வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, November 30, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 5



நான் சிறுவனாக இருந்த காலத்தில் எங்கள் வீட்டில் கறவை எருமை மாடுகள், பசு மாடுகள், உழவு மாடுகள், வண்டி மாடுகள் என ஒவ்வொரு கால கட்டத்திலும் 10-லிருந்து 15 மாடுகள் இருக்கும். இந்த மாடுகளை மேய்ப்பதற்கும், பராமரிப்பதற்கும் முனியாண்டி என்ற பையன் எங்கள் வீட்டில் வேலை பார்த்து வந்தான். முனியன் என்னை விட மூன்று வயது பெரியவன். முனியனின் குடும்பம் கடலூர் மாவட்டலிருந்து பஞ்சம் பிழைப்பதற்காக எங்கள் கிராமத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பம். நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது முனியனின் அப்பா தங்கராசுக்கும் அவரது நண்பர் கட்டாரிக்கும் ஏற்பட்ட பிரச்சினையில் தங்கராசு தன் குடும்பத்துடன் தன் சொந்த ஊருக்கு திரும்பி சென்று விட்டார்.

முனியனின் வேலைகள் எனக்கும் என் அண்ணனுக்கும் பகிர்ந்து கொடுக்கப்பட்டது. எருமை மாடுகள், பசு மாடுகளை மேய்க்கும் வேலை எனக்கும் உழவு, வண்டி மாடுகளை பராமரிப்பது, மாடுகளுக்கு தீவனங்கள் வைப்பது போன்ற வேலைகள் அண்ணனுக்கும் வழங்கப் பட்டது. தினமும் பள்ளி விட்டு வந்தவுடன் மாலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மாடுகளை மேய்த்து வர வேண்டும். அது போல் சனி, ஞாயிறு கிழமைகளில் காலை, மாலை இரு வேளைகளிலும் மாடுகளை மேய்க்க வேண்டும். என்னுடைய நண்பர்கள் பெரும்பாலோரின் வேலையும் மாடுகளை மேய்ப்பதுதான். நானும் என் நண்பர்களும் மாடுகளை வயல் வெளிகளில் மேய விட்டு விட்டு ஆட்டம் போடுவோம். இப்படி நான்கைந்து மாதங்கள் எந்த பிரச்சனைகளும் இல்லாமல் என் மாடு மேய்க்கும் பணி தொடர்ந்தது.

ஒரு நாள் சுப்பிரமணியன் சார் ஆதி திராவிட காலணியைச் சேர்ந்த என் நண்பன் கண்ணனுக்கு கூட்டல் கணக்கு பல முறை சொல்லிக் கொடுத்தும் தப்பாகவே விடை சொன்னான். கோபத்தின் உச்சிக்கு சென்ற சுப்பிரமணியன் சார் “எருமை மாடு மேய்க்கிறவனுக்கும்... மாட்டுக்கறி திங்கறவனுக்கும் படிப்பு வராதுஎன்று திட்டி மூங்கில் கம்பால் அடித்தார்.

எனக்கோ திக்கென்றது... நானும் தினமும் எருமை மாடுகளை மேய்க்கிறேன். எனவே எனக்கும் படிப்பு ஏறாதா? அன்று மாலை வீட்டிற்கு சென்றவுடன் எருமை மாடுகளை மேய்த்தால் படிப்பு ஏறாதுன்னு சுப்பிரமணியன் சார் சொன்னாரு. இனிமே நான் மாடு மேய்க்க மாட்டேன்என்று பெரியம்மா மற்றும் அம்மாவிடம் சொன்னேன். பள்ளிக்கூடத்துல வாத்தியார் ஏதோ சொல்லியிருக்காருன்னு அதைப்பற்றி அவர்கள் பெரிதாக எடுத்துக்கொள்ள வில்லை. ஆனால்.. தொடர்ந்து அடுத்த சில நாட்கள் நான் மாடு மேய்க்க மாட்டேன் என்று அழுது அடம் பிடித்தவுடன் விஷயம் அப்பாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப் பட்டது.

“சுப்பிரமணியன் வாத்தியார் என்ன சொன்னாருன்னு நான் வாத்தியாருகிட்ட கேட்கிறேன்என்று சொல்லி விட்டார். ஆனால் அடுத்த நாள் வயலில் வேலை பார்த்தவர்களுக்கு டீ வாங்கி கொடுத்து விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த அம்மா வரும் வழியிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு வந்து விட்டார்.

