வெட்டிக்காடு
Saturday, June 17, 2006
அய்யனார் சாமி
வலைப்பக்கம் வந்து ரொம்ப நாளச்சு. நீண்ட நாட்கள் பதிவு போடலைன்னா தமிழ்மணத்திலிருந்து நம்மள கழட்டி விட்டுவாங்க என்ற பயத்தில் இந்த பதிவு.
வெட்டிக்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் நான் நேரில் பார்த்த, கேட்ட உண்மை சம்பவங்களின் அடிப்படையில் "வெட்டிக்காடு கதைகள்" என்ற தலைப்பில் ஒரு தொடர் எழுதலாம்னு ஒர் எண்ணம்.
இந்தக் கதை நான் மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கும்போது நடந்தது.
வெட்டிக்காடு கதைகள் (1) - அய்யனார் சாமி
--------------------------------------------------------
மூவாநல்லூர் அரசினர் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் எருமை வாகனத்துடன் எமதர்மராஜாவே நேரில் வந்து நின்னாக்கூட பயப்படமாட்டார்கள். ஆனால் தமிழாசிரியர் புலவர் 'எமன் ' ராஜகோபால் பெயரைக்கேட்டாலேயே பசங்களுக்கு பயத்தில் கை கால்கள் எல்லாம் நடுங்க ஆரம்ம்பித்து விடும்.
வெள்ளை வேட்டி, சட்டை, முருக்கிய பெரிய மீசை, இடுப்பில் சொருகியிருக்கும் கத்தி, கையில் ஒரு நீண்ட மூங்கில் கம்பு சகிதமாக தமிழ் ஐயா நடந்து வருவதைப் பார்த்தால் பரவை முனியம்மா பாடும் 'மதுரை வீரன் தானே.... ' என்ற பாடல்தான் நினைவுக்கு வரும்.
'கயவாலிப் பயலுகளா... என்னாடா அங்க சத்தம் ? வந்தேன்னா... குன்டிய ராவிபுடுவேன் ' என்று எமன் ஒரு குரல் கொடுத்தாரென்றால் பசங்களோடு சேர்ந்து பள்ளிக்கூடத்தைச் சுற்றியிருக்கும் மரம், செடி கொடிகள் கூட ஆடாமல், அசையாமல் அமைதி காக்கும்.
நாயகன் வேலு நாயக்கரப்போல தமிழ் ஐயா நல்லவரா ? கெட்டவரா ? என்று புரிந்து கொள்ள முடியாத கேரக்டர்.
பாடம் படித்து வராத, வீட்டுப்பாடம் செய்து வராத மாணவர்களை மூங்கில் கம்பாலும், கிளோரியா கம்பாலும் வகுப்பின் மூலை முடுக்கெல்லாம் விரட்டி, விரட்டிச் சென்று அடி பிண்ணி எடுப்பார். பெண்களை கொஞ்சம் கூட அவருக்கு பிடிக்காது. பெண்களின் கட்டுரை நோட்டுப்புத்தகத்தை வாங்கி பேருக்கு ஏனோதானோவென்று ஒரு பார்வை பார்த்துவிட்டு 'இது என்ன கையெழுத்து ? ' என்று கூறி எழுதிய பக்கங்களை கிழித்து எறிவார். ஆனால்.. சில பசங்களின் கோழி கிறுக்கல் கையெழுத்தை கண்டுகொள்ளாமல் விட்டு விடுவார்.
ஏழை மாணவர்களுக்கு தனது சொந்த செலவில் பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் வாங்கிக் கொடுப்பார். பத்தாம் வகுப்பு மாணவர்களையெல்லாம் பொதுத்தேர்வு படிப்பு விடுமுறை மற்றும் பரீட்சை நாட்களில் மன்னார்குடி டவுனில் உள்ள தனது வீட்டில் தங்க வைத்து, சாப்பாடு போட்டு, பாடங்கள் சொல்லிக்கொடுத்து படிக்க வைப்பார்.
ஐயாவைப் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல... தலைமையாசிரியர் அப்பிரானி நாரயணன் மற்றும் சக ஆசிரியர்கள் கூடப் பயந்து ஐயா முன்பு அடகக ஒடுக்கமாக நடந்து கொள்வார்கள்.
