நான் சிறுவனாக இருந்தபோது பெரிய பயந்தாங்கொள்ளி... அதற்கு முக்கிய காரணம் கிராமத்தில் மக்கள் சொல்லும் பேய்க்கதைகள். ஒவ்வொரு காலகட்டதிலும் ஊரில் ஒரு பேய்க்கதை உலா வரும். சிறுவனாக இருந்தபோது கேள்விப்பட்ட பேய்க்கதைகளில் என்னை மிகவும் பயப்பட வைத்தது அப்பா சொன்ன இந்த பேய்க்கதை. அப்பா இளைஞராக இருந்தபோது (60 வருடங்களுக்கு முன்பு) நடந்த சம்பவம் இது. அப்பா இந்த கதையை பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன்.
வெட்டிக்காடு கதைகள்-3: கொள்ளிவாய் பிசாசுகள்
சம்மா நெல் அறுவடை முடிந்து நெல்லை களத்தில் பட்டறை போட்டிருந்த மாசி மாத காலம். அப்பா களத்தில் காவலுக்காக தனியாக களத்திலுள்ள ஒரு சிறு கொட்டகையில் இரவில் படுத்து தூங்கி கொண்டிருந்திருக்கிறார். நடு நிசி வேலை... கடும் பனி... நல்ல இருட்டு... “டேய்... டேய்...” என்று சத்தம் கேட்டு திடுக்கிட்டு விழித்து எழுகிறார். ”யாருடா... அது” என்று கேட்டுக்கொண்டே கொட்டகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியில் யாரும் இல்லை. களத்தை சுற்றி ஒரு வலம் வந்து பார்த்து விட்டு யாரும் இல்லை என்பதை உறுதி செய்து விட்டு ஏதாவது பிரம்மையாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டே சிறுநீர் கழித்து விட்டு எழுந்து திரும்புகிறார். சரேலென்று வெண்ணிறத்தில் உருவம் ஒன்று வாயில் நெருப்புடன் அப்பாவைக் கடந்து பாய்ந்து செல்கிறது.
அப்பா ஒரு கணம் திகைத்து, பயத்த்தில் வெல வெலுத்துப் போய் நிக்கிறார். அந்த தீப்பந்தம் கண்ணிமைக்கும் நேரத்தில் களத்திற்கு கிழக்கே ஒரு அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள அய்யனார் கோவிலை சென்றடைகிறது. பயத்தில் என்ன செய்வதென்று திகைத்து... ஓடிப் போய் கொட்டகையின் உள்ளே உட்கார்ந்து விட்டார். சற்று ஆசுவாசப் படுத்திக்கொண்டு தைரியத்துடன் கையில் அருவாளை எடுத்துக்கொண்டு கொட்டகையை விட்டு வெளியே வந்து களத்தில் நின்று கொண்டு பார்க்கிறார். இப்போது அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்கள் தெரிகிறது. ஐந்து தீப்பந்தங்களும் கோயிலைச் சுற்றி அங்கும் இங்கும் ஓடி வருகின்றன். “கொள்ளிவாய் பிசாசுகள்” தன்னையறியாமலே அப்பாவின் வாய் முனுமுனுக்கிறது.
கொள்ளிவாய் பிசாசுகள் ஆட்டம் போடுவதைப் பார்த்த அப்பாவிற்கு பயம்... பக்கத்து களத்தில் நெல் போட்டிருந்தவர்கள் எல்லாம் நெல்லை எடுத்து சென்று விட்டதால் யாரும் பக்கத்தில் இல்லை. கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவிலுள்ள களத்தில் ராஜாபதி ஆலம்பிரியர் காவலுக்கு படுத்திருக்கிறார். ஆனால்... அரை கிலோ மீட்டர் தூரததை தனியாக நடந்து சென்று ராஜாபதியை கூப்பிடுவதற்கும் பயம். என்னதான் நடக்கிறது... பார்த்து விடலாம் என்று தைரியத்துடன், கையில் பிடித்த அருவாளுடன் களத்திலிருந்த பெஞ்சில் உட்கார்ந்து விட்டார் அப்பா.