“வாத்தியாரே... மாடு மேய்ச்சா படிப்பு வராதுன்னு சொன்னீங்கன்னு... இந்த ரவி பய மாடு மேய்க்க மாட்டேங்கிறான்... ஊரு புள்ளங்க எல்லாம் மாடு மேய்க்குது.. இவன் மட்டும் இப்படி சொல்றான்என்று சுப்பிரமணியன் சாரிடம் சொன்னார். அம்மாவின் வருகையை நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. சுப்பிரமணியன் சாருக்கு முதலில் ஒன்றும் புரிய வில்லை. பிறகு அம்மா மற்றும் என்னிடம் கேட்டு நிலைமையை புரிந்து கொண்டார்.

கண்ணன் கணக்கு தப்பா போட்டான்னு கோபத்தில சொன்னேண்டா... அவன் மக்கு பய... நீ நல்லா படிக்கிறவன். உனக்கு படிப்பு நல்லா வரும்டா... அம்மா சொல்றபடி கேளுஎன்று என்னிடம் கூறினார்.

சுப்பிரமணியன் சார் சொல்லி விட்டதால் மாடுகளை தினமும் மேய்க்கும் என் பணி தொடர்ந்தது. 17 வயது வரை மாடுகள் மேய்க்கும் வேலையை செவ்வனே செய்தேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர்ந்த பிறகுதான்  மாடு மேய்க்கும் வேலையிலிருந்து விடுதலை!

மாடு மேய்ப்பது பற்றி சுப்பிரமணியன் சாரிடம் வந்து புகார் செய்த நாள் முதல் எனக்கும் அம்மாவிற்கும் ஆரம்பமாகின சண்டைகள். அப்பா நாங்கள் எல்லாம் படித்து நல்ல நிலைக்கு வர வேண்டும் என்று விரும்பினார். பெரியம்மா படிப்பிற்கு ஆதரவும் கிடையாது... எதிரியும் கிடையாது. ஆனால்... என் படிப்பின் முதல் எதிரி படிப்பறிவில்லா என் அம்மாதான்.

பரீட்சை சமயங்களில், வீட்டுப் பாடங்கள் அதிகம் இருக்கும் சமயங்களில் மாடுகளை மேய்க்க போகாமல் படிப்பில் மூழ்கியிருப்பேன். “ஊர் புள்ளைங்க எல்லாம் மாடு மேய்க்குது...வீட்டு வேலைங்க செய்யுது...இவன் மட்டும் பெரிய தொர வீட்டு புள்ள கலெக்டருக்கு படிக்கிற மாதிரி ஒரு வேலையும் செய்யாம இந்த புத்தகத்த வச்சிகிட்டு உக்காந்திருக்கான் என்று  பாரதிராஜா பட காந்திமதி மாதிரி அம்மா சத்தம் போட ஆரம்பித்து விடுவார். ஒரு சில நாட்களில் புத்தகத்தை பிடுங்கி விட்டேறிவார்.

எட்டாவது படித்துக்கொண்டிருக்கும்போது ஒரு நாள் வரலாறு வீட்டுப்பாடம் எழுதிக்கொண்டிருந்தேன். அம்மா வழக்கம் போல் மாடு மேய்க்க போகவில்லை என்று உரத்த குரலில் திட்டிக்கொண்டிருந்தார். நான் கண்டு கொள்ளாமல் எழுதிக்கொண்டிருந்தேன். கோபத்தின் உச்சிக்குச் சென்ற அம்மா “நான் பாட்டுக்கு சொல்லிகிட்டேயிருக்கேன்... என்னடா பெரிய பொடலங்கா படிப்பு படிக்கிறேஎன்று சொல்லிக்கொண்டே என் நோட்டு புத்தகத்தை பிடுங்கி கிழித்து விட்டார். கிட்டத்தட்ட நாற்பது பக்கங்களை திரும்ப புது நோட்டில் நான் மறுபடியும் எழுத நேரிட்டது.                                         
                                              -- பாடங்கள் தொடரும்...

Monday, November 22, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 4



இரண்டாம் வகுப்பு படிக்கும்போது நடந்த மறக்க முடியாத நிகழ்ச்சி...

