்கள். யார் சொன்னாலும் கேட்க மாட்டார். எங்கள் கிராமத்தின் நாட்டாமை பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் சொன்னால் கொஞ்சம் கேட்பார். பெரியப்பாவின் நெருங்கிய நண்பர் ”கடுப்படி” பெரியப்பாவிடம் வந்து “எலேய்... ராமா...நீ சொன்னாத்தாண்டா அவன் கேட்பான்..நீ அவன்கிட்ட சொல்லுடா” என்பார்.
அண்ணன் கம்பு (சிலம்பம்) சுற்றுவதில் கில்லாடி. மாட்டுப்பொங்கல் அன்று அண்ணன் விளையாட்டுத் திடலில் இறங்கி கம்பு சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றார் என்றால் அண்ணனை எதிர்த்து சிலம்பம் விளையாட பயந்து யாரும் வர மாட்டார்கள். எனக்கு தெரிந்து அண்ணனுடன் சிலம்பம் விளையாண்டவர்கள் இரண்டு பேர் மட்டும்தான். பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் மற்றும் தெக்கித்தெரு சின்னபுள்ள.
ஒருமுறை திண்டாயுதம் அண்ணன் மாட்டு வண்டியில் மரவள்ளி கிழங்கு விற்பதற்காக ராயபுரம் சென்றபோது அந்த ஊர் டீ கடையில் அண்ணனுக்கும் ஊர்க்காரர்களுக்கும் ஏற்பட்ட சண்டையில் கடையின் பக்கத்தில் கிடந்த கம்பை எடுத்து சுற்றி ஏழு பேரை அடித்து நொருக்கிவிட்டு ஓடி வந்த கதை சுற்று வட்டார கிராமங்களில் புகழ்பெற்ற சண்டியர் கதை. பிறகு பெரியப்பா சென்று பஞ்சாயத்து பேசி சமாதனம் செய்து வண்டியை ராயபுரத்திலிருந்து மீட்டுக்கொண்டு வந்தார்.
”எந்த பொருப்பும் இல்லாமல் சண்டியர்தனம் பண்ணிக்கிட்டு இருக்கியேயடா... வீட்டில் அரிசி இல்லை.. பருதிக்கோட்டை மில்லில் போய் அரிசி அரைச்சிகிட்டு வாடா” என்று ஒரு நாள் காலையில் திண்டாயுதம் அண்ணனை பெரியம்மா திட்டிவிட்டது. அந்த கோபத்தில் நேராக எங்கள் வீட்டிற்கு வந்தார். காலை மணி பத்து மணியிருக்கும். நான் அன்று பள்ளி விடுமுறை என்பதால் வீட்டிலிருந்தேன். பெரியம்மா வாசலில் நெல் காய வைத்துக்கொண்டிருந்தார்.
“ஏட்டீ... சின்னம்மா... ஒங்க வண்டியும், மாட்டையும் கொடுடீ. பருத்திக்கோட்டைக்கு போய் நெல் அரைச்சிக்கிட்டு வர்ரேன்”
கொடுக்க முடியாது என்று சொன்னால் சண்டை போடுவானே என்று பெரியம்மா நினைத்துக்கொண்டு “எங்க மாட்டைதான்... யாரும் புடிக்க முடியாதுன்னு ஒனக்கு தெரியுமேடா... முடிஞ்சா ஓட்டிக்கிட்டு போடா” என்றார்.
“என்னடி... பெரிய கொட்டாப்புலி மாடு.. நான் ஓட்டிக்கிட்டு போறேன்டி” என்று சொல்லிவிட்டு வீட்டின் எதிர்புறம் உள்ள வைக்கோல் போரில் கட்டியிருந்த கொட்டாப்புலி காளைகளை நோக்கி சென்றார். நல்ல காலை வெயில்... அண்ணன் சென்று காளைகளைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்தவுடன் கொட்டாப்புலி காளைகள் ரெண்டும் அண்ணனை இழுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டியை நோக்கி ஓடி... தண்ணீர் தொட்டியில் தண்ணீர் குடிக்க ஆரம்பித்தன.
“ஏட்டீ... சின்னம்மா.. என்னமோ.. பெரிய..கொட்டாபுலி மாடு.. புடிக்க முடியாதுன்ன... யாருகிட்டடி... திண்டாயுதம் ஆலம்பிரியன்கிட்டவா?”
