திரு. கோவிந்தராசன் அய்யா அவர்களின் “தஞ்சை மண்ணும்...மண்ணின் மைந்தர்களும்...” புத்தகத்தைப் பற்றிய என் எண்ணங்கள்.
இரண்டு வருடங்க்கு முன்பு கோவிந்தராசன் அய்யா அவர்களின் பெருமைகளைக்கூறி அவரை முகநூலில் தொடர்ந்து அவருடைய எழுத்துகளை படிக்கும்படி நண்பர் சரவணன் பரிந்துரைத்தார். உடனே முகநூலில் தொடர்ந்து அவருடைய பத்திகளை தொடர்ந்து படித்து வருகிறேன். அவர் முகநூலில் தஞ்சை மண்ணின் மைந்தர்களைப் பற்றி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பே இந்த “தஞ்சை மண்ணும்...மண்ணின் மைந்தர்களும்...” புத்தகம்.
புத்ததகத்திற்கு செல்வதற்கு முன் முதலில் ஆசிரியரின் பெருமைகளைப் பார்ப்போம்... தஞ்சையில் பிறந்த பொறியாளர் கோவிந்தராசன் அய்யா அவர்கள் நான் படித்த கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் பிறப்பதற்கு முன்பே 1960-ல் மின்னியலில் பட்டம் பெற்று, தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பல ஆண்டுகள் பணியாற்றிவிட்டு பிறகு ஜிம்பாவ்வே, ஓமன், மலேசியா போன்ற நாடுகளில் பணிபுரிந்திருக்கிறார். ஜிம்பாவ்வே நாட்டில் பணிபுரிந்தபோது அந்த நாட்டு மின்சார வாரியத்தில் தலைமை பொறியாளாராக பணியாற்றி ஜிம்பாவ்வே நாட்டின் பல மின் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்தி அந்த நாட்டின் மின்சார தன்னிறைவில் பெரும் பங்காற்றியவர்.
ஜிம்பாவ்வே நாட்டில் தமிழ்ச்சங்கத்தை நிறுவி, தமிழ்பள்ளிக்கூடம் அமைத்தவர். ஜிம்பாவ்வேவில் அய்யா அவர்களின் வீடு ஜிம்பாவ்வே தமிழர்களின் தலைநகரமாகவும், உதவி கேட்டு வரும் தமிழர்களின் புகலிடமாகவும் விளங்கியது என்றால் அது மிகையாகாது. அய்யா அவர்கள் மிகச்சிறந்த மின்னினியல் துறை வல்லுநர் மட்டுமல்ல சிறந்த தமிழ் அறிஞர் மற்றும் சமூக ஆர்வலர். தாயகம் திரும்பிய பிறகு உலகத் திருக்குறள் பேரவை, பெசண்ட் மன்றம், நாட்டார் கல்லூரி, தமிழ் பல்கலைக்கழகம், வள்ளலார் மன்றம், முதுமக்கள் பேரவை, லஞ்ச ஒழிப்பு இயக்கம் ஆகிய இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சமூக தொண்டாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு அய்யா அவர்கள் சிங்கப்பூர் வந்திருந்தபோது, நானும் நண்பர் சரவணனும் நேரில் சந்தித்து உரையாடினோம். அந்த இரண்டு மணி நேர சந்திப்பில் அய்யா சொன்ன தகவல்கள் மூலம் அவருடைய பரந்த அறிவு, வாசிப்பு, தேடல், இசை ஞானம், சமூக அக்கறை என்ற அய்யாவின் பன்முகத்தன்மையை நேரில் பார்த்து, கேட்டு தெரிந்துகொள்ளும் பாக்கியம் கிடைத்தது.
இனி புத்தகம் பற்றி....
தஞ்சாவூர் மண்ணின் பெருமையையில் ஆரம்பித்து, தஞ்சைத்தரணியைச் சேர்ந்த 50 சாதனையாளர்களின் வாழ்க்கையைப் பற்றியும், அவர்களுடைய சாதனைகளைப் பற்றியும் பல அறிய தகவல்களை தொகுத்து கொடுத்துள்ளார். இவர்களில் ஒரு சிலரைத்தவிர மற்றவர்களின் பெயர்களைக்கூட நான் கேள்விப்பட்டதில்லை. அய்யா அவர்கள் இந்தக்கால சந்ததியினர் அந்தக்கால சாதனையாளர்களைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றெண்ணி தேடித் தேடி அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து,தொகுத்து நமக்கு அளித்துள்ளார்கள்.
