வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Saturday, September 26, 2015

நெடுஞ்சாலை




நெடுஞ்சாலை - நீண்ட நாட்களாக படிக்க வேண்டிய லிஸ்டில் இருந்த புத்தகம். இப்போதுதான் சிங்கப்பூர்-பீஜிங்-ஷன்காய்-சிங்கப்பூர் விமானம் மற்றும் புல்லட் ரயில் யயணத்தில் படித்து முடித்தேன். நெடுஞ்சாலையை விமானத்திலும், புல்லட் ரயிலும் படிக்க நேர்ந்தது எதிர்பாரமல் நடந்த முரன்.

பெரியார் போக்குவரத்து கழகத்தில் (தற்போதைய அரசு போக்குவரத்து கழகம்) பணிபுரியும் தமிழரசன் (கண்டக்டர்), ஏழைமுத்து (டிரைவர்) மற்றும் அய்யணார் (மெக்கானிக்) என்ற மூன்று தற்காலிக பணியாளர்களை ( Casual Labour) பற்றிய கதையை தென்னார்காடு ஜில்லா வட்டார மொழியில் சொல்லியிருக்கிறார் கண்மணி குணசேகரன். இவர் விருத்தாசலம் போக்குவரத்து கழக பனிமனையில் பணிபுரிந்து வருகிறார். போக்குவரத்து கழக பனிமனை, அதில் பணியாற்றும் பணியாளர்கள், கண்டக்டர், டிரைவர், பேருந்துகளை பராமரிக்கும் முறை என்று அந்த தொழிலாளர்களையும், பேருந்துகளையும் நம் கண் முன்பே காணொளி காட்சிகளாக நடமாட விட்டிருக்கிறார் குணசேகரன். வட்டார மொழியில் மூன்று பேர்களின் கதையை சொல்லும்போது அங்கங்கே இயல்பாக நகைச்சுவையோடு கதையை சொல்லி புன்முறுவல் செய்யவும் வைக்கிறார்.

நாவலை படித்து முடித்த பிறகு நேஷனல் ஸ்கூலில் படிக்கும்போது தினமும் பள்ளிக்கு 11-ம் நம்பர் சி.ஆர்.சி (C.R.C- Cholan Roadways Corporation) டவுன் பஸ்ஸில் சென்ற அனுபவங்கள், கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்தபோது சென்னை-மன்னார்குடி திருவள்ளுவர் போக்குவர்த்து பயணங்கள் மனதில் நிழலாடிக்கொண்டிருக்கிறது.
நேஷனல் ஸ்கூலில் எட்டாவது படிக்கும்போது பள்ளியில் இடப்பற்றாக்குறையால் ஷிப்ட் முறை. எங்களுக்கு இரண்டாவது ஷிப்ட மதியம் 1 மணி முதல் மாலை 6 மணி வரை. பதினொன்னரை மூன்றாவது ட்ரிப் 11-ல்தான் ஸ்கூல் போக வேண்டும். ஆனால் பல சமயங்களில் கூட்டம் அதிகம் இல்லாத டிரிப் என்ற காரணத்தால் பஸ்சை ரிப்பேர் பார்க்க வேண்டிய காலகட்டத்தில் மூன்றாவது ட்ரிப்பை கட் செய்து விட்டு பிரேக்டவுன் என்று சொல்லிவிட்டு பனிமனைக்கு கொண்டு சென்று விடுவார்கள். எட்டு கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஸ்கூலுக்கு நாக்கு தள்ள காலில் செருப்பு இல்லாமல் நடந்து செல்ல வேண்டும். அப்போதெல்லாம் டிரிப்ப கட் பண்ண கண்டக்டரையும், டிரைவரையும் மனதில் திட்டிக்கொண்டே, கல்ல விட்டேஞ்சி அவங்க மூஞ்சிய பேக்கனும் என்று நினைத்துக் கொண்டே நடந்து செல்வேன். இந்த நாவலை படித்த பிறகு கண்டம்டு பேருந்துகளை பராமரிப்பதில், ஓட்டுவதில் உள்ள சிக்கல்கள் அவர்களின் பிரச்சனகள் என்பதை தெளிவாக தெரிந்து கொண்டதால்அன்று அவர்களை திட்டியதற்காக இன்று மனதிற்குள் மன்னிப்பு கேட்டுக் கொண்டேன்.

சி.ஆர்.சி யில் வேலை பார்த்த அண்ணன் கண்டக்டர் சந்திரசேகரன், கண்டக்டர் ஆசைத்தம்பி, டிரைவர் மணிவாசகம் இன்னும் பெயர் ஞாபகம் இல்லாத டிரைவர், கண்டக்டர் முகங்கள் மீண்டும் மீண்டும் கண் முன்பே நடமாடிக் கொண்டிருக்கிறார்கள்.

யாரும் சொல்லாத கதைக்களத்தில் தன்னுடைய சொந்த அனுபங்களை கொண்டு கண்மணி குணசேகரன் எழுதியிருக்கும் இந்த நாவல் மிக முக்கியமான நாவல் !!!