ஐயாவுக்கு தலைமையாசிரியார் நாரயணனை கொஞ்சம்கூட பிடிக்காது. எப்படி பிடிக்கும் ? ஐயா பழுத்த நாத்திகவாதி. பெரியாரின் சீடர். பசங்க தப்பித்தவறிக்கூட சாமி, பேய், பூதம் என்று சொன்னால் தொலைத்து விடுவார். ஆனால் தலைமையாசிரியர் நாரயணனோ பழுத்த ஆத்திகவாதி. நெற்றி நிறைய நாமத்துடன் வலம்வரும் ஓர் அப்பிரானி.
கல்வி அதிகாரி (D.E.O) எந்த நேரத்திலும் பள்ளியை ஆய்வு செய்ய வருவார் என்ற பயத்தில் ஆசிரியர்கள் எல்லாம் ஒழுங்காக பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கொன்டிருந்த காலக்கட்டத்தில் ஓர் நாள் தமிழ் ஐயா தலைமயாசிரியர் நாரயணன் அறைக்குச்சென்று கிராமத்திலுள்ள அவருடைய வயலில் அறுவடை நடைபெறுவதால் 'ரெண்டு நாட்கள் லீவு வேண்டும் ' என்று தலைமையாசிரியரைப் பார்த்து கேட்டார்.
'என்ன சார்... D.E.O எந்த நேரத்திலும் ஆய்வுக்காக வருவார். இப்ப போய் லீவு கேட்கிறீங்களே.. ? ' என்று இழுத்தார் நாரயணன்.
சரேலென்று இடுப்பில் சொருகியிருந்த கத்தியை எடுத்து மேசை மீது ஓங்கி குத்திவிட்டு 'பாப்பாரப் பயலே...இப்ப லீவு தரமுடியுமா ? முடியாதா ? ' என்றார் எமன்.
'நீங்கள் எத்தனை நாட்கள் வேண்டுமானானும் லீவு எடுத்துக் கொள்ளுங்கள் சார்.. D.E.O கேட்டால் உங்களுக்கு உடல்நிலை சரியில்லை என்று சொல்லிவிடுகிறேன் ' என்று நடுங்கிக்கொண்டே சொல்லி அன்று எமனோட கத்திகிட்டேயிருந்து தப்பித்தார் நாரயணன்.
மூவாநல்லூர் மற்றும் அதைச் சுற்றியிருக்கும் கிராமங்களிலுள்ள அய்யனார், மதுரை வீரன், கருப்பண்ணசாமி போன்ற கோவில்களில் ஆடுகள், கோழிகள் பலி கொடுத்து... கரகாட்டம், வள்ளித் திருமணம், பவளக்கொடி நாடகங்களுடன் திருவிழாக்கள் களை கட்டும் ஆடி மாதத்தில் ஓர் நாள்...
ஏழாம் வகுப்பு மாணவர்கள் எல்லாம் ரெண்டாவது பீரியட் தமிழ் பாடத்தை நினைத்துக்கொண்டு மனதில் திகிலோடு அமர்ந்திருந்தார்கள். காரணம்... தமிழ் ஐயா திடாரென்று நேற்று இன்று எல்லோரும் மூன்று செய்யுள்கள் ஒப்புவிக்க வேண்டும் என்று கூறிவிட்டார். பள்ளி விட்டவுடன் வீட்டிற்குச் சென்று புத்தகப்பையை ஒரு மூலையில் கடாசிவிட்டு வயல்வெளிகளிலும், குளத்திலும் ஆட்டம் போடும் பசங்க... அடுத்த நாள் காலையில பள்ளிக்கூடத்திற்கு போகும்போதுதான் புத்தகப்பையைத் தேடுவார்கள். இப்படிப்பட்ட படிப்பாளிகளிடம் திடாரென்று மூன்று செய்யுள்களை ஒரே நாளில் படித்து ஒப்புவிக்க வேண்டும் என்று எமன் கூறினால் பாவம்... அவர்கள் என்ன பண்ணுவார்கள் ? குறைந்தபட்சம் ஒரு மூன்று, நான்கு நாட்கள் கொடுத்தாலாவது கொஞ்சம் முயற்சி செய்து பார்ப்பார்கள்.