தன்னுடைய முன்னுரையில்...
“பச்சைப் பசேலென்ற வயல்கள், அவற்றினிடையே தோன்றும் தென்னை மரங்கள், அதன் நடுவிலே தோன்றும் கோவில் கோபுரம், கோயிலுக்கருகே தோன்றும் தாடகம், அதில் காணும் அல்லியும், தாமரையும், கோயில் சுற்றில் அமர்ந்து திருமுறைகளை இசைக்கும் ஒதுவார், அந்த நாதத்தின் இனிமை, அந்த இனிமையை உள்நின்றியக்கும் ஆடவல்லான், அக்கோயிலோடு இணைந்திருக்கும் கட்டடக்கலை, சிற்பம், ஒவியம், இசை, நாட்டியம் ஆகிய கலைகள, ஆடவல்லானிடம் விண்ணப்பிக்க வரும் மனிதக்கூட்டம் இவற்றையெல்லாம் விடுத்து சித்திரக்குப்தனூடே யான் செல்லேன்” எனக்கூறும் என் மனத்துணிவு எனக்கு உண்டு என்று கூறி தஞ்சையை அப்படியே மணக்கண்ணில் ஒடவிட்டு பரவசமடைய வைக்கிறார்.
முதல் அத்தியாமான தஞ்சை மண்ணில்... பொன்னி நதி பாய்ந்தோடும் பொன் விளையும் பூமி, தஞ்சாவூர் பெரிய கோவில், சோழ மன்னர்களின் பெருமை,இசை, நடனக்கலைகளின் தாயகம், இசை மும்மூர்த்திகள், கோவில்கள் என்று ஒவ்வொன்றாக விவரித்து வரும் போது அதைப் படித்துவிட்டு ஒரு தஞ்சாவூர்க்காரன என் உடம்பு சிலிர்த்து விட்டது. இறைவன் தஞ்சையைத்தான் இசையின்,கலைகளின் தாயமாக படைத்திருக்கிறான்... அதற்கு ஒரு உதாரணம்.
நாதஸ்வரத்திற்கான சீவாளி தஞ்சையில்தான் தயாரிக்கப்ப்டுகிறது. தஞ்சை மாவட்ட காவேரி படுகையில் விளையும் நாணலிருந்து தயாரிக்கப்டும் சீவாளியில்தான் நாதம் வருமாம். வேற எந்த நாணலில் சீவாளி தயாரித்தால் “தேவர் மகன்” படத்தில் ரேவதி சொல்வது போல வெறும் காத்துதான் வருமாம். மேலும் நாதஸ்வரம் செய்யப் பயன்படும் “ஆச்சாள் மரம்” தஞ்சை மாவட்ட கொள்ளிடக்கரையில்தான் விளைகிறது. ஆச்சாள்புரம் என்ற ஊரில்தான் நாதஸ்வர்ம், குழல், வீணை போன்ற இசைக் கருவிகள் தயாரிக்கப் படுகிறது. இந்த தகவல்கள் எல்லாம் எனக்கு தெரியாதது.
தஞ்சை மைந்தரான நாதஸ்வர சக்ரவர்த்தி திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளையைப் பற்றி நான் இந்த புத்தகம் மூலம் தெரிந்துகொண்டது...
1947-ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி. டில்லியில் தர்பார் மண்டபத்தில் சுதந்திரதின விழா. இசைத்தமிழ் பிரதிநிதிகளாக திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, நீடாமங்கலம் மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் அழைக்கப்பட்டிருந்தனர். நேரு நேரம் குறைவாக இருப்பதால் இவர்களுடைய நிகழ்ச்சியை ரத்து செய்து விடுவதாக கூறியிருக்கிறார். டாக்டர்.சுப்பராயன் (மோகன் குமாரமங்கலத்தின் தந்தை) இடைமறித்து இந்த நிகழ்ச்சியை ரத்து செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்டதின் பேரில் நிகழ்ச்சி 20 நிமிடங்களுக்கு அனுமதிக்கப் பட்டது. ராஜரத்தினம் பிள்ளை வாசிக்க ஆரம்பித்தவுடன் தர்பாரே இசையில் மயங்கி எழுபது நிமிடங்களுக்கு அனுபவித்து மழிந்தது. நேரு பிள்ளையிடம் “நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி... ஆனால் நீங்களோ இசையுலக சக்ரவர்த்தி” என்று பாராட்டினாரம்.
