நான் பிறந்து வளர்ந்த எனது கிராமத்தைப்பற்றிய கவிதை.
வெட்டிக்காடு
-------------------
காவிரி நங்கை களிப்புடன்
கைகொட்டிச் சிரித்து
ஓடி விளையாடும்
தஞ்சைத் தரணியில்
தஞ்சைக்கும் மன்னைக்குமிடையே
எததனையோ சிறு கிராமங்கள்.
அச்சிறு கிராமங்களில்
ஒன்றுதான் வெட்டிக்காடு.
நான் பிறந்த ஊர்!
o
காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்
கலப்பையைத் தோளில் சுமந்து
காளகளை ஓட்டிக்கொண்டு
வயல்களுக்குச் சென்று
உழைப்பின் சிறப்பை
உலகுக்கு எடுத்துக்காட்டும்
உழவர்கள் வாழும் ஊர்.
o
ஒன்று முதல் பதினேழு வயது வரை
இதுதான் உலகம் என்றெண்ணி
நான் ஓடி விளையாடிய ஊர்.
என் எண்ணங்களுக்கும்
உணர்ச்சிகளுக்கும் அஸ்திவாரம்
இங்குதான் போடப்பட்டது!
நான் உலகிலுள்ள எத்தனையோ
நகரங்களுக்கும் ஊர்களுக்கும்
சென்று வந்திருக்கிறேன்.
அங்கெல்லாம் கிடைக்காத இன்பம்
ஒவ்வொரு முறையும்
என் ஊரில் காலடியெடுத்து
வைக்கும்போது உணர்கின்றேன்.
பிறந்த மண்ணின் மகிமையோ?
o
'வெட்டிக்காடு'
இந்த கிராமத்திற்கேன்
இப்படியொரு
விசித்திரமான பெயர்?
அடர்த்தியான காடுகளை
வெட்டியழித்து
எமது முன்னோர்கள்
இங்கு குடியேறியதனால்
ஏற்பட்ட பெயரிது
இதைத்தவிர வேறெந்த
சரித்திர முக்கியத்துவமும்
கிடையாது என்று கூறி
என் சந்தேகத்தை விளக்கினார்
என் மூன்றாம் வகுப்பாசிரியர்.
o
ஊருக்கு தெற்கே ஓர் குளம்.
அதற்கடுத்து
கண்ணுக்கெட்டிய தூரம் வரை
தெரியும் பச்சைப் பசேலன்ற
வயல் வெளிகள்.
ஆண்களும், பெண்களும்
வயல் வெளிகளில்
ஏர் உழுதல், நாற்று பறித்தல்
நாற்று நடுதல், களை எடுத்தல்
என்ற பலவகையான வேலைகளைத்
தெம்மாங்கு பாட்டுகள் பாடியபடி
சுட்டெரிக்கும் கதிரவனின்
வெப்பத்திற்குச் சளைக்காமல்
உழைக்கும் உழைப்பாளிகள்!
தங்களின் இந்த உயர்ந்த தொழிலுக்கு
'உழுதுண்டு' என்ற குறளில்
வள்ளுவன் தந்த பெருமையைத் தவிர
வேறெந்த சுகத்தையும்
அனுபவிக்காத அப்பாவிகள்.
o
ஓடி விளையாடும்
சிறு ஆறுகள்
அறுவடையை எதிர்பார்த்து
தலை கவிழ்ந்து
நிற்கும் நெற்கதிர்கள்
கணவன்மார்களுக்கு
கஞ்சி கொண்டு செல்லும்
பெண்கள்
கவலையின்றி
குளத்திலும், ஆறுகளிலும்
குதித்து விளையாடும்
சிறுவர்கள்
ஆறுமாத காலமாக
வெயிலிலும், மழையிலும்
அயராது பாடுபட்டு
உழைத்த தங்களின் உழைப்பிற்குப்
பலன்தரும் நெற்கதிர்களை
அறுவடை செய்யப்போகும்
உழவர்களின் முகத்தில்
தோன்றும் மகிழ்ச்சி!
அடடா!
மருத நிலத்தின்
இந்த காட்சிகளைக் காணும்போது
மனதில் மகிழ்ச்சி வெள்ளம்
கரைபுரண்டோடும்.
0
பள்ளி விடுமுறை நாட்களில்
எனக்கு மகிழ்ச்சி
ஏற்படுகின்றதோ இல்லையோ
எங்கள் வீட்டு
மாடுகளுக்குக் கொண்டாட்டம்தான்!
விடுமுறை நாட்களில்
கருத்துடன் மாடுகளை
மேய்த்துப் பராமரிப்பதுதான்
என் பெற்றோர்கள்
எனக்குக் கொடுக்கும் வேலை
வயல்வெளிகளில் மாடுகளை
மேயவிட்டுவிட்டு
நண்பர்களுடன் நான் போட்ட
ஆட்டங்களும், விளையாட்டுகளும்
எண்ணிடலங்கா...
கபடி விளையாடுவது
கிளி கோடு பாய்தல்
பட்டம் விடுவது
பந்து அடிப்பது
குளத்தில் விளையாடுவது
என்ற ஓர் நீண்ட
பட்டியலே போடலாம்.
அந்த இளம் வயதில்
என் நண்பர்களுடன் சேர்ந்து
எனது ஊரில் அடித்த
கொட்டங்கள் இன்னும்
எத்தனை! எத்தனை!
இவற்றையெல்லாம்
நினைத்துப் பார்த்தால்
திரும்ப அந்த இளமை நாட்கள்
கிடைக்காதா? என்று
மனம் ஏங்கும்.
o
ஒரு சராசரி மனிதனின்
பார்வையில் வெட்டிகாடு
ஓர் அமைதியான கிராமம்.
ஆனால்
என்னைப் பொருத்தவரை
எனது ஊர்
ஓர் சொர்க்க பூமி!!!
ooo
நன்றி: மரத்தடி.காம்
6 comments:
அன்பின் ரவி
பிறந்த ஊரின் பெருமை சொல்லவும் பெரிதே - உண்மை உண்மை ரவி
நல்வாழ்த்துகள் ரவி
நட்புடன் சீனா
பிறந்த் ஊரைப் பற்றி பேசி மகிழத்தான் எத்தனை விசயங்கள் எத்தனை நிகழ்வுகள் வாழ்த்துகள் இரவி!!!
Nice to know the glorious past of vettikkadu and an enjoyable childhood days....Awesome!
//காலைக் கதிரவன்
கருமையான இருட்டை
விரட்டிக் கொன்றதுபோல்
கருமை நிறங்கொண்ட
தங்களையும்
அழித்து விடுவானோ
என்ற பயத்தில்
காகங்கள் கரையும்
காலை நேரத்தில்//அருமை... அருமை...
நல்ல உவமை .........
17 வயது வரை கிராமத்தில் வாழ்ந்து, கணிணி துறையில் சாதனை புரிந்துள்ளதே மிக்க வரவேற்கதக்கது ரவி. வாழ்த்துக்கள்.
Good imagination on the mornng/crows etc as an anonymous poster mentions.
Post a Comment