முத்துகிருஷ்ணன் சார் விடுமுறையில் இருந்த ஒரு நாளில் சுப்பிரமணியன் சார் நான்காம் வகுப்பு மாணவர்களை ஒவ்வொருவராக எழுந்து ஒரு பாடத்தை உரக்க படிக்கச் சொன்னார். அப்போது முருகன் என்ற மாணவன் பாடம் படிக்கும்போது “ஒளவையார்என்று படிக்காமல் மற்றும் வைப் பிரித்து ஒ-ளவையார்என்று படித்தான். சுப்பிரமணியன் சார் பல முறை திரும்ப படிக்க சொல்லியும் ஒ-ளவையார் என்றே படித்தான். அப்போது இரண்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்த என்னை அழைத்து புத்தகத்தை வாங்கி படிக்க சொன்னார். நான் சரியாக “ஒளவையார் என்று படித்தேன். சுப்பிரமணியன் சார் என்னைப்பார்த்து முருகன் கண்ணத்தில் ஐந்து அறைகள் விடச் சொன்னார் (ஐந்து முறை தவறாக முருகன் படித்ததால்!) முருகன் வகுப்பிலேயே உயரமானவன்... நானோ சின்ன பையன். எனவே என்னை ஒரு பெஞ்சு மேல் ஏறி நிற்கச் சொல்லி முருகன் கண்ணத்தில் அறை விட சொன்னார். நான் பய்ந்து கொண்டே முருகனுக்கு ஐந்து அறைகள் விட்டேன்...  
  
எங்கள் பள்ளிக்கூடத்திற்கு இரண்டு ஆசிரியர்கள்தான் என்று முன்பே கூறியிருந்தேன். ஒருவர் முத்துகிருஷ்ணன் ஆசிரியர்... இவர் தலைமை ஆசிரியர். நான்காம் மற்றும் ஐந்தாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். இவருடைய மற்ற பெயர் அஞ்சாவது சார். மற்றவர் சுப்பிரமணியன் சார்... ஒன்று, இரண்டு மற்றும் மூன்றாம் வகுப்புகளுக்கு பாடம் எடுப்பார். மூனாவது சார் என்பது இவருடைய மற்ற பெயர்.

ஏதாவது ஒரு சார் விடுமுறைபென்றால் நடுவில் இருக்கும் தட்டியை நகர்த்தி ஓரத்தில் வைத்துவிட்டு ஐந்து வகுப்புகளையும் கண்காணித்துக் கொள்ளும் ஒர் சகலகலா வல்லவராகத் திகழ்வார் மற்ற ஆசிரியர். அச்சகலகலா வல்லவருக்கும் சில சமயங்களில் தர்மசங்கடமான நிலைகள் வருவதுண்டு!

உதாரணமாக... இயற்கையின் உபாதையை போக்க வந்து ஒரு விரலை மூக்கின் மேல் வைத்து அனுமதி கேட்கும் ஒன்றாம் வகுப்பு மாணவனுக்கு அனுமதி வழங்குவதா? அல்லது இரண்டாம் வகுப்பில் நடக்கும் மற்போருக்கு தீர்ப்பு சொல்வதா? அல்லது மூன்றாம் வகுப்பில் நடக்கும் மாணவிகளின் குடுபி சண்டைக்கு தீர்ப்பு வழங்குவதா? அல்லது நான்காம் வகுப்பில் நடக்கும் குத்துச் சண்டைக்கா? இவற்றையெல்லாம் விட்டுவிட்டு மதிய உணவு சமைக்கும் கிழவி வராததால் ஐந்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளை வைத்து மதிய உணவு தயார் செய்யும் வேலையை பார்வையிடுவதா? என்று அவர் குழம்பி பரிதவிக்கும் நிலையை காணவேண்டுமே?

பள்ளிக்கு தேர்வு செய்யும் அதிகாரி ஆய்வுக்காக வரும்போது இரண்டு ஆசிரியர்களும் மிகவும் டென்சனாக இருப்பார்கள்... இருக்காதா என்ன? ஏனென்றால்...பள்ளிக்கு பாதி மாணவர்களுக்கு மேல் வந்திருக்கும் அதிசயம் ஒரு சில நாட்களுக்குத்தான் நடக்கும்.