Monday, September 14, 2015

குற்றப் பரம்பரை

குற்றப் பரம்பரை - நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரே மூச்சில் படித்த புத்தகம்



சமீபத்தில் பார்த்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த, பாதித்த படம் “மதயானைக் கூட்டம்”. என் கிராமத்து மக்களின் வாழ்க்கையை யதார்த்தமாக எந்தவித சினிமாத்தனமும் இல்லாமல் காட்டிய படம். இந்த படத்தில் வில்லன் பாத்திரத்தில் நடித்த வேல.ராமமூர்த்தி அவர்கள் அட்டகாசமாக நடித்திருப்பார். நான் வெட்டிக்காடு மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் பார்த்த வன்மம், பாசம் நிறைந்த மனிதர்களை அப்படியே திரையில் பிரதிபலித்திருப்பார். யார் இவர்? என்று இவரைப் பற்றி தெரிந்துகொள்ள தேடியபோது இவர் ஒரு எழுத்தாளர் என்று தெரிந்தது. நினைவலைகளை கசக்கியபோது லிட்டில் இந்தியா செல்லும்போது அவ்வப்போது வாங்கி படிக்கும் ஜூனியர் விகடனில் வந்த தொடர்களில் இவர் பெயரை பார்த்த ஞாபகம்... ஆனால் இவரின் கதைகளை படித்தது கிடையாது. இவர் எழுதிய புத்தகங்களை தேடிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் சென்னை சென்று வந்த நண்பர் கோவி.கண்ணன் வேல.ராமமூர்த்தியின் “குற்றப் பரம்பரை” “வேல. ராமமூர்த்தி கதைகள்” மற்றும் சில புத்தகங்களை வாங்கி வந்து கொடுத்தார். அதில் முதலில் படிக்க எடுத்தது “குற்றப் பரம்பரை”.

கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த ராமநாதபுரம் மாவட்ட கள்ளர்களின் ரத்த பூமி வாழ்க்கையை சொல்லும் கதை. கொம்பூதி, பெரும்பச்சேரி, பெருநாழி கிராமங்களில் தங்கி அந்த மக்களின் வாழ்க்கையை நேரில் பார்த்தது போல் தன் அற்புதமான கதை சொல்லும் திறனால் அந்த மனிதர்களை நம் முன்பே உலவ விட்டிருக்கார் வேல.ராமமூர்த்தி. வரலாற்று பாடப்புத்தகங்கள், நூல்கள் மூலம் நாம் பெரும்பாலும் தவவல்களை மட்டுமே தெரிந்து கொள்கிறோம் ஆனால வரலாற்று நாவல்கள், கதைகள் மூலம்தான் அந்த காலத்து மனிதர்களின் வாழ்க்கை முறையை நம்மால் அறிந்துகொள்ள முடிகிறது. ”பொன்னியின் செல்வன்” மூலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த சோழர்கணின் வாழ்க்கையை தெரிந்து கொண்டது போல நூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த கள்ளர்களின் வாழ்க்கைய இந்த நாவல் மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது.

கொம்பூதி என்னும் கிராமத்தில் வேயண்ணா என்கிற வேலுச்சாமி தலைமையில் வாழ்ந்த மனிதர்களின் கதை இது. வேயண்ணா போன்ற வீரம், கருணை, தலைமைப் பண்பு நிறைந்த ஆளுமையான மனிதர்ளை நாம் ஒரு சில கிராமங்களில் பார்க்கலாம். இதற்கு மிகச் சிறந்த உதாரணம் – என் பெரியப்பா வெட்டிக்காட்டின் நாட்டாமை வை.சி.ராமசாமி ஆலம்பிரியர். தன்னுடைய 31 வயதில் வெட்டிக்காட்டின் நாட்டாமையாக பதவி ஏற்ற அவர் இறக்கும் 75 வயது வரை வெட்டிக்காட்டின் ஒற்றுமைக்கும், வளர்ச்சிக்கும் பாடுபட்டவர். 70 வயதிலும் அவர் கம்பெடுத்து சுற்றி சல்லார்ஸ் எடுத்து நின்றால் இளவட்டங்களும் அவரை எதிர்த்து சிலம்பம் விளையாட பயப்படுவார்கள். மலேசியாவில் ஒரு சண்டையில் சீனர்களை சிலம்பம் சுற்றி துவம்சம் செய்தவர். அவர் நாட்டாமையாக பதவி வகித்த 44 வருடங்களில் வெட்டிக்காட்டிற்கு போலீஸ் வந்தது கிடையாது. அவர் சொல்வதுதான் தீர்ப்பு, தண்டணை. அவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட மேலாண்மை, தலைமைப் பண்பு பாடங்கள் பல !!!