ஒரு அரை மணி நேரம் கழித்து திடிரென்று அய்யனார் கோவிலில் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்த கொள்ளிவாய் பிசாசுகள் ஐந்தும் மெதுவாக அங்கிருந்து நகர ஆரம்பித்தன. கொஞ்சம் நேரம் கழித்துதான் அப்பாவுக்கு உறைத்தது... அந்த தீப்பந்தங்கள் அப்பாவை நோக்கி நகர்ந்து வருகின்றன என்று. பயத்தில் நடு நடுங்கி செய்வதறியாது திகைத்து கொட்டகைக்குள் புகுந்து போய் ஒரு ஒரத்தில் ஒடுங்கி உட்கார்ந்து விட்டார். சில நிமிடங்கள் கழித்து வெளியே “டேய்.. டேய்.” என்ற இரைச்சலுடன், பயங்கரமாக காற்று வீசுகிறது. சர்... சர்... சர்றென்று பாய்ந்து செல்லும் சத்தம் கேட்கிறது. சப்த நாடியும் ஒடுங்கி நடுக்கத்துடன் அப்பா இருக்கிறார்.
கொஞ்ச நேரம் கழித்து சத்தம் எல்லாம் அடங்கி... மயான அமைதி! தைரியத்தை வரவழைத்துக்கொண்டு அப்பா கொட்டடகையிலிருந்து வெளியே வந்து பார்க்கிறார். வெளியே யாரும் இல்லை... கிழக்கே அய்யனார் கோவில் பக்கம் திரும்பி பார்க்கிறார்... கொள்ளிவாய் பிசாசுகள் இருப்பதற்கான சுவடுகள் எதுவும் தெரியவில்லை. அப்பாடா... என்று பெரு மூச்சுடன் திரும்பி மேற்கு பக்கம் பார்த்தவர் அதிர்ந்து போனார்...
மேற்கே.. வெட்டிக்காடு-எட கீழையூர் கிராம எல்லையில் இருக்கும் அய்யனார் கோவிலில் ஐந்து தீப்பந்தங்களும் ஆடுவது தெரிந்தது. கிழக்கேயிருந்த அய்யனார் கோவிலிருந்து ஐந்து கொள்ளிவாய் பிசாசுகளும் அப்பாவைக் கடந்து மேற்கேயிருக்கும் அய்யனார் கோவிலுக்கு சென்று விட்டன. மறுபடியும் அப்பா களத்தில் பெஞ்சில் உட்கார்ந்து விட்டார். தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுகின்றன. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் கழித்து தீப்பந்தங்கள் நகர ஆரம்பித்தன. மெதுவாக அப்பாவை நோக்கி வருவதை உணர்ந்தவர் முன்பு போல் ஓடி கொட்டகையில் உட்கார்ந்து விட்டார். ஐந்து நிமிடங்கள்.. பத்து நிமிடங்கள்.. பதினைந்து நிமிடங்களாயிற்று... எந்தவொரு சத்தமும் கேட்கவில்லை. அப்பா கொட்டகையை விட்டு வெளியே வந்து பார்க்கிறார். மேற்கு அய்யனார் கோவிலில் தீப்பந்தங்களை காண வில்லை. ஆனால்... இப்போது தீப்பந்தங்கள் களத்திலிருந்து சற்று தொலைவில் வடக்கே இருக்கும் சுடுகாட்டில்!
சுடுகாடு சற்று பக்கத்திலிருந்ததால் தீப்பந்தங்கள் அங்கும் இங்கும் ஓடி விளையாடுவது அப்பாவிற்கு நன்றாக தெரிகிறது. அவ்வப்போது திடீரென்று “டேய்... டேய்” என்ற சத்தம் கேட்கிறது. என்னதான் இந்த கொள்ளிவாய் பிசாசுகள் செய்கிறது என்று பார்க்கலாம் என்று நினைத்துக்கொண்டு அப்பா களத்தில் உட்கார்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறார்.