தேர்வு அதிகாரியிடமிருந்து தப்பிப்பதற்காக ஆசிரியர்கள் இருவரும் ஐந்தாம் வகுப்பு மாணவர்கள் படைசூழ மாணவர்களை அழைத்து வர கிளம்பி விடுவார்கள்.

பள்ளிக்கு வரமாட்டேன் என்று அழுது, அடம் பிடிக்கும் ஒன்று, இரண்டாம் வகுப்பு மாணவர்களை ஐந்தாம் வகுப்பு மாணவர்களை விட்டு அலேக்காக தூக்கி வரச்சொல்லி விடுவார்கள். இவ்வாறு மாணவர்களைத் தூக்கி வரும்போது இந்த வாத்தி பயலுகளுக்கு வேற வேலை இல்லைஎன்பது போன்ற சில தாய்மார்களின் வசைமொழிகளையும் வாங்கி கட்டிக் கொள்வதுண்டு.

குருவையும் மிஞ்சும் சிஷ்யர்கள் உண்டல்லவா?. தொலை தூரத்தில் மாணவர்கள் படையுடன் ஆசிரியர் வருகின்றார் என்ற தகவலை அறிந்தவுடன் தண்ணிடம் உள்ள ஒன்றிரண்டு சட்டைகளை தண்ணீரில் மூழ்கி வைத்து விட்டு, ஒரு சிறிய கோமணத்துடன் ஆசிரியர் முன் தோன்றி “சார்... என் சட்டைகளை எல்லாம் இப்பதான் தொவச்சு போட்டுருக்கேன்... என்னுகிட்ட வேறு சட்டைகள் இல்லை சார்...என்று பரிதாபமாகக் கூறி தப்பித்துக்கொள்ளும் புத்திசாலி மாணவர்களும் உண்டு.

சில மாணவர்கள்... ஆசிரியரைப் பார்த்தவுடன் கரும்பு கொல்லையிலோ, மரவள்ளி கிழங்கு கொல்லையிலோ அல்லது சவுக்குத் தோப்பிலோ ஓடி ஒளிந்து விடுவார்கள்.

இவ்வளவு இடையூருகளுக்கு இடையே பள்ளி ஆய்வு முடிந்த பிறகு அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது!

ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் உழவர்கள் எல்லாம் குருவை நெற்பயிரை அறுவடை செய்வதற்காக மழை பெய்யக்கூடாது என்று கடவுளிடன் வேண்டிகொண்டிருக்கும் போது நாங்கள் மட்டும் மழை பெய்ய வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக்கொள்வோம். ஏன்.... வேறொன்றுமில்லை... பள்ளியின் திறந்த கூரை வழியே மழை நீர் உள்ளே பிரவேசிக்கும். பிறகென்ன... விடுமுறைதான்..!                                       
                                              -- பாடங்கள் தொடரும்...

Thursday, November 18, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 3


ஆசிரியர்கள்தான் இந்த உலகத்திலேயே உயர்ந்த மனிதர்கள் மற்றும் பவர்புல் மனிதர்கள் அதனால் ஆசிரியர்கள் சொல்வதை தட்டாமல் கேட்கவேண்டும் என்ற எண்ணம் அந்த சிறு வயதில் என் மனதில் பதிந்து விட்டது. சுப்பிரமணியன் சார் சொல்லிக் கொடுக்கும் பாடங்களை கவணமாக கேட்பேன். கொடுக்கும் வீட்டு பாடங்களை உடனே செய்து விடுவேன். எனவே, நன்றாக படிக்கும் நல்ல பையன் என்ற பெயர் எடுக்க ஆரம்பித்துவிட்டேன்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்து பல மாதங்கள் ஓடி விட்ட தருணத்தில் கலாவதி அக்காவின் (பெரியப்பா மகள்) திருமணம் வந்தது. திருமணத்திற்காக பெரியப்பா மற்றும் எங்கள் வீட்டு வாசல்களை அடைத்து பெரிய பந்தல் போடப்பட்டிருந்தது. திருமண நாளன்று ஒன்பது மணி திருமணத்திற்கு எல்லோரும் ஓடி ஓடி வேலை செய்து கொண்டிருந்தார்கள். ஆனால் நான் மட்டும் வழக்கம் போல் ரெடியாகி எட்டு மணிக்கு புத்தகப்பையை எடுத்துக்கொண்டு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பிவிட்டேன். நான் பள்ளிக்கூடத்திற்கு செல்வதற்காக கிளம்பி நிற்பதை பார்த்து விட்டு எல்லோரும் டென்சன் ஆகிவிட்டார்கள்.

