வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Friday, April 27, 2012

யாதும் ஊரே - 1


யாதும் ஊரே; யாவரும் கேளிர்.
-                                             -   கனியன் பூங்குன்றனார்

சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கலைச்செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர்.
   -    பாரதியார்

பல புத்தகங்கள் கொடுக்க முடியாத அனுபவத்தை ஒரு பயணம் கொடுத்து விடும். இது நான் அனுபவத்தில் கண்ட உண்மை. நாம் என்னதான் ஒரு நாட்டையோ அல்லது நகரத்தைப் பற்றியோ புத்தகத்தில் படித்திருந்தாலும், டிவியில் பார்த்திருந்தாலும் நேரில் சென்று பார்கும்போது கிடைக்கும் அனுபவம், மகிழ்ச்சி அலாதியானது. கடந்த இருபது வருடங்களாக உலகிலுள்ள பல்வேறு நாடுகள், நகரங்கள், ஊர்களுக்கு வேலை காரணமாக மற்றும் சுற்றுலாவாக சென்று வந்து கொண்டிருக்கிறேன். இந்த அனுபவங்களை சேமித்து வைக்க வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆவல். “யாதும் ஊரே” என்ற இந்த தொடர் மூலம் பயணிக்க போகிறேன்…

ஒரு பிளாஷ்பேக்:

1981-ம் வருடத்தில் ஓர் நாள் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி ஒன்பதாம் வகுப்பு “G” செக்சனில் வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமன் நீராவி இயந்திரம் அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முதல் பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு பாடத்தை கவனித்துக் கொண்டிருந்தேன். பாடம் நடத்திக் கொண்டிருந்த வெங்கட்ராமன் சார் ”ரயில் வண்டியை பார்க்காதவங்க எல்லாம் கையை தூக்குங்கடா” என்றார். நான் வெட்டிக்காடு அதை சுற்றியுள்ள கிராமங்கள், மன்னார்குடி டவுன் என்ற 20 கிலோ மீட்டர்கள் வட்டத்தை விட்டு வேறு எங்கும் சென்றது கிடையாது. ரயில் வண்டியை நேரில் பார்த்தது கிடையாது… எனவே சற்றென்று கையை மேலே தூக்கி விட்டேன். தலையை திருப்பி பார்த்தால் என்னைத் தவிர இன்னொருத்தன் மட்டும்தான் கையை தூக்கி கொண்டிருந்தான். இதை சற்றும் எதிர்பார்க்காத நான் அவமானத்தால் கூனி குறுகிப் போனேன். “வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல” அந்த அவமானத்தை அதிகப்படுத்த மத்த பசங்க எல்லாம் ஏளனமாகச் சிரித்தார்கள். “ஏன்டா… மூவாநல்லூர் அரசு பள்ளியிலிருந்து மாறுதல் வாங்கிகொண்டு இந்த டவுன் பள்ளிக்கூடத்தில் சேர்ந்தோம்” என்று நொந்து போனேன்.

ஒரு சிறிய கிராமத்திலிருந்து வந்து வகுப்பில் எப்போதும் முதல் மாணவனாகத் திகழும் என் மீது வகுப்பு ஆசிரியர் வெங்கட்ராமனுக்கு மிகுந்த பாசம் உண்டு. நான் ரயில் வண்டி பார்த்தது கிடையாது என்பதை அவர் எதிர் பார்க்கவில்லை. தான் சாதரணமாக கேட்ட ஒரு கேள்வியால் நான் அவமானத்தால் தலைகுனிந்து நிற்பதை பார்த்து என்னை உற்சாகப் படுத்த வேண்டும் என்று இப்படி சொன்னார். “ரவி சின்ன கிராமத்திலிருந்து வந்து படிப்பவன். அதனால் அவனுக்கு ரயில் வண்டியை பார்க்க வாய்ப்பில்லை. நீங்க எல்லாம் இவனைப் பார்த்து சிரித்தீர்கள். இவன் கிளாஸ்ல பர்ஸ்ட் ரேங்…இப்ப நான் டெஸ்ட் வைச்சன்னா ரவிதான் பர்ஸ்ட் மார்க் எடுப்பான்… உங்கள்ல யாராவது பர்ஸ்ட் மார்க் எடுக்க முடியுமா? சொல்லுங்கடா….தஞ்சாவூர்ல இருக்கிற ஆடு, மாடுகள், பன்றிகள் கூடத்தான் ரயில் வண்டியை தினமும் பார்க்கிறது… ஆனா அதுகளுக்கு ரயில் வண்டியின் நீராவி இயந்திரம் எப்படி இயங்குகின்றது என்று சொல்ல தெரியாது… ஆனால் ரவி தெளிவா சொல்லுவான். எனவே…நீங்க பார்த்ததற்கும ஆடு மாடுகள் பார்த்ததற்கும் வித்தியாசம் கிடையாது” என்று கூறி ஏளனமாக சிரித்த பசங்க முகத்தில் கரியை பூசினார்.