அதிகாலை மணி சுமார் நான்கு இருக்கும்.. திடிரென்று சுடுகாட்டில் ஆடிக்கொண்டிருந்த ஐந்து தீப்பந்தங்களையும் காணவில்லை. அதன் பிறகு எந்த சத்தமும் கேட்கவில்லை. கொள்ளிவாய் பிசாசுகள் காற்றோடு காற்றாக மறைந்து விட்டன. பொழுது விடிய ஆரம்பித்தது. ஓரளவு பொழுது விடிந்தவுடன் ஓட்டமும் நடையுமாக வீட்டை நோக்கி ஓடி வந்து விட்டார் அப்பா!
* * *
பி.கு:
இந்த கதை உண்மையா அல்லது அப்பாவின் அதீத கற்பனையா என்று எனக்கு தெரியாது. ஆனால்... அப்பா இந்த கதையை பல முறை சொல்ல கேட்டிருக்கிறேன். நான் பயந்தாங்கொள்ளியாக விளங்கியதற்கு இந்த பேய்க்கதையும்.. இது போன்ற பல பேய்க்கதைகளும்தான் முக்கியமான காரணம். இதனால்... நான் இரவில் தனியாக எங்கும் செல்ல மாட்டேன். நான் சிறுவனாக இருந்தபோது எங்கள் ஊரில் மின்சாரம் கிடையாது. அதனால் தெருவில் விளக்குகள் கிடையாது. நான் ஆறாம் வகுப்பு படிக்கும் போதுதான் கிராமத்த்திற்கு மின்சாரம் வந்தது. எட்டாம் வகுப்பு படிக்கும் போதுதான் வீட்டிற்கு மின்சாரம் வந்தது. அதுவரையில் இரவில் படிப்பது, எழுதுவது எல்லாம் அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில்தான்!
இளம் வயதில் மனதில் விதைக்கப்பட்ட பேய்கதைகளால் வளர்ந்து ஓரளவு பெரியவனான பிறகும் பயம் என்னை விட்டு போக வில்லை. இரவிலோ, மதிய வேளையில் தனியாக நடந்து செல்லும் போதோ அல்லது தனியாக மாடுகளையும், ஆடுகளையும் மேய்த்துக் கொண்டிருக்கும் போது உடனே மனக்கண் முன் தோன்றுவது சமீபத்தில் இறந்தவர்கள், அவர்களை பிணமாக தூக்கிக்கொண்டு செல்லும் காட்சி மற்றும் சமீபத்தில் கேள்விப்பட்ட பேய்க்கதைகள்தான்.
பத்தாம் வகுப்பு படிக்கும்போது டியூசனுக்கு செல்லும் போது ஒவ்வொரு நாளும் மரண பயம்தான். பத்தாம் வகுப்பில் ஆங்கில பாடத்திற்காக G.N (G.Natarajan) சாரிடம் டியூசன் வைத்திருந்தேன். ஆனால் டியூசன் நேரம் காலை ஆறு மணி. எங்கள் ஊர் வெட்டிக்காட்டிலிருந்து மன்னார்குடியிலிருக்கும் G.N சார் வீடு கிட்டத்தட்ட எட்டு கிலோ மீட்டர்கள். எனவே தினமும் காலை நான்கரை மனிக்கு எழுந்து குளித்து, சாப்பிட்டு விட்டு ஐந்தேகால் மணியளவில் சைக்கிளில் கிளம்பி மன்னார்குடியை நோக்கி அதிகாலை இருட்டில் பயத்துடன் பயணிப்பேன்.
மன்னார்குடியை நெருங்கும்போது குறுக்காற்று பாலத்திற்கு அருகிலிருக்கும் சுடுகாடு என்னுடைய பயம் சென்டர். அது கொஞ்சம் பிஸியான சுடுகாடு... எனவே, ரெகுலராக பிணம் எரிந்து கொண்டிருக்கும். சுடுகாட்டை நெருங்க... நெருங்க பயம் எகிற ஆரம்பிக்கும். சுடுகாட்டிற்கு கிட்டத்தட்ட அரை கிலோ மீட்டர் தொலைவில் சைக்கிளை நிறுத்தி விடுவேன்.. யாரவது பால்காரரோ அல்லது வேறு யாரோ சைக்கிளில் வந்தால் அவருடன் சேர்ந்து போய்விடுவேன். சில நாட்களில் ரொம்ப நேரம் காத்திருந்தும் யாரும் வர மாட்டார்கள். அந்த நாட்களில் உயிரை கையில் பிடித்துக்கொண்டு சைக்கிளை புயல் வேகத்தில் மிதித்து தெப்ப குளக்கரை வந்துதான் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்வேன்.
இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியான என்னை ஓரளவு தைரியசாலியாக்கியது இந்திரஜித் அண்ணன். பெரியப்பா மகன் இந்திரஜித் பெயருக்கேற்றார்போல் மிகப் பெரிய தைரியசாலி. இரவில் தன்னந்தனியாக எங்கும் செல்லும் துணிச்சல்காரர். சண்டை என்று வந்து விட்டால் முதல் அடி இந்திரஜித்துடையதாகத்தான் இருக்கும். தற்போது வெட்டிக்காட்டின் நாட்டாமை!
அண்ணன் இந்திரஜித்தும் நானும் நல்ல நண்பர்கள். தன் தம்பி இப்படிப்பட்ட பயந்தாங்கொள்ளியாக இருக்கிறானே என்று நினைத்து தைரியமாக இருப்பதற்கான பல ஆலோசனைகளை எனக்கு கூறுவார். இரவில் அண்ணன் தனியாக செல்லும் போது என்னையும் கூட்டி செல்வார். கொஞ்சம் கொஞ்சமாக பயம் தெளிய ஆரம்பித்தது. ஆனால்.. சுடுகாட்டு பயம் விலகவில்லை. இதை நன்றாக தெரிந்து வைத்திருந்த அண்ணன் யாரோ ஒருவர் இறந்த அடுத்த நாள் தெற்கே குளத்திற்கு போயிட்டு வரலாம் வாடா என்று இரவு பதினோரு மணிக்கு கூப்பிட்டார். சரியென்று அண்ணனுடன் கிளம்பினேன். பள்ளிக்கூடத்தைக் கடந்து தெற்கே செல்லும் ரொட்டில் நடந்து போகிறோம். தெற்கே சிறிது தூரம் சென்று மேற்கே திரும்பும் குளத்திற்கான பாதையில் திரும்பாமல் அண்ணன் சுடுகாட்டை நோக்கி செல்லும் பாதையில் நடக்க ஆரம்பித்தார். எனக்கு பயத்தில் உடம்பு நடுங்க ஆரம்பித்து விட்டது.
அண்ணன் என்னைப்பார்து “உன்னோட பயத்தை போக்கத்தான் நான் குளத்திற்கு போவலாம்னு சொல்லி கூப்பிட்டு வந்தேன்டா.. பேய்.. பிசாசெல்லாம்... கட்டுக்கதைகள்.. நேரா இப்ப சுடுகாட்டுக்கே போய் நேத்து செத்து போனவர் பேயா இருக்கிறார்ன்னு பார்த்துடலாமுன்னு” என்று சொல்லிக்கொண்டே என் கையைப் பிடித்து அழைத்து (இழுத்து) சென்றார். இருட்டில் சுடுகாட்டில் மாலைகள் மற்ற பொருட்கள் சிதறி கிடக்கின்றன். “பார்டா.. எங்கடா பேய்.. எங்கடா பிசாசு” என்று சுடுகாட்டை சுற்றிக் காட்டுகிறார். பிறகு எரிக்கப்பட்ட பிணத்தின் எலும்புகளையும், மண்டை ஓட்யையும் காண்பிக்கிறார். அண்ணணின் கையைப் பிடித்துக்கொண்டே நிற்கிறேன்... பார்க்கிறேன். பேய்.. பிசாசு இருப்பதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை.. பயம் கொஞ்சம் தெளிய.. அண்ணனின் கையை விட்டு விட்டேன். பயத்தையும் விட்டு விட்டேன்!
* * *