அப்பா என்னைப்பார்த்து “படுவா பய... பெரிய கலெக்டருக்கு படிக்கிற மாதிரி பள்ளிக்கூடத்து கிளம்பி நிக்கிறான்யா... இன்னிக்கு பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா... போயி பைய வைச்சிட்டு கல்யாணத்தை பார்றாஎன்றார்.

“பள்ளிக்கூடம் போவலண்ணா சார் அடிப்பாருஎன்றேன்

“நான் வாத்தியாருகிட்ட சொல்லிக்கிறேன்... பள்ளிக்கூடம் போவ வேண்டான்டா...

ஐந்தாம் வகுப்பு படிக்கும் என் அண்ணன் பள்ளிக்கூடத்தை பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவன் நண்பர்களுடன் ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தான். ஆனால் பள்ளிக்கூடம் போவலைன்னா சுப்பிரமணியன் சார் அடிப்பாருன்னு எனக்கு பயம் வந்து விட்டது. யாருக்கும் தெரியாமல் கொல்லைபுறம் வழியாக புத்தகப் பையை எடுத்துக் கொண்டு பள்ளிக்கூடத்திற்கு ஓடி வந்து விட்டேன்.

9.30 மணிக்கு பெல் அடித்து அசெம்பளி ஆரம்பமானது. ஒன்றாம் வகுப்பு வரிசையில் வழக்கம்போல் முதல் மாணவனாக நின்ற என்னைப் பார்த்து சுப்பிரமணியன் சாரும், ஐந்தாம் வகுப்பு ஆசிரியர் முத்துகிருஷ்ணன் சாரும் ஆச்சரியப்பட்டு போனார்கள். நாட்டாமை வீட்டு கல்யாணத்தில் ஊரே கூடியிருக்கும்போது நான் பள்ளிக்கூடத்திற்கு வந்திருப்பதுதான்!

“ரவி.... நீ ஏண்டா அக்கா கல்யாணத்தை பார்க்காமல் பள்ளிக்கூடம் வந்தே?என்று கேட்டார் சுப்பிரமணியன் சார்.

நான் பதில் எதுவும் சொல்லாமல் நின்றேன்.

இங்கே வாடா... ரவிஎன்று முத்துகிருஷ்ணன் சார் கூப்பிட்டார்.

அவர் பக்கத்தில் சென்றேன். என் முதுகில் தட்டிக்கொடுத்து மாணவர்களைப் பார்த்து பேசினார். “பசங்களா... பாருங்கடா...அக்கா கல்யாணத்திற்கு போகாமல் பள்ளிக்கூடத்திற்க்கு வந்திருக்கான்... எல்லோரும் இவன் மாதிரி இருக்கனும்டா... என்ன காரணமாக இருந்தாலும் தினமும் பள்ளிக்கூடம் வரனும்

அசெம்பளி முடிந்தவுடன் முத்துகிருஷ்ணன் சார் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவனை அழைத்து பத்து காசுக்கு கடலை மிட்டாய் வாங்கி வரச்சொல்லி எனக்கு கொடுத்தார். சுப்பிரமணியன் சார் அடிப்பார் என்று பயந்துகொண்டு பள்ளிக்கூடம் வந்த நான் பாராட்டுகள் மற்றும் கடலை மிட்டாய்களை எதிர்பார்க்கவில்லை. ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான் பிற்காலத்தில் தினமும் பள்ளிக்கூடம் செல்லும் என் பழக்கத்திற்கு அஸ்திவாரம் போட்டது.

பணிரெண்டு ஆண்டுகள் பள்ளிக்கூட வாழ்க்கையில் இரண்டு முறைதான் பள்ளிக்கூடம் செல்லவில்லை. இரண்டாம் வகுப்பு படிக்கும்போது மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு ஏழு நாட்கள் பள்ளிக்கூடம் செல்லவில்லை. அடுத்து... பதினொன்றாம் வகுப்பு படிக்கும்போது அரை நாள். அதிக காய்ச்சலுடன் வகுப்பில் படுத்திருந்த என்னை ஆசிரியர் வீட்டிற்கு போடா என்று கட்டாயப்படுத்தி பள்ளியைவிட்டு அனுப்பி வைத்தார். மற்ற பத்து ஆண்டுகள் அட்டெண்டஸ் 100%.