”இங்க வாட ரவி…” என்று கூப்பிட்டு முதுகில் தட்டிக் கொடுத்து “நீ கவலைப்படாதடா… நீ நல்லா படிச்சு பெரிய என்சினீயரா வருவடா” என்று சொன்னார். அன்று மனதில் பதிந்த எண்ணம்தான் பொறியியல் படிக்க வேண்டும்!!!

சாயங்காலம் சைக்கிளில் பள்ளிக்கூடத்திலிருந்து திரும்பி வந்து வீட்டு வேலைகள், வீட்டு பாடங்கள் முடித்து விட்டு திண்ணையில் உட்கார்ந்து கதை பேசிக்கொண்டிருக்கும் மக்கள்களுடன் வந்து உட்கார்ந்து இரவு சாப்பாடு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அப்போது அப்பா எட-அன்னவாசல் கிராமத்திற்கு சென்றுவிட்டு மாட்டு வண்டியில் திரும்பி வந்தார். அப்பாவை பார்த்தவுடன் அழ ஆரம்பித்து விட்டேன். அப்பா பதறிப் போய் “ஏன்டா தம்பி அழுவுற…” என்று கேட்டுக்கொண்டே மாடுகளை அப்படியே விட்டு விட்டு என்கிட்டே வந்தார். அழுதுகொண்டே அன்று பள்ளியில் நடந்ததை சொன்னேன். ”எங்க கிளாஸ்ல…நான் மட்டும்தாம்பா… ரயில பார்க்ல... என்ன தஞ்சாவூர் கூட்டிக்கிட்டு போய் ரயில காட்டுப்பா” என்று அழுதேன்.

“படுவா பயலே… அழாதட… நான் அடுத்த வாட்டி தஞ்சாவூர் போறப்ப உன்ன அழச்சிகிட்டு போறேன்டா… வக்காலி… அவன்... அவன் நொய்க்கு அழுவுறான்… இவன் நெய்க்கு அழுவுறான்யா” என்று சொல்லிக்கொண்டே மாடுகளை தேடி வைக்கப் போருக்கு போய்விட்டார்.

இத பார்த்து கொண்டிருந்த பக்கத்து வீட்டு பெரியம்மா “ஏன்டா ரவி இதுக்கா அழுவுற… ரயிலு என்னடா ரயிலு…நீதான் நல்லா படிக்கிற… நீ பெரிய படிப்பு படிச்சு ஏரோப்பிளேன்ல எல்லாம் பறந்து போவடா” என்றார்.

- பறக்கலாம்...

Singapore Airlines 

Taj Mahal, Agra - 1991

Singapore - 1994
Harvard University, Boston - 1996

Great Wall, China - 1997

Seoul - 1997

Buckingham Palace, London - 1997

Niagara Falls, USA - 2000

Disney World, Orlando - 2000

New York - 2001

Eiffel Tower, Paris - 2007

Bali, Indonesia - 2008

Harbour Bridge, Sydney - 2008

Shanghai - 2010

Burj Khalifa Tower, Dubai - 2011