வெட்டிக்காடு

வெட்டிக்காடு

Tuesday, September 07, 2010

*4*: வேலியில போற ஓணான...

4G பதிவில் அகன்ற அலை வரிசை, தரவு, நிறலி.. இப்படின்னு படிச்சு ஒரு சிலர் மண்ட காய்ந்து போய் இருப்பீர்கள்:( கொஞ்சம் சிரித்து மகிழ என் கல்லூரி கால ராகிங் கதை:))) இது ஒரு மீள் பதிவு

வேலியில போற ஓணான..

கிண்டி பொறியியல் கல்லூரியில் நான் முதல் வருடத்தில் சேர்ந்து மூன்று மாதங்கள் ஓடிவிட்ட காலம் அது.

ஏதோ காரணமாக கடைசி வருட மாணவர்களுக்கு ஒரு செமஸ்டர் தள்ளி போயிடுச்சு. அதனால போதிய ஹாஸ்டல் வசதி இல்லாததால் அவசர அவசரமாக விடுதி என்று போர்ட மாட்டி ஹைதர் அலி காலத்து பழைய கட்டிடங்களில் மாடுகளை தொழுவத்தில் அடைச்சு வைப்பதுபோல இளிச்சவாயன்களான எங்களை அடைத்து வைத்திருந்தது கல்லூரி நிர்வாகம். இது சீனியர் பசங்களுக்கு நல்லா வசதியா போயிடுச்சு. எல்லோரையும் மாடுகளைப் போல ஒண்ணா ஓட்டிக்கிட்டு போய் ராகிங் செய்ய. இப்போ மாதிரி ராகிங்கிற்கு எதிராக கடுமையான சட்டங்கள் இல்லாத காலம் அது. ராகிங் பொறி பறக்கும்!

எங்களை அடைத்து வைத்து இருந்ததோ 'அனெக்ஸ்-II' என்ற லேடிஸ் ஹாஸ்டலுக்கு பக்கத்திலிருந்த கட்டிடம். கவருமெண்டு தர்ம ஆஸ்பத்திரி மாதிரி அந்தப் பக்கம் இருபது இரும்புக் கட்டில்கள், இந்தப் பக்கம் இருபது இரும்பு கட்டில்கள். அவனவன் தங்களோட பெட்டிகளையும், உடமைகளயும் இரும்புக் கட்டிலுக்கு கீழேயே வச்சுக்கணும். இருக்கிற நாலு பாத்ரூமுக்கு காலை ஆறு மணியிலேர்ந்து அடிதடி ரகளை நடக்கும்.

ராத்திரியானா அவனவன் சீனியர்களிடம் மாட்டிக்கொண்ட அனுபவங்கள், இவனுங்களோட ராகிங்கியிலேர்ந்து எப்படி தப்பிப்பது? என்று சபை களை கட்டும்.

சீனியர்களா அவங்க... எமகாதகப் பயலுங்க!

சீனியர்களப் பார்த்தவுடன் ஏடாகூடமான ஒரு போஸில் வளைந்து சல்யூட் அடிக்க வேண்டும். 'கிண்டி சல்யூட்' னு அதற்கு பெயர். சல்யூட் அடிக்கலன்னா அன்னிக்கு ராத்திரி தர்ம அடி கிடைக்கும்!

ராத்திரி ஆனா கல்லூரி முன்னாடி இருக்குற அண்ணா சிலை முன்னாடி நிக்க வச்சு "ஏய்.. அண்ணா, அன்று நீ ஓர் விரல் காட்டி ஓராயிரம்...." என்று தொடங்கும் அபத்தமான நீண்ட வசனத்தை மனப்பாடம் செய்ய வைத்து பேச வைப்பானுங்க. 'அண்ணாயிஸம்' என்று அதுக்குப் பேரு.

எல்லோரையும் கிரவுண்டுல உட்கார வச்சு ஒவ்வொரு நாளும் ஒரு 'பலான' தலைப்பு கொடுத்து தீப்பொறி பறக்கும் கருத்துகள்(?!) கொண்ட பட்டிமண்டபம் நடத்துவானுங்க.

பனியன சட்டை மேலேயும், ஜட்டிய பேண்ட் மேலயும் போட்டுக்கச் சொல்லி "நான் சூப்பர்மேன்!" அப்படின்னு கூவிக்கிட்டே கிரவுண்ட சுத்தி ஓடிவரச் சொல்லுவானுங்க.