ஒரு சில நாட்கள் மழை, உடம்பு சரியில்லை மற்றும் வேறு காரணங்களால் பள்ளிக்கூடம் செல்ல வேண்டாம் என்று தோன்றும். ஆனால் அப்போது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சி மணக்கண்ணில் தோன்றும்... உடனே மனதில் உறுதி தானாக வந்து விடும். எட்டாம் வகுப்பு படிக்கும்போது பல நாட்கள் எங்கள் ஊருக்கு வரும் ஒரே பேருந்தான 11 நம்பர் டவுன் பஸ் வராது. சில நாட்கள் பஸ் டிக்கெட்டிற்கு தேவையான 35 காசுகள் இருக்காது. அந்த சமயங்களில் வெட்டிக்காட்டிலிருந்து எட்டு கிலோமீட்டர்கள் தொலைவிலிருக்கும் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளிக்கு நடந்தே செல்வேன். எட்டாவது படிக்கும்போது எனக்கு சைக்கிள் சரியாக ஒட்டத்தெரியாது... சைக்கிளும் கிடையாது. அப்போது பள்ளியில் ஷிப்ட் முறை... எட்டாம் வகுப்பிற்கு மதிய ஷிப்ட் (1 மணி முதல் 5.30 மணி வரை). மதிய வேலையில் காலில் செருப்பில்லாமல் நடந்து செல்லும்போது (அப்போது கிராமவாசிகளான எங்களுக்கு செருப்பும் லக்சரி பொருள்தான்!) ஒரு சில நாட்களில் கடும் வெயிலால் ரோட்டிலிருக்கும் தார் உருகி காலில் ஒட்டிக்கொள்ளும். எங்காவது கிடைக்கும் நிழலில் நின்று தாரை துடைத்து விட்டு நடைப்பயணத்தை தொடருவேன். 

இந்த மன உறுதியை எனக்கு கொடுத்தது ஒன்றாம் வகுப்பில் நடந்த அந்த நிகழ்ச்சிதான்!

                                            -- பாடங்கள் தொடரும்...

Wednesday, November 03, 2010

ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி - Part 2



சுப்பிரமணியன் சார் மூன்றாம் வகுப்புக்கு ஏதோ பாடம் நடத்தினார். நான் வேடிக்கை பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருந்தேன். பதினோறு மணியளவில் ஐந்தாம் வகுப்பு மாணவன் ஒருவன் சுப்பிரமணியன் சாருக்கு டீக்கடையிலிருந்து “டீமற்றும் “மசால் வடைவாங்கி வந்து கொடுத்தான்.

“டேய் ரவி... புது பயலே... இங்கே வாடாஎன்றார் சுப்பிரமணியன் சார். எழுந்து சார் அருகில் சென்றேன். மசால் வடையில் கொஞ்சம் பிய்த்து என்னிடம் கொடுத்து “சாப்பிடுறா...என்றார். நான் மகிழ்ச்சியுடன் வாங்கி சாப்பிட்டேன்.

சிலேட்டு வச்சிருக்கியாடா...

“ம்ம்ம்

“சிலேட்டை எடுத்துகிட்டு வாடா

உரசாக்கு பையிலிருந்த சிலேட்டையும், சிலேட்டு குச்சியையும் எடுத்து வந்து சுப்பிரமணியன் சாரிடம் கொடுத்தேன்.

சார் சிலேட்டில் “அஎழுதி என் கையைப் பிடித்து “அஎன்று சொல்லிக்கொண்டே அதன் மேல எழுத வைத்தார். அந்த “அ”-வுடன் தொடங்கியது எனது படிப்பு....