"மருதமலை மாமனியே” என்ற பாடலின் கம்பீர குரலுக்குச் சொந்தக்காரனான நான் மிகவும் விரும்பிக் கேட்கும் கர்நாடக சங்கீத இசைக்கலைஞர் மதுரை சோமு மதுரைக்காரர் கிடையாது அவர் தஞ்சாவூர் சுவாமிமலையைச் சேர்ந்தவர் என்பது நான் அறியாத தகவல்.
அந்தக்காலத்திலேயே தனியாக விமானம் வைத்துக்கொண்டு பறந்து, பறந்து சென்று மருத்துவம் பார்த்த டாக்டர். சருக்கை ரங்காச்சாரி, ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் Privy Council அவையில் மன்னரின் ஆங்கில உச்சரிப்பை திருத்திய Silver Tongued Orator வலங்கைமான் வெள்ளி நாக்கு சீனிவாச சாஸ்திரியார், சங்க இலக்கிய நூல்களுக்கு 22 உரை நூல்கள் எழுதிய பெருமழைப்புலவர் சோமசுந்தரனார், ஆட்சிப் பணியோடு தமிழ்ப்பணியாற்றிய I.A.S அதிகாரி பாஸ்கரத் தொண்டைமான், சென்னை மியுசிக் அகாடமியின் மிகப்பெரிய விருதான சங்கீத கலாநிதி விருதை நடனத்திற்காகப் பெற்ற தஞ்சாவூர் பாலசரசுவதி, அழிந்து போய்விடும் நிலையிலிருந்த தேவதாசிகளின் சதிர் ஆட்டத்திற்கு உயிர் கொடுத்து பரதநாட்டியமாக மாற்றிய பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழிசை இயக்கத்தை ஆரம்பித்து தமிழசைக்காக “கருணாமிருத சாகரம்” புத்தகத்தை எழுதிய ஆப்பிரகாம் பண்டிதர், தமிழிசைப் பாடகர் இசையரசு திருச்செங்காட்டங்குடி எம்.எம்.தண்டபாணி தேசிகர், கிட்டத்தட்ட இரண்டாயிரம் தமிழிசைப் பாடலகளை இயற்றிய “தமிழ்த் தியாகய்யர்” பாபநாசம் சிவன் என்ற எண்ணற்ற தஞ்சை மண்ணின் ஆளுமைகளைப் பற்றிய பல அறியப்படாத தகவல்கள் புத்தகம் முழுவதும் கொட்டிக் கிடக்கிறது.
முடிவுரையில் அய்யா ரசித்து, ருசித்து வாழும் தஞ்சாவூர்க்காரனின் வாழ்க்கையை ரசனையோடு விவரித்து தனக்கு மறுபிறவியும் தஞ்சையிலேயே வேண்டும இறைவனிடம் இவ்வாறு வேண்டிக்கொள்கிறார்...
“தஞ்சாவூர்க்காரன், காலை எழுந்தவுடன், காவிரியில் குளித்தெழுந்து, தேவார விண்ணப்பம் செய்தவுடன், கொள்ளும் காலை உணவு சாவகத்திலிருந்து வந்த இட்லியும், மராத்தியர்களிடமிருந்து பெற்ற சாம்பாருமாகும். மதிய உணவு, பசு நெய்யுடன் கலந்த பொன்னி அரிசிச்சோறும், கடாரத்திலிருந்து வந்த “ கடாரங்காய் “ ஊறுகாயுமாகும். பின்னர், வாய் மணக்க, கும்பகோணம் கொழுந்து வெற்றிலை, தஞ்சாவூர் சுண்ணாம்பு, கும்பகோணம் “ ஏ. ஆர். ஆர்.சீவலு “ ம் கலந்த தாம்பூலம். மார்பிலும், தொந்தியிலும் “ திருவாரூர் டி.எஸ்.ஆர். கோகுல் சந்தனம் ”. மாலை “ கும்பகோணம் ” “ டிகிரி “ காப்பி.
