வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Wednesday, June 23, 2010

தூசி தட்டுதல்.....


நான்கு வருடங்களுக்குப் பிறகு எனது வலைப்பதிவை தூசி தட்டி எழுதலாம் என்ற எண்ணம். அதற்கு இரண்டு காரணங்கள்.

1. சிங்கப்பூர் வலைப்பதிவு நண்பர்களின் மணற்கேணி புத்தக வெளியீட்டின்போது ஏற்பட்ட ஓர் அனுபவம்
2. எனது MBA படிப்பு ஜூன் 20ம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது

நானும் தமிழ் வலைப்பதிவாளரான கதை:


2003ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஓர் நாள்... என் கல்லூரி நண்பன் கரு.மலர்ச்செல்வனுடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது அமெரிக்க தமிழ் சங்கப்பேரவைப் பற்றியும் (FETNA), பேரவை வருடாந்தோரும் ஜூலை 4 நீண்ட வார இறுதியில் நடத்தும் விழா பற்றியும் கூறினான். இந்த வருடம் நியுஜெர்சியில் விழா நடக்க இருக்கிறது நான் போகிறேன் நீயும் வாடா என்றான். அந்த சமயத்தில் மனைவியும் குழந்தைகளும் இந்தியாவிற்கு கோடை விடுமுறைக்காக செல்லவிருப்பதால் நானும் வருகிறேன் என்று கூறினேன். 2003ம் ஆண்டு FETNA விழா நான் கலந்துகொண்ட முதல் விழா. அந்த விழாவில் ஏற்பட்ட பரவச அனுபவங்கள் ஏராளம். குறிப்பாக எமது தஞ்சைத்தரணி கலைஞர்கள் நந்தன் கதைநாடகத்தில் நடத்திக்காட்டிய தப்பாட்டம், கரகாட்டம் போன்ற கலைகளை பத்து வருடங்களுக்குப் பிறகு அமெரிக்காவில் பார்த்து மெய் சிலிர்த்துப் போனேன்.

அந்த விழாவில் நடந்த “கணணியில் தமிழ்என்ற ஓரு கருத்தரங்கில் முரசு அஞ்சல் மூலமாக கணணியில் எழதுவது எப்படி என்று அறிந்துகொண்டேன். அந்த கருத்தரங்கில் திண்ணை ஆசிரியர் கோபல் ராஜாரம் அவர்கள் திண்ணை.காம் (www.thinnai.com) இணையப் பத்திரிக்கைப் பற்றியும் எவ்வாறு அவர்கள் புதிய எழுத்தாளர்களை ஊக்குவிக்கிறார்கள் என்பது பற்றியும் எடுத்துக் கூறினார். FETNA விழாவில் நான் மிகவும் மதிக்கும் எங்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் வா.செ.குழந்தைசாமி அய்யா மற்றும் நண்பர்கள் பலருடன் அறிமுகப் படுத்திக்கொண்டு பேசும் வாய்ப்பு கிடைத்தது.

விழா முடிந்து பாஸ்டனுக்கு திரும்பியவுடன் செய்த முதல் வேலை. முரசு அஞ்சலை டவுன்லோடு செய்து கம்பூட்டரில் நிறுவியது. கல்லூரிக் காலத்தில் கிறுக்கியவற்றில் சேமித்து வைத்திருந்த பழைய நோட்டுப் புத்தகங்களை தேடி எடுத்து “உழவன்என்ற கவிதையை தட்டுத்தடுமாறி முரசு எடிட்டரில் டைப் அடித்து பிரிண்ட் அவுட் எடுத்து பார்த்தபோது ஏதோ ஒரு மிகப்பெரிய புராஜக்டை வெற்றிக்கரமாக முடித்ததது போன்ற ஆனந்தம்!