மதிய இடைவேளை பெல் அடித்தவுடன் அண்ணன் வந்து என்னை கூப்பிட்டு வீட்டிற்கு அழைத்து சென்றான். மதிய உணவு சாப்பிட்டு விட்டு அண்ணனுடன் மீண்டும் பள்ளிக்கு வந்து விட்டேன். பள்ளியில் நடக்கும் சம்பவங்களை வேடிக்கை பார்த்துக்கொண்டே என் பள்ளிக்கூட முதல் நாள் முடிந்தது. பள்ளிக்கூடமும் எனக்கு பிடித்து போனது... சுப்பிரமணியன் சார் மசால் வடை கொடுப்பார் என்ற எண்ணமும் அதற்கு ஒரு காரணம். எனவே தினமும் அண்ணனுடன் பள்ளி செல்ல ஆரம்பித்தேன். ஆனால்.. அதற்கு பிறகு சப்பிரமணியன் சாரிடமிருந்து மசால் வடை கிடைக்கவில்லை!

சுப்பிரமணியன் சார் ஒன்றாம் வகுப்பிற்கு பாடம் நடத்தும் போது என்னையும் கவணிக்க சொல்வார். அவ்வப்போது சிலேட்டில் எழுத சொல்லி கொடுப்பார். அப்போது ஒன்றாம் வகுப்பில் படித்த அமரபாகம் ராதாயும் நானும் நண்பர்களானோம். இப்படியாக ஒரு மூன்று மாத காலம் பள்ளியில் சேராமலே பள்ளிக்கூடம் சென்று வந்தேன்.

கோடை விடுமுறை முடிந்து அடுத்த ஜூன் மாதத்தில் (1973 ஆம் ஆண்டு) ஒரு நள்ள நாளில் எனது நாலரை வயதில் புது சட்டை, பை, சிலேட்டு, புத்தகம், மிட்டாய்கள் சகிதமாக அப்பா, பெரியம்மாவுடன் வந்து பள்ளியில் என்னை முறைப்படி சுப்பிரமணியன் சார், தலைமையாசிரியர் முத்துகிருஷ்ணன் முன்னிலையில் சேர்த்து விட்டார்.

ஒன்றாம் வகுப்பில் சேர்ந்த பிறகு வீட்டிலிருந்து கால் கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் பள்ளிக்கூடத்திற்கு அண்ணனுடன் சேர்ந்து செல்லாமல் நானே தனியாக சென்று வர ஆரம்பித்தேன். பெரிய பையனா ஆகிட்டோம்ல...

ஒன்னாவதில் சேர்ந்த சில நாட்களில் என்னுடன் ஒன்றாம் வகுப்பில் படித்த எங்கள் தெருவில் என் வீட்டிற்கு அருகிலிருக்கும் உப்பிலி (எ) எழில்மன்னும் நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். எழிலமன்னன் பற்றி சற்று பார்ப்போம்... ஏனென்றால அடுத்த பனிரெண்டு ஆண்டுகளுக்கு என்னுடைய உயிர்த்தோழனாக விளங்கியன். நானும் எழிலமன்னனும் இரட்டையர்கள் என்று ஊரில் எல்லோரும் பேசுமளவுக்கு நெருங்கிய நண்பர்கள். உப்பிலிக்கு எழில்மன்னன் என்ற அழகிய பெயரை அவனுடைய கும்பகோனம் தாத்தா வைத்திருந்தார். ஆனால் எங்கள் கிராமத்து மனிதர்களிடன் அவன் பெயர் மாட்டி சின்னா பின்னமாகியது. “எழில்மன்னன்எனற பெயரை சரியாக உச்சரிக்க தெரியாமல் அவனை எல்லோரும் “எலிமன்னன்என்று கூட்பிட ஆரம்பித்தார்கள். இதைக் கேட்டு நொந்துபோன எழில்மன்னனின் அம்மா அவனுக்கு கும்பகோனத்திலுள்ள “உப்பிலியப்பன்”  சாமி பெயரில் “உப்பிலிஎன்ற மற்றொரு பெயரை கூப்பிடுவதற்கு ஏதுவாக சூட்டினார். ஆனால் என் அம்மா இன்றும் ஊரில் எழிலமன்னனை “எலிமன்னன்என்றுதான் கூப்பிடுகிறார். காரணம்... “உப்பிலிஎன்பது சாமி பெயர் என்பதால் வாடா.. போடா என்று கூப்பிட முடியாதாம்!