தான் நேரில் பார்த்த, கேட்டு தெரிந்து கொண்ட உண்மை கதைகளை பல ஆண்டுகள் தன் மனதில் ஊற போட்டு... பேரண்பும் பெருங்கோபமமும் கொண்டு எழுதி தெறிக்கும் சாரயம் போல் ஒரு கூட்டத்தின் வரலாற்றை நமக்கு சொல்லியிருக்கார். ஆங்கிலேயர்களால் திருட்டுத் தொழில் செய்யும் கள்ளர்களை கண்காணிப்பதற்காக கொண்டு வந்த சட்டம் “குற்றப் பரம்பரை”. இந்த சட்டத்திற்கு பயந்து ஒரு சில மக்கள் வேறு மதத்திற்கு அந்தக் கால கட்டத்தில் மாறிவிட்டார்கள் என்பது போன்ற மேலோட்டமான ஒரு சில தகவல்கள்தான் எனக்கு தெரியும். ஏன் அவர்கள் இந்த களவு தொழிலுக்கு வந்தார்கள், அவர்களின் களவு முறை, வீரம், அன்பு, பாசத்திற்கு கட்டுப்படுவது, தாழ்தப்பட்டவர்கள் என்று மற்ற சாதிக்காரர்களால் தீண்டாமை கொடுமை அனுபவிக்கும் மனிதர்களை தன் சகோதரர்களாக பாவிக்கும் பண்பு என்பவற்றையெல்லாம் சொல்லும் ஒரு வரலாற்று ஆவணம் இந்த நாவல்.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த வையத்துரையை தன் மகன் போல் பாவித்து வளர்த்து வருவார் வேயண்ணா. அதற்கும் மேலே என்பது போல் ஒரு இடத்தில் இவ்வாறு கூறுவார்” என் மகன் வில்லாயுதம் கூட எனக்கு சரிசமமாக உட்கார முடியாது... ஆனால் வையத்துரைக்கு மட்டும் அந்த உரிமை உள்ளது”. பெரியப்பா, அப்பா இருவரும் எங்கள் வீட்டு குடி பறையர்களின் குழந்தைகளான கலியன், நாகநாதன் இருவரையும் குழந்தைகள் போல் பாவித்து வளர்த்து திருமணம் செயது வைத்தார்கள். நான் ஒவ்வொரு முறையும் வெட்டிக்காட்டிற்கு போகும்போது அண்ணன் கலியபெருமாள் தண்ணி போட்டு விட்டு வந்து அப்பா, பெரியப்பா கதைகளை சொல்வதும் அவர்களை நினைத்து அழுவதும் வாடிக்கையான ஒன்று. இப்படி ஒற்றுமையாக வாழ்ந்த மனிதர்களிடம் தங்கள் அரசியல் லாபங்களுக்காக சாதி மோதலை தூண்டிவிட்டு குளிர்காய்கிறார்கள் இன்றைய அரசியல்வியாதிகள் !!!

வேயண்ணா தன் மூத்த மகன் இண்ஸ்பெக்டர் சேதுவிடம் செய்து கொடுத்த சத்தியத்திற்கு கட்டுப்பட்டு கொம்பூதி மக்கள் களவை நிறுத்தி விடுகிறார்கள். ஆனால் பச்சமுத்து என்ற கயவனின் வஞ்சகத்தால் போலிசுக்கும், கொம்பூதி மக்களுக்கும் நடக்கும் இறுதிப்போரில் ஆயுதங்கள் இல்லாத கொம்பூதி கிராமமே அழிகிறது. வேயண்ணாவை அவர் மகன் சேது துப்பாக்கியால சுட்டு கொல்கிறான்.

இந்த இறுதி அத்தியா காட்சியை முதல் அத்தியாத்திலேயே நமக்கு கோடிட்டு காட்டியிருப்பார். வேயண்ணாவின் கூட்டம் போலீஸுக்கு பயந்து அடர்ந்த காட்டில் பதுங்கியிருப்பார்கள். அப்போது சிறுவன் சேது இலையில் செய்த பீப்பியால் ”பீ...பீப்...பீப்பி” என்று ஊதுவான் . வேயண்ணாவின் பெஞ்சாதி அங்கம்மா அவன் முதுகில் ஒரு போடு போட்டு “ஊதி...ஊதி ஊர காட்டி கொடுத்திராதடா” என்பாள். அந்த சேதுதான் தன் அப்பா வேயண்ணாவையும், மக்களையும் பிரிட்டீஷ் போலீஸ் இண்ஸ்பெக்டராக காட்டிக் கொடுத்து சுட்டுக் கொல்கிறான்.

வேயண்ணாவின் உயிரற்ற உடலைப் பார்த்து “ஐயா...! ஐயா...!ஐயா...!” சனங்கள் கதறி அழுது புரள்கிறார்கள்.

ஒயாத அழுகுரலும் ஊரணிக்கரை அலைச்சத்தமும் கேட்டுக்கொண்டே இருந்தன.

வேயண்ணாவின் அலை என் மனதில் இன்னும் சில நாட்கள் அடித்துக் கொண்டேயிருக்கும்... !!!