FETNA விழாவில் திண்ணை ஆசிரியர் கோபால் ராஜராம் அவர்கள் கூறிய வார்த்தைகள் நினைவுக்கு வந்தன. கல்லூரி காலத்தில் எழுதிய முதல் சிறுகதையை மூன்று நாட்கள் கணணியில் டைப் செய்து திண்ணைக்கு அனுப்பி வைத்தேன். ஆனால் அந்தக் கதையை வெளியிடுவார்கள் என்ற நம்பிக்கை அவ்வளவாக இல்லை. அடுத்த திண்ணை இணைய இதழில் என்னுடைய கதையை அதற்கேற்ற புகைப்படத்துடன் வெளியிட்டுயிருந்தார்கள். அதைப் பார்த்து அடைந்த மகிழ்ச்சியை விவரிக்க வார்த்தைகள் கிடையாது. அந்தக் கதை இங்கே.பிறகு ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து கதை, கவிதைகள் என்று அனுப்பிக்கொண்டிருந்தேன். திண்ணையில் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. அதே சமயத்தில் திண்ணையில் எனது சிங்கப்பூர் நண்பர் நம்பி எழுதுவதை தெரிந்துகொண்டு அவரை தொலைபேசியில் அழைத்து பேசிக்கொண்டிருந்தபோது அவர் அழைத்து வந்து இட்ட இடம் “மரத்தடியாஹூ குழுமம். கதை, கவிதைகள், கலாய்த்தல்கள், மொக்கைகள் என்று களைகட்டிய இடம் மரத்தடி. மரத்தடி ஆரம்ப நாடகளை என்றும் மறக்கமுடியாது. இப்போதைய வலைப்பதிவு ஜாம்பவான்களான PKS, பாஸ்டன் பாலா, ஆசிப், ஆசாத் பாய், KVR, பிரபு ராஜதுரை, ஹரன்பிரசன்னா, மதி கந்தசாமி, உஷா, துளசி டீச்சர் மற்றும் நண்பர்களை மரத்தடியில் சந்த்தித்தேன். ராத்திரியில் கம்யூட்டரில் உட்கார்ந்து இன்னும் என்ன பண்றீங்க? என்ற எனது தங்கமணியின் திட்டல்கள்களை கேட்டுக்கொண்டே ஒரு ஆறு மாதம் இந்தப் பயணம் தொடர்ந்தது. அதன்பிறகு பெண்டு நிமிர்த்தும் Start-up Company  வேலை காரணமாக மரத்தடி, திண்ணை மறந்து பொனது. 2005-ல் மரத்த்டி நண்பர்கள் எல்லோரும் வலைப்பதிவு ஆரம்பித்து கலக்கிக் கொண்டிருந்தார்கள். 2005 இறுதியில் நானும் ஒரு வலைப்பதிவை ஆரம்பித்து தமிழ்மணத்தில் இணைத்தேன். ஆனால் ஒரு சில பதிவுகளுடன் நின்று போனது. 2006 இறுதியில் பாஸ்டனிலிருந்து சிங்கப்பூருக்கு கம்பெனி டிரான்ஸ்பரில் இடம் பெயர்ந்தேன். பதிவுகள் எழுதவில்லையென்றாலும் 2005 முதல் நேரம் கிடைக்கும்போது தமிழ்மணம் வழியாக பதிவுகளை தொடர்ந்து படித்து வருகிறேன்.

சிங்கப்பூர் பதிவுலக நண்பர்களைச் சந்திக்கும் பொருட்டு ஒரு சில பதிவர் சந்திப்புகளில் கலந்துகொண்டேன். அவ்வாறாகத்தான் மே மாதத்தில் மண்ற்கேனி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டேன். மண்ற்கேனி புத்தக வெளியீட்டு விழாவில் நண்பர் டாக்டர்.தேவன் மாயம் கேட்ட கெள்வி ஒன்றிற்கு பதிலளிக்குமாறு தம்பி ஜொசப் கூறினார். எழுந்து பேசச் சென்றால் வார்த்தைகள் ஆங்கிலத்தில்தான் வருகிறது. 17 வருட வெளிநாட்டு வாழ்க்கை மற்றும் பல தொலைதொடர்பு நிறுவனங்களுச் சென்று ஆங்கிலத்தில் தொடர்ச்சியாக பிரசண்டேசன்கள் செய்து வரும் எனது தற்போதைய பணியின் தாக்கம். ஏதோ சில வார்த்தைகள் பேசி வந்து அமர்ந்தேன்.