உப்பிலியும் நானும் நண்பர்களான பிறகு ஏற்பட்ட மாற்றம்... நாங்களே குளத்திற்கு சென்று குளித்து பள்ளிக்கு தயாராகி செல்வது. தினமும் சரியாக காலை ஆறரை மணியளவில் எங்கள் வீட்டிற்கு உப்பிலி வருவான். இருவரும் கிட்டத்தட்ட ஒரு கிலோ மீட்டர் தொலைவில் தெற்கே இருக்கும் பெரிய குளம் அல்லது வடக்கே இருக்கும் அய்யனார் கோவில் குளம் நோக்கி நடப்போம். போகிற வழியில் ஒரு வேப்பங்குச்சியை ஒடித்து பல் விளக்கி கொண்டே, பேசிக்கொண்டே குளத்தையடைவோம். அந்த காலத்தில் கிராமவாசிகளான நாங்கள் டூத்பிரஷ், பேஸ்ட், சோப்பு போன்றவற்றை பார்த்தது கிடையாது. இதெல்லாம் லக்ஸரி அயிட்டங்கள்! ஆறாவது படித்த காலகட்டத்தில்தான் குளிப்பதற்கு சோப்பு கிடைத்தது. அதுவும் சோப்பு தீர்ந்து விட்டால் மறுபடியும் அப்பாவோ, பெரியம்மாவோ மன்னார்குடியிலிருந்து வாங்கி வரும் வரை நோ சோப் குளியல். டூத் பிரஷ்ஸில் பல் விளக்க ஆரம்பித்தது பதினொன்றாம் வகுப்பிற்கு வந்த பிறகுதான்!

காலைக்கடன்களை முடித்து, குளத்தில் குளித்து விட்டு வீட்டிற்கு வருவதற்கு ஒரு எழரை மணியாகிவிடும். பெரியம்மா தினமும் கொடுக்கும் காலை சாப்பாடான தயிர் சாதம் (பழைய சோற்றை பிழிந்து அதில் தயிர் அல்லது மோர்) மற்றும் மாங்காய் ஊறுகாய் அல்லது எலுமிச்சை ஊறுகாய் வைத்து சாப்பிட்டு விட்டு அரை மணி நேரத்தில் ரெடியாகிவிடுவேன். இட்லி, தோசை போன்ற காலை சாப்பாடு தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மட்டும்தான் கிடைக்கும். வருடத்தில் 95% நாட்களில் காலை சாப்பாடு தயிர் சாதம்தான்!

நானும், உப்பிலியும் சரியாக எங்கள் வீட்டிலிருந்து பள்ளிக்கு கிளம்பிவிட்டோம் என்றால் மணி எட்டு என்பதை ஊர் மக்கள் தெரிந்து கொள்வார்கள். நாங்கள் இருவரும் எட்டு மணிக்கு பள்ளிக்கூடத்திற்கு கிளம்பியது அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. பள்ளிக்கூடம் ஆரம்பிக்கும் நேரம் காலை 9.30 மணி... ஆனால் நானும் உப்பிலியும்தான் 8.15 மணி அளவில் முதன் முதலில் பள்ளிக்கு வந்து விடுவோம்.

ஊர் பிள்ளைங்க எல்லாம் ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடம் போவுது.. இவிங்க ரெண்டு பேரும் மட்டும்தான்யா எட்டு மணிக்கு போய் பள்ளிக்கூடம் காணம போகப்போகுதுன்னு காவல் காக்கிறாங்க... எட்டு மணிக்கு பள்ளிகூடத்துக்கு போயி என்னா பண்ணாறங்கன்னு தெரியலய்யா...என்று அப்பா அடிக்கடி சத்தம் போடுவார்.

“அவெங்க எட்டு மணிக்கு போனா என்ன... ஒன்பது மணிக்கு போனா ஒனக்கு என்னடா... நல்லா படிக்கிற பசங்கதாண்டா சீக்கிரம் பள்ளிக்கூடம் போவாங்க...என்று பெரியப்பா வை.சி.ராமசாமி ஆலம்பிரியர் எங்களுக்கு சப்போர்ட் பன்னுவார்.

ஆனால்... எனக்கும் உப்பிலிக்கும் பர்ஸ்டா பள்ளிக்கூடம் செல்வதில் ஒரு சந்தோசம். அவ்வளவுதான்...                                           
                                                    -- பாடங்கள் தொடரும்...