கிரிக்கெட் கிரவுண்டுல பேட், பந்து இல்லாம கற்பனை கிரிக்கெட் விளையாடணும். "டேய், பவுன்சருடா பாத்து விளையாடுடான்னு" கத்துவானுங்க. சரி பவுன்சருதான்னேன்னு ஹூக் சாட் அடிச்சா, "நாயே.. ஹெல்மெட் போடாம விளையாடுற.. குனிஞ்சுக்காம ஹூக் சாட் அடிக்கிறேயே.. பந்து மண்டையில அடிபட்டு நீ செத்துப் போயிட்டா... உன்னோட அப்பன், ஆத்தாவுக்கு நாங்க என்னடா... பதில் சொல்லுறது?" என்று அக்கறையாக் கேட்பானுங்க.

ஒரு ஞாயிற்றுக்கிழமை மத்தியானம் எங்கள ஒரு ஆறு பேர அழச்சிகிட்டு சினிமா பார்த்துட்டு வரலான்னு நாலு சீனியர் பசங்க கூட்டிக்கிட்டுப் போனாங்க. "டேய்.. பசங்களா நாங்க ஒரு பஸ் ஸ்டாப் வந்தவுடன் கையக் காட்டுவோம். எல்லாரும் "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" அப்படீன்னு சத்தமா கத்தணும்.. புரிஞ்சுதா" என்றார்கள்.

"
சரிங்க சார்..." பூம் பூம் மாடு மாதிரி நாங்க தலையாட்டினோம்.

5B
பஸ்சுல எங்கள ஏத்தி அழைச்சிகிட்டுப் போனங்க. சைதாப்பேட்டை பஸ் ஸ்டாப் வந்தவுடன் சீனியர் பசங்க கையக் காட்னாங்க. நாங்களோ மெட்ராசுக்குப் புதுசு. சைதாப்பேட்டை எது, தி.நகர் எதுன்னு எங்களுக்குத் தெரியாது. "தி.நகர் வந்திடுச்சி... தி.நகர் வந்திடுச்சி... தி.நகர்ல்லாம் இறங்குங்க" ன்னு உரக்கக் கத்தினோம். தி.நகர் பயணிகள் பலர் தி.நகர் வந்துடிச்சுன்னு திடுதிப்புன்னு இறங்க ஆரம்பிச்சுட்டாங்க. பேக்கு மாதிரி நின்னுக்கிட்டிருந்த எங்களைப் பார்த்து கண்டக்டரும், டிரைவரும் "டேய்.. சாவு கிராக்கி.. யாருடா அது தி.நகர் வந்திடுச்சின்னு கத்தினது"ன்னு திட்ட ஆரம்பிச்சிட்டாங்க. ஒரே ரகளையாப் போயிடிச்சு அன்னிக்கு.

இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பயலுக இருக்காங்களே... கொலகாரப் பசங்க! போன வருஷம் தாங்கள் பட்ட ராகிங்கிற்கு பழிக்குப் பழி வாங்கணுமுன்னு வெறி புடிச்சி அலைவானுங்க.

எங்க 'அனெக்ஸ்-II' ஹாஸ்டல்லேருந்து ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்க சாப்பிடற 'B' மெஸ்சத் தாண்டிதான் நாங்க சாப்பிடுற 'C' மெஸ்சுக்குப் போகணும். கரெக்டா காத்திருந்து மெஸ்ஸுலேர்ந்து ராத்திரி சாப்பிட்டு வரும்போது பத்திகிட்டுப் போயிடுவானுங்க.

ஒரு நாளு நடு ராத்திரியில மத்த பசங்க எல்லாம் நல்லா தூங்கிட்டு இருக்கும்போது.. எங்க மின்னணுவியல் கோஷ்டியான நான் (வெட்டிக்ஸ்), 'பட்டு' செந்தில், 'குல்டி' வெங்கட், 'காந்தி' சரவணன், 'நக்சலைட்' செந்தில், 'சித்தப்பு' லோகநாதன் எல்லாம் சேர்ந்து இந்த ரெண்டாம் வருஷம் சீனியர் பசங்களோட மரண ராகிங்கிலேர்ந்து எப்புடிடா தப்புவதுன்னு ஆலோசனை பண்ணினோம். பலவகையான ஐடியாக்கள்! கடசியில பட்டு சொன்ன ஐடியாத்தான் சரின்னு சபை முடிவு பண்ணியது. என்னான்னா... நேரா 'B' மெஸ் வழியாப் போகம, எல்லாப் பசங்களும் மெஸ்ஸுக்குப் போன பின்னாடி.. கொஞ்ச நேரம் கழிச்சி, லேடிஸ் ஹாஸ்டல் அந்தப்பக்கம் இருக்கிற முள்ளுச் செடிங்க மண்டி கிடக்குற எடம் வழியா உள்ள புகுந்து, 'I' பிளாக் வழியா வந்து மெஸ்ஸுக்குப் போயிட்டு வந்திடலாம். இந்த ரகசியத்த நமக்குள்ள மட்டும் வச்சிக்கணும். இதுதான்.