ஒரு பிளாஷ்பேக்.....


பள்ளியில் படித்தவரை தமிழில் எப்போதும் நான்தான் முதல் மாணவன். தமிழ் பேச்சுப்போட்டி, பட்டி மண்டபம், கட்டுரைப்போட்டி, திருக்குறள் ஒப்புவித்தல் என்று எல்லா போட்டிகளிலும் கலந்துகொண்டு தொடர்ச்சியாக பெரும்பாலும் முதல் பரிசுகள் பல வாங்கியிருக்கிறேன். வெட்டிக்காடு, அதைச் சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மன்னார்குடி நகரம் என்ற 30 கிலோமீட்டர் வட்டத்தில் 17 வயதுவரை வாழ்ந்துவிட்டு பொறியியல் படிக்க சென்னை கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்தபோது சென்னையின் பிரமாண்டைத் பார்த்து இந்த கிராமத்தான் மிரண்டு போனேன். ஆங்கிலம் பேசத்தெரியாத கிராமத்து ஏழை என்ற தாழ்வு மனப்பான்மையில் முதல் இரண்டு வருடங்களுக்கு தமிழ் போட்டிகள் அல்லது எந்தவொரு நிகழ்சிகளிலும் கலந்துகொள்ள வில்லை. இந்த தாழ்வு மனப்பான்மையிலிருந்து சற்று வெளியே வந்து மூன்றாம் ஆண்டு முதல் தமிழ் மன்ற நிகழ்ச்சிகள், வகுப்பு ஆங்கில செமினார்கள் என்று கொஞ்சம் கொஞ்சமாக கலந்துகொண்டென். பள்ளியில் படித்தபோது இருந்த தன்னம்பிக்கை என்னும் மீண்டும் தவழ ஆரம்பித்தது.

கல்லூரி படிப்பு முடிந்தபிறகு நான்கு வருடங்கள் கொச்சி, சென்னை, டில்லி மற்றும் பெங்களுரீல் வேலை. அதன்பிறகு சிங்கப்பூர், அமெரிக்கா வெளிநாட்டு வாழ்க்கை. இந்த 20 வருடங்களில் தமிழ் மெடைகளில் பேசுவதற்கோ, தமிழில் எழுதவதற்கோ வாய்ப்புகள் இல்லை. உண்மை என்னவென்றால் நான் அதற்கான வாய்ப்புகளைச் தேடிச் செல்லவில்லை. வேலை, பொருள் தேடுதல் என்பதுதான் வாழ்க்கையின் முக்கிய குறிக்கோள்களாக இருந்தன!

பள்ளி மற்றும் கல்லூரியில் தமிழால் அடையாளம் காணப்பட்ட நான் அன்று மணற்கேணி விழாவில் தமிழில் சரளமாக பேச முடியாமல் தடுமாறினேன். ஆங்கிலத்தில் பேசமுடியவில்லையே என்று தாழ்வு மனப்பான்மையில் புளுங்கித் தவித்த காலம் போய் இன்று ஆங்கிலம் கலக்காமல் தமிழில் பேச முடியாத நிலைமை. வாழ்க்கை ஒரு சக்கரம்!

இருபது வருடங்களில் நான் தொலைத்த அடையாளத்தை மீட்டெடுக்கும் ஒரு முயற்சியாக எனது இந்த வலைப்பதிவு பயணத்தை மீண்டும் தொடரலாம் என்ற எண்ணம். எனது தொலைத்தொடர்பு துறை (Telecommunications), பொருளாதாரம், மேலாண்மை, அனுபவங்கள், கதை, கவிதைகள் என்ற தளங்களில் எழுதலாம் என்ற எண்ணம். 

எனவே நானும் ரவுடிதான்(பதிவர்) என்று ஜீப்பில் ஏற முடிவு செய்துவிட்டேன்...............................!!


உங்கள் ஆதரவை வேண்டி.......

அன்புடன்,
-ரவிச்சந்திரன்Post a Comment