இந்த காப்பியைக் குடித்துவிட்டு, அப்படியே ஒரு நடன நிகழ்ச்சியையோ அல்லது பாட்டுக்கச்சேரியையோ கேட்க, ஒத்தக் காளை பூட்டிய “ ரேக்ளா “ வண்டியில் காவேரிக் கரையோரமாக, ஒரு வாயுவேக பயணம். ரேக்ளா மேற்கே சென்றால் அது தஞ்சாவூர் பாலசரஸ்வதி நாட்டியத்திற்கு. வடக்கே சென்றால் ராஜரத்தினம் பிள்ளை நாதஸ்வர கச்சேரிக்கு, . கிழக்கே சென்றால் திருவாரூர் ஞானம் கச்சேரிக்கு.கச்சேரிக்குப் போகும்போது, பட்டு வேட்டி, பட்டு சட்டை. “ விசிறி மடிப்பு அங்கவஸ்திரம் “ கழுத்திலே “ மைனர் செயின் “. காதிலே கடுக்கண். நெற்றியில் தவறாமல் அய்யங்கடைத்தெரு முகமது கடை “ சேவல் பிரான்ட் “ சவ்வாது பொட்டும், சந்தனாதி திரவியங்களும். ஏறக்குறைய தில்லானா மோகனாம்பாள் வைத்தி மாதிரி.
இரவு சாப்பாட்டிற்குப்பின், நாள் முழுதும் அனுபவித்த சுக போகங்கள், “ என்றும் பதினாறாய்த் ” தொடர, திருக்கடையூர் அபிராமியின் மேல் பட்டர் பாடிய அந்தாதியை சீர்காழி கோவிந்தராஜன் பாட, அந்த நாதானுபவத்தில், வேப்பமரத்துக்கடியில் போட்ட கயிற்றுக் கட்டிலில் ஆனந்த சயனம்.
ஒரு நாள் முழுதும் அவன் வாழ்ந்த வாழ்க்கை, ரசித்துரசித்து, ருசித்துருசித்து வாழ்ந்த வாழ்க்கை. இத்தகைய வாழ்க்கையைப் பெற உழைத்த மண்ணின் மைந்தர்கள் எத்தனை பேர்.
“ இச்சுவை தவிர யான் போய் இந்திர லோகமாளும் அச்சுவை பெறினும் வேண்டேன் “.
இறைவா ! பெருவுடையானே ! கும்பேசா ! தியாகேசா ! வைத்தியனாதனே ! ஆடவல்லானே! நான் உன்னிடம் ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.
உன்னிடம் ஒருபோதும் நான் பிறவா வரம் கேட்கமாட்டேன். எனக்கு நீ திரும்பத்திரும்ப பிறவியைக்கொடு. ஆனால் அதைத் தஞ்சையில் கொடு. இதைக்கேட்க எனக்குத் தகுதி இருக்கிறது. காவிரிக்கரையில் வாழ்ந்த அத்தனை நாட்களிலும் நான் மனமறிந்து யாருக்கும் தீங்கிழைத்ததில்லை. “ உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை “ என்றே வாழ்ந்தேன். “ பகுத்துண்டு வாழ்ந்தேன். பல்லுயிர் ஒம்பினேன் “. எனவே நீ எனக்குத் தஞ்சையில் மறுபிறவி அளிக்க வேண்டும்”
புத்தகத்தை படித்து முடித்தவுடன் என் மீசையை முறுக்கி விட்டுக்கொண்டேன்... நானும் ஒரு தஞ்சாவூர்க்காரன் என்ற கர்வத்தில் !!!
இரண்டாம் பாகத்தில் மேலும் கிட்டத்தட்ட ஐம்பது தஞ்சை மைந்தர்களை பற்றி எழுதப் போகிறேன் என்று அய்யா தெரிவித்துள்ளார்கள்... இரண்டாம் பாகத்திற்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்