தாகம் தீர தண்ணீர் குடித்து முடித்த கொட்டாப்புலி காளைகள் “யாருடா இது... நம்மள புடிச்சிக்ருக்கிற புது ஆளு” என்று பார்த்தன. கோபத்தின் உச்சிக்கு சென்ற சின்ன கொட்டாப்புலி அப்படியே இரண்டு அடிகள் பின் சென்று சீறி வந்து அண்ணனை முட்டி பக்கத்திலிருந்த கள்ளி செடிகள் நிறைந்த வேலியில் வீசியது. சற்றும் இதை எதிர்பார்க்காத அண்ணன் சுதாரித்து எழுந்து “ஏய்.. ஏய்” என்று அதட்டிக்கொண்டு எழுந்து நின்றார். இதைப்பார்த்த பெரியம்மா “அய்யோ...அய்யோ” என்று கத்த ஆரம்பித்துவிட்டார்.
“ஏய்..சின்னம்மா... ஏன்டீ இப்ப கத்துற?” என்று சொல்லிக்கொண்டு ஒரு அடி முன்னால் எடுத்து வைத்தார். இந்த முறை பெரிய கொட்டாப்புலி சீறிக்கொண்டு வந்து முட்டி மறுபடியும் அண்ணனை வேலியில் தள்ளியது.
“பாவி... பயலே... எந்திரிச்சு வீட்டுக்குள்ள ஓடிப்போடா...அய்யோ கொல்லப்போகுதே... கொல்லப்போகுதே.. எல்லாரும் ஓடி வாங்கலேன்” என்று கத்திய பெரியம்மாவின் சத்தம் கேட்டு பக்கத்து வீட்டு பொம்பளைங்க எல்லாம் ஓடி வந்து சத்தம் போடுகிறார்கள்.
அண்ணன் சண்டியர் என்பதால் தன்னுடைய வீரம் பழிக்கப்படும் என்ற காரணத்தால் எழுந்து ஓடாமல் அப்படியே வேலியை பிடித்தபடியே நிற்கிறார். அந்த சமயத்தில் வடக்கே நல்ல தண்ணீர் கிணத்தில் தண்ணீர் தூக்கிக்கொண்டு முச்சந்திக்கு வந்தார் அம்மா. அம்மாவைப் பார்த்த பெண்மனி ஒருவர் “ஏஏஏ... குன்டு... கொட்டாப்புலி மாடுகள் திண்டாயுதத்தை கொல்ல போவுதுடீ....” என்று சத்தம் போட்டார்.
தெருவில் நிற்கும் கொட்டாப்புலி மாடுகள்.. வேலியில் கிடக்கும் திண்டாயுதம் அண்ணன்... இதைப் தூரத்திலிருந்து பார்த்தவுடன் நிலைமையை சற்றென்று புரிந்துகொண்ட அம்மா “ஏஏஏ... கொட்டாபுலிகளா... இங்க வாங்கடா....” என்று சத்தம் போட்டார்.
அம்மாவின் சத்தம் கேட்டு திரும்பி பார்த்தன கொட்டாப்புலி காளைகள். தூரத்தில் அம்மாவைப் பார்த்தவுடன்.. காளைகள் ரெண்டும் அம்மாவை நோக்கி ஓடின. வலது கையில் வைத்திருந்த தண்ணீர் குடத்தை கீழே வைத்துவிட்டு கையால் இரண்டும் மாடுகளையும் தடவிக் கொடுத்தார். காளைகள் இரண்டும் அம்மாவின் இரு பக்கங்களிலும் நடந்து வர இடுப்பில் ஒரு குடத்துடனும், கையில் ஒரு குடத்துடனும் அம்மா ஜான்சிரானி மாதிரி நடந்து வந்த அந்த காட்சி இன்றும் என் மனக்கண்ணில் நிற்கிறது.
திண்டாயுதம் அண்ணன் எதுவும் சொல்லாமல் எழுந்து போய்விட்டார். அதற்கு பிறகு அண்ணன் மற்ற பெண்மணிகளையெல்லாம் வழக்கம்போல் “வாடி... போடி.” என்றுதான் கூப்பிட்டு வந்தார். அம்மாவை மட்டும் அவர் அப்படி கூப்பிட மாட்டார்!