முதல் மார்க் வாங்கும் சண்முகத்தைத் தவிர மற்ற எல்லோருக்கும் இன்று சரியான மண்டகப்படி உண்டு என்ற பயத்தில் மாணவர்களிருக்க இரண்டாவது பீரியட் தொடங்குவதற்கான மணியும் அடித்தது. ஐந்து நிமிடங்களாயிற்று... பத்து நிமிடங்களாயிற்று.. ஐயா இன்னும் வரவில்லை.
வகுப்புத் தலைவன் சண்முகம் ஆசிரியர்கள் அறைக்குச் சென்று பார்த்துவிட்டு வந்து 'சார்.. இன்னிக்கு வரலைடா ' என்றான். மகிழ்ச்சி வெள்ளத்தில் மாணவர்கள் எல்லாம் ஆரவாரம் செய்தார்கள்.
'டேய்... சத்தம் போடாதிங்கடா... புகழேந்தி சாருக்கு டீ வாங்க நான் காடுவெட்டியார் கடைக்குப் போறேன்... சத்தம் போடாம இருங்கடா ' என்று கூறிவிட்டு சண்முகம் சென்றுவிட்டான். கணக்கு வாத்தியார் புகழேந்திக்கு ஒரு கிலோமீட்டர் தொலைவில் ஊருக்குள்ளிருக்கும் காடுவெட்டியார் கடை டாதான் பிடிக்கும். பக்கதிலுள்ள கோவிந்தராசு டீக்கடை டீ அவருக்கு பிடிக்காது.
செய்யுள் படித்து வரச்சொன்ன எமன் வரவில்லை. ஆசிரியர்கள் இல்லாத நேரத்தில் கொஞ்சநேரம் கூட சுதந்திரமாக பேசவிடாமல் பேசியவர்கள் பெயர் என்ற லிஸ்ட் ஒன்றைக் கொடுத்து வாத்தியார்களிடம் மாட்டிவிடும் சகுனி சண்முகமும் வகுப்பில் இல்லை. மாணவர்களின் மகிழ்ச்சியைக் கேட்கவும் வேண்டுமா ? அடி தூள் பறக்குது.
சண்முகம் போன ஐந்து நிமிடங்கள் கழித்து வயலுக்குச் சென்றுவிட்டு சற்று லேட்டாக வந்த தமிழ் ஐயா பள்ளியை சைக்கிளில் நெருங்கும்போது அமைதியாக இருக்க வேண்டிய அவருடைய ஏழாம் வகுப்பு சென்னை கார்ப்பரேசன் கவுன்சில் மீட்டீங் போல சத்தமாக இருப்பதைக்கண்டு அதிர்ந்து போனார். பள்ளியின் முன்வாசல் வழியாக பள்ளிக்குள் வராமல் அப்படியே பள்ளியின் பின்பக்கம் சென்று அங்கிருக்கும் ஒத்தையடிப்பாதை வழியாக உள்ளே நுழைந்து பள்ளிக்குள் வந்தார்.
வேட்டைக்குச் செல்லும் புலி போல மெல்ல பதுங்கி அடிமேல் அடி எடுத்து வைத்து மெதுவாக ஏழாம் வகுபின் பின்பகுதிக்குச் சென்று பாதி சுவருக்கு மேலேயிருக்கும் மூங்கில் தட்டியின் ஒட்டை வழியாக எட்டிப் பார்த்தார். உள்ளே முதல் பெஞ்சில் உட்கார்ந்திருக்கும் சண்முகத்தை காணவில்லை. மாணவர்கள் சத்தம் போட்டு ஓடி பிடித்து விளையாடுகிறார்கள். மாணவிகள் பெஞ்சு மேல் சாக்பீசால் கட்டம் போட்டு தாயம் விளையாடுகிறார்கள். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம் என்று அப்படியே நின்று பார்க்க ஆரம்பித்தார் எமன்.