பட்டோட ஐடியா அமர்க்களமா வொர்க் அவுட்டாச்சு. மூணு வாரமா நாங்க மட்டும் யார்கிட்டேயும் மாட்டமா மெஸ் போயி சாப்பிட்டு வந்துகிட்டு இருந்தோம்.

வச்சான்ய்யா... ஆப்பு, அதுக்கு ஒரு நாளு.. 'புட்டி' சாமிநாதன்.

சோடாபுட்டிக் கண்ணாடி மாட்டிய முகம். மெலிந்த உருவம். உலகம் பற்றி ஒன்னும் தெரியாத அப்பாவி. சீனியர்களைக் கண்டு தொடை நடுங்குபவன். சீனியர்கள் வார்த்தைகளை வேதவாக்காகக் கடைபிடித்து வாழ்பவன். அவனோட போனா சீனியர்களுகிட்ட வசமா நம்மளையும் மாட்டிவிட்டுவான் என்று பெயரெடுத்தவன். இப்படிப்பட்ட ஒரு மகா பேக்குதான் 'புட்டி' சாமிநாதன்.

வழக்கம்போல அன்னிக்கு ராத்திரியும் எல்லா பசங்களும் மெஸ்ஸுக்குப் போனவுடன், எங்க கோஷ்டி மெஸ்ஸுக்குக் கிளம்பிச்சு. அப்பப் பார்த்து புட்டியும் அங்கே இருந்தான். "நானும் உங்களோட மெஸ்சுக்கு வர்றேன்டா" என்று கூறிக்கொண்டு எங்களுடன் கிளம்பினான். நாங்களோ ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். என்ன சொல்றதுன்னு ஒருத்தனுக்கும் தெரியல. புட்டி எந்திரவியல். நான் மின்னணுவியல். புட்டி மீது எனக்கு சற்று பாசம் உண்டு. ஏன்னா.. அவன் ஊரு கும்பகோனம். எங்க தஞ்சாவூர் மாவட்டம். அதனாலதான்.

"
மச்சி.. புட்டி பாவம்டா.. அவனையும் நம்மளோட கூட்டிக்கிட்டு போலாம்டா" என்றேன் நான்.

"
வெட்டிக்ஸ் வேண்டான்டா" என்றான் பட்டு.

புட்டி ரொம்பக் கெஞ்சியதால் எங்கள் ரகசிய வழியைச் சொல்லி யார்கிட்டேயும் சொல்லக்கூடாதுன்னு சத்தியம் வாங்கிக் கூட்டிக்கிட்டு போனோம்.

முட்புதர்கள், 'I' பிளாக் கடந்து வந்தாச்சு. இதோ.. ஒரு எட்டு நட போட்டா 'C' மெஸ்.

அந்த நேரம் பார்த்து கருத்த மேனியும், நெடுநெடுவென வளத்தியும் கொண்ட செகண்ட் இயர் சீனியர் மதுரை 'முனியாண்டி' சங்கரும் அவன் நண்பனும் முதுகை எங்களுக்கு காட்டிக்கொண்டு சற்று தூரத்தில் பேசிக்கொண்டிருந்தார்கள். 'முனியான்டி' சங்கர் ஒவ்வொரு ஜுனியருக்கும் முனியாண்டி 1, 2 என்று பெயர் வைத்து ராகிங் செய்வான். என்னோட பேரு 'முனியாண்டி-28'. அவன் "பேரு என்னடா?"னு கேட்டா 'முனியாண்டி-28' என்றுதான் சொல்லணும். தப்பித்தவறி நம்ம பேரச் சொல்லிட்டோமுன்னா..தொலச்சிப்புடுவான்... தொலச்சி.

மூன்று நாட்களுக்கு முன்னால் முனியாண்டி புட்டியை ராகிங் செய்தபோது அவன் சொன்ன "மவனே.. இனிமே என்ன எங்க பார்த்தாலும் எனக்கு கிண்டி சல்யூட் அடிக்கனும். இல்ல.. தொலைச்சிப்புடுவேன்" என்ற வார்த்தைகள் புட்டிக்குப் பொறிதட்டியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் புயலெனப் பாய்ந்து முனியாண்டி முன் நின்று கிண்டி சல்யூட் அடித்து "வணக்கம் சார்!" என்றான் புட்டி. எங்களுக்கோ என்ன பண்றதுன்னு ஒண்ணும் புரியல...

"
என்னடா.. திடீர்ன்னு முன்னாடி வந்து நிக்கிற.. எப்படி?" என்று ஆச்சரியத்துடன் கேட்டான் முனியாண்டி.

"
இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் முட்புதற்கள் மறைவில் நின்றிருந்த எங்களை நோக்கிக் கையைக் காட்டி... வச்சான் ஆப்பு.

"
மவனுகளா.. எங்கடா கொஞ்ச நாளா உங்களக் கண்ணுல காணலேயேன்னு நெனச்சேன்.. இந்த ரகசிய வழிதான் காரணமா? இன்னிக்கு நீங்க தொலைஞ்சிங்கடா" என்று கூறி புட்டியை மட்டும் விட்டுவிட்டு எங்க கோஷ்டி எல்லோரையும் சாப்பிடக்கூட விடாமல் செகண்ட் பிளாக்கிற்கு ஓட்டிக்கிட்டுப் போனான் முனியாண்டி.

முனியாண்டி கோஷ்டி அன்னிக்கு எங்களப் பண்னின ராகிங்க இப்ப நெனச்சுப் பார்த்தாலும் மனசு பகீர்னு அடிச்சுக்கும். அப்புறம் பக்கம் பக்கமா படங்கள் நிறைய போட்ட எந்திரவியல் அசைண்மென்டை எல்லார்கிட்டேயும் கொடுத்து எழுதச் சொன்னாங்க.. பாவி பயலுங்க.

பசி வயித்தக் கிள்ள அசைண்மென்டை நாங்க எழுதி முடிச்சபோது ராத்திரி மணி ரெண்டு.

"
வேலியில போற ஓணான... எடுத்து காதுல விட்டுகிட்டு, குத்றது கொடையிறதுன்னு சொன்னானாம்" அப்படின்னு எங்க கிராமத்துப் பெருசுங்க அடிக்கடி சொல்லுங்க. அன்னக்கித்தான் தெரிஞ்சது.. அதுக்கு அர்த்தம் என்னான்னு எனக்கு!
        *     *       *

17 comments:

Cable சங்கர் said...

நட்சத்திர வாழ்த்துக்கள்.. ரவி..

Senthil Kumar said...
This comment has been removed by the author.
Senthil Kumar said...
This comment has been removed by the author.
தமிழ் திரு said...

//"இதோ இப்படி சார்" என்று கவுண்டமணியை மாட்டிவிடும் செந்திலைப்போல் //

Nice example to imagine that situation uncle...

Unknown said...

வெட்டிக்காட்டரே நா உங்க ஊர்ப்பக்கம் பஸ்லே போயிர்க்கேன் அப்பிடியே ஜிலுஜிலுன்னு காது வீசும்பாருகோ- அதே மாதிரி உங்க எழுத்தும் இருக்கு பாராட்டுக்கள் இந்த மாதிரி விசயங்களே இங்கிலீசுலே படிச்சு புருஞ்சுக்குரதுன்னா பெரும்பாட போயிரும் நன்றி நன்றி நன்றி அணைத்து தமிழ் வாசகர்கள் சார்பில்

முகவை மைந்தன் said...

:-)

velji said...

ஒரு 15 வருஷம் பின்னே போய் அழகப்பா பொறியியல் கல்லூரியை பார்த்தது போல் இருக்கிறது! சூப்பர்!

Balakumar Vijayaraman said...

:) :) :)

vasan said...

வேலி தாண்டிய‌ ஓணான்க‌ள்.
ச‌ரி போட்டுக்குடுத்த‌ 'புட்டியை' என்ன‌ ப‌ண்ணுனிங்க‌?
அது ரொம்ப‌ சுவார‌ஸ்யமா இருக்குமே!!

Maktub said...

Super Posting! Brings out nostalgia.

Ravichandran Somu said...

Cable Sankar-- நன்றி தலைவரே!

Ravichandran Somu said...

கருத்து தெரிவித்த நண்பர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

பொற்கோ said...

கிராமத்தின் மணம் மாறாத கட்டுரையின் இறுதி வரிகள் உண்மையோ,உண்மை.வாழ்த்துக்கள்!

Dhanabalan Durairaj said...

Nostalgic to hear about our college days though not memorable. My God Annexe II experiences haunt me again.

Unknown said...

LOL. Next time listen to Pattu ;-)
You have a good memory. Very surprised that you are able to recall so much.

Dilip Subramanian said...

Ravi, amazing!!! I just loved it all....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சம்பவங்கள் கண்முன்னே ஓடின (மாதிரி ஒரு பிரமை).