அந்த நேரம் பார்த்தா கடைசி பெஞ்ச் ராமமூர்த்திக்கு சாமி ஆட வேண்டும் என்ற ஆசை வரவேண்டும் ? திடாரென்று பெஞ்ச் மேல ஏறி 'டேய்... நான்தான்டா அய்யானார் சாமி ' என்று கூறிக்கொண்டு 'டேய்..டேய்.. ' என்று சத்தம் போட்டு சாமி ஆட ஆரம்பித்தான். மாணவர்கள் எல்லாம் தங்களுடைய சத்தத்தை நிறுத்திவிட்டு ராமமூர்த்தியின் சாமியாட்டத்தை ரசிக்க ஆரம்பித்து விட்டார்கள்.
உடனே பக்கத்திலிருந்த அவன் நண்பன் வேல்மணி பூசாரியாக மாறி 'அய்யனார் சாமீ... எங்களை நீதான் காப்பத்தனும்... உனக்கு என்ன குறையிருந்தாலும் எங்ககிட்ட சொல்லு... நாங்க தீர்த்து வைக்கிறோம் சாமீ ' என்றான்.
'எனக்கு ஏன்டா... இந்த வருஷம் ரெண்டு கரும்புதான் (ஆடு) வெட்டியிருக்கீங்க '
'அடுத்த வருஷம் நெறைய வெட்றோம் சாமி '
பக்தன் செல்வராசு அய்யனார் சாமியிடம் சென்று 'சாமீ...நான் படிக்காமலேயே பாசகனும் சாமீ.. அதுக்கு நீதான் ஒரு வழியச் சொல்லனும் சாமீ ' என்றான்.
'டேய்.. எனக்கு ஒரு குஞ்சு (கோழி) காவு குடுடா...நீ படிக்காம பாசாக நான் ஏற்பாடு பன்றேன் '
பிறகு மேலும் ஒரு சில பக்தர்களுக்கு வரம் கொடுத்துவிட்டு மலையேறி விட்டது அய்யனார் சாமி. அய்யனார் சாமி ஆட்டத்தைப் பார்த்துவிட்டு எமன் ஒன்றும் செய்யாமல் ஆசிரியர்கள் அறைக்குச் சென்றுவிட்டார்.
அன்று மதியம் ஏழாம் வகுப்பிற்கு மூன்றாவது பீரியட் ஓவிய வகுப்பு. ஓவிய வகுப்பென்றால் மாணவர்களுக்கு ஒரே ஜாலிதான். ஏனென்றால் ஓவிய ஆசிரியர் முருகன் அம்புலிமாமா, ரத்னபால சிறுவர் கதை புத்தகங்களை படித்து அந்த கதைகளை அழகி படத்தில் வரும் பிச்சாண்டி வாத்தியார் போல ஆக்சன் போட்டு ரசித்து சொல்லுவார். இதனால் பசங்களுக்கு முருகன் வாத்தியாரை ரொம்பப் பிடிக்கும். 'மகேந்திரபுரி இளவரசி ' கதையின் நான்காம் பாகத்தைக் கேட்க ஆவலுடன் காத்திருந்தார்கள்.
மூன்றாவது பீரியட் தொடங்குவதற்கான பெல் அடித்தவுடன் ஒவிய ஆசிரியர் முருகனுக்குப் பதிலாக தமிழ் ஐயா வகுப்பினுள் நுழைந்தார். ஓவிய ஆசிரியரிடம் அனுமதி பெற்று அவருக்குப் பதில் எமன் வந்துவிட்டார். பசங்களுக்கு செய்யுள் சொல்லவேண்டுமே என்ற பயத்தில் குப்புனு வேர்க்க ஆரம்பித்துவிட்டது. நாற்காலியில் வந்து அமர்ந்து ஒரு ஐந்து நிமிடங்கள் பசங்களைப் பார்த்துக்கொண்டே அமைதியாக உட்கார்ந்திருந்தார். புயல் அடிப்பதற்கு முன்பு நிலவும் மயான அமைதி.
'டேய்.. சண்முகம் காலையில வகுப்ப பார்த்துக்காம எங்கடா போயிருந்தே ? '
'புகழேந்தி சாருக்கு டீ வாங்கிவர காடுவெட்டியார் கடைக்கு போயிருந்தேன் சார் '
'சரி.. போயி வேப்ப இலை நிறைய ஒடிச்சுக்கிட்டு வாடா '
'டேய்.. செல்வம் நீ போயி ஒரு டப்பாவுல எதிர்த்த வீட்டு குப்பையில சாம்பல் அள்ளிகிட்டு வாடா '
'டேய்.. மதி நீ போயி பெரிசா ஒரு ஏழெட்டு கிளோரியா கம்பு ஒடிச்சிகிட்டு வாடா '
ஐயா சாலமன் பாப்பையா சொல்வது போல பசங்களுக்கு ஒன்னும் புரியல.. வெளங்கல.
வேப்ப இலை, சாம்பல், கிளோரியா கம்புகள் எல்லாம் எமன் முன்னாடி உள்ள மேசையில்.
'யாருடா.. அந்த அய்யனார் சாமி ? '
பசங்களுக்கு இப்ப வெளங்கிடுச்சி. அந்த அய்யனார் சாமியே வந்தாக்கூட நம்மல இன்னிக்கு எமன்கிட்டேயிருந்து காப்பாத்த முடியாது என்று நினைத்துக்கொண்டே மரண பயத்துடன் மெதுவாக எழுந்தான் ராமமூர்த்தி.
'பூசாரியும், படிக்காமலேயே பாசக வேணும்னு வரம் கேட்ட பக்தனும் எழுந்திருங்க '
வேல்மணியும் செல்வராசுவும் மெதுவாக எழுந்தார்கள்.
எமன் திடாரென்று ஒரு கையில் சாம்பலையும் மறுகையில் வேப்பிலையும் எடுத்துக்கொண்டு ராமமூர்த்தி தலையில் சாம்பலைக் வீசிக்கொண்டே 'அய்யனாரே... என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு ' என்று கூறிக்கொண்டே வேப்பிலையால் அடிக்க ஆரம்பித்தார்.
பிறகு ராமமூர்த்தி, வேல்மணி, செல்வராசு மூன்று பேரையும் கிளோரியா கம்பால் தாக்க ஆரம்பித்தார். பசங்க மூனு பேரும் அடி தாங்கமுடியாம வகுப்போட ஒரு பக்கத்திலிருந்து இன்னொரு பக்கத்துக்கு மாறி மாறி ஓடறாங்க. எமன் விடாமல் துரத்தித் துரத்தி அடிக்கிறார். பசங்க மூனு பேரும் போட்ட அலறல் சத்தத்தைக்கேட்டு மத்த வகுப்பு ஆசிரியர்களெல்லாம் பாடம் நடத்துவதை நிறுத்திவிட்டு ஏழாம் வகுப்பை திகிலுடன் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
மீண்டும் மீண்டும் ராமமூர்த்தியை மட்டும் கட்டம் கட்டி 'அய்யனார் சாமீ.. என்னோட மாணவனவிட்டுட்டு ஓடிப்போடிடு ' என்று சொல்லிக்கொண்டே வேப்பிலையாலும், கிளோரியா கம்பாலும் அடி பிண்ணி எடுக்கிறார். அடி தாங்கமுடியாமல் 'நான் ஓடிப்போயிடுறேன்.. நான் ஓடிப்போயிடுறேன் ' என்று ராமமூர்த்தி அலறுகிறான்.
அவிழ்ந்த கோவணத்தை ஒரு கையால் பிடித்துக்கொண்டே மறு கையிலுள்ள கிளோரியா கம்பால் ராமமூர்த்தியை தாக்கிக்கொண்டே இருக்கிறார் எமன்.
இதற்கு மேல் இங்கேயிருந்தால் மனுசன் இன்னிக்கு அடிச்சே கொண்ணுடுவார் என்ற பயத்தில் ராமமூர்த்தி வகுப்பை விட்டு வீட்டை நோக்கி ஓட ஆரம்பித்தான்.
அன்று பள்ளியைவிட்டு ஓடியவன்தான் அதற்குப் பிறகு பள்ளிக்கூடத்திற்கு ராமமூர்த்தி வரவேயில்லை!
***
Subscribe to:
